Thursday, 5 January 2017

மகத நாட்டில் சிரேனிக் என்ற மகாராஜா இருந்தார். தாரிணி என்பது அவருடைய ராணியின் பெயர். அவள் கர்ப்பமாக இருந்த போது, மழையில் நனைய வேண்டுமென்று ஓர் ஆசை ஏற்பட்டது. (பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு விசித்திர விசித்திரமான ஆசைகள் ஏற்படுவதுண்டு. ராணி என்றால் கேட்க வேண்டுமா?) சிரேனிக் மகாராஜா அவளுக்காக விசேடப் பாதுகாப்புக்கள் ஏற்படுத்தி, மழையில் சிறிது நேரம் அவளை உலாவ விட்டார். நல்ல காலமாய், உடல் நலம் கெடாமல் ஒரு புத்திரனைப் பெற்றெடுத்தாள் ராணி. மேகத்தின் அருளினால் புத்திரன் பிறந்தாக மகிழ்ச்சியடைந்த மகாராஜா அவனுக்கு மேககுமார் என்று சூட்டினார்.
அரசர்களுக்குரிய எல்லாக் கலைகளையும் தேர்ச்சி பெற்று, யாவர்க்கும் பிரியமுள்ள அரசகுமாரனாக அவன் இருந்த சமயம், ஜைன மத ஸ்தாபகரான மகாவீரர் மகத நாட்டுக்கு விஜயம் செய்தார். அவருடைய நற்போதனைகளைக் கேட்ட மேககுமார், அரச போகங்களைத் துறந்து துறவியாக வேண்டுமென்று ஆசைப் பட்டான். தந்தையும் தாயும் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் கேட்கவில்லை. அவன் தனது சீடனாக வரட்டும் என்று கூறி மகாவீரர் அவனைத் தன் பரிவாரத்தில் சேர்த்துக் கொண்டு புறப்பட்டார்.
முதல் நாள் ஏதோ ஒரு பழைய வீட்டில் எல்லாரும் தங்கினார்கள். அன்றிரவு கழிப்பறைக்கு வெளியே, தரையில்தான் மேககுமார் படுக்க வேண்டியிருந்தது. ராத்திரி பூரா அவனுடைய பாயை மிதித்துக் கொண்டும், சில சமயம் அவனையே மிதித்துக் கொண்டும் போவோரும் வருவோருமாக இருந்தார்கள். ஒரு நிமிடம் கூடத் தூங்க முடியாமல் நரக வேதனையில் மூழ்கியவன், மறுநாள் குருவிடம் சென்று, ‘என்னால இப்படிப்பட்ட கஷ்டத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனக்குத் துறவு வாழ்க்கை வேண்டாம். நான் பழையபடி அரண்மனைக்குப் போய்விடுகிறேன்,’ என்று வேண்டிக் கொண்டான்.
மகாவீரர் புன்னகை செய்தார். ‘குழந்தாய், உன்னுடைய பூர்வ ஜன்மக் கதை உனக்குத் தெரியமா? முந்தின பிறவியில் நீ யார் என்று அறிவாயா?’ என்று கேட்டார்.
‘தெரியாது, சுவாமி,’ என்றான் மேககுமார்
