Friday, 9 March 2018

'தலை'வன்

இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது.
எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர்.
என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாம் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்?
கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் கண்டார்கள்.
உடனே தளபதி வீரர்களை அழைத்து, “சரி வீரர்களே… நாம் ஒரு முடிவுக்கு வருவோம். இதோ இந்தக் கோயிலுக்கு முன் ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுகிறேன். அதில் தலை விழுந்தால் வெற்றி நமக்கே. பூ விழுந்தால் நாம் தோற்பதாக அர்த்தம். இப்படியே திரும்பிவிடுவோம்…வெற்றியா தோல்வியா.. நமக்கு மேல் உள்ள சக்தி தீர்மானிக்கட்டும்… சரியா?”
“ஆ.. நல்ல யோசனை… அப்படியே செய்வோம்…”
நாணயத்தைச் சுண்டினான் தளபதி. காற்றில் மிதந்து, விர்ரென்று சுழன்று தரையில் விழுந்தது நாணயம்.
தலை…!
வீரர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். வெற்றி வெற்றி என்று எக்காளமிட்டபடி போர்க்களம் நோக்கி ஓடினர். வெகு வேகமாக சண்டையிட்டனர் எதிரி நாட்டவர்களோடு.
அட.. என்ன ஆச்சர்யம். அந்த சிறிய படை, எதிரி நாட்டின் பெரும் படையை வீழ்த்திவிட்டது!
துணைத் தளபதி வந்தான். ‘நாம் வென்றுவிட்டோம்… கடவுள் தீர்ப்பை மாற்ற முடியாதல்லவா…” என்றான் உற்சாகத்துடன்.
“ஆமாம்… உண்மைதான்” என்படி அந்த நாணயத்தை துணைத் தளபதியிடம் கொடுத்தான் தளபதி.
நாணயத்தின் இரு பக்கங்களிலும் தலை!

