Monday, 28 May 2018

ரூபவதி - கடைசி பகுதி

ரூபவதியோட வாரிசுகளின் விலாசம் கிடைக்குமா என்று கேட்ட பரந்தாமனிடம்,
“ என்கிட்டே அந்த காகிநாடா விலாசம் இருக்குது.. எண்பது வருஷத்துக்கு முந்தினது.. அதை என் டைரியில் எழுதி வைத்திருக்கிறேன்” என்றார் சுதாகர் ராஜா.
“ நான் காகிநாடா போய் தேடிப் பார்க்கிறேன்.. போறதுக்கு பணம் மட்டும் கொடுங்க.. நான், அந்த வரைபடத்தை கண்டுபுடிச்சி எடுத்திட்டு வர்ரேன்..” என்றான் பரந்தாமன்.
“ என் கிட்ட ஆயிரம் ரூபாய் மட்டும் தான் இருக்குது.. உங்களோட பூஜைக்காக வைச்சிருந்தேன்.. அதை கொடுக்கிறேன். என்கிட்ட வேற பணம் கெடையாது.. அரண்மனையில பழைய காலத்து கலைப் பொருட்கள் கொஞ்சம் இருக்குது.. அதை மதுரைக்கு கொண்டு போய் வித்து பணம் பண்ணி காகி நாடா போய் வாங்க…”
சுதாகர் ராஜாவும் அவர் மனைவியும், தங்கள் அரண்மனையில் இருக்கும் கலைப் பொருட்களை எடுத்து வந்து ஒரு இடத்தில் அடுக்கினார்கள்.
குத்தீட்டிகள், தந்த கைப்பிடியோடு கூடிய கத்தி, மர வேலைப்பாடு கொண்ட கலைப் பொருட்கள், பழைய அங்கிகள் இப்படிப் பட்ட பொருட்கள்…
எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போய் விற்க முடியாது என்று தோன்றியது. குத்தீட்டிகளையும், பழைய அங்கிகளையும் விட்டு விட்டு மற்ற பொருட்களை மட்டும் தன் பெட்டியில் எடுத்து அடுக்கினான்.

மதுரைக்கு வந்து கையில் இருந்த கலைப்பொருட்களை விற்று பணம் பண்ண மேல மாசி வீதி, கீழ மாசி வீதி என்று அலைந்தான். மிகக் குறைந்த விலைக்கு கேட்டார்கள். என்ன விலைக்கு அப் பொருட்கள் போகும் என்று அவனுக்கு தெரியாது. அதனால் அதிகம் பேரம் பேச முடியவில்லை. மொத்தம் இரண்டாயிரம் ரூபாய் கையில் கிடைத்தது. சுதாகர் ராஜா கையில் பணமாக கொடுத்த ஆயிரம் ரூபாயும் சேர்த்து மூவாயிரம் ஆனது. கையில் பணம் சேர்ந்தவுடன், வேறு மாதரியான யோசனைகள் வந்தன அவனுக்கு.
எண்பது வருஷத்துக்கு முந்தைய விலாசத்தை வைத்து அந்த ரூபவதியின் வாரிசுகளை கண்டு பிடிக்க முடியுமா.. எத்தனை குடும்பங்கள் ஆகி இருக்கும்.. எத்தனை வாரிசுகள் ஆகி இருக்கும்.. எந்த வாரிசுடன் அந்த வெற்றிலைப் பெட்டி போயிருக்கும்.. அப்படி ஒரு வெற்றிலைப் பெட்டி இருப்பதை கவனித்து இருப்பார்களா.. அதை வைத்து இருப்பார்களா.. தூக்கிப் போட்டு இருப்பார்களா.. அதில் அந்த வரைபடம் இருக்குமா..
இதெல்லாம் ஆகாத காரியம் என்று தோன்றியது அவனுக்கு.
காகிநாடாவுக்கு போவதில்லை என்று முடிவு செய்து கொண்டான்.
சென்னை வந்து, பூஜை நல்ல படியாக முடிந்தது என்றும், அந்த ராஜா மூவாயிரம் ரூபாய் காணிக்கையாக கொடுத்தாகச் சொல்லி, மெஸ் ஓனருக்கு ஆயிரம் ரூபாயும், ராமுவின் கடனுக்காக ஆயிரம் ரூபாயும் கொடுத்தான். மீதியை தன் கையில் வைத்துக் கொண்டான்.
நாட்கள் ஓடியது. சுதாகர் ராஜாவிடமிருந்து போன் வந்தால் எடுக்க மாட்டான்.
ஒரு நாள் சுதாகர் ராஜாவிடம் இருந்து அவன் ரூம் விலாசத்திற்கு உருக்கமாய் ஒரு கடிதம் வந்தது. தற்செயலாய் அங்கு வந்த ராமு அதை படித்து விட, விஷயம் தெரிந்து விட்டது.
“ நீ இப்படி ஏமாத்தினது சரியில்ல. உன்னுடைய திறமைக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.. அந்த காகிநாடா விலாசத்துக்கு போய் தேடிப் பாரு.. எண்பது வருஷம் ஆயிடுச்சின்னு நெனச்சி விட்டுடாதே.. முயற்சி பண்ணி பாக்கலாம்.. நீ ஸ்கூல்ல முதலாவதா வந்தேன்னு சொன்ன பாரு.. அந்த திறமையெல்லாம் உபயோகிச்சி, இந்த வரைபடத்தை கண்டு பிடி.. நீ திறமைசாலின்னு மத்தவங்களுக்கு நிரூபிச்சி காண்பி.. காகிநாடா போறதுக்கு நான் பணம் கொடுக்கிறேன்.. பழைய கடனை பத்தி மறந்துடு..” என்றான் ராமு.
ராமு ஐயாயிரம் பணம் கொடுக்க, அதை எடுத்துக் கொண்டு காகிநாடா போனான் பரந்தாமன். நீண்ட அலைச்சலுக்கு பின் ரூபவதியின் குடும்பம் ஒன்று அங்கு இருந்ததாகவும், அவர்கள் ஹைதராபாத் போய் விட்டதாகச் சொல்லி தோராயமான ஒரு ஹைதராபாத் விலாசம் கொடுத்தார்கள்.
ஹைதராபாத்தின் நாம்பள்ளி ஏரியா. பரந்தாமனுக்கு கொஞ்சம் தெலுங்கு தெரியும். நாள் பூராவும் அலைந்து ஒரு இடத்திற்கு வந்தான்.
தோல் பொருட்கள் செய்யும் தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதி. சுத்தமின்மையும், ஏழ்மையும் குடி கொண்ட பகுதி. சிறிய அளவிலான லெதர் பேக்டரி. அதற்கு மேல் மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் வேயப் பட்ட ஒரு குடித்தனத்தைக் காண்பித்தார்கள். கதவைத் தட்டினான். முக்காடு போட்டுக் கொண்டு ஒரு பெண்மணி வந்து கதவைத் திறந்தார்கள். உள்ளே வரும் படி அவனை அந்த பெண்மணி கூப்பிடவே இல்லை. . தான் வந்த விஷயத்தை தெலுங்கில் சொன்னான். ஆச்சர்யப் பட்டு போன அந்த அம்மா,
“ என் மகன் ஹாஸ்பிட்டலுக்கு டியூட்டிக்கு போயிருக்கிறான். சாயங்காலம் ஏழு மணிக்கு வருவான். அப்புறம் வாங்க..” என்று சொல்ல,
“ அந்த ஹாஸ்பிட்டல் அட்ரஸ் கொடுங்க.. நான் போய் நேர்ல பாக்கிறேன்..” என்றான் பரந்தாமன்.
அந்த அம்மா கொடுத்த விலாசத்தை வாங்கி படித்தான். டாக்டர் வெங்கட் என்று பெயர் போட்டு இருந்தது. ஒரு தனியார் மருத்துவ மனை விலாசம் அது. நடக்க ஆரம்பித்தான்.
வெங்கட்டின் அம்மா கீழே இருக்கும் தோல் பொருட்கள் தைக்கும் பாக்டரியில் வேலை செய்வதாகவும், அந்த பாக்டரிக்காரர்கள் அவர்களை மேல் மாடியில் தங்க அனுமதித்து இருக்கிறார்கள் என்றும் விசாரித்து தெரிந்து கொண்டான். வெங்கட் சமீபத்தில் தான், படிப்பு முடித்து டாக்டர் ஆனான் என்று சொன்னார்கள். எவ்வளவு சிரமப் பட்டு தன் மகனை டாக்டருக்கு அந்த அம்மா படிக்க வைத்து இருப்பார்கள் என்று ஆச்சர்யப் பட்டு போனான்.
டாக்டர் வெங்கட்டை தேடிப் போய் விஷயத்தை சொன்ன போது அந்த இளைஞனுக்கு கண்கள் விரிந்தன.
சுதாகர் ராஜாவிடம் இருந்து தனக்கு கடிதம் வந்ததிலிருந்து அனைத்து விஷயங்களையும் விவரித்தான் பரந்தாமன்.
“ என்னோட தாத்தா கைக் குழந்தையா இருக்கும் போதே அவங்க அம்மா, அதாவது நீங்க சொல்ற அந்த ரூபவதி பாட்டி இறந்திட்டதா சொன்னாங்க.. ரூபவதி பாட்டியோட அழகை பாத்திட்டு, அவரை மதுரைக்கு பக்கத்தில இருந்து வந்த ஒரு ராஜா கல்யாணம் பண்ணிக்கிட்டாருன்னு சொன்னாங்க..”
“ காகிநாடா தான் உங்களுக்கு பூர்வீகமா.. எப்ப காகிநாடாவில இருந்து உங்க குடும்பம் ஹைதராபாத்துக்கு வந்திச்சி..”
“ சுதந்திரம் கெடைச்சதுக்கு அப்புறமா இருக்கும்னு நெனக்கிறேன். என்னோட தாத்தாவை அவரோட தாய் மாமன் தான் வளர்த்ததா சொல்வாங்க..”
“ ரூபவதி பாட்டி கொண்டு வந்த பெட்டி, பொருட்கள்னு ஏதாவது உங்க வீட்ல இருக்கா..”
“ ஒரு பெட்டி ஒன்னு பரண்ல இருந்திச்சி.. வாங்க வீட்டுக்கு போய் தேடிப் பாக்கலாம்..”
வீட்டுக்கு வந்து தன் அம்மாவிடம் எல்லாவற்றையும் சொன்னான் வெங்கட்.
இப்படி ஒரு வரைபடம் அவர்களிடம் இருப்பதாக அவர்களுக்கு தெரியாது என்று வெங்கட்டின் அம்மா சொன்னார்கள்.
தன் அம்மா ரூபவதியின் ஞாபகமாக, அந்த ரூபவதி உபயோகித்த பொருட்களை தன் மாமனார் ஒரு இரும்பு பெட்டியில் வைத்து இருந்ததாகவும், அதில் ஒரு வேலைப்பாடமைந்த வெற்றிலைப் பெட்டி ஒன்று இருந்தது ஞாபகம் இருந்தாகவும் வெங்கட்டின் அம்மா சொல்ல சிமெண்ட் லாப்டில் ஏறி இருவரும் தேடினார்கள். அந்த இரும்பு பெட்டிக்குள்ளே ஒரு வெற்றிலைப் பெட்டி கிடைத்தது.
வெற்றிலைப் பெட்டியை திறந்து பார்க்கும் போது, உள்ளே ஒட்டப் பட்டிருந்த துணி பிரிந்து, ஏதோ பழுப்பு நிறத்தில் தெரிந்தது. அது அவன் தேடி வந்த வரைபடம் தான்..
தன்னிடம் அந்த வரைபடத்தை கொடுத்து விடுமாறு அவர்களைக் கேட்டு, அவர்கள் தன்னை சந்தேகப்படும்படியான ஒரு சுழ்நிலையை உருவாக்க கூடாது என்று முடிவு செய்து கொண்டான் பிரபாகரன்.
அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ரூபவதியின் ஆவி மேல் அவனுக்கு இருந்த பயம் தான் அது. ரூபவதியின் வாரிசான இந்த டாக்டர் வெங்கட் வந்து அந்த நகைப் பெட்டியை எடுத்தால் ரூபவதியின் ஆவி ஒன்றும் செய்யாது என்று நினைத்தான்.
“ நீங்களே வந்து அந்த மேப்பை வைச்சி நகைப் பெட்டியை கண்டு பிடிங்க.. உங்க தாத்தா பாட்டியையும், அரண்மனையையும் வந்து பாருங்க..” என்று சொன்னான்.
பரந்தாமனுக்கு அந்த அரண்மனை ஏற்கனவே பழக்கம் என்றாலும் அவனால் அந்த வரைபடத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. சுதாகர் ராஜாவும் புரியாமல் தடுமாற, டாக்டர் வெங்கட் எளிதில் புரிந்து கொண்டு அந்த நகைப் பெட்டியை எடுத்து விட்டான்.
அந்த நகைகளைப் பார்த்து அனைவரும் பிரமித்து விட்டார்கள். அதன் மதிப்பை போடமுடியாது என்று தோன்றியது.
அந்த நகைகளில் தனக்கு ஏதாவது பங்கு கிடைக்குமா என்று எதிர்பார்த்த பரந்தாமனுக்கு டாக்டர் வெங்கட் சொன்னது மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது.
“ இந்த நகைகளை நாம வைச்சுக்க போறதில்ல.. எங்க ரூபவதி பாட்டி கஷ்டப் பட்டது மாதரி, கஷ்டத்தில இருக்கிற விதவைப் பெண்களுக்காக இதை நன்கொடையா கொடுத்திடலாம்…” வெங்கட் சொன்னான்.
சுதாகர் ராஜா தம்பதியரைப் பார்த்து,
“ தாத்தா பாட்டியும் இதுக்கு சம்மதிக்கணும்.. நான் ஹைதராபாத்துக்கு உங்கள கூட்டிகிட்டு போகப் போறன். நீங்க எங்களோட இருந்திடுங்க.. நான் பாத்துக்கறேன்..” என்றான் டாக்டர் வெங்கட்.
பேரன் வெங்கட் தங்களை தாத்தா பாட்டி என்றதும், நான் உங்களைப் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னதும், சுதாகர் ராஜா தம்பதியினருக்கு புதிதாய் ஒரு உறவு வந்ததை உணர்த்தி, அந்த வறண்ட இதயங்களை துளிர்க்க வைத்தது. எந்த உறவும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களுக்கு, இந்த வயதில் தேவையானது பாசமும் அன்பும் கவனிப்பும் தான், நகைகள் அல்ல. சொல்லப் போனால் தன் தாத்தா நரசிம்ம ராஜாவின் விருப்பப் படி இந்த நகைப் பெட்டி ரூபவதிக்கும் அவளுடைய வாரிசுக்கும் தான் சொந்தமானது. அந்த ரூபவதியின் வாரிசு, வறுமையில் வாடிக் கொண்டிருந்தும், தனக்கு இந்த நகைகள் வேண்டாம் என்று கூறி விதவைப் பெண்களுக்காக கொடுத்து விடுகிறேன் என்று சொல்லும் போது, உரிமையில்லாத தான் எப்படி நகைகள் வேண்டும் என்று கூற முடியும்..
சுதாகர் ராஜா இதற்கு சம்மதம் என்று சொல்ல, பரந்தாமன் என்ன சொல்கிறான் என்று கேட்க, அவன் பக்கம் திரும்பினான் டாக்டர் வெங்கட். உடனே பரந்தாமன்,
“ நகையில யாருக்கும் பங்கு இல்லைன்னு சொல்லிட்டீங்க.. எனக்கு வேற ஒரு உதவி செய்யணும்..” என்றான்.
“ சொல்லுங்க..” என்று டாக்டர் வெங்கட் சொல்ல,
“ இந்த நகைப் பெட்டி வரைபடத்தின் உதவியினால கெடைக்கல, என்னோட பரிகார பூஜையினால் தான் கெடைச்சதுன்னு வெளியில நீங்க எல்லாரும் சொல்லணும், அப்படிச் சொன்னீங்கனா, நான் பேமஸ் ஆயிடுவேன்.. அதுக்கு நீங்க உதவி பண்ணனும்..” என்று பணிவாய் கேட்டான் பரந்தாமன்.
“ பரிகார பூஜைன்னு பணத்தை கறக்கறது, மை போட்டு பார்க்கிறேன்னு சொல்லி ஏமாத்தறது, இதெல்லாம் எனக்கு பிடிக்காது.. உங்க டிமாண்டுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்.. இந்த தொழிலை விட்டுங்க.. நான் உங்களுக்கு என்னோட ஹாஸ்பிட்டல்ல வேற வேலை வாங்கித் தரேன்.. என்னோட ஹைதராபாத்துக்கு வாங்க..” என்றான் டாக்டர் வெங்கட் கண்டிப்புடன்.
பரிகார பரந்தாமன் வெப் சைட் மூடப்பட்டு, ஹைதராபாத் மருத்துவ மனைக்கு பரந்தாமன் போய்ச் சேர்ந்தான். கொஞ்ச நாள் கழித்து தன் நண்பன் ராமுவுக்கு அவன் போன் செய்த போது, ஒரு நர்ஸ் பொண்ணை தனக்கு டாக்டர் கல்யாணம் செய்து வைத்து இருப்பதாகச் சொன்னான்.
-முற்றும்