சொல்கிறேன், கேள். முன் ஜன்மத்தில் நீ ஒரு காட்டில் யானையாக இருந்தாய். சாதாரண யானையாக அல்ல. ஏராளமான யானைகளுக்கும் பற்பல விலங்குகளுக்கும் அரசனாக இருந்தாய். அந்தக் காட்டில் அடிக்கடி தீ விபத்து நிதழ்வதுண்டு. தப்பித்து ஒதுங்கிக் கொள்ள இடமில்லாமல் விலங்குகள் நெருப்பில் மடியும். இதைக் கண்ட நீ, காட்டின் நடுவே பல மரங்களை வெட்டி சாய்த்து, தரைமட்டமாக்கி, பரந்த மைதானம் போல ஓர் இடத்தை ஏற்படுத்தினாய். காட்டில் தீ பரவும் போது விலங்குகள் அங்கே ஒடி வந்து தஞ்சம் புகுந்து உயிரைக் காத்துக் கொண்டன.
அப்படி ஒரு முறை தீ பரவிய போது பல விலங்குகள் அங்கே வந்து சேர்ந்தன. அவைகளுக்குக் காவல் போல நீ படுத்திருந்தாய். அப்போது உன் வலது காலில் கொஞ்சம் அரித்தால், சொறிந்து கொள்வதற்காகத் தூக்கிளாய். தும்பிக்கையால் சொறிந்து கொண்டுவிட்டு, காலைக் கீழே இறக்க நினைத்தபோது, சரியாய் அந்த இடத்தில் ஒரு முயல் குட்டி ஒண்டிக் கொண்டிருப்பதைக் கண்டாய். காலை இறக்கினால் அது நசுங்கி இறந்து விடும் என்கிற நிலைமை. நீ அதன் மீது இரக்கம் கொண்டு, காலை இறக்காமல் தூக்கியது தூக்கியபடியே வைத்துக் கொண்டிருந்தாய். ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரமல்ல. இரண்டரை நாள்! காட்டுத் தீ அடங்கி, எல்லா மிருங்கங்களும் திரும்பிச் சென்றன. அந்த முயலும் தான் உயிர் தப்பிய அபாயத்தைப் பற்றி அறியாமலே ஓடி விட்டது.
அதன் பின் நீ காலைக் கீழே இறக்கினாய். ஆனால் இரண்டரை நாட்கள் தூக்கியபடியே வைத்திருந்ததால் காலில் ரத்த ஒட்டம் இல்லாமல் போகவே உன்னால் நிற்க முடியவில்லை. நடக்க முடியவில்லை. தடுமாறிக் கீழே விழுந்தாய். எழுந்திருக்க முடியாமல் கொஞ்ச நாளில் தவித்துப் பிராணனை விட்டாய்.
ஒரு முயல் குட்டியைக் காப்பாற்றுவதற்காக முன் ஜன்மத்தில் நீ செய்த தியாகத்தினால்தான் இந்த ஜன்மத்தில் மானிடப் பிறவியை அடைந்தாய். அதிலும் உன்னதமாக மகத நாட்டின் அரசகுமாரனாகப் பிறந்தாய். அப்படிப்பட்ட நீ இரண்டு மணி நேரம் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்கிறாயே? இந்தப் பிறவியில் நீ இரக்க சிந்தனை உள்ளவனாக, ஈ எறும்புக்கும் தீங்கு செய்யாதவனாக, துன்புற்றோருக்கு உதவுகிறவனாக வாழ்ந்தாயானால், இன்னும் எவ்வளவு சிரேஷ்டமான பாக்கியங்கள் அடுத்த பிறவியில் கிடைக்கும் என்படித யோசித்துப் பார்.’
மேககுமார் அவர் காலடியில் விழுந்து, ‘என்னை மன்னியுங்கள், மகா குருவே,’ என்றான். மாற்றாரின் துன்பத்தைத் துடைப்பதில் மகிழ்ச்சி கொள்பவனாக, துறவியாகவே வாழ்க்கையைத் தொடர்ந்தான்.

