Friday, 2 June 2017

கண்ணகியும் கைகேயியும்
========================
“பெண்பால் நகையாள்
வெண்முத்துப் பல் நகையாள்
புகார் காரிகையாள் 
கால் நகையால்
வாய் நகைபோய்க்
கழுத்து நகை இழந்த கதை “.
“வில்முதுகு கூனி இவளை
வில்லென வளைக்க
தசரதனை வரங்களுக்காக
'வில்'லின் நாண் என இழுத்தாள்.
அந்தோ !!!
தனது மங்கல நாணையே
இழந்தாள்”
மாற்றம் | லஞ்சம் தவிர் |
ஜமீன்தார் ஒருவர் தனது வீட்டுக்கு இன்னொரு ஜமீன்தாரை விருந்துக்கு அழைத்திருந்தார். விருந்தாளி வரும்போது மாளிகை பளபளப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக சுத்தப்படுத்தி அலங்காரமாக்கும் வேலை நடந்தது.
அந்த மாளிகையில் நடுநாயகமாக, பிரமாண்டமாக இருந்த பளிங்குகளால் ஆன படிக்கட்டுகளை பளபளப்பாக்கும் வேலையும் நடந்தது. வேலை செய்பவர்கள் மேலே இருந்து துடைத்துக் கொண்டு வந்தார்கள். ஆனால் அந்த ஜமீன்தார் ஒருவனை பார்த்து, `ஏன் மேலே இருந்து துடைக்கிறாய், கீழே இருந்து துடைத்துக் கொண்டு போ` என்றார்.
வேலை செய்பவர்கள் திரு திரு என முழித்தார்கள். அந்த படிக்கட்டுகளை எப்படியும் துடைக்கலாம். ஆனால் எது அதிக பலனைத் தரும். கீழே இருந்து துடைத்தால், அதிகபட்சம் நான்கு படிக்கட்டுகளை துடைக்கலாம். அதற்கும் மேல் துடைக்க, துடைத்த படிகட்டுகள் மீதே கால் வைத்து ஏற வேண்டி இருக்கும். அது மீண்டும் அழுக்காகுமே?
இனி இந்த கதையில் நீதியை மட்டும் பார்ப்போம். நம் நாட்டில் மக்கள் லஞ்சம் கொடுக்கக் கூடாது, அவர்கள் தரமானவர்களாக இருந்தால்தான் அவர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்களும் தரமானவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இதுவும் உண்மை. எனவே மக்களிடமும் தரம் வேண்டும்தான். ஆனால் அதைவிட வேகமான மாற்றத்தை தலைவர்கள்தான் தரமுடியும்.
எப்படி படிக்கட்டுகளை மேலே இருந்து துடைத்தால் அது அதிக பலனைத் தருமோ, அதேபோல் மேலே இருப்பவர்கள் சுத்தமாக இருந்தால் அது சமுதாயத்தில் வேகமான மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரு குப்பனோ, ராமனோ சிகெரெட் பிடிப்பதை, அல்லது அவர்கள் தரும காரியங்கள் செய்வதை பார்த்து மற்றவர்கள் பின் தொடரும் வாய்ப்பு குறைவு. ஆனால் அதே செயலை ஒரு தலைவரோ அல்லது நடிகரோ செய்தால் அதன் வீச்சு அதிகமாக இருக்கும். எனவே மாற்றம் இருபக்கமும் வேண்டும். அது மேலே இருந்து ஆரம்பித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
லிப்ட் (Lift) அழகு தமிழில் மின்தூக்கி .... கதை-2:-
*****************************************************************
1982 -ல் பம்பாய் ''பெடார் ரோடு''.... ''கெம்ப்ஸ் கார்னர்'' சந்திப்பின் அருகில் ஒரு உயரமான கட்டிடம் .அப்போதே 45 மாடிகள் .
அந்த கட்டிடம் பின்னர் அபாயம் கருதி சில மாடிகள் இடிக்கப்பட்டு உயரம் குறைக்கப்பட்ட செய்திகள் பத்திரிகைகளில் படித்தேன்.