ரூபவதி 3

சுதாகர் ராஜா, தங்கள் அரண்மனைக்கு வந்து பரிகாரம் செய்து கொடுங்கள் என்று கேட்டது, அவன் எதிர்பார்க்காதது. ஏனென்றால் அவன் அப்படி ஒரு பரிகார பூஜையோ, யாகமோ இதுவரை நடத்தியது இல்லை.
ராஜ குடும்பம் என்றால் அவர்களிடம் ஏகப் பட்ட தங்கம், பணம் இருக்கும். உண்மையில அந்த நகைப் பெட்டியை கண்டுபிடிச்சு கொடுக்க முடியுதோ இல்லியோ, அந்த நகைப் பெட்டியை தேடறதுக்காக பூஜை, யாகம் செய்யறதா சும்மா சொல்லி, பூஜை செலவு, தட்சிணைங்கிற பேர்ல அவங்க கிட்ட இருந்து பணம் கறக்கலாமே என்று நினைத்தான். புறப்படுவதற்கு முன் பரிகார பூஜை, யாகம் நடத்துவது எப்படி என்று கற்றுக் கொண்டால் போகிறது. அந்த அரண்மனைக்கு போய் பூஜை செய்து கொண்டே நகைகளையும் தேடலாம்.. நகைகள் கிடைத்தால், சன்மானம் கொடுப்பார்கள்.. சன்மானத்தையும் வாங்கிக் கொண்டு, தன்னுடைய பரிகார பூஜையினால் கண்டு பிடிச்சதா சொல்லி பிரபலமாகி விடலாம்.
டிவி நிகழ்ச்சிக்காக வாங்கிய கடனை இன்னும் அடைக்க முடியவில்லை. வேறு யாரிடம் இருந்தும் கடிதமும் வர வில்லை. காணிக்கை இல்லாமல் தான் கடிதங்கள் வந்தன. கையில் இருந்த பணம் காலி ஆகி, தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சாப்பாட்டிற்கும் சேர்த்து சிவாவிடம் கடன் சொல்ல வேண்டிய நிலை வந்து விட்டது. டிவி விளம்பரத்திற்காக வாங்கிய கடனை எப்படி கட்டுவது..
யோசித்தான். ராமுவிடம், டிவி விளம்பரத்தினால், ஒரு ராஜ வம்சத்திலிருந்து கடிதம் வந்திருப்பதாகச் சொல்லி, ரயில் டிக்கெட்டுக்கு மேலும் கடன் வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.
இரவு பூராவும் ரயில் பிரயாணம். விடிந்து மதுரையில் இறங்கும் போது, மணி ஆறு. அரண்மனை இருக்கும் அந்த ஊருக்கு பஸ்சில் தான் போக வேண்டும் என்றார்கள்.
இட்லி சாப்பிடலாமா என்று ஆசை வந்தது. கையில் இருப்பது பஸ் டிக்கெட்டுக்கு மட்டும் தான் சரியாக இருக்கும் என்பது புரிய, கொஞ்சம் தாக்குப் பிடித்தால், அரண்மனையில் ராஜ விருந்து சாப்பிடலாமே என்று நினைத்து, டீ மட்டும் சாப்பிட்டான். பஸ் ஏறி அந்த ஊருக்குப் போய்ச் சேரும் பொழுது, மணி பத்து ஆகி விட்டது. அது ஒரு சின்ன ஊர். பஸ்ஸிலிருந்து இறங்கியவுடன், அந்த ராஜாவை கார் அனுப்ப சொல்லலாம் என்று ஏற்கனவே பேசிய அந்த செல் நெம்பரில் தொடர்பு கொண்டு தான் வந்து சேர்ந்து விட்டதாகச் சொன்னான் பரந்தாமன்.
“ பஸ் ஸ்டாண்டு வாசல்ல நில்லுங்க, நான் பக்கத்தில தான் இருக்கேன்.. வர்ரேன்..” என்று பதில் வந்தது. பேசியது அந்த சுதாகர் ராஜாவா… அல்லது வேறு ஆளா.. பஸ் ஸ்டாண்ட் இரைச்சலில் சரியாக குரலை கண்டு பிடிக்க முடியவில்லை.
ஒரு முதியவர் தடுமாறி வந்து நின்றார். எண்பது வயது மதிக்கலாம். ஒரு வேளை தன் செல் போனை கார் டிரைவரிடம் கொடுத்து அனுப்பி இருப்பாரோ.. எண்பது வயது கார் டிரைவரா…
“ சுதாகர் ராஜா அனுப்பிச்சாரா..” என்று பரந்தாமன் கேட்டான்.
“ நான் தான் அந்த சுதாகர் ராஜா…” என்று அவர் சொல்ல, அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அந்த முன்னாள் ராஜா, பரந்தாமனை அழைத்துக் கொண்டு அந்த ஊர் பஸ் ஸ்டாண்டிற்கு வெளியே வந்து நடக்க ஆரம்பித்தார். பசி அவன் கண்ணை மறைத்தது. அந்த சமயத்தில் ஒரு ஓட்டல் அவன் கண்ணில் பட்டது. அந்த ஓட்டலுக்கு உள்ளே அழைத்து போய், சாப்பிட ஏதாவது அந்த ராஜா வாங்கிக் கொடுப்பார் என்று எதிர்பார்த்தான்.
அவர் ஓட்டலைத்தாண்டி நடந்தார். காலை டிபன் ஆகிவிட்டதா என்று அவர் கேட்கவே இல்லை.
கார் கொண்டு வந்து நிறுத்தி வைத்து இருப்பார், என்று நினைத்தான். ஆனால், சுதாகர் ராஜா, ஒரு ஆட்டோவைக் கூப்பிட்டார். அவனை ஏறச் சொல்லி விட்டு, தானும் ஏறி உட்கார்ந்தார். வந்த ஆட்டோக்காரன் தங்கள் ஊர் ராஜாவைக் கண்டு கொண்ட மாதரி தெரியவில்லை.
ஆட்டோ புறப்பட்டது.
ஆட்டோ குலுங்கி குலுங்கி சென்றதில், பசி வயிற்றைக் கிள்ளியது அவனுக்கு.

* * *
அது செங்கல் சுவரில் அமைந்த ஒரு பழைய அரண்மனை. வெளி சுவர் உடைந்து இருந்தது. அரண்மனையின் ஒரு சிறு பகுதி மட்டும் உபயோகத்தில் இருப்பது போலத் தெரிந்தது. பெரும்பாலான மற்ற பகுதிகள் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து காணப்பட்டது. சில பகுதிகள் செம்மண் மேடாக இருந்தது. இதில் இந்த ராஜ குடும்பம் வசிக்கிறதா.. ஆச்சர்யமாய் இருந்தது.
அந்த முதியவரின் வயதான மனைவி அதாவது ராணி அம்மா அவர்கள் இருவரையும் வரவேற்றார்கள். எங்கு பார்த்தாலும் செங்கல் சுவரில் இருந்து கொட்டிய செம்மண். அந்த மண்ணோடு குப்பையும், கூளமும் சேர்ந்து இருந்தது. ஏன் இப்படி பராமரிக்கப் படாமல் இந்த அரண்மனை, இருக்கிறது என்பது அவனுக்கு உறுத்தியது.
இந்த பாழடைந்த அரண்மனையில் அந்த நகை பெட்டி எங்கோ இருக்கிறது என்பதும், அதை அந்த சுதாகர் ராஜா கண்டு பிடிக்க தான் உதவவேண்டும் என்பதும் நினைவுக்கு வந்தது.
அந்த ராணி அம்மா அவனை மேல் மாடிக்கு கூட்டிக் கொண்டு போனார். அந்த ராஜாவால் மேல் மாடி வரைக்கும் படி ஏறி வர முடியவில்லை.
“ இந்த ரூமுல தங்கிக்கோங்க..” என்று சொல்லிவிட்டு ராணி அம்மா கீழே போக,
இந்த ராஜ குடும்பமும், இந்த அரண்மனையும் தான் எதிர்பார்த்த மாதரி இல்லை என்பது புரிந்தவுடன் ஒரு பெருமூச்சு வந்தது அவனுக்கு. வறுமையின் உச்ச கட்டத்தில் இருக்கும் இவர்களிடமிருந்து பூஜை, தட்சிணை என்று பணம் கறக்க முடியுமா..
பசியில் வயிறு எரிந்தது. தன்னிடம் பணம் இல்லை என்பதையோ, காலையில் இருந்து தான் சாப்பிடவில்லை என்பதையோ வெளிக்காட்டினால், தான் பெரிய ஆள் இல்லை என்பது அவர்களுக்கு தெரிந்து விடும் என்பதால் அவர்கள் ஏதாவது சாப்பிட கொடுக்கும் வரை பசியை அடக்கியாகி வேண்டும் என்பது புரிந்தது அவனுக்கு.
ஜன்னலுக்கு அருகில் போய் நின்று அரண்மனையை சுற்றி நோட்டம் விட்டான். ஒரு காலத்தில் ரொம்ப வசதியாக இருந்திருப்பார்கள் என்பது தெரிந்தது.
முன் வாசலில் அமைந்த கம்பி கேட்டைப் தள்ளிக் கொண்டு, ஒரு பையன், சிறிய மூட்டையை தலையில் வைத்துக் கொண்டு வருவது தெரிந்தது. மளிகை சாமான் போல் தெரிந்தது.
அந்த மளிகை சாமான்களின் வரவுக்காக வராண்டாவின் வாசலில் நின்று கொண்டிருந்தார் அந்த சுதாகர் ராஜா. அவரைப் பார்த்தவுடன் அந்த பையன், “ பழைய கடனே இன்னும் பாக்கி இருக்குது.. இதுக்கு மேல கடன் கொடுக்க முடியாதுன்னு முதலாளி சொல்ல சொன்னார்..” என்றான்.
“ மெதுவா பேசு.. வீட்டுக்கு விருந்தாளி வந்திருக்காங்க..” என்றார் சுதாகர் ராஜா, அந்த மளிகைக் கடை பையனிடம்.
அவன் சாப்பிட்டு முடித்தவுடன், அந்த சுதாகர் ராஜா தன் சின்ன பாட்டி ரூபவதி எப்படி கொடுமைப் படுத்தப் பட்டாள் என்பதை பற்றி சொன்னார்.
“ ஏற்கனவே இந்த நகைப் பெட்டியை தேடறதுக்காக இந்த குடும்பத்துக்காரங்க இந்த அரண்மனைய பல எடத்தில இடிச்சிருக்காங்க.. அப்படி இடிக்கும் போது, இந்த அரண்மனை பல எடங்கள்ள இடிஞ்சி விழுந்திருக்கு.. அப்படி இடிஞ்சி விழும் போது, அதில சிக்கி என்னோட அப்பா பிரேம் குமார், ஒரு சித்தப்பா, என்னோட ஒரு தம்பி, இப்படி நிறய பேரு இறந்து போயிருக்காங்க.. அதுக்கு காரணம் அந்த ரூபவதியின் ஆவிதான்னு சொல்றாங்க.. அந்த ஆவி இந்த நகைப் பெட்டியை பாதுகாத்துக்கிட்டு வருதுதாம்… அதுக்குதான் பரிகார பூஜை செய்யணும்.. ”
இதைக் கேட்டு பரந்தாமனுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. ரூபவதி ஆவிக்கு பரிகார பூஜை செய்ய வேண்டுமா..
“ ஏற்கனவே கேரளாவில இருந்து ஒரு மந்திரவாதியை கூட்டிக்கிட்டு வந்து பாத்தோம்.. அவன் முடியாதுன்னு சொல்லிட்டு ஓடிட்டான்.. அதனால நம்ம தமிழ் நாட்டு முறைப் படி பரிகார பூஜை பண்ணலாம்னு உங்கள வரவழைச்சோம்..”
மறுபடியும் பரந்தாமனுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது.

