Saturday, 11 February 2017

மழைவரக்கூடும் என்று
கொடியில் காயும்
ஆடைகளை எடுத்துக் கொண்டிருந்தேன்
வறட்சி மெழுகிய என்முகத்தை
மடங்கிய துணியின் நூல்களில்
பட்டுத் தொட்டது ஈரம் வழியும் காற்று
பாகற்கொடியின் இலைகளின் மேல்
படர்ந்திருக்கும் தூசிகளை
இறுதியாகப் பார்த்துவிட்டுத் திரும்புகையில்
உடைந்துவிட்டது துண்டு மேகம்
மெல்லிய குளிர்காற்று
உடல்முழுவதும் வலம்வந்து
கண்களின் வழியே ஒழுகிக் கொண்டிருக்க
வேலி முள்ளில் சிக்கிக் கொண்டது
முதல் மழைத் துளி
தம்பியின் விறகுக் குடைக்குள்
தஞ்சம் அடைவதற்குள்
அவிழ்க்கப்பட்டதால் முதுகுப்புறத்தில்
அருவி வடிந்த சாயலோடு
வீட்டிற்குள் நுழைந்தேன்
கவிதை ஒன்றைக் கிறுக்கி
விடுவதென்ற ஏற்பாட்டில்
எழுதுகோலை எடுத்த திசையில்
மழையின் அழைப்பு
கைபேசியின் தொடுதிரையில்
வெள்ளை நட்சத்திரங்களாக
நுரைத்துக்கொண்டிருந்தது
தூவிய மழைச் சாரலின் மிச்சம் .....

No comments:

Post a Comment