எனது உறவினர் என்னைவிட இரண்டு வயது மூத்தவர் .லியோன் பெனடிக்ட் அங்கு மின் அமைப்புக்கள் பணியில் இருந்தார்.
ஒருநாள் என்னை வேடிக்கை பார்க்க அழைத்துச் சென்றார். 1983 ஜனவரி மாதம் பொங்கல் நேரம் என்பது நன்றாய் நினைவில் உள்ளது. ஏனென்றால் காலை வீட்டில் பொங்கல் கரும்பு பாயசம் சாப்பிட்டு விட்டே புறப்பட்டோம் ....
சயான் பேருந்து நிலையம் சென்று (தடம் எண் 82 என நினைவு) பேருந்தில் சென்றோம்.பெடார் ரோட்டில் கெம்ப்ஸ் கார்னர் நிறுத்தத்தில் இறங்கி சாலையில் வேடிக்கை பார்த்துக்கொண்டே போய் கட்டிடத்தை அடைந்தோம்.
அத்தனை உயரம் முதன் முறையாகப் பார்த்து 'ஆ' வென வாயைப் பிளந்து அதிசயமாய்ப் பார்த்தேன் ...ஓரளவு பணிகள் மட்டும் மீதம் இருந்த காரணத்தால் அதிகம் பணியாட்களும் கிடையாது. சுமார் பத்து பேர்கள் போல இருந்தார்கள். அண்ணன் என்னை அறிமுகம் செய்து பின்னர் உடன் அழைத்துப்போனார்.
மின் தூக்கியில் மேல் தளம் வரை சென்று கீழே பார்த்தால் ...
அம்மம்மா..... மனிதர்கள் எறும்பு சைசில் வாகனங்கள் கொஞ்சம் பெரிதாக தெரிந்தார்கள். எனக்கு ரொம்ப ரசிக்கவில்லை. கொஞ்சம் பயமும் இருந்தது.
தொலை நோக்கி (Binoculars) இருந்தால் ரசிக்கும். ரசிக்கலாம். வெறும் கண்களால் ரொம்ப தெளிவாக பார்க்க முடியாமல் ....சுற்றுப்புறக் காட்சிகளை ரொம்ப ரசிக்க முடியவில்லை.ஆனாலும் ஒரு குழந்தைத்தனமான ஆர்வம் / பெருமை இருந்தது மெய்.
மின் தூக்கியில் 'சர் சர்' ரென்று எவ்விதமான தொல்லையின்றி மேலும் கீழும் சென்று அனுபவித்து கொள்ளையாய் மகிழ்ந்தேன். அது அன்றைய தின சூப்பர் கொண்டாட்டமாய் இருந்தது.
வொர்லியில் சத்தியம் ,சச்சினம்,சுந்தரம் தியேட்டர் காம்ப்ளெக்ஸ். (சென்னையில் சத்தியம், சாந்தம், சுபம் உண்டல்லவா ?) ......அப்போது ''ஜராசி ஜிந்தகி ''....அதாங்க .. ''வறுமையின் நிறம் சிவப்பு '' ஹிந்தி ஆக்கம் ....கமல்ஹாசன் & அனிதா ராஜ் நடித்தது படம் பார்த்தோம். 'ஸ்ரீதேவி' இடத்தில் 'மூதேவி' நடித்த படம் ரசிக்கவில்லை ....இயக்குனர் KB மீது கடுப்பு வந்ததும் உண்மை ...
அங்கிருந்து நடந்தே சிவாஜி பார்க் போய் மாலைப்பொழுதை கழித்து பின்னர் தாதர் வந்து பஸ் பிடித்து தாராவி VOC குடிசைப்பகுதியில் எனது ஞானம்மா (காட் மதர்) வீடு போனேன் ....
லிப்ட் (Lift) அழகு தமிழில் மின்தூக்கி .... கதை-1:-
*****************************************************************
முதன் முதலில் ''சுய மெய்''..(Original physical ) அனுபவத்தில் ''லிப்ட்'' பார்த்தது பம்பாயில் ''ப்ரீச் கேண்டி'' (Bombay-Breach Candy)...மருத்துவமனையில்.