“ பெரிய பெரிய மந்திரவாதிகளே முடியாதுன்னு சொல்லிட்ட பிறகு நான் என்ன செய்ய முடியும்..” என்று சொல்லிவிட்டு, கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தான்.
பிறகு எழுந்து வேகமாய் நடந்து தனக்கு கொடுத்த ரூமுக்கு வந்தான். தன் பெட்டியை எடுத்து, துணிகளை அடுக்கி, சுட்கேசுடன் கீழே இறங்கினான்.
“ முடியாதுன்னு ஊருக்கு கெளம்பறீங்களா..” என்றார் சுதாகர் ராஜா.
“ ஆமாம்..” என்றான் அவன்.
அதிர்ச்சி அடைந்த அவர் கொஞ்ச நேரம் யோசித்தார்.
“ இன்னொரு விஷயம் சொல்றேன்.. அது வழியா நீங்க உதவ முடியுமான்னு பாருங்க..” என்றார்.
இவர்களிடம் இருந்து எதுவும் கறக்க முடியாது என்பதால், கிளம்பி விடுவதே நல்லது என்று மனதில் தோன்றியது. அவன் எதுவும் பேசவில்லை. அவரே தொடர்ந்தார்.
“ அந்த ரூபவதியை அடிச்சி துரத்தினதற்கு சில வருஷம் கழிச்சு, அந்த நகைப் பெட்டி சம்பந்தமா ஒரு முக்கியமான விஷயம் தெரிய வந்ததாம்… அந்த விஷயத்தை வைச்சி, அந்த நகைப் பெட்டியை கண்டு பிடிக்க முடியுமான்னு பாருங்க..”
“ என்ன அது..” ஆர்வமில்லாமல் கேட்டான்.
“ அந்த நகைப் பெட்டியை பத்தி என் தாத்தாவும் ரூபவதியும் பேசினதை ஒட்டுக் கேட்டதா சொன்ன அந்த வேலைக்காரன், தான் காதில கேட்டது நகைப் பெட்டியா, இல்ல வெத்தலைப் பெட்டியான்னு சந்தேகம்னு சொன்னானாம்..”
“ அப்படியா.. அவனை போட்டு அடிச்சி இருப்பாங்களே..”
“ அதை விடுங்க.. இப்ப அதுவா முக்கியம்.. அதனால, வெத்தலைப் பெட்டிக்கும், நகைப்பெட்டிக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்குமான்னு யோசிக்க ஆரம்பிச்சாங்களாம்..”
“ மேல சொல்லுங்க..” என்றான் பரந்தாமன்.
“ அந்த வேலைக்காரனோட பலதடவை பேசினாங்களாம்… நீ கேட்டதை எல்லாம் ஒன்னு விடாம சொல்லுன்னு, சொல்ல வைச்சாங்களாம்.. அதை வச்சு, சில விஷயம் கண்டு பிடிச்சிருக்காங்க.. நகைப் பெட்டியை எங்கோ அரண்மனையில ஒளிச்சு வைச்சிட்டு, அந்த நகைப் பெட்டி இருக்கிற எடத்தை எங்க தாத்தா சின்ன பாட்டி ரூபவதிகிட்ட சொல்லி இருக்கலாம்.. அப்படி ஒளிச்சு வைச்சி இருக்கிற எடத்தை கண்டுபிடிக்க ஒரு வரைபடம் வரைஞ்சி ரூபவதிகிட்ட கொடுத்து இருக்கலாம்… அந்த வரைபடம் வெத்தலைப் பெட்டியில இருந்திருக்கலாம்னு பின்னாடி தெரிய வந்திச்சாம்.. இதுக்குள்ள பத்து பதினைந்து வருஷம் ஆயிடுச்சாம்….”
பரந்தாமன் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு சொன்னான்.
“ இதெல்லாம், ரூபவதி போனதுக்கு அப்புறம் தெரிய வந்துருக்கும்.. அந்த மேப் ரூபவதி வசம் இருக்குதுன்னு தெரியாம, ரூபவதியை அடிச்சி துரத்திட்டாங்க போலிருக்கு….”
“ ஆமாம்..”
“ அந்த ரூபவதியை உடனே கண்டு பிடிச்சிருக்கலாமே..”
“ ரூபவதி அடி வாங்கி வாங்கி, இந்த அரண்மனையை விட்டு போகும் போதே அரை உயிரோட தான் போனாங்களாம்.. அவங்க காகிநாடா போனவுடனே எறந்து போயிட்டாங்களாம். அந்த வரைபடம் அவங்க குடும்பத்தில யாரிடமாவது இருக்கணும்.. நீங்க காகிநாடா போய் அந்த வரைபடத்தை கண்டுபிடிச்சி கொண்டாந்து இந்த நகைப் பெட்டியை எடுத்து தர முடியுமா..”
யோசித்த பரந்தாமன், “ அந்த ரூபவதியோட வாரிசுங்க விலாசம் தெரியுமா..” என்று கேட்டான்.