Sunday, 1 January 2017

தலைமைப் பண்பு என்றால் என்ன?

அடிக்கடி வேலைக்கான விளம்பரங்களில் ‘Leadership qualities’ என்கிற வார்த்தைகளைப் பார்த்திருப்பீர்கள்.
leader என்பதைப் பலர் பலவிதமாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
அரசிலில் தலைவர் என்றால் ஹீரோ. எதையாவது பண்ணி மக்கள் கூட்டத்தைக் கவர வேண்டும். அந்தக் கவர்ச்சியில் ஓட்டு வாங்க வேண்டும். ஒரு மாநிலமோ, நாடோ முன்னேறுவதற்கு என்ன வேண்டும் அதை எத்தனை வருஷத்தில் சாதிக்கலாம் அதற்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும், மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் அறிந்த தலைவர்கள் யாரும் இப்போது இல்லை.
நாம் பேச வந்தது அரசியல் தலைவர்கள் பற்றி இல்லை, ஆர்கனிசெஷன் தலைவர்கள் பற்றி.
இங்கேயும் நிறைய தப்பான புரிதல்கள் இருக்கின்றன.
அடிப்படைத் தவறு leader என்பது ஒரு பதவி என்பது. உதாரணமாகத் திகழ்கிறவன், பொறுப்பு ஏற்கிறவன்தான் லீடர். பொறுப்பேற்கிற போதுதான் பிரச்சினைகளுக்கு யார் காரணம் என்பதற்கு பதில் என்ன காரணம் என்கிற கோணத்தில் பார்க்க முடியும்.
சில தலைவர்கள் உதவியாளர்கள் தங்களுக்கு இருப்பதே அந்தந்த வேலைகள் தமக்குத் தெரியாததால் என்கிற மாதிரி நடந்து கொள்வார்கள். எதிலும் இன்வால்வே ஆக மாட்டார்கள். ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது, மெஷின் ஏழரை மணி நேரம் ஓடியாகணும்’ என்கிற ரீதியில் பேசுவார்கள். நரசிம்மன் வராவிட்டால் ப்ராஜக்ட் பற்றி என்ன கேட்டாலும் ‘இன்னைக்கு நரசிம்மன் லீவு’ என்பதுதான் பதிலாக இருக்கும். உதவியாளர்கள் இருப்பது எல்லாவற்றையும் ஒருத்தரே செய்ய முடியாது என்பதால்தான். இப்படிப்பட்ட தலைவர்களிடம் ஒரு நாள் லீவு வாங்குவதற்குள் தாலி அறுந்து விடும்.
இன்னும் சிலர் எல்லாவற்றையும் தாங்களே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்கள். இப்படிச் செய்கிறவர்கள் இரண்டு ரகம். ஒன்று டெலிகேட் செய்யத் தெரியாதிருப்பவர்கள். ஒருத்தருக்கு ஒரு வேலையைக் கொடுத்து அவருடைய தவறுகளை சுட்டிக் காட்டி சரியான ரிசல்ட்டைப் பெறுவது ஒரு கலை. இன்னொரு ரகம் நம்பிக்கை இல்லாதவர்கள்.
நல்ல லீடர் என்கிறவன் ஒரு டார்கெட்டை சின்னச் சின்ன இலக்குகளாகப் பிரிப்பான். அதை ஒவ்வொருத்தரிடம் தருவான். ஒவ்வொருத்தரும் தங்கள் இலக்கை அடைய என்ன செய்ய வேண்டும் என்று சொல்லித் தருவான். தெளிவான தீர்வுகள் தெரிகிற போது அதைத் தனக்காக காத்திராமல் செய்து கொள்கிற அதிகாரத்தைக் கொடுப்பான். அவன் எடுக்கிற முடிவுகள் தவறாகப் போகிற போது அதற்கான பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வான். ஏன் தவறாயிற்று என்று எடுத்துச் சொல்வான். மறுபடி முடிவெடுக்கிற சந்தர்ப்பத்தைக் கொடுப்பான்.
ம்ம்க்கும்… இப்படி எல்லாம் இருந்தா வேலை ஆகாது. நம்மளை யாரும் மதிக்கவே மாட்டாங்க என்று சிலர் சொல்வார்கள். மதிப்பது என்றால் பார்த்து பயப்படுவதோ, தரையளவு தாழ்ந்து ‘குட் மார்னிங்’ சொல்வதோ இல்லை.
அறிவும், இன்வால்வ்மேன்ட்டும்தான் நமக்கு மதிப்பைத் தரும்.
சரியாகச் செய்தால் பாராட்டு கிடைக்கும், தப்பாய்ப் போனால் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்கிற போதுதான் வேலையில் தைரியம் வரும். தைரியம் இருந்தால்தான் ரிஸ்க் எடுப்பார்கள். ரிஸ்க் எடுத்தால்தான் சாதிப்பார்கள். அவர்கள் சாதித்தால்தான் நீங்கள் நல்ல தலைவர்!

கோயிலுக்குப் போனால் இடி தாக்காது

மன்னராட்சி நடந்த காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம்.
என்ன காரணம் தெரியுமா?
கோயில்களின் உயரமான கோபுரங்களையும் அதில் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு ஆன்மீக வால்யூ உண்டா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் விஞ்ஞானம் தெரியும்.
அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.
ஒரு ஏரியாவில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் எர்த் ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது.
கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்.
அதெப்புடி என்று கேட்கிறவர்கள் கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.
temple
சமீபத்தில் மும்பை போயிருந்த போது முப்பது மாடி, முப்பத்தைந்து மாடி குடியிருப்புக்கள் நிறைய பார்க்க முடிந்தது. முப்பத்தைந்தாவது மாடியிலிருந்து கோபுரக் கலசமே புளிப்பு மிட்டாய் சைசில்தான் தெரியும்!
மழைக்கு ஒதுங்கியதில்லை
எங்கள் பள்ளியில்
கூரை இல்லை