1982 டிசம்பரில் குவைத்திலிருந்து ''விசா'' அனுப்பினார் அன்புள்ள அப்பா.
அவர் குவைத்தில் டிபென்ஸ் மினிஸ்ட்ரி டைரக்டர் ஒருவரின் ''வீட்டில்'' டிரைவர் பணி. குவைத்தியார் குடும்பம் செல்வாக்கானது ...
ஒருவர் கல்வி அமைச்சகத்தில் அண்டர் செக்ரட்டரி , ஒருவர் கல்லூரி முதல்வர், வீட்டில் மூத்த உறுப்பினர் பெண்மணி தங்க , வைர , நறுமணப் பொருட்கள் விற்கும் வணிகர் ...
இது அன்றைய குவைத்தில் ...''பொன் கொழிக்கும்'' வணிகம் என்பது வெள்ளிடை மலை உண்மை ....
எனது நான்காண்டுகள் கல்லூரி படிப்பிற்கு P.U.C + B-Com புரவலர் இப்பெண்மணியே.
.
நான் சென்னை லயோலாவில் பி.காம் முடித்து மேற்கொண்டு எம்.காம் சீட்டிற்கு தாமதமாய் விண்ணப்பித்து (காரணம் கொழுப்பு ...நாம படித்த காலேஜில்...பிளா...பிளா ..பிளா ...) அதற்குள் இடங்கள் முடிந்து (அப்போதெல்லாம் 20 சீட்டுக்கள் x 2 செக்ஷன் மட்டுமே )...வேலைக்கு போக தீர்மானித்து ....
1982 டிசம்பரில் ''ப்ரீச் கேண்டி '' மருத்துவமனையில் பணி புரிந்த தாத்தா (அம்மா வழி உறவு ) ஒருவரிடம் ''விசா ஸ்டாம்பிங்'' செய்வது தொடர்பாய் போன வேளை..
அப்போதெல்லாம் எங்கள் ஊரார் யார் என்றாலும் அவர் தான் கதி ....
என்னோட அம்மம்மா உடன் பிறந்த தம்பியே எங்கள் பகுதியில் 1955-ல் குவைத் போன முதல் நபர் ...1983-ல் எங்க குடும்பத்தார் சுமார் 50-க்கும் மேல் குவைத்தில் ...பெரும்பாலும் வீட்டு / கம்பெனி டிரைவர் பணி , ஹௌஸ் பாய் , சமையல் ,தோட்டக்காரர்கள் ...
1952-ல் கத்தார் போன உறவினர் ''அருளப்பர்'' என்பவர் ஆறே மாதத்தில் மனம் வெறுத்து திரும்பி விட்டாராம். அவர் இந்தியன் ரயில்வேயில் எஞ்சின் டிரைவர் பணியில் இருந்து விடுப்பு எடுத்து சென்றதும் காரணம் .
நல்ல மத்திய அரசுப் பணி / ஊதியம் ..கத்தாரிலோ ?...கிடைத்தது யாருக்குத் தெரியும் ?
தாத்தா வாங்கிய ஊதியமோ இந்திய ரூபா அணா பைசாவில் நூறுக்கும் கீழேயே தான் .1962-ல் தான் குவைத் தீனார் புழக்கத்தில் வந்தது . அதுவரையில் இந்திய ரூபா அணா பைசா...தான் புழக்கத்தில் இருந்தது என்பது வரலாற்று உண்மை .
எங்கள் தாத்தா 28 ஆண்டுகள் குவைத்தில் இருந்தார் .1975 வரை நோ ஏர் கண்டிஷன், சீலிங் ஃபேன்...தடித்த கோரைப்பாய் ...அதில் வாளித் தண்ணீரை தெளித்து படுப்பார்களாம். மண் சுவர் வீடுகள் .வெயில் தாங்கும். உணவு மிக மோசம். தாத்தா சமையல் பணி .....எனவே நோ ப்ராப்ளம் ...
தண்ணீரும் மரப் பீப்பாயில் கழுதைகள் சுமந்து வருமாம். ஈராக்கில் இருந்து தண்ணீர் சப்ளை.