ரூபவதி 2

ரூபவதியை கல்யாணம் செய்து கொண்டு நரசிம்ம ராஜா காகிநாடாவில் இருந்து கூட்டி வந்த போது, ராஜாவின் முதல் இரண்டு மனைவிகளும், அவரின் மகன்களும் அவள் மீது கொண்ட துவேஷத்திற்கு அளவே இல்லை. அந்த ராஜாவைத் தவிர மற்ற ராணிகளோ, ராஜாவின் மற்ற மகன்களோ அவளிடம் பேசுவதும் இல்லை. கிழட்டு ராஜாவின் ஆசை மனைவி என்று வேலைக்காரர்களுக்கும் இளக்காரம்.
இந்த உதாசீனத்தையும், தனிமையையும் போக்க, அவள் வெற்றிலை போடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாள். இதைப் பார்த்த அந்த ராஜா மரத்திலான வேலைப் பாடு அமைந்த ஒரு வெற்றிலைப் பெட்டியை ரூபவதிக்கு பரிசளித்து இருந்தார்.
அந்த வெற்றிலைப் பெட்டியின் உள்ளே அடிப்பாகத்தில் தன் கணவன் சொன்னபடி அந்த வரை படத்தை மடித்து வைத்து கொண்டாள் அவள். மரத்தின் நிறத்துக்கு பொருந்துவது போல ஒரு துணியை மடித்து அதன் மீது ஒட்டினாள். அதற்கு மேல் வெற்றிலை, சீவல், சுண்ணாம்பு பரப்பி விட்டாள். யாராவது அந்த வெற்றிலைப் பெட்டியை வாங்கிப் பார்த்தால், உள்ளே மறைத்து வைக்கப் பட்டுள்ள வரைபடம் தெரியாதபடி பார்த்துக் கொண்டாள்.
ஆனால், அவளுடைய துரதிஷ்டம். விஷயம் தெரிந்து விட்டது. இறப்பதற்கு முன் ஒரு நகைப் பெட்டியை ரூபவதிக்கு, ராஜா கொடுத்ததாக யாரோ சொல்லிவிட்டார்கள். வந்தது ஆபத்து ரூபவதிக்கு. அந்த நகைப் பெட்டியைக் கேட்டு அவளை அடித்து துன்புறுத்த ஆரம்பித்து விட்டார்கள். அடி வாங்கிக் கொண்டிருந்த ரூபவதி ஒரு விஷயத்தைக் கவனித்தாள். நகைப் பெட்டி எங்கே என்று தான் கேட்டார்களோ ஒழிய, யாரும் வரைபடத்தைப் பற்றியோ, வெற்றிலைப் பெட்டியைப் பற்றியோ பேச வில்லை. வரைபடம் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வில்லை போலிருக்கிறது. இதனால் வரைபடத்தை மட்டும் எடுத்துக் கொண்டு இப்போதைக்கு அரண்மனையை விட்டு வெளியே போய் விடலாம் என்று ரூபவதிக்கு தோன்றியது.
உடனே அவள் “ வெளியில நின்னுகிட்டு இருக்கிற என் அண்ணனோடு என்னை போக விடுங்க.. நாங்க போகும் போது எங்க ரண்டு பேரு பைகளையும் முழுசா சோதிச்சு பாத்துகோங்க.. இந்த சொத்தோ நகையோ வேண்டாம்.. எங்கள விட்டா போதும்..” என்றாள்.
யோசித்து பார்த்த பிரேம் குமார் இதற்கு ஒப்புக் கொண்டான். ஏனென்றால், அவள் போகும் போது, நகைகளை அவள் எடுத்துப் போகிறாளா என்று சுலபமாய் சோதித்து பார்த்துக் கொள்ளலாம் என்பது தான்.
தன் அம்மாவோடும், சித்தியோடும் கலந்து ஆலோசித்தான்.
அவர்களும் “ அந்த சிறுக்கியை அடிச்சி துரத்துடா..” என்றார்கள்
“ சரி போ..” என்று ரூபவதியிடம் வந்து சொன்னான் பிரேம்குமார்.
தாங்க முடியாத சந்தோசத்துடன் அவள் தன் துணிகளை எடுத்தாள். அவள் என்ன என்ன பொருட்களை எடுத்து வைக்கிறாள், அதில் நகைகள் இருக்கிறதா என்பதை எல்லோரும் கவனித்துக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் தன்னை கவனிக்கிறார்கள் என்பதை அவளும் கவனித்தாள்.
வெற்றிலைப் பெட்டியை கவிழ்த்து காண்பித்து, பின் அதில் வெற்றிலை, சீவல், சுண்ணாம்பை எடுத்து வைத்தாள். வெற்றிலைப் பெட்டியின் அடியில் நன்றாக ஒட்டப் பட்டிருந்த துணிக்கு கீழ் இருந்த அந்த வரைபடம் அவர்கள் கண்களில் இருந்து தப்பித்தது.
அரண்மனை வாசலில் அவள் கிளம்பும் போது அவளுடைய துணிகளை சோதித்து பார்த்தான் பிரேம்குமார். வெற்றிலை, சீவலை தள்ளி வெற்றிலைப் பெட்டியையும் சோதித்து பார்த்தான்.
அரண்மனைக்குள்ளே வராமல், வெளியே நாட்கணக்கில் இருந்த ராமண்ணாவையும், சோதித்து பார்த்தான். அவனிடம் ரூபவதி நகைகளை கொடுத்து வைத்து இருப்பாளோ என்று.
ஒரு கையில் குழந்தையும் ஒரு கையில் அந்த வெற்றிலைப் பெட்டியும் வைத்துக் கொண்டு அரண்மனையை விட்டு அவள் கிளம்பி ராமண்ணாவுடன் நடக்கும் போது,
“ அந்த வெத்தலைப் பொட்டியை தூக்கி எறிஞ்சிட்டு வா..” என்றான் ராமண்ணா கோபமாய்.
“ இல்லைண்ணா.. ராஜா எனக்கு ஆசையா வாங்கி கொடுத்தது..” என்றாள் அவள்.
தன் அண்ணனிடம் அந்த நகைப் பெட்டியைப் பற்றியோ, அந்த வரை படத்தைப் பற்றியோ அவள் உடனே எதுவும் சொல்ல வில்லை. காகிநாடா போய் சேர்ந்த பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் அது நடக்கவே இல்லை.
ரயில் காகிநாடாவை அடைந்த போது, குழுந்தை அழுது கொண்டு இருந்தது. ரூபவதி அதைக் கவனிக்காமல் வெற்றிலைப் பெட்டியை அணைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்த ராமண்ணா தன் தங்கையை உலுக்கி எழுப்பினான்.
ரூபவதி எழவில்லை.
குழந்தை மட்டும் பசியால் சத்தமாய் அழ ஆரம்பித்தது.
* * *
அது புதிதாய் ஆரம்பித்து, கொஞ்சம் பிரபலமாகிக் கொண்டு வரும் ஒரு டிவி சேனலின் ஸ்டுடியோ. குருஜி என்றும் பரிகார பரந்தாமன் என்றும் தன்னை சொல்லிக் கொள்ளும் பரந்தாமன் ரிசப்ஷனில் காத்திருந்தான். எலக்ரீஷியனாக அந்த ஸ்டுடியோவில் வேலை பார்க்கும் ராமு, அவனுக்கு பழக்கம். அவன் மூலமாக இந்த ஸ்டியோவுக்குள் நுழைந்து இருக்கிறான், பணம் கொடுத்துதான். விளம்பர நிகழ்ச்சியாக போடலாம், மூன்று நிமிடம் தருகிறோம், கொடுக்க வேண்டிய பணம் நாற்பது ஆயிரம் என்றார்கள். ராமுவிடமும் மெஸ் ஓனர் சிவாவிடமும் கடன் வாங்கிக் கொடுத்திருக்கிறான்.
ஒரு கம்யூட்டரை வாங்கி, ஒரு ரூம் பிடித்து, பரிகார பரந்தாமன்.காம் என்று ஒரு வெப் சைட் திறந்து இரண்டு வருடம் ஓடி விட்டது. கிடைக்கும் வருமானத்தில் அம்மாவுக்கு பணம் அனுப்பி, ரூம் வாடகை, கொடுத்து மீதம் கிடைப்பது வயிற்றுக்கே போதவில்லை. வயது முப்பத்தைந்து ஆகி விட்டது. கல்யாணம் ஆகவில்லை. எல்லோரும் ஏன் கல்யாணம் ஆக வில்லை என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இப்போதைய அவனுடைய ஒரே கவலை அது தான்.
பரந்தாமனின் அப்பா சின்ன வயதிலே இறந்து விட, அவனுடைய அம்மா தான், கூலி வேலைக்கு போய் அவனை பிளஸ் டூ வரைக்கும் படிக்க வைத்தாள்.
பரந்தாமன் படிப்பிலே கெட்டிக்காரன். பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் மாணவனாக நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றான். அவனுடைய கனவு வக்கீலுக்கு படிக்க வேண்டும் என்பது. ஆனால் அது அம்மாவின் கூலி வேலை வருமானத்தில் முடியாது என்பதை புரிந்து கொண்டான்.
வேலைக்கு போய் சம்பாதித்து ஆக வேண்டும் என்றவுடன், என்ன வேலை செய்வது என்று அவன் யோசிக்கும் போது, படிப்பிலும், பேச்சிலும் கெட்டிக்காரன் என்று பெயர் எடுத்திருப்பதால், அதை உபயோகித்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். தோஷ நிவர்த்தி, பரிகார பூஜை என்று சொல்லி சம்பாதிக்கலாம் என்று திட்டமிட்டு, பித்ரு தோஷ நிவர்த்திக்காக தன்னுடைய இடத்தில் இருந்து கொண்டே, கேட்பவர்களுக்கு பரிகாரம் செய்து கொடுப்பேன் என்று தன்னுடைய வெப் சைட்டில் விளம்பரப் படுத்தினான்.
கொஞ்சம் ஏமாற்ற வேண்டி வந்தது. என்ன செய்வது. வயிற்றுப் பிழைப்புக்கு ஏதாவது செய்து தானே ஆக வேண்டும் என்று தன்னை சமாதானப் படுத்திக் கொண்டான். காணிக்கை அனுப்பினாலும் இல்லாவிட்டாலும், பிரசாதம் அனுப்பி வைக்கப் படும் என்று சொல்லுவானோ தவிர காணிக்கை இல்லாமல் யாருக்கும் பிரசாதம் அனுப்பியதில்லை. காணிக்கை அனுப்பியவர்களுக்கும் பிரசாதம் சரியாக அனுப்புவதில்லை என்பது வேறு விஷயம். தன்னுடைய ரூமில் பரிகார பூஜையோ, யாகமோ நடத்தியதும் இல்லை. பிரசாதம் என்று எதையாவது தயாரித்து அனுப்புவான்.
இருந்தும் வருமானம் போதவில்லை. அம்மா கல்யாணம் என்று நச்சரிக்கிறாள். வருமானத்தை பெருக்கி ஆக வேண்டும். அதற்கு டிவியில் விளம்பரம் கொடுக்கலாம் என்று மனதில் பட, கடன் வாங்கி பணம் கொடுத்து இந்த ஸ்டியோவுக்குள் நுழைந்து இருக்கிறான்.
ரிகார்டிங் ரூமுக்குள் கூப்பிட்டு மேக்கப் டச் அப் நடத்தி உட்கார வைத்தார்கள்.
காமிரா ஓட ஆரம்பித்தது. பரந்தாமன் பேச ஆரம்பித்தான்.
வரப் போகும் தை அமாவாசை சகல பாவத்தையும் நீக்கும் அமாவாசை. உங்களின் முன்னோர்களை நீங்கள் சரியான வகையில் நடத்தவில்லையோ என்று வருத்தப் படலாம். அவர்களுக்கு பாவங்கள் ஏதாவது நீங்கள் செய்திருக்கலாம். அந்த பாவங்களின் சுமைகளை இறக்கி வைக்க நாங்கள் உதவுவோம். முன்னோர்களுக்கு சாந்தி செய்ய நினைக்கும் நீங்கள், அதை எப்படி நடத்துவது, அதற்கான வழி முறைகள் தெரியவில்லையே என்று வருத்தப் படலாம். கவலைப் படாதீர்கள்.
உங்களின் பித்ரு தோஷம் நீங்க, உங்களின் சார்பாக நானே ஒரு மகாயாகம் ஒவ்வொரு அமாவாசை அன்றும் நடத்துகிறேன்.
யாருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டுமோ, அவரது பெயர், பிறந்த தேதி, இறந்த தேதி, அவருக்கும் உங்களுக்கும் உள்ள உறவு எழுதினால் போதும். அவரது புகைப் படம் இருந்தால் மிகவும் நல்லது. மகா யாக பிரசாதம் அனுப்பி வைக்கப் படும்.
உங்களின் சார்பாக நடத்தப் படும் மகா யாகத்திற்கு, நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. காணிக்கையை, நீங்கள் விரும்பியதை, உங்களால் முடிந்ததை அனுப்பி வையுங்கள்.
காணிக்கையை எப்படி அனுப்புவது என்று சொல்ல ஆரம்பித்து, வங்கி கணக்கு எண், ஐஎப்சி கோட் வரைக்கும் சொல்லி விட்டு எழுந்தான்.
பரந்தாமனின் அந்த ஒரு நாள் டிவி நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு, யாராவது அவனுக்கு கடிதம் அல்லது போன் செய்வார்கள் எதிர்பார்த்தது ஒரு மாதத்தில் பலித்தது.
அவன் ரூம் விலாசத்திற்கு ஒரு கடிதம் வந்தது.
அந்த கடிதத்தில் இப்படி எழுதி இருந்தது.
அன்புள்ள பரிகார பரந்தாமன் அவர்களுக்கு,
உங்கள் டிவி நிகழ்ச்சியை நான் பார்த்தேன். அன்றே உங்களுடைய விலாசத்தை குறித்து வைத்துக் கொண்டேன். அன்றைய உங்களுடைய பேச்சு எனக்கு பிடித்து இருந்தது. நீங்கள் சொன்ன விபரங்கள் நன்றாக இருந்தது. அதனால் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
எங்கள் குடும்பம் ஒரு பழைய ராஜ வம்சத்தைச் சார்ந்தது. நகைப் பெட்டி ஒன்று எங்கள் அரண்மனையில் எங்கோ ஒளித்து வைக்கப் பட்டு இருக்கிறது. எங்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு காரணம் பித்ரு தோஷம் தான். என்னுடைய சின்ன பாட்டிக்கு என் அப்பா செய்த கொடுமைதான் காரணம். நீங்கள் எங்கள் அரண்மனைக்கு வந்து, சரியான பரிகார யாகம் நடத்தி, தோஷங்களை நீக்கி, அந்த நகைப் பெட்டியைக்கண்டு பிடித்து கொடுங்கள். அப்படி அந்த நகைப் பெட்டியைக் கண்டு பிடித்துக் கொடுத்தால், உங்களுக்கு தக்க சன்மானம் கொடுக்கப் படும்.
இப்படிக்கு சுதாகர் ராஜா.