மழையில் நிற்கிறாய்
பொறாமை
மழைத்துளி மேல்

முதலீட்டைத் தின்றால்தான்
விற்பனை தொடரும்
இட்லிக் கடை

மெளசுக்கு மவுசு கணிணியில்
மெளசால் ரவுசு
கழனியில்

மின்னல் கண்டதும் இடிப்பது
வானத்தில் மட்டுமா
பஸ்ஸிலும்தான்

மூன்றுக்குப் பிறகு வேண்டவே வேண்டாம்

‘இரண்டுக்குப் பிறகு இப்போது வேண்டாம், மூன்றுக்குப் பிறகு வேண்டவே வேண்டாம்’
1970 இல குடும்பக் கட்டுப்பாட்டுக்காக வந்த இந்த வாசகம் இப்போது சனிக்கிழமை மாலைகளில் பாரில் மட்டுமே பயன் படுகிறது.
ஏனென்றால் அது நாமிருவர் நமக்கிருவராக மாறி, இப்போது நாமிருவர் நமக்கொருவராக பின்பற்றப்பட்டு வருகிறது. விரைவில் ‘நாமே இருவர், நமக்கெதற்கு ஒருவர்?’ என்று மாறினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
நாகப்பட்டினத்தில் என் பள்ளி நாட்களின் போது ஒரு ஞாயிற்றுக் கிழமை பக்கத்து ஊரிலிருந்த நண்பன் வீட்டுக்குப் போயிருந்தேன்.
“என்னடா வீட்டிலே ஏதாவது விசேஷமா?” என்று கேட்ட என்னை அவன் ஆச்சரியமாகப் பார்த்தான்.
“ஏன் கேக்கறே?”
“ஆடிப்பூரத் திருவிழா மாதிரி ஜே ஜே ன்னு கூட்டமா இருக்குதே வீடு அதனாலே கேட்டேன்”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை”
“பின்னே, எதுக்காக எல்லாரும் ஊர்லேயிருந்து வந்திருக்காங்க?”
“ஊர்லேர்ந்தேல்லாம் யாரும் வரல்லை, எல்லாரும் வீட்டிலே எப்பயுமே உள்ளவங்கதான்”
“ஓஹோ, உங்க அப்பாவோட பிரதேர்ஸ் சிஸ்டர்ஸ் அவங்க பாமிலி எல்லாம் கூட்டுக் குடித்தனமா இருக்கீங்களா?”
“இல்லப்பா, எல்லாரும் என்னோட பிரதர்ஸ், சிஸ்டேர்ஸ் அவங்க பாமிலி மட்டும்தான்”
“என்னடா சொல்றே, நூறு பேர் இருப்பாங்க போலிருக்கேடா?”
“இருக்கும்”
“உனக்கு எத்தனை பிரதர்ஸ், சிஸ்டர்ஸ்?”
“ஒன்பது பிரதர்ஸ், ஆறு சிஸ்டர்ஸ் ன்னு நினைக்கறேன்”
“நினைக்கிறியா…”
“ஆமாண்டா யாருக்குமே உறுதியாத் தெரியாது. நாலஞ்சு வருஷம் முந்தி காலரா வந்ததே அதுல கொஞ்சம் பேர் செத்துட்டாங்க”
“கொஞ்சம்ன்னா?”
“ஒரு இருபது இருபத்தஞ்சு பேர்”
“அது போகவே இவ்வளவு கூட்டமா?”
“நான் இன்னம் முழுக்க சொல்லல்லே. அப்போ செத்தவங்க யார் யாருன்னு கண்டு பிடிக்கவே அஞ்சாறு நாள் ஆயிடிச்சு”
“இவ்வளவு பெரிய குடும்பத்தை மேனேஜ் பண்றதே கஷ்டமாச்செடா?”
“ஏன் கேக்கறே. காலைலே எழுந்தா காபி குடிக்க ரெண்டு மணி நேரம் ஆயிடும். ஒண்ணா ரெண்டா முப்பத்தேழு லிட்டர் வெச்சி காச்சனும்”
“காபிக்கு முப்பத்தேழு லிட்டர் பாலா! மாசம் எவ்வளவு செலவாகுது?”
“போன மாசம் முப்பத்தி ஏழாயிரம் ரூபா ஆச்சு. மே மாசமாச்சே, நிறையப்பேர் ஊருக்குப் போயிருக்காங்க”
“அவ்வளவுதான் ஆகுதா மாசத்துக்கு… ரொம்பக் கம்மியா இருக்கு?”
“நான் சொன்னது பாலுக்கு மட்டும். மொத்த செலவு ரெண்டு லட்சத்தி பதினேழா….”
“சரி, சரி நான் என்ன ஆடிட்டுக்கா வந்திருக்கேன். இத்தனை பேர் இருந்தா பாத ரூம் போறது கூட கஷ்டமாச்செடா”
“அதுல பிரச்சினை இல்லை. வீட்டோட பின் பாதியை இடிச்சிட்டு பதினஞ்சு இருபது கக்கூஸ் கட்டி விட்டுட்டோம். முனிசிபாலிட்டிலேர்ந்து எங்க வீட்டுக்குன்னு தனியா ஆள் போட்டிருக்காங்க. அவங்க மூணு ஷிப்டும் ஒர்க் பண்றாங்க”
“ஏண்டா, மூன்றுக்குப் பிறகு வேண்டவே வேண்டாம்ன்னு சுவத்துக்கு சுவர் எழுதி இருக்கே, நீங்க யாரும் அதைப் பாக்கறதே இல்லையா?”
“ஏன் பாக்காம? அதனால்தான் எங்க பாமிலிலே யாருமே மூணு பொண்டாட்டிக்கு மேலே கட்டல்லை”