இன்று என் பெரியப்பா மகன் 40+ ஆண்டுகள் ...இன்றும் அங்கேயே இருக்கிறார் ...பெயர் ஜேசுதாசன் ...ரெகார்ட் ஹோல்டர் ...
குடும்பத்தில் குவைத் போன ''''''முதல் இளங்கலை பட்டதாரி''''' அடியேன் மட்டுமே ...
தாத்தா ''ப்ரீச் கேண்டி'' கட்ட அடிக்கல் நாட்டிய நாள் 1950-ல் தொடங்கி அங்கு பணி என்பதால் பெரிய செல்வாக்கு உண்டு . 1982-ல் சுமார் முப்பதாண்டு பிளஸ் ... சர்வீஸ் ....எங்கள் ஊர்க்காரர்கள் பலருக்கும் வேலை வாங்கித் தந்து தனி ராஜ்யமே அங்கு நடத்தினார் ....
இந்தியாவின் பல மாநில (கேரளா , கர்நாடகா, ஒரிஸ்ஸா , பீஹார் , உ.பி, ராஜஸ்தான் .....) அனைத்து ஊழியர்களும்...''அண்ணாஜி'' என மதிக்கும் ஒரே நபர்.
மிகுந்த செல்வாக்கு ...நல்ல உயரம் & கட்டுமஸ்து தோற்றம் ...ஆனால் அவர் ஒரு பலாப்பழம் ...கரடு முரடு தோற்றம் ...பிள்ளை மனம் ...அன்பு ...இரவில் / டூட்டி இல்லாத வேளைகளில் நன்றாய்க் குடிப்பார். மதுக்கடை பக்கத்து தெரு சந்தில் ...நடை தூரத்தில் ...சற்று அப்பால் ''காட்பரீஸ் '' சாக்லேட் கம்பெனி ....
சரளமாய் இந்தி ,மராட்டி ,குஜராத்தி பொழிவார் ...
அப்போது 1982 டிசம்பரில் ''ப்ரீச் கேண்டி'' -ல் ...அமிதாப்பச்சன் வயிறு கிழிந்து அட்மிட் ஆகி இருந்தார்.
கமல்ஹாசன் குதம் கிழிந்து மூல நோய் அறுவை சிகிச்சை நோயாளியாக படுத்திருந்தார் ...
ஹேமமாலினி முதல் பெண் குழந்தை ஈன்று இருந்தார் . பரிசோதனை செய்ய அடிக்கடி வருவார்.
மூவரையும் பார்க்க தாத்தாவுடன் சென்ற பெருமை மிகு நிகழ்வு அங்கு ...
அப்போது தான் முதல் லிப்ட் அனுபவம் ...நிகழ்ந்தது ...
ஆனால் அது வெறும் மூன்று மாடிகள் . அடுத்து ஏர் இந்தியா மெய்ன் கட்டிடம் நரிமன் பாயிண்ட் அலுவலகம் போனோம். ஏதோ மெடிக்கல் சர்டிபிகேட் அங்கு கட்டாயம் வாங்குவது வழமை . ஒரு மஞ்சள் புத்தகம் ...அதில் ''Full Dose'' சீல் அடித்து தருவார்கள். குவைத் போகும் நபர்களுக்கு மிகக் கட்டாயம் தேவையாம்.
அங்கு பல மாடிகள் . சரியாக நினைவில்லை .ஆனால் எப்படியும் 20-க்கும் மேல் இருந்தது. இங்கு வேடிக்கையாய் அனுபவிக்க வேண்டுமென்றே மேலும் கீழும் சிலமுறை சென்று மஜாவை அனுபவித்தேன் . ஆனந்தம் ...ஏறக்குறைய சொர்க்கம் ....
ஆனால் அதைவிட இனிய அனுபவம் 40 மாடிகள் போன இனிய அதிர்ச்சி அனுபவம் ஜனவரி 1983...''பொங்கல்'' வேளை கிடைத்தது ....அடுத்த பதிவில் ....