ரூபவதி 1

தொலைக்காட்சியில் வெங்கட் என்ற ராஜ வம்சத்தை சார்ந்த ஒரு இளைஞனின் பேட்டியை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.
தங்கள் குடும்பம் ஒரு பழைய ராஜ வம்சத்தைச் சார்ந்தது என்றும், தங்கள் அரண்மனையில் புதிதாய் நகைப் பெட்டி ஒன்று கண்டுபிடிக்கப் பட்டதாகவும், தங்கள் குடும்பம் இப்போது வறுமையில் இருந்தாலும், கண்டு பிடிக்கப் பட்ட அந்த நகைகளுக்கு உரிமை கொண்டாடப் போவதில்லை என்றும், அந்த நகைகளை விதவைகளின் மறு வாழ்வுக்கு நன்கொடையாக கொடுக்கப் போவதாகவும் பேட்டியில் சொல்லிக் கொண்டிருந்தான் அந்த இளைஞன்.
தன்னுடைய கொள்ளுப் பாட்டி பெயர் ரூபவதி என்றும், அந்த ரூபவதி இளம் வயதிலேயே விதவையாகி, தாங்க முடியாத துயரங்களை அனுபவித்தாகவும், அந்த ரூபவதியின் ஞாபகமாக இந்த மறுவாழ்வு சேவையை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தான்.
அவனுடன் ஒரு வயதான தம்பதியரும், நெற்றியில் சந்தன பொட்டுடன் ஒரு நபரும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். தாங்கள் நால்வரும் சேர்ந்து இந்த நகைகளை கண்டுபிடித்ததாகக் கூறி, அவர்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினான் அந்த வெங்கட். முதிய தம்பதியினரை சுதாகர் ராஜா, அவரது மனைவி என்றும் சந்தன பொட்டை பரந்தாமன் என்றும் அறிமுகப் படுத்தி, அந்த நகைகள் எப்படி கண்டுபிடிக்கப் பட்டன என்பதைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தான்.
பிரிட்டிஷ் ஆட்சி முடிவதற்கு பத்து வருடம் முன்பு இருக்கும். மதுரைக்கு தென் பகுதியில் அமைந்த ஒரு குறுநில மன்னரின் அரண்மனை. மழை கொட்டிக் கொண்டிருந்த ஒரு இரவு. மரணப் படுக்கையில் இருக்கும் அந்த நரசிம்ம ராஜாவுக்கு அறுபது வயது இருக்கும். அந்த ராஜாவின் படுக்கை அறைக்குள் ஒரு இளம் பெண் கைக்குழந்தையுடன் பயந்து பயந்து நுழைந்து, ராஜாவை எழுப்பி,
“ நான் தான் ரூபவதி…” என்றாள்.
திடுக்கிட்டு எழுந்த அந்த ராஜா,
“ வந்து விட்டாயா ரூபா.. எங்கே நம் மகன்… ஒரு முறை அவனைக்காட்டு..” என்றார்.
ரூபவதி அந்த குழந்தையைக் காட்டினாள். அந்த குழந்தையைப் பார்த்தவுடன் ராஜாவின் முகத்தில் ஒரு பரவசம் ஏற்பட்டது. ரூபவதி குழந்தையோடு வருவாள், அவளிடம் ஏதோ ஒரு முக்கியமான ரகசியம் சொல்ல வேண்டும் என்பதற்காகவே உயிரை வைத்துக் கொண்டிருந்தது போல பரபரப்பு அடைந்தார். குரலைத் தாழ்த்திக் கொண்டு, அவளிடம் பேச ஆரம்பித்தார்.
“ என் உயிர் போனவுடன், இவர்கள் உன்னையும், நம் மகனையும் இங்கே வாழ விடமாட்டார்கள். உங்கள் இருவரையும் கொன்று விடுவார்கள். இந்த அரண்மனையில் அதிக நாட்கள் இருக்காதே.. மற்ற ராணிகளுக்கு கொடுத்த அதே அளவு நகைகளை உனக்கும் நான் கொடுக்க விரும்புகிறேன். உனக்கு உரிய அந்த நகைகளை ஒரு பெட்டியில் வைத்து இருக்கிறேன். அந்த நகைப்பெட்டியை இந்த அரண்மனையில் ஒரு இடத்தில் ஒளித்து வைத்து இருக்கிறேன்.”
பேசுவதை நிறுத்திவிட்டு மூச்சு வாங்கினார் நரசிம்ம ராஜா.
பிறகு, தன் தலையணைக்கு அடியில் கையை விட்டு தடவி, ஒரு காகித சுருளை எடுத்தார் அவர்.
“ அந்த நகைப் பெட்டி இருக்கும் இடத்தை இந்த வரைபடத்தில் வரைந்து வைத்து இருக்கிறேன். நீ படித்தவள். டீச்சராக வேலை பார்த்தவள். இந்த வரைபடத்தை உன்னால் புரிந்து கொள்ள முடியும். சமயம் பார்த்து, அந்த நகைப் பெட்டியை எடுத்துக் கொண்டு, இந்த அரண்மனையை விட்டு போய் விடு… நம் மகனை நல்லபடியாக வளர்த்து பெரியவனாக்கு.. சில நகைகளை விற்று பணமாக கையில் வைத்துக் கொள். தேவைப் படும் போது மட்டும் அந்த நகைகளை விற்றுக் கொள். நம் மகனை பெரிய படிப்பு படிக்க வைத்து, ஒரு கலைக்டராகவோ, டாக்டராகவோ கொண்டு வா..”
தன் கணவர் கொடுத்த அந்த வரைபடத்தை வாங்கிப் பார்த்தாள். சன்னமான சிகப்பு துணியின் மேல் அந்த வரைபடம் ஒட்டப்பட்டு நான்காக மடிக்கப் பட்டு இருந்தது.
“ உன்னுடைய வெற்றிலைப் பெட்டிக்குள், யாரும் கண்டு பிடிக்க முடியாதபடி இப்போதைக்கு இந்த வரைபடத்தை மறைத்து வைத்துக் கொள்.. பிறகு நிதானமாய் படித்துப்பார்த்து, இந்த அரண்மனையில் எங்கே அந்த நகைப் பெட்டி வைத்துள்ளது என்பதை புரிந்து கொள்.. யாருக்கும் தெரியாமல் ஒரு நாள் அந்த நகைப்பெட்டியை எடுத்துக் கொண்டு உன் தாய் வீட்டுக்கு போய் விடு..” என்றார் ராஜா.
பேசுவதை நிறுத்திவிட்டு மூச்சு வாங்கினார் ராஜா. எதையோ யோசிப்பது போல் இருந்து விட்டு,
“ நான் காகிநாடாவுக்கு போன வருடம் வராமல் இருந்திருந்தால், உன்னை நான் அந்த ஜில்லா போர்டு ஸ்கூலில் பார்க்காமல் இருந்திருந்தால், நீ வேறு யாரையாவது கல்யாணம் செய்து கொண்டு நல்ல படியாக வாழ்ந்திருப்பாய்.. நான் உன் வாழ்க்கையை பாழடைத்து விட்டேன், இல்லையா.. நான் பாவி.. என்னை மன்னித்து விடு ரூபா..” என்றார்.
ராஜா இறந்து போன மூன்றாவது நாள். துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் கிளம்பி போனவுடன், அந்த அரண்மனையில் ரூபவதியின் அலறல் கேட்டது.
“ அந்த நகைப் பெட்டி எங்கேடி.. கொடுத்துடு… இல்லேன்னா கொன்னுடுவேன்..” என்று அந்த இறந்து போன ராஜாவின் மூத்த மகன் பிரேம் குமார், தன் சித்தியான ரூவதியை குதிரை சாட்டையில் அடித்துக் கொண்டே கேட்க,
“ எனக்கு தெரியாது.. எனக்கு தெரியாது..” என்று திரும்ப திரும்ப கதறிக் கொண்டிருந்தாள் ரூபவதி.
அவளின் உடம்பெங்கும் சாட்டையடிகள். ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. பக்கத்தில் தரையில் கிடக்கும் அந்த ஆண் குழந்தை, தெரிந்தோ தெரியாமலோ தன் தாயின் மீது விழும் ஒவ்வொரு அடிக்கும் வீல் என்று கத்திக் கொண்டிருந்தது.
ராஜாவின் முதல் இரண்டு மனைவிகளும், அவர்களின் மற்ற மகன்களும் ரூபவதியைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவர் கையிலும் அந்த ரூபவதியை அடிப்பதற்கான ஆயுதங்கள் இருந்தன. சிலர் கையில் குதிரை சாட்டை. சிலர் கையில் பெல்ட். இடைவெளிவிட்டு, ஒவ்வொருவராக அவளை அடித்துக் கொண்டிருந்தார்கள்.
தொடர்ந்து அடி வாங்கிய ரூபவதி மயக்கமாகிப் போய் விட,
“ விடுடா.. அவ செத்து போயிட்டா நமக்கு தான் நஷ்டம்.. அப்புறம் அந்த நகைப் பெட்டி எங்கே இருக்குன்னு தெரியாம போயிடும்.. மயக்கம் தெளியட்டும்.. அப்புறம் அடிச்சி கேக்கலாம்.. மூஞ்சில தண்ணி அடிங்கடா..” என்றாள் செத்துப் போன ராஜாவின் முதல் மனைவி.
1937 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம். காகிநாடா.
ரூபவதி டீச்சராக வேலை செய்த பள்ளியின் ஹெட்மாஸ்டர் வீடு. சென்னையிலிருந்து வெளியாகும் ஒரு ஆங்கில செய்தித்தாளை அவர் தன் வீட்டு விலாசத்திற்கு தபாலில் தருவித்துக் கொண்டிருந்தார். செய்தித்தாள் இரண்டு நாள் கழித்து தான் வந்து சேரும்.
அன்று வந்த அந்த ஆங்கில செய்தித்தாளில் ரூபவதியின் கணவர் நரசிம்மராஜா இறந்து போன செய்தி வந்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார் அவர்.
அந்த செய்தித்தாளை கையில் எடுத்துக் கொண்டு, ரூபவதியின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
ரூபவதியின் பிறந்த வீடு ஒரு ஓலைக் குடிசை. திண்ணையில் ரூபவதியின் அண்ணன் ராமண்ணாவும், அவளின் அப்பா அம்மாவும் உட்கார்ந்திருந்தார்கள்.
“ நான் அப்பவே சொன்னேன்.. நீங்களும் கேக்கல.. இந்த ஊர்க்காரங்களும் கேட்கல..” ரூபவதியின் அண்ணன் ராமண்ணாவைப் பார்த்து சொன்னார் ஹெட்மாஸ்டர்.
“ என்ன விஷயம் சார்..” பதறிப் போய் ராமண்ணா கேட்டான்.
அவனுக்கு நெஞ்சு படபட வென்று அடித்துக் கொண்டது. ஹெட்மாஸ்டர் ஏதோ சொல்ல வந்திருக்கிறார் என்பது தெரிந்தது. ரூபவதியின் அப்பா அம்மாவுக்கும் ஏதோ கெட்ட செய்தி என்பது புரிந்து அதிர்ச்சி அடைந்து முழித்தார்கள்.
“ வயசானவருக்கு ரூபவதியை கொடுக்காதீங்கன்னு சொன்னேன்.. நீங்க யாரும் கேட்கல..” என்றார் ஹெட்மாஸ்டர்.
“ சீக்கிரம் சொல்லுங்க.. என்ன விஷயம்..” என்றான் ராமண்ணா மறுபடியும் பதட்டம் தணியாமல்.
“ ரூபவதியோட புருஷன், அதாவது அந்த நரசிம்ம ராஜா செத்துட்டாராம்.. இங்கிலீஷ் பேப்பர்ல வந்திருக்கு.. இந்தா பாரு..” என்று அந்த ஆங்கில பத்திரிக்கையைக் காட்டினார்.
“ ஐயோ.. எனக்கு இங்கிலீஷ் படிக்க வராதுங்களே.. ரூபவதியோட புருஷன் செத்துட்டாரா.. ஐயோ கடவுளே.. வயசானவருக்கு ரூபவதியை கொடுக்காதீங்கன்னு நானும் சொன்னனே..” அழுது கொண்டே சொன்னான் ராமண்ணா.
அப்பா அம்மா பிரமை பிடித்தது போல் இருந்தார்கள்.
தன் இருபது வயது தங்கை ரூபவதியை அந்த வயதான ராஜாவுக்கு கல்யாணம் செய்து கொடுக்க தன் அப்பா அம்மா முடிவு செய்த போது, அதை எதிர்த்தவன் ராமண்ணா. இப்படி யெல்லாம் நடக்கும் என்பதை முன்கூட்டியே எதிர்பார்த்தான். .
“ ராஜா எறந்த செய்தியை கூட நமக்கு யாரும் சொல்லலை.. ரூபவதி எப்படி இருக்காளோ..” அப்பாவும் அம்மாவும் குரலெடுத்து அழ ஆரம்பிக்க,
ராமண்ணாவுக்கும், தங்கை ரூபவதிக்கும் பனிரெண்டு வயது வித்தியாசம். ரூபவதி அவனுக்கு மகள் போல.
சின்ன வயதில் இருந்து படிப்பு அவளுக்கு உயிர் மூச்சு. நன்றாக படிப்பாள். பெண்ணுக்கு எதற்கு படிப்பு என்று அவளை படிக்க வைக்க அப்பா, அம்மா, உறவினர், எல்லோரும் எதிர்ப்பு காட்டினார்கள். அனைவரின் எதிர்ப்பையும் மீறி, படிப்பில் அவள் காட்டிய அக்கறையைப் பார்த்து, ராமண்ணா தான் ரூபவதியை படிக்க வைத்தான்,.
அவர்கள் ஊரில் எஸ் எஸ் எல் சி படித்து முடித்த முதல் பெண் ரூபவதி தான். படித்து முடித்தவுடன் அவள் படித்த அதே ஜில்லா போர்டு ஸ்கூலில் அவளை டீச்சராக சேர்த்துக் கொண்டார்கள்.
அப்போது, அந்த நரசிம்ம ராஜா காகிநாடாவுக்கு தன் பரிவாரங்களுடன் வந்து இருந்தார்.
ஜில்லா போர்டு பள்ளியில் ஆண்டு விழா. பள்ளி நிர்வாகம் மாணவ மாணவியருக்கு பரிசளிப்பதற்கு அந்த ராஜாவை அழைத்திருந்தார்கள்.
அந்த ஆண்டு விழாவில் மாணவ மாணவியரை வரிசையாக நிற்கச் சொல்லுவது, மேடைக்கு அழைத்து வருவது என்று சுறுசுறுப்பாய் இயங்கி கொண்டு இருந்தாள் ரூபவதி.
இதைப் பார்த்த அந்த ராஜா,
“ யாருங்க அந்த பொண்ணு.” என்று கேட்டார் பக்கத்தில் இருந்த ஹெட்மாஸ்டரிடம்.
அவருக்கு விஷயம் புரிந்து விட்டது. ஏதோ சொல்லி மழுப்பினார். தன்னுடைய எண்ணத்துக்கு ஹெட்மாஸ்டர் ஒத்துழைக்க மாட்டார் என்று தெரிந்தவுடன், மற்ற நிர்வாகிகளை வைத்து ரூபவதியின் வீட்டைக் கண்டுபிடித்து விட்டார் அந்த நரசிம்ம ராஜா.
ரூபவதியை ராஜாவுக்கு கல்யாணம் செய்து தரவேண்டும் என்று அவர்கள் மிரட்ட, ஹெட்மாஸ்டர் ஒருவரைத் தவிர ஆதரவு தர யாரும் வரவில்லை.
பள்ளி நிர்வாகிகளோ ஊர் பெரிய மனிதர்கள். அவர்கள் ராஜாவின் பக்கம். அவர்களை எதிர்க்க அவளின் அப்பா அம்மாவுக்கு தைரியம் இல்லை. அவசர அவசரமாக ரூபவதியின் அந்த கல்யாணம் அடுத்த நாளே முடிந்து அந்த ராஜாவோடு, ரூபவதி கிளம்ப வேண்டியதாகி விட்டது.

“ ராமண்ணா.. நீ போய் ரூபவதியை பாத்து கூட்டிகிட்டு வந்துடு..”
ஹெட்மாஸ்டர் சொல்லிவிட்டு கிளம்ப, தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு, தன் தங்கையைக் காண உடனே புறப்பட்டான் ராமண்ணா.
படாத பாடு பட்டு, ரூபவதி இருக்கும் அரண்மனைக்கு வந்து சேர்ந்தான் அவன்.
ஏற்கனவே சொல்லி வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. அரண்மனையின் காவலாளிகள் அவனை உள்ளே விடவில்லை.
ராமண்ணா அரண்மனை வாசலில் நின்று கொண்டு இருப்பதை ரூபவதியிடம் வேலைக்காரர்கள் வந்து சொன்னார்கள். அவள் அடைந்த சந்தோசத்தை பார்த்த பிரேம் குமார் ரூபவதியிடம் வந்து,
“ அந்த நகைப் பெட்டியை கொடுத்திட்டா, நீ உன் அண்ணனோட போகலாம்..” என்றான்.