ரிட்டையர் ஆகாமல் இருப்பது எப்படி?


காலிங் பெல் அடித்தது.
திறந்தால்,
”எக்ஸ்க்யூஸ் மி” என்று ஒரு பெண் நின்றிருந்தார். இப்போதெல்லாம் பெண்கள் வாசலில் வந்து விற்காத பொருளே இல்லை. மதம் உள்பட எல்லாமே விற்கிறார்கள்.
”யா.. யு ஆர் எக்ஸ்க்யூஸ்ட்” என்று கதவைத் திரும்ப சாத்தப் போனேன்.
“அதில்ல சார்.. கேன் யு ஸ்பேர் டூ மினிட்ஸ்?”
“கரெக்டா டூ மினிட்ஸ்தான்” என்றேன் கறாராக ராக்கெட் லாஞ்சிங்கைப் பாதியில் விட்டு வந்தவன் போல. ஆக்சுவலாய் என்ன செய்வதென்று தெரியாமல் மோவாயைச் சொறிந்து கொண்டிருந்த போதுதான் பெல் அடித்தது.
“ஓக்கே சார். திஸ் ஈஸ் என் இண்டரஸ்டிங் ஸ்கீம். மாசம் ஃபைவ் தௌசண்ட் வீதம் பத்து வருஷத்துக்கு கட்டினீங்கன்னா அதுக்கப்புறம் லைஃப் பூரா மாசம் ஃபைவ் தௌசண்ட் கிடைக்கும்”
இதென்ன பெரிய்ய இந்த ஸ்கீம்? இதை எந்தக் கழுதையிடம் கட்டினாலும் அதால் இந்த மாதிரி திருப்பித் தர முடியுமே!
“இண்டரஸ்டிங். ஆனா எனக்கு அவசியமில்லை”
“திஸ் ஈஸ் அ ரிடயர்மெண்ட் பிளான் சார்”
“கரெக்ட். ஆனா எனக்கு பிரயோஜனப்படாது”
“எவ்வளவு நாள் உழைப்பீங்க சார்? ரிட்டயர் ஆக வேண்டாமா?”
“ஆகத்தான் வேணும். அதுக்கு ஒரு விஷயம் ரொம்ப இம்பார்டண்ட் ஆச்சே”
“என்னது சார்?”
“எங்கயாவது வேலைல இருக்கணுமே?”

அதிகப் படிப்பு = அதிகக் குழப்பம்!