அருகிலிருப்பவரையே மறைக்கும் புகை
ஆபத்தைக் கொடுக்கும் வகை
இடுகாட்டில் எரிக்கும் வரை 
ஈகை காட்டும் இருட்டறை 
உறவுகள் இன்பத்தை அழிக்கும்
ஊரும் உன்னைப் பழிக்கும்
எங்கும் குடிக்கும் பழக்கம்
ஏனையவரையும் துணைக்கு அழைக்கும்
ஐயமில்லாமல் நிறுத்தணும் புகையை
ஒரு நிலைப்படுத்தணும் மனதை
ஓயாது  வெறுக்கணும் புகைப்பிடியை !!!
 முழக்கங்கள்:-
புகையில் இருக்கும் நஞ்சு
கண்டு நீ அஞ்சு
புகையாய் இழுக்கும் நச்சு
அதனால் இழப்பது உயிர் மூச்சு
புகை பரவி கெடுக்கும் பொன் உலகை
மெல்ல எடுக்கும் மக்கள் இன்னுயிரை
புகைக்க புகைக்க இன்பம்
முடிவில் அளவில்லா துன்பம்
புகைத்தார் வையகம் மேல்
புதைந்தார் பூமிக்கு கீழ்
புத்துணர்வு தந்த புகைப்பழக்கம்
சத்துயிர் மாய்த்து சாய்க்கும்
புகை அது ஒரு மயக்கம்
அதை விட ஏன் தயக்கம்
புகைக்க புகைக்க புகை நிறையும்
பையில் உள்ள பணம் கரையும்
அன்று சுருள் சுருளாய் புகைத்தவர்
இன்று சுருங்கிய புகைப்படமாய் சுவரில்
புண்ணான மனத்தை புகை விட்டு ஆற்றும்
பண்பு கெட்ட வழக்கத்தை இன்றே நீ மாற்று
“தம்” அடித்தால் தம்பிடிக்கும் பயன் இல்லை
மே31 சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினமாகும்.
அதனை முன்னிட்டு புகைத்தல் பற்றிய பார்வையை இங்கு விளக்குவோம்.
இன்று கெட்ட பழக்கமாக இருக்கும் சிகரெட், சுருட்டு, பீடி போன்றவை ஆரம்ப காலத்தில் பரவலாக இல்லாமல் இருந்த காரணத்தினாலும் இவற்றுக்கும் பயன்படுத்தப்படும் புகையிலை முதலானவற்றினால் விளையும் சுகாதாரக் கேடுகள் பற்றி அன்று அறியப்படாமல் இருந்த காரணத்தினாலும் புகைத்தல் பற்றி தெளிவான கருத்துக்கள் வழங்கவில்லை. 
அண்மைக் காலம் வரை புகையிலையின் தன்மை, புகைத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றிய அறிவுபூர்வமான, விஞ்ஞான ரீதியிலான தெளிவான முடிவுகள் பெறப்படாததனால் புகைபிடித்தல் பற்றிய தீர்ப்பிலும் கருத்து வேறுபாடுகள் நிலவி இருக்கின்றன. சிலர் புகைத்தல் தவறு என்றார்கள். வேறு சிலர் பிழையானதல்ல என்றார்கள். ஏன் தவறு எனக்காண்போம்.
1.போதையை எற்படுத்துதல்:
புகைத்தல் போதையை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக ஆரம்பபழக்கமுடையோருக்குச் சிறிது கூடுதலாகவே போதை ஏற்படுகிறது. ஏனைய போதை பொருட்களைப் பாவிப்பதன் மூலம் ஏற்படுகின்ற அளவுக்குப் போதை ஏற்படாத போதும், மிகக் குறைந்த அளவிலாவது புகைப்பவர்கள் போதை கொள்கிறார்கள். 'குறைந்தளவு போதையை ஏற்படுத்தக் கூடியதும் தவறே.
2.சோர்வை ஏற்படுத்தல்:
புகைப்பதனால் போதை ஏற்படுவது இல்லை என்று வாதிப்போரும் புகைத்தல் சோர்வை ஏற்படுத்துகிறது என்பதை மறுப்பதில்லை. உடல் உறுப்புக்களில் சோர்வை ஏற்படுத்தக் கூடியவற்றையும் தடுத்து விலக்குவதே நன்று.புகைப்பதனால் மூன்று வகையான தீமைகள் விளைகின்றன.