ஜீலம் நதிக்கரையில் இரு ஒற்றர்கள்

கி.மு 326 ஆம் ஆண்டு, குளிர் உறையும் மாதம் ஒன்றின் நள்ளிரவு, கௌரவனும், நீல்பாண்டேயும் உயரமான குன்றின் மரமொன்றின் கிளையில் ஒட்டியபடி கிடக்கிறார்கள்,நிலவு இவர்களின் தலைக்கு மேலே உலகத்தை உளவு பார்த்துக் கொண்டு மேகங்களின் இடையே மறைந்து கொள்கிறது, பனியும், குளிரும் உடலில் நடுக்கத்தை உண்டாக்கினாலும் கௌரவன் பழகி இருந்தான், பல முறை இதுமாதிரியான சூழலில் பாலைவனங்களில், அடர்ந்த காடுகளில் மாற்று அரசுகளின் நடவடிக்கை குறித்து பேரரசர் போரசுக்கு தகவல்கள் அளிக்கும் பணியை நீண்ட நாட்களாக கௌரவன் செய்து கொண்டிருக்கிறான், கௌரவனுக்கு வயது இருபத்து ஏழு, பாண்டே இன்னும் வயது இளையவன், பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் புதிய உளவுப் படையின் உறுப்பினன், பல்வேறு நம்பிக்கையான பயிற்சிகளுக்குப் பின்பு பாண்டேயை இந்தப் பணியில் தான் இணைத்துக் கொள்வதாக கௌரவன் மன்னரிடத்தில் சொன்ன போது அவர் கொஞ்சம் வியப்படைந்தார், உயரத்திலும், உடல் எடையிலும் மிகச் சிறிய மனிதனாய்க் காட்சி தரும் இவனை ஏன் கௌரவன் தேர்வு செய்தான் என்று? இருப்பினும் அரசருக்குத் தெரியும் கௌரவனின் தேர்வு எப்போதும் சரியானதாய் இருக்கும் என்று, பின்னர் ஒரு நாள் மன்னர் இது குறித்துக் கேட்ட போது கௌரவன் இப்படிச் சொன்னான், “பேரரசே, உருவத்தில் சிறியவர்களே மரங்களில் ஏறுவதற்கும், குறுகலான இடங்களில் ஒளிந்து கொள்வதற்கும் சரியானவர்கள், உடல் எடை குறைந்தவர்களின் பசி பெரிய அளவில் பணிகளில் இடையூறு செய்யாது”.
இன்று இரவு முழுதும் இப்படித்தான் கழியும், அவர்களின் பணி உளவு பார்ப்பது, இருப்பினும் இத்தனை கடுமையான சூழலில் உளவு பார்ப்பது இருவருக்கும் இதுதான் முதல் முறை, ஜீலம் நதிக்கரைக்கு அப்பால் ஒரு சதுப்பு நிலத்தில் திட்டுத் திட்டாய் சில குன்றுகள், யாரும் எளிதில் நெருங்கி விட முடியாத அடர்ந்த வனங்களைச் சுற்றி வளைந்து நெளிந்து இரைச்சலோடு விரைந்து கொண்டிருக்கும் நதியின் ஒலி, இருளை அச்சம் கொள்ள வைக்கிறது, தொலைவில் நகரும் வெளிச்சப் புள்ளிகளை கௌரவன் பார்த்து விட்டான், ஆம், அவை இயல்பாக நகரும் கிராமங்களின் நள்ளிரவுக் கூட்ட விளக்குகளோ, இல்லை நமது படையினரின் பாதுகாவல் விளக்குகளோ அல்ல, வரலாற்றின் பக்கங்களில் எப்போதும் இடம் பிடிக்கப் போகிற ஒரு மிகப் பெரிய போரின் துவக்கப் புள்ளிகள் அவை, வெளிச்சப் புள்ளிகள் மெல்ல நகர்ந்து தொலைவில் வேகம் குறைகிறது, நதியின் இரைச்சலை விழுங்கியபடி தடதடக்கின்றன குதிரைக் குளம்படிகள், உயர்ந்த அந்த மரத்தின் மீது இருந்து கொண்டு மாவீரனும் உலகை வெல்லும் படைகளை வழி நடத்தும் அலெக்ஸாண்டரின் படைகளை முதன் முதலாகப் பார்த்ததில் கௌரவனுக்கு ஒரு விதமான மலைப்பு மேலிடுகிறது, பாண்டேயின் உடல் குளிரில் நடுங்குவதைப் போலத் தெரியவில்லை கௌரவனுக்கு, இருப்பினும் மெல்லிய குரலில் பாண்டேயின் அச்சத்தை நீக்க முயற்சி செய்கிறான் கௌரவன், நமது பேரரசரின் யானைகளுக்கு முன்னாள் இந்தப் படை சின்னஞ்சிறியது என்று சொல்லி விட்டுப் புன்னகைக்கிறான் கௌரவன், கௌரவனின் முகத்தில் புன்னகை வர மறுப்பதை பாண்டே அந்த இரவின் மெல்லிய நிலவொளியில் கண்டு கொள்கிறான், மீண்டும் அமைதி குடி கொள்கிறது இருவரிடத்திலும், தீவட்டிகளின் ஒளியில் நிறுத்தப்பட்டிருக்கும் அந்த மாபெரும் படையை அருகில் காண்பது ஒரு அரிய காட்சி மட்டுமில்லை மிகுந்த ஆபத்தானதும் கூட என்பதை கௌரவன் நன்கறிவான். இருப்பினும் படை குறித்த தெளிவான செய்திகளை அவன் பேரரசர் போரஸ் இடம் கையளிக்க வேண்டும், அந்தச் செய்தியும் அதன் சாரமும் தான் நமது தேசத்தின் வல்லமையை, அதன் மரியாதையை உலகம் உள்ள வரைக்கும் பறை சாற்றப் போகும் அடிப்படை என்பதால் உயிர் பற்றிய துளிக் கவலையும் இருவருக்கும் இல்லை, அவர்கள் ஒரு எழுச்சி பெற்ற மன நிலையில் வாழ்ந்து பழக்கப்பட்டிருக்கிறார்கள், தங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம் என்று அவர்கள் நினைக்கும் ஒரே நிகழ்வு, அவர்கள் பேரரசர் போரசை எந்த நேரத்திலும் எந்தச் சூழலிலும் சந்திக்கும் வல்லமை பெற்றவர்கள் என்பது தான்,
பலம் பொருந்திய அரேபியக் குதிரைகள், கம்போளினக் குதிரைகள் என்று முன் வரிசையில் கம்பீரமாகத் தலையசைத்தபடி குன்றுகளின் கீழிருக்கும் சம வெளியை அடைகிறது மாவீரன் அலெக்ஸாண்டரின் படை. அவை முதன் முதலாய் ஆசியாவின் ஒரு நிலப்பகுதிக்குள் நுழைகின்றன. ஏறக்குறைய 35,000 காலாட்படை வீரர்கள், 10,000 குதிரை வீரர்கள் பல ஆயிரம் கிலோ மீட்டர்களைக் கடந்து ஆசியாவுக்குள் நுழைகிறார்கள், ஏறத்தாழ ஒரு நகரம் இடம் பெயர்ந்து வருவது மாதிரியான நிகழ்வு, போரிடும் படைகளைத் தவிர படைகளுக்கு உணவு தயாரிக்கும் பணியாளர்கள், படையினரை உற்சாகம் செய்ய வந்திருக்கும் கலைஞர்கள், வழியில் வெற்றி கொண்ட நாட்டின் அடிமைகள், நிலப்பரப்பு குறித்த அறிவு மிகுந்த புவியியல் அறிஞர்கள், அலெக்ஸாண்டரின் தனி ஆலோசனைக் குழு, தளபதி கிரேடோரஸ், ஆறுகளைக் கடக்க உதவும் படகுகள், ஏனைய ஆயுதங்களைத் தாங்கி வரும் தனிப் பணியாளர்கள், இவர்கள் எல்லாம் சேர்ந்து 50,000 தென்கிழக்கு ஐரோப்பிய மனிதர்கள், நெடிய உயரமும், உயர்ந்த தோள்களும், வெளுத்த தோலும் கொண்ட மொழியறியாத மனிதர்கள், கௌரவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை, உடனடியாக மன்னரிடத்தில் தகவல்களைச் சொல்லி விட வேண்டும், இந்தப் இடப்பெயர்வு ஏனைய இடப்பெயர்வுகளைப் போல எளிதாகக் கையாளப்பட இயன்றது அல்ல, மிகுந்த கவனத்தோடும், சிரத்தையோடும் அணுக வேண்டிய ஒரு நிகழ்வு.
அடுத்த ஒரு மணி நேரம் மிகக் கவனமாக கண்களால் குறிப்பெடுக்கிறான் கௌரவன், நிலவைப் பார்த்து நேரத்தைக் கணிக்கிறான் பாண்டே, நள்ளிரவு கடந்து இரண்டு மணி ஆகி இருக்க வேண்டும், பாண்டேயும் பணியில் இணைந்து கொள்கிறான், கீழே குனிந்து மரத்தின் நிழலைப் பார்க்கிறான் கௌரவன், மரக்கிளைகளின் நிழலில் சிதறிக் கிடக்கும் நிலவொளி, தவளை ஒன்றை விரட்டிச் செல்லும் அரவம், இவை தவிர வேறொன்றும் இல்லை. இன்னும் ஒரு மணி நேரம் இருந்து விட்டு மெல்ல நகர வேண்டும், தவழ்ந்து தவழ்ந்து சமவெளிக்குச் செல்ல வேண்டும், சமவெளியில் இருந்து சரியும் மணல் பள்ளத்தின் வழியாக ஆற்றுக்குள் குதித்து மெல்லோராவில் கரை ஏற வேண்டும் என்பது தான் கௌரவனின் திட்டம், அடுத்த அரை மணி நேரத்தில் அரவம் துரத்திச் சென்ற தவளையின் கதறல் மழைக் குன்றுகளில் பட்டு எதிரொலிக்கிறது, அரவம் வெற்றிகரமாய் தனது இரையை ஆட்கொண்டு விட்டது, இந்த மாபெரும் தேசத்தின் கரைகளில் யாரும் அறியாமல் ஒரு மிகப்பெரிய ஆற்றல் பொருந்திய அரவம் கூடாரம் அடித்திருக்கிறது, இந்த அரவத்தின் வரவு நாட்டின் எதிர்காலத்துக்கும், பேரரசரின் ஆட்சிக்கும் அத்தனை நல்ல காலம் இல்லை என்பதை அந்த எளிய ஒற்றர்கள் இருவரும் அறிவார்கள், ஆயினும், தங்கள் கடமைகளில் அவர்கள் கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள்.
கௌரவனுக்கு இப்போது ஏதோ பொறி தட்டியது, வித்தியாசமான ஒலிகளை அந்த இரவில் அவன் கேட்கிறான், பாண்டேயைக் கீழே இறங்கி தப்பிச் செல்லுமாறு சொல்கிறான், ஆபத்துக் காலங்களில் பயிற்சியில் இருக்கும் இளையவர்களைத் தப்ப வைப்பதே சிறந்த உளவு முறை என்கிற எளிய போர்முறையை கௌரவன் நன்கறிவான், பாண்டே மலைச்சரிவில் முன்னரே கட்டி வைக்கப்பட்டிருந்த கயிற்றின் உதவியோடு சறுக்கியபடி தப்பி விட வேண்டும், பிடிபடும் நிலை உண்டானால், கௌரவன் பிடிபட்டு கூடுதல் தகவல்களை மன்னருக்குக் கொண்டு சேர்க்க முடியும், அருகில் சென்று படைகளை அவற்றின் ஆற்றலை உளவு பார்க்க முடியும் என்பதே அவனது திட்டமாக இருந்தது, குதிரைக் குளம்படிகள் மலைச்சரிவில் நெருங்கி வரும் ஓசையை ஒரு விதமான குழப்பத்தோடு கவனிக்கிறான் கௌரவன், ஒரு மரப் பல்லியைப் போல கிளைகளில் ஒட்டியபடி.அதிகமான குதிரைகள் இல்லை, மூன்றே குதிரைகள், குதிரைகளின் செந்நிற உரோமம் நிலவொளியில் பட்டு வெள்ளிக் கம்பிகளைப்போல மின்னுகிறது, ஒரு தேவதையின் கூந்தலைப் போல வாலில் செதுக்கப்பட்டிருக்கும் குதிரைகளின் கூந்தல் படைகளை அலெக்ஸாண்டர் எவ்வாறு உயிர்ப்போடு வைத்திருக்கிறான் என்பதை கௌரவனுக்கு அறியத் தருகின்றன. மரத்தின் அடியில் குதிரைகள் கணைக்கும் ஒலி மட்டுமே கேட்கிறது, அறியாத நீட்டி முழக்காத குறுகிய சொற்றொடர்களால் ஆன மொழியில் அங்கொரு உரையாடல் கேட்கிறது, இருவர் பேசி முடித்த பின்னர் கௌரவனின் மொழியில் அதட்டல் குரல் ஒன்று அவனை நோக்கி வருகிறது.