அதிகம் படித்தவர்கள்தான் எளிய விஷயங்களையும் ஜாஸ்தி குழப்பிக் கொள்கிறார்கள்.
இதற்கு நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.
என் நண்பன் ஒருவன் ஆட்டமோபைலில் போஸ்ட் கிராஜுவேட். கும்மிடிப்பூண்டியிலிருந்து வரும் போது அவன் பைக் நடுவழியில் மக்கர் செய்தது. அவன் கார்புரேட்டரைக் கழற்றி கிளீன் செய்கிறான், பாயிண்ட் செக் செய்கிறான், ஸ்பார்க் பிளக், ஏர் ஃபில்ட்டர்…..
ம்ம்ஹூம்.
மெக்கானிக் ஷாப்புக்குத் தள்ளிக் கொண்டு போனால் அவன் முதலில் பெட்ரோல் ட்யூபைப் பிடுங்கி செக் பண்ணிப் பார்த்துவிட்டு,
“வண்டில பெட்ரோல் இல்லைங்க” என்றானாம்.
காலையில்தானே ஃபுல் டேங்க் போட்டோம், அதெப்படி காலியாகும் என்கிற நினைப்பு. எவனோ பெட்ரோலைத் திருடிக் கொண்டு போயிருக்கிறான்! காலையில்தான் பெட்ரோல் போட்டோம் என்கிற நினைப்பு இருக்கிறவன், காலைவரை நன்றாகத்தானே ஓடியது அதற்குள் வண்டியில் இத்தனை டிஃபெக்ட் வருமா என்று யோசித்திருக்கலாம், ஆனால் எது அந்த யோசனையைத் தடுத்தது?
படிப்பு. நான் ஆட்டமோபைல் போஸ்ட் கிராஜுவேட் என்கிற கர்வம்.
அது போல, தொட்டியிலிருந்து பம்ப் செய்யும் பம்ப் ஒன்று வேலை செய்யவில்லை. ஒரு ஐ. ஐ. டி எஞ்சிநியரைக் கூப்பிட்டுக் காண்பித்ததில் அவர் ஒரு யு ட்யூப் மேனோ மீட்டர் வைத்து செக் செய்வதும் டிசைன் விவரங்கள் பார்ப்பதுமாக இருந்திருக்கிறார். செக்ஷன் ஆப்பரேட்டர் வந்து
“என்ன சார் ஆச்சு?” என்று கேட்கவும்
“Actually the available NPSH is less than the required NPSH. That is why the suction is high and consequently the vapor pressure is also lowering. Naturally water will evaporate to compensate this loss and hence there is vapor lock. We need to relook the NPSH condition…” என்று அவர் வியாக்கியானம் பண்ணிக் கொண்டிருக்க,
ஒரு அன் ஸ்கில்ட் ஆசாமி வந்து கொஞ்சம் சாணியைக் கரைத்து சக்ஷன் பைப்பில் ஊற்றி பிரைம் செய்து ஸ்டார்ட் செய்ததும் பம்ப் இரைக்க ஆரம்பித்து விட்டது.
இன்னொரு அனுபவம் ரொம்ப சுவாரஸ்யமானது. கோத்தாரி கெமிக்கல்ஸில் வேலை செய்யும் போது, குளோரின் நிரப்பும் நிலையத்தில் ஒரு காண்டிராக்ட் ஒர்க்கர் சிகரெட் பிடுத்துக் கொண்டிருந்தார். அந்தப் பக்கம் வந்த எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர் கே.எஸ்.ரங்கராஜன் கோபமாக அவரைப் பார்த்து,
“எந்தக் காண்டிராக்ட்டுடா நீ? உன் பேரென்ன?” என்று கேட்டார்.
அவன் எதுவும் சொல்லாமல் திரு திருவென்று விழித்தான்.
தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் என்று மாறி மாறிக் கேட்டு எதற்கும் பதில் வராததால் அருகிலிருந்த சுந்தர பாஷ்யம் என்ற காண்டிராக்டரிடம்,
“எனக்கு 12 லேங்வேஜ் தெரியும். இவன் எந்த லேங்வேஜ்காரன்?” என்றார் எரிச்சலுடன்.
“தமிழ்தான் சார்” என்றார் சுந்தர பாஷ்யம்.
“பின்ன ஏன் பதில் சொல்லல்லை?” என்றார் மறுபடி எரிச்சலாக.
“அவனுக்கு காது கேக்காதுங்க”