(i) உடல் நலனுக்கு ஏற்படும் கேடு:
புகைப்பதனால் உடல்நலனுக்கு ஏற்படும் பயங்கரமான பாதிப்புக்களை பற்றியும் சுகாதாரக் கேடுகளைப் பற்றியும் நவீன மருத்துவம் மிக விரிவாகப் பேசுகிறது. ஒரு காலத்தில் புகைத்தலால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி உறுதியான, முடிவான, அறிவியல் ரீதியான ஆய்வுகள், முடிவுகள் இருக்கவில்லை என்பதனால் இது பற்றிய நிலைப்பாடுகளும் வேறுபட்டன. ஆனால் இன்று இதன் கேடுகள் குறித்து எத்தகைய சந்தேகத்தையும் ஏற்படுத்த முடியாத அளவுக்கு இது பற்றிய ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
தொண்டை அல்லது வாய்ப் புற்றுநோய் அபாயத்தை புகைப்பிடித்தல் தோற்றுவிக்கிறது. மேலும் புகைப் பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்கள் உணவுக்குழல், இரைப்பை புற்றுநோயினால் இறக்கும் அபாயம் அதிகம் இருக்கிறது. புகைப்பிடிக்காதவர்களைவிட புகை பிடிப்பவர்கள் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக புற்றுநோய் ஆகியவற்றாலும் தாக்கப்படும் ஆபத்தும் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன.
புகைப்பிடித்தல் இருதய நோய்;களுக்கும் முக்கிய காரணமாக விளங்குகிறது. புகைக்கப்படும் சிகரெட்டின் எண்ணிக்கை அதிகரிக்கும் அளவுக்கு மாரடைப்பு ஏற்றபடுவதற்கான வாய்ப்பும் தீவிரமடைகிறது. சிகரெட்டில் நிகோடின் அடங்கலான 4000 கேடு விளைவிக்கும் இரசயானப் பொருட்கள் இருப்பதாக விஞ்ஞானம் கூறுகிறது.
புற்றுநோய், இருதய நோய்கள் மட்டுமன்றி புகைப்பிடிப்பதால் அபாயகரமான சுவாசக் கோளாறுகளும் ஏற்படுவதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. மார்புச் சளி, ஆஸ்துமா, எம்பிஸிமா(Emphysema) உட்பட மற்றும் பல சுவாசக் கோளாறு நோய்களை புகைத்தல் தீவிரப்படுத்துகிறது என்பதற்கு போதிய அறிவியல் ஆதாரங்கள் கிடைக்கின்றன.
(ii) பொருள் நஷ்டம்:
இரண்டாம் வகைக் கேடு பொருள் நஷ்டமாகும்.
புகைப்பிடிப்பதனால் பணம் விரயமாகிறது. உடலுக்கோ, ஆன்மாவுக்கோ எத்தகைய பயனுமளிக்காத ஒன்றிற்காக பணம் விரயமாக்கப்படுகிறது. வீண்விரயம் செய்வதை யாரேனும் விரும்புவரோ?.
(iii) ஆன்மாவுக்கு ஏற்படும் தீங்கு
புகைத்தலுக்கு பழக்கப்பட்டவர்கள் தமது மனோவலிமையை இழந்து இத்தீய பழக்கத்துக்கு அடிமையாகி விடுகின்றனர்.ஏதோ காரணத்தால் புகைபிடிக்கின்ற சந்தர்ப்பத்தை இழக்கின்ற வேளையில் இத்தகையோரின் நடவடிக்கைகள் எவ்வளவு தூரம் கேவலமானதாகவும் கீழ்த்தரமானதாகவும் அமைகின்றன என்பதை அன்றாட வாழ்க்கையில் நம்மால் காண முடியும்.
எனவே, சுகாதார கண்ணோட்டத்தில் நோக்கினாலும், பொருளாதார கண்ணோட்டத்தில் பார்த்தாலும் ஆன்மீகக் கண்ணோட்டத்தில் அணுகினாலும் புகைபிடித்தல் தவறு என்ற கருத்தே மிகைத்து, பலமானதாக விளங்குகிறது.