“கீழே இறங்கு, தப்பிக்க எண்ணாதே, உன்னை மேன்மை பொருந்திய மாமன்னர் அலெக்ஸாண்டர் பார்த்து விட்டார்”.
குறு வாளைக் கையில் ஏந்தியபடி கீழே குதிக்கிறான் கௌரவன், தாக்குதல் நடத்தித் தப்பிக்கலாம் அல்லது தன்னையே அழித்துக் கொள்ளலாம் என்கிற எண்ணம் கௌரவனிடத்தில் மேலோங்கி இருக்கிறது, தன்னிடம் இருந்து எந்தத் தகவலையும் அலெக்ஸாண்டர் அறிந்து கொள்ளக் கூடாது, அது தனது தேசத்தின் அழிவுக்கு வழி வகுக்கும் என்கிற வீர உணர்வு அது. கீழே குதித்த மறு நொடி கௌரவனின் கைகளை மடக்கிப் பிடிக்கிறது வலிமை மிகுந்த மாவீரன் அலெக்ஸாண்டரின் கரங்கள், உடனடியாகக் குறுவாள் பிடுங்கி எறியப்படுகிறது,
விலங்குகளால் பூட்டப்படுகின்றன கௌரவனின் கைகள். நிலவொளியில் ஜொலிக்கும் அந்த மிகப் பெரிய வீரனின் கண்களை நேருக்கு நேர் சந்திக்கிறது கௌரவனின் கண்கள், அந்தக் கண்களில் அறிவுப் பேரொளி படர்ந்து கிடக்கிறது, உலகை வெல்லும் அவன் கனவின் வீரியம் காட்சியாய் விரிந்து கிடக்கிறது கௌரவனின் கண்களில், அந்தக் கண்களை நேருக்கு நேர் சந்திக்கும் ஆற்றலை கௌரவன் வரவழைத்துக் கொள்கிறான், அலெக்ஸாண்டர் சில கேள்விகளை கௌரவனை நோக்கி வீசுகிறான், அது மொழி பெயர்க்கப்படுகிறது அந்த நள்ளிரவில், உனது அரசனின் படை பலம் என்ன? அவனிடத்தில் இருக்கும் யானைகளின் எண்ணிக்கை எவ்வளவு? தேர்ப்படையின் முக்கியத்துவம் என்ன? என்பது மாதிரியான வழக்கமான கேள்விகள் இல்லை அவை, நீ என்னுடன் இருக்க ஒப்புக் கொள்கிறாயா? என்பது தான் அலெக்ஸாண்டரின் முதல் கேள்வி, உயிர் இருக்கும் வரை மாட்டேன் என்பது கௌரவனின் பதில், எனது படையினரின் வருகை உன் மன்னனுக்கு எப்படி முன் கூட்டியே தெரியும், இந்தச் செய்தியை உனது மன்னனுக்குச் சொன்னது யார்? இது இரண்டாவது கேள்வி, மௌனம் ஒன்றே பதிலாக வருகிறது கௌரவனிடம் இதற்கு, மூன்றாவது கேள்வி உன்னோடு இங்கே இருந்த இன்னொரு மனிதன் எங்கே? மூன்றாவது கேள்வி மரத்தடியில் படிந்து கிடக்கும் காலடித் தடங்களை நிலவொளியில் உற்று நோக்கியபடி வருகிறது அலெக்ஸாண்டரிடம் இருந்து, அவன் தப்பிச் சென்று விட்டான் என்று துணிவோடு சொல்கிறான் கௌரவன்.
“நீ இந்த உலகத்தின் மிகப் பெரிய வீரனிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என்கிற அச்சம் உன் கண்களில் காணக் கிடைக்கவில்லை” என்கிறான் அலெக்ஸாண்டர், “நான் உன்னிலும் மிகப் பெரிய வீரனிடம் பணியாற்றுகிறேன்”, “உன்னை வெற்றி கொண்டு இந்த தேசத்தின் வீர வரலாற்றை உன் குதிரைகளின் குழம்புகளில் முத்திரையாகப் பதிக்கப் போகும் போரஸின் உளவுப் பிரிவுத் தளபதி நான்” என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறான் கௌரவன். அலெக்ஸாண்டர் குதிரையில் இருந்து கீழே குதிக்கிறான், அவனது வாளை அகற்றி அருகில் இருக்கும் படை வீரனிடம் கொடுக்கிறான் அலெக்ஸாண்டர், நெருங்கி மிக அருகில் வருகிறான் அலெக்ஸாண்டர், கௌரவனின் தோளில் தனது கையை வைத்து அழுத்தி அவனது உரையாடலை ஆமோதிக்கிறான் அலெக்ஸாண்டர், நான் வீரர்களை நேசிக்கிறேன், நான் வீரர்களோடு போரிடவே விரும்புகிறேன், உனது மன்னன் ஒரு தூய்மையான வீரனாய் இருப்பான் என்கிற நம்பிக்கை எனக்கு இப்போது இருக்கிறது, உன்னையே என் தூதுவனாய் அனுப்புகிறேன், நான் போரஸின் வீரத்தோடு போரிட வந்திருக்கிறேன் என்று அவனிடம் போய்ச் சொல், இந்தியாவை வெற்றி கொள்ள வேண்டும் என்கிற என் தந்தை பிலிப்பின் கனவுகளை என் கூடவே அழைத்து வந்திருக்கிறேன், அந்தக் கனவுகள் தான் என்னை வழி நடத்துகின்றன என்று உனது அரசனிடத்தில் போய்ச் சொல். உயிர் மீது அச்சம் இருந்தால் பரிசுப் பொருட்களை அனுப்பி என்னை வரவேர்க்கச் சொல், இல்லையென்றால் போருக்கான உங்கள் இந்தியச் சங்கை என் செவிப்பறைகளில் செலுத்தட்டும் உனது மன்னன்” சொல்லி விட்டுப் புன்னகைத்தான் அலெக்ஸாண்டர்.
விலங்குகளை அவிழ்த்து விடுமாறு அருகில் இருந்த படை வீரனிடத்தில் கண்களால் சொல்கிறான் அலெக்ஸாண்டர், கௌரவனுக்கு உடல் ரோமங்கள் சிலிர்த்துக் கொண்டன, மரியாதை செய்யும் வண்ணம் முழங்காலைத் தாழ்த்தி வணக்கம் சொல்கிறான் கௌரவன், அது ஒரு வீரனுக்குரிய வணக்கம், ஆயுதங்கள் அற்ற மனிதர்களை அவமதிக்காத எவனும் வீரன் என்று போரஸ் அடிக்கடி சொல்வது கௌரவனின் காதுகளில் பட்டு எதிரொலிக்கிறது. அலெக்ஸாண்டர் தனது குதிரையின் கழுத்தில் கையை வைத்தபடி அதன் கண்களைக் கூர்ந்து கவனிக்கிறான், கழுத்துக் கூந்தலுக்குள் தனது விரல்களை நகர்த்தி குதிரையை அவன் வருடிக் கொண்டிருக்கிறான், அவனது குதிரை கணைத்தபடி முன்னங்கால்களை உயர்த்தி குளம்புகளைத் தரையில் மோதுகிறது. பயணிக்க அவன் தயாராகி விட்டதை குதிரைக்கு முன்னரே உணர்த்தி விட்டான் அலெக்ஸாண்டர், அந்த மலைக் குன்று ஒரு முறை ஆட்டம் கண்டது போலிருக்கிறது, குதித்து ஏறுகிறான் அலெக்ஸாண்டர் தனது குதிரையில், குதிரை ஒரு முறை திரும்பி வேகத்தைக் கூட்டுகிறது, மலைச்சரிவில் பயணிக்கும் அந்த மாவீரனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் கௌரவன்.
இப்போது கௌரவனின் மனத்திரையில் தெளிவாக ஒரு செய்தி உணர்த்தப்படுகிறது, நமது தேசம் தோல்வியை முதல் முறையாகச் சந்திக்கப் போகிறது, இந்த மாவீரன் வெறும் உடல் வலிமையை நம்பி இத்தனை தொலைவு பயணம் செய்திருக்கவில்லை, இவன் தனது அறிவையும், திட்டமிடுதலையும் நம்பிச் செயல்படுகிறவன், படைகளை நிலை நிறுத்துகிற அதே இரவில் உளவாளிகள் குறித்த இந்திய மரபுகளை இவன் அறிந்து கொண்டிருக்கிறான், எதிரியின் உளவாளி ஒளிந்திருக்கிற பழக்கப்பட்டிராத நிலப்பரப்பின் மலைக் குன்றை நள்ளிரவில் அவனே அடையாளம் காண்கிறான் என்றால் இவன் நமது நிலப்பரப்பு குறித்த ஆழ்ந்த அறிவை முன்னரே தயார் செய்திருக்கிறான், ஆழ்ந்த கனவுகளின் மீது கட்டப்பட்டிருக்கும் நம்பிக்கையை ஆயுதமாய்க் கொண்டிருக்கும் இவனிடம் போர் குறித்த அச்சமோ அவநம்பிக்கையோ இல்லை. போரிடப் போகிற நிலப்பரப்பின் மொழியை அந்த மொழி பேசும் மக்களை இவன் முன்னதாகவே அறிந்து வைத்திருக்கிறான்.ஒவ்வொரு படை வீரனிடம் மாவீரன் அலெக்ஸாண்டருக்கு இருக்கும் நெருக்கத்தை அவனது குறிப்புகள் உணர்த்துகின்றன, இரவிலும் காலடித் தடங்களை வைத்து அங்கே இன்னொரு மனிதன் இருந்தான் என்பதை உணரும் அவனது கூர்மையான பார்வை விரிந்து பரந்த அவனது அறிவை உணர்த்துகிறது. கூடவே ஆயுதங்கள் அற்ற மனிதர்களிடம் தனது வீரத்தை எடுத்துரைக்கவும், பறை சாற்றவும் அவனது கைகள் எப்போதும் தயங்குகின்றன. உயிரை உறைக்கும் குளிர் காற்றின் வீச்சை வலிமை மிகுந்த அவனது தோள்கள் சட்டை செய்யவே இல்லை, இயற்கையோடு பேசுகிற, குதிரைகளை சிலிர்க்க வைக்கிற போர்க் கலைகளை அலெக்ஸாண்டர் சிறுவனாய் இருக்கும் போதே கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும் என்பதை அவனது குதிரையில் கால்கள் உணர்த்துகின்றன.
மெல்ல நடக்கிறான் கௌரவன், வழக்கமான தனது குறிப்புகளை பேரரசரின் கைகளில் ஒப்படைக்க வேண்டும், தன்னால் இயன்ற உளவுக் குறிப்புகளைக் கொண்டு மன்னரின் திட்டமிடுதலை வலிமை செய்ய வேண்டும், ஜீலம் நதியின் கரைகளை நோக்கி கௌரவன் நடந்து கொண்டிருக்கையில் அலெக்ஸாண்டர் தனது படுக்கையில் புரள்கிறான், உளவு வேலை செய்யும் ஒரு மனிதனின் கண்களில் காணக் கிடைத்த துளியும் அஞ்சாத வீரத்தில் தான் இந்த தேசம் வெற்றி அடைந்திருக்கிறது, போரஸ் அத்தனை எளிதாக வெற்றி கொள்ளப்படுகிற மன்னன் இல்லை என்பதை உணர்ந்தபடி திட்டங்களை நோக்கித் தன் கனவுகளை விரட்டி விட்டு உறங்கச் செல்கிறான். சூரியன் இரவில் நடந்த எந்த நிகழ்வும் தனக்குத் தெரியாது என்கிற அசட்டையில் மெல்ல எழும்பி மேலே வருகிறான். அலெக்ஸாண்டரின் காலடித் தடங்களை வரலாறு தன்னுள் ஏந்திக் கொள்கிறது. ஜீலம் நதி வழக்கம் போலவே இரைச்சலோடு ஓடிக் கொண்டிருக்கிறது, வரலாற்றைத் தன் கரைகளில் அலையடித்தபடி………..
************************************************************************************

எங்கே போயின ஏரிகளும் குளங்களும்?

எங்கே போயின ஏரிகளும் குளங்களும்?
===================================
அண்டை மாநிலங்களோடு தண்ணீர் பிரச்னையில் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நீராதாரங்களைத் தொலைத்துவிட்ட இன்றைய அவல நிலையில், நம் முன்னோர்களின் நீர் மேலாண்மை அறிவை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
அண்டை மாநிலங்களோடு தண்ணீர் பிரச்னையில் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நீராதாரங்களைத் தொலைத்துவிட்ட இன்றைய அவல நிலையில், நம் முன்னோர்களின் நீர் மேலாண்மை அறிவை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
தமிழர்களின் நீர் மேலாண்மை குறித்த பல வியத்தகு சான்றுகள் சங்க இலக்கியங்களிலே காணப்படுகின்றன.
மழைநீரை சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர்நிலைகளை அமைப்பது மன்னரின் தலையாய கடமை என்று புறநானூற்றுப் பாடல் ஒன்று கூறுகிறது.
நிலன் நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட் டோரம்ம இவன்தட் டோரே
தள்ளாதோர் இவன்தள்ளா தோரே (புறம் 18)
நீர்நிலைகளின் பல்வேறு பெயர்களை உரிச்சொல் நிகண்டு குறிப்பிடுகிறது.
இலஞ்சி, கயம், கேணி, கோட்டகம், ஏரி,
மலங்கள், மடு, ஓடை, வாவி, சலந்தரம்,
வட்டம், தடாகம், நளினி, பொய்கை,
குட்டம், கிடங்கு, குளம், கண்மாய்.
இலஞ்சி என்பது பூங்காக்களிலுள்ள குளத்தைக் குறிக்கும். கயம், வாவி, தடாகம், பொய்கை, குட்டம் போன்றவை பாசனம் இல்லாத நீர்நிலை. ஏரி, கிடங்கு, குளம் போன்றவை பாசனத்திற்குப் பயன்பட்டது. இயற்கையான பள்ளங்களில் நீர் தேங்குமிடம் மடு. நீர் ஓடும் இடம் ஓடை. ஏந்தல் - சிறிய ஏரி, தாங்கள் - தண்ணீரை ஏந்திப் பிடித்துள்ள இடம். கண்மாய் - தென் தமிழ்நாட்டில் ஏரிக்கு வழங்கும் பெயர் (கம் - நீர், வாய் - இடம்).
தமிழர்களிடமிருந்தே ஏரித் தொழில்நுட்பம் உலகெங்கும் பரவியது என்பதற்கு சான்றாக பல்வேறு மொழிகளிலுள்ள நீர்நிலைகளைக் குறிக்கும் சொற்களிலிருந்து அறியலாம்.
குளம் தொட்டு, கோடு பதித்து, வரி சீத்து
உளம் தொட்டு, உழுவயல் ஆக்கி, வளம் தொட்டுப்
பாகுபடும் கிணற்றோடு என்று இவை பாற்படுத்தான்
ஏகும் சுவர்க்கம் இனிது (சிறுபஞ்ச மூலம் 64)
-எனும் சிறுபஞ்சமூலப் பாடலுக்கு முனைவர் பழ. கோமதிநாயகம் தமது "தமிழக பாசன வரலாறு' எனும் நூலில் கீழ்கண்டவாறு பொருள் தருகிறார்.
1. குளம் அமைத்தல், 2. மிகை நீர் வழிய கலிங்கு - மிகை நீர் வெளியேறும் பாதை (கோடு) அமைத்தல், 3. குளத்துக்கு வரும் வரத்துக்கால், விவசாயத்துக்கு தண்ணீர் வழங்கும் மதகு, தூம்பு கலிங்கிலிருந்து வெளியேறும் பாதை ஆகிய வழிகளைச் செவ்வனே அமைத்தல், 4. பாசனம் பெறும் பகுதியை உழுவயலாக்குதல், 5. தண்ணீர் குறைவின்போது பயன்படுத்த ஊர் பொதுக் கிணறு அமைத்தல் ஆகிய ஐந்தையும் செய்பவன் சொர்க்கத்துக்குப் போவான்.
குடஓலை முறையில் தேர்ந்தெடுத்த ஏரி வாரியக்குழு பாசனப் பணிகளைக் கவனித்தது என்பதை உத்தரமேரூர் கல்வெட்டால் அறியலாம்.
இப்பணிகளைப் பொறுப்பாக கவனித்த ஏரிவாரியப் பெருமக்களை மறைபொருளாகக் கொண்ட அகநானூற்றுப் பாடலைக் காணலாம்.
துய்யவீழ் பனிமலர் உதிர வீசித்
தொழின்மழை பொழிந்த பானாட் கங்குல்
எறிதரைத் திவலை தூடஞ் சிறு கோட்டுப்
பெருங்குளம் காவலன் போல,
அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே (ஆம் 252)
பத்து வயதுக்குமேல் எண்பது வயதுக்குள் உள்ள அனைவரும் ஆண்டுதோறும் பாசன அமைப்புகளில் ஒரு குழி (6 அடிக்கு 6 அடி) வண்டலைத் தோண்டியெடுக்க வேண்டும். தவறினால் 4 பொன் அபராதம் என்று கட்டளையிட்டதாக ஒரு கல்வெட்டு கூறுகிறது.
1970-இல் பொதுப்பணித்துறையின் புள்ளிவிவரப்படி, தமிழ்நாட்டில் 39,202 ஏரிள் இருந்தன. தற்போதுள்ள ஏரிகளில் பெரும்பாலானவை கி.பி. 3-ஆம் நூற்றாண்டு முதல் 8-ஆம் நூற்றாண்டுக்குள் உருவானவை. 1000 ஆண்டுகளுக்கு முன்பு உருவான பழைய ஏரிகள் 116 என்றும், இவற்றுள் செம்பரம்பாக்கம் ஏரி, தூசி மாமண்டூர் ஏரி, காவேரிப்பாக்கம் ஏரி, தென்னேரி, வீராணம் ஏரி, உத்திரமேரூர் ஏரி, ராசு சிங்க மங்கலம் ஏரி, பெருமாள் ஏரி, மதுராந்தகம் ஏரி, இராமநாதபுரம் கண்மாய், கடம்பா குளம் எனப் பட்டியலிடப்படுகிறது. இன்றும் அழியாது பயன்பாட்டில் உள்ள இந்த ஏரிகளின் இன்றைய நிலை என்ன?
பராந்தகசோழன் (கி.பி.907 - 953) காலத்தில் உருவாக்கப்பட்ட வீரநாராயணன் ஏரியின் (வீராணம் ஏரி) கொள்ளளவு 1923-ஆம் ஆண்டில் 41 மி.க.மீ. தற்போதைய கொள்ளளவு 25 மி.க.மீ. ஆயிரம் ஆண்டுகள் முன்னோர்களால் காப்பாற்றப்பட்ட ஏரியின் கொள்ளவே ஐம்பது ஆண்டுகளில் பாதியாகக் குறைத்துள்ளோம்.
1800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணைதான் இன்று உபயோகத்திலிருக்கும் நீர்ப்பாசன கட்டமைப்பில் உலகத்திலேயே பழமை வாய்ந்தது.
ஏரிகள் ஒவ்வொன்றிலும் இருக்கும் கல்வெட்டில் ஏரியை உருவாக்கியவர், காலம், அளவு, பயன்பாடு, ஆயக்கட்டு போன்றவை பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிலவற்றை மட்டுமே அகழ்வாய்வாளர்கள் கண்டுபிடித்து வெளிக் கொணர்ந்துள்ளனர். மற்ற ஏரிகளின் கல்வெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த ஏரிகளின் வரலாற்றை நாம் முழுமையாக அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். ஆய்வு மாணாக்கர் இம்மாதிரி முயற்சிகளில் இறங்கி இன்னும் புதைந்து கிடக்கும் நமது தமிழகப் பெருமைமிகு வரலாற்றை உலகறியச் செய்ய வேண்டும்.

சிவகணங்கள்

சிவ கணங்களில் புஷ்பதத்தன், மாலியவான் என்று இருவர் இருந்தனர். அவர்களுக்குள் தானே சிவத் தொண்டில் சிறந்தவர் என்ற எண்ணம் இருந்தது. ஒரு நாள் நீண்ட விவாதத்தின் முடிவில் ஒருவருக்கு ஒருவர் சாபம் கொடுத்துக் கொண்டனர். புஷ்பதத்தன் மாலியவானை சிலந்தியாகப் பிறக்க சபிக்கிறான். அதேபோல், மாலியவான், புஷ்பதத்தனை யானையாக சபிக்கிறான். காலக் கிரமத்தில் இவ்விருவரும் சோழ வளநாட்டில், காவிரியாற்றின் கரையில் திருவானைக்காவில் என்னும் இடத்தில் சிலந்தியாகவும், யானையாகவும் பிறக்கின்றனர். திருவானைக்காவில் காவிரிக்கரையில் ஒர் வெள்ளை நாவல் மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் இருந்தது.
யானையாகப் பிறந்த புஷ்பதத்தன் தனது முற்பிறவின் பயனாக அந்த சிவலிங்கத்திற்கு தனது துதிக்கையால் நீரும், மலரும் கொணர்ந்து பூஜித்தான். அதே பகுதியில் சிலந்தியாகப் பிறந்த மாலியவான், தனது முற்பிறப்பில் சிவனுக்குத் தொண்டு புரிந்த பூர்வபுண்யத்தால், வெண்மையான நாவல் மரத்தடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது சருகுகள் விழாமலும், சூரிய வெப்பம் தாக்காமலும் இருக்க தனது உடலில் உருவாகும் பிசினைக் கொண்டு ஒர் வலையினை ஏற்படுத்தியது.
சிவபெருமானை பூஜிக்க வரும் யானை, ஈசன் மேல் இருக்கும் சிலந்தி வலையினைக் கண்டு வருந்தி, அவற்றை நீக்கியபின் தனது வழிபாட்டினைச் செய்துவிட்டுச் செல்வது தினசரி வழக்கமாகக் கொண்டது. இவ்வாறு சிலந்தி வலை பின்னுவதும், மறுநாள் யானை அதனை அகற்றுவதுமாக இருந்ததை உணர்ந்த சிலந்தி, ஒருநாள் மறைந்திருந்து கவனித்து, தான் பின்னும் வலையைச் சிதைப்பது யானையே என்று உணர்ந்து அதனைக் கொல்ல முடிவு செய்கிறது. மறுநாள் சிவனைப் பூஜிக்க வந்த யானையின் துதிக்கையில் புகுந்து கடிக்கிறது சிலந்தி. வலி தாங்க முடியாத யானை துதிக்கையை தரையில் அடித்து சிலந்தியைக் கொல்கிறது. அப்போது சிலந்தி விஷம் உடம்பில் ஏறியதால் யானையும் உயிர் துறக்கிறது. சிவனுக்கு தொண்டு செய்த யானை சிவலோகம் அடைகிறது. யானைக்குத் துன்பம் ஏற்படுத்திய சிலந்தி மீண்டும் பிறவி எடுக்கிறது. மீண்டும் பிறக்க வேண்டிவந்தாலும், ஈசனுக்கு வலை பின்னிய காரணத்தால் அரச வாழ்வு கிடைக்கிறது.
பல வருடங்கள் குழந்தைச் செல்வம் இல்லாதிருந்த சுபதேவர்-கமலவதி என்ற சோழ அரச தம்பதிக்கு மகனாகப் பிறக்கிறார் சிலந்தியாக இருந்த மாலியவான். குழந்தை பிறக்கும் முன்பு ஜோதிஷ விற்பனர்கள் குழந்தை பிறப்பது குறிப்பிட்ட காலமாக இருக்குமாயின் குழந்தை பூவுலகம் முழுவதும் ஆளும் சிறப்பு மட்டுமின்றி, ஈசன் அருள் பெற்றதாகவும் இருக்கும் என்று கூறுகின்றனர். இதனை அறிந்த அரசி, குழந்தைப் பிறப்பை குறிப்பிட்ட நேரத்தில் நடக்க வேண்டித் தன்னைத் தானே தலைகீழாகக் கட்டித் தொங்கவிடச் செய்கிறார். இவ்வாறு செய்து, குறிப்பிட்ட நேரம் வருகையில் கட்டுக்கள் அவிழ்க்கப் பெற்று வந்து குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். தலைகீழாகத் தொங்கிய காரணத்தால் குழந்தையின் கண்கள் சிவந்து இருந்திருக்கிறது. அதைக் கண்ட தாய், 'என் கோவே! செங்கண்ணா' என்று அழைத்து மகிழ்ந்த சிறிது நேரத்திலேயே தன்னுயிரை இழக்கிறாள் அரசி. அறிதாகப் பெற்ற மகனை நன்கு வளர்த்து, போர்க்கலை மற்றும் வேதாகமங்களிலும் மேம்பட்டவனாக்கி, தக்க பருவத்தில் அவனுக்கு முடிசூட்டுகிறார் சுபதேவர்.
கோச்செங்கட் சோழர் என்ற பெயருடன், இறைவனருளால் தனது முற்பிறப்புக்களை அறிந்த அரசன், ஈசன் மீது பக்தியில் திளைத்து திருவானைக்காவில் வெண்ணாவலுடன் கூடிய ஈசனுக்கு கோவில் எழுப்பினாராம். தனது பூர்வ ஜென்மத்தில், யானையான புஷ்பதந்தனால் தான் ஈசனுக்கு ஏற்படுத்திய வலைக்கு ஏற்பட்ட அழிவாலேயே கோச்செங்கணான் தான் கட்டிய கோவில்களை மாடக் கோவில்களாக, அதாவது யானை நுழையமுடியாதபடி பல படிகளுடனும், குறுகிய வாயிலுடனும் அமைத்ததாகக் கூறுகின்றனர். கோச்செங்கணனார் சுமார் 70 மாடக் கோவில்கள் கட்டியதாகச் சொல்கின்றனர் ஆய்வாளர்கள். தில்லையம்பலத்தானுக்குப் பல விசேஷ உற்சவங்கள் செய்வித்ததாகவும், கோவிலில் மறையோவோர்க்கு வீடுகள் கட்டிக் கொடுத்ததாகவும் தெரிகிறது. இது பற்றி சேக்கிழார் பின்வருமாறு சிறப்பித்துக் கூறுகிறார்.
மந்திரிகள் தமை ஏவி வள்ளல் கொடை அனபாயன்
முந்தை வரும் குல முதலோராய முதல் செங்கணார்
அந்தமில் சீர்ச் சோனாட்டில் அகனாடு தொறும் அணியார்
சந்திர சேகரன் அமரும் தானங்கள் பல சமைத்தார்
அக் கோயில் தொறும் சிவனுக்கு அமுதுபடி முதலான
மிக்க பெரும் செல்வங்கள் விருப்பினால் மிக அமைத்துத்
திக்கு அனைத்தும் தனிச் செங்கோல் முறை நிறுத்தித் தேர் வேந்தர்
முக்கண் முதல் நடம் ஆடும் முதல் தில்லை முன்னினார்
திரு ஆர்ந்த செம்பொன்னின் அம்பலத்தே நடம் செய்யும்
பெருமானை அடிவணங்கி பேர் அன்பு தலை சிறப்ப
உருகா நின்று உளம் களிப்பத் தொழுது ஏத்தி உறையும் நாள்
வருவாய்மை மறையவர்க்கு மாளிகைகள் பல சமைத்தார்
தேவர் பிரான் திருத்தொண்டில் கோச் செங்கட் செம்பியர் கோன்
பூவலயம் பொது நீக்கி ஆண்டு அருளிப் புவனியின் மேல்
ஏவிய நல்தொண்டு புரிந்து இமையவர்கள் அடி போற்ற
மேவினார் திருத்தில்லை வேந்தர் திருவடி நிழல் கீழ்
திருஞான சம்பந்தர் தமது திருவானைக்கா பதிகங்களிலும் இந்த கோச்செங்கட் சோழரைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். அவை பின்வருமாறு:
செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன்
அங்கட் கருணை பெரிதா யவனே
வெங்கண் விடையா யெம்வெண்நா வலுளாய்
அங்கத் தயர்வா யினள்ஆ யிழையே.
மண்ணது வுண்டரி மலரோன்காணா
வெண்ணாவல் விரும்பும யேந்திரருங்
கண்ணது வோங்கிய கயிலையாரும்
அண்ணல்ஆ ரூராதி யானைக்காவே.