விதைப்பும் பலனும்

ஓர் ஊரில் பெரிய பண்ணையார் ஒருவர் இருந்தார். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான நிலங்கள் அவருக்குத் தான் சொந்தம்.
அவரிடம் முனியன் என்ற உழவன் வேலை பார்த்து வந்தான். அவனுக்குக் குடிசை ஒன்றும் சிறிதளவு நிலமும் இருந்தன.
பண்ணையாரிடம் வந்த அவன், ” ஐயா! எல்லா நிலத்திலும் உழுது விதை நட்டு விட்டார்கள். என் நிலம் மட்டும் தான் வெறுமனே உள்ளது. நீங்கள் சிறிது தானியம் தாருங்கள். என் நிலத்திலும் விதைத்து விடுகிறேன்” என்றான்.
” என் நிலத்திலேயே உழுது பயிரிடு. சொந்தமாகப் பயிரிட வேண்டாம். பண்ணையாராகும் ஆசையை விட்டு விடு. கூலியாளாகவே இரு. அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைக்கும்” என்று கோபத்துடன் சொன்னார் அவர்.
சோகத்துடன் வீடு திரும்பினான் அவன். தன் மனைவியிடம், ” நாம் வளம் பெறுவது பண்ணையாருக்குப் பிடிக்கவிலலை. தானியம் தர மறுத்து விட்டார். நீயும் நம் குழந்தைகளும் எப்போதும் போலப் பட்டினி கிடக்க வேண்டியதுதான். இதுதான் நம் தலைவிதி” என்று வருத்தத்துடன் கூறினான்.
அவர்கள் குடிசையில் குருவி ஒன்று கூடு கட்டியது.
இதைப் பார்த்த அவன் மனைவி ” நம் குடிசை புயலுக்கும் மழைக்கும் எப்பொழுது விழுமோ என்று நாம் அஞ்சுகிறோம். இங்கு வந்து குருவி கூடு கட்டுகிறது பாருங்கள்” என்று கணவனிடம் சொன்னாள்.
” பாவம்! வாய் பேச முடியாத உயிர் அது. நிலைமை புரிந்தவுடன் அதுவே இங்கிருந்து போய்விடும். நாம் அதற்குத் தொல்லை செய்ய வேண்டாம்” என்றான் அவன்.
கூட்டில் அந்தக் குருவி நான்கு முட்டைகள் இட்டது. நான்கும் குஞ்சுகளாயின.
திடீரென்று அந்தக் குருவிக் கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்தது. குருவிக் குஞ்சுகளைப் பிடித்துச் சாப்பிடத் தொடங்கியது. அவை அலறின.
அங்கு வந்த உழவன் பாம்பை அடித்துக் கொன்றான். அதற்குள் அது மூன்று குஞ்சுகளைத் தின்று விட்டது. தரையில் விழுந்த ஒரு குஞ்சு மட்டும் உயிரோடு இருந்தது.
அதை அன்போடு எடுத்தான் அவன். அதன் கால் உடைந்திருப்பதைக் கண்டு அதற்குக் கட்டுப் போட்டான். அதை மீண்டும் கூட்டில் வைத்தான். வேளா வேளைக்கு உணவு தந்தான்.
சில நாட்களில் அந்தக் குருவியின் கால்கள் சரியாயின. அங்கிருந்து அது பறந்து சென்றது. உழவனும் குடும்பத்தினரும் வறுமையில் வாடினார்கள்.
” இப்படியே அரை வயிறு சாப்பிட்டு எவ்வளவு காலம் வாழ்வது? நமக்கு விடிவே கிடையாதா?” என்றாள் மனைவி.
அப்பொழுது அவர்கள் வீட்டுக் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது. கதவை திறந்தான் அவன்.
அவன் வளர்த்த குருவி வெளியே இருந்தது. அதன் வாயில் ஒரு விதை இருந்தது. அதை அவன் கையில் வைத்தது. ” இதை உன் வீட்டுத் தோட்டத்தில் நடு. சிறிது நேரத்தில் வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் பறந்தது அது.
மீண்டும் வந்தது அது. இன்னொரு விதையைத் தந்தது. ” இதை உன் வீட்டின் முன்புறத்தில் நடு” என்று சொல்லிவிட்டுப் பறந்தது.
மூன்றாம் முறையாக வந்த அது இன்னொரு விதையைத் தந்தது ” இதை சன்னல் ஓரம் நடு. என் மீது காட்டிய அன்பிற்கு நன்றி” என்று சொல்லிவிட்டுப் பறந்தது.
குருவி சொன்னபடியே மூன்று விதைகளையும் நட்டான் அவன்.
மறுநாள் காலையில் அங்கே மூன்று பெரிய பூசனிக் காய்கள் காய்த்து இருந்தன. இதைப் பார்த்து வியப்பு அடைந்தான் அவன்.
தோட்டத்தில் இருந்த பூசனிக் காயை வீட்டிற்குள் கொண்டு வந்தான். அதை இரண்டு துண்டாக வெட்டினான்.
என்ன வியப்பு! அதனுள் இருந்து விதவிதமான உணவுப் பொருள்கள் வந்தன. சுவையான அவற்றை எல்லோரும் மகிழ்ச்சியாக உண்டனர். மீண்டும் அந்தப் பூசனிக் காயை ஒன்று சேர்த்தனர். பழையபடி அது முழுப் பூசனிக் காய் ஆனது.
மகிழ்ச்சி அடைந்த அவன், ” இது மந்திரப் பூசனிக் காய். நமக்கு உணவு தேவைப்படும் போது பிளந்தால் உணவு கிடைக்கும். மீண்டும் சேர்த்து விட்டால் பழையபடி ஆகி விடும். இனி நமக்கு உணவுப் பஞ்சமே இல்லை” என்றான்.
” வீட்டின் முன் புறத்தில் ஒரு பூசனிக் காய் உள்ளது. அதைக் கொண்டு வாருங்கள். அதற்குள் என்ன இருக்கிறது என்று பார்த்து விடலாம்” என்றாள் மனைவி.
அந்தப் பெரிய பூசனிக் காயை உருட்டிக் கொண்டு வந்தான் அவன். கத்தியால் அதை வெட்டினான். உள்ளிருந்து அழகான ஆடைகள், விலை உயர்ந்த மணிகள் கொட்டின.
சன்னலோரம் இருந்த மூன்றாவது பூசனிக் காயையும் கொண்டு வந்து வெட்டினான். அதற்குள் இருந்து பொற்காசுகள் கொட்டின.
அதன் பிறகு அவனும் மனைவியும் குழந்தைகளும் நல்ல உணவு உண்டனர். விலை உயர்ந்த ஆடைகளை அணிந்தனர். மிகப் பெரிய வீடு ஒன்றைக் கட்டத் தொடங்கினார்கள்.
உழவன் சில நாள்களில் பெருஞ்செல்வனானதை அறிந்தார் பண்ணையார்.
அவனிடம் வந்த அவர், ” டேய்! முனியா! உனக்கு எங்கிருந்து இவ்வளவு செல்வம் கிடைத்தது? உண்மையைச் சொல்” என்று கேட்டார்.
அவனும் நடந்ததை எல்லாம் அப்படியே சொன்னான்.
தன் மாளிகைக்கு வந்தார் அவர். எப்படியாவது மேலும் செல்வம் சேர்க்க வேண்டுமென்று நினைத்தார். வீட்டில் மேல் பகுதியில் குருவிக் கூடு ஒன்றை அவரே செய்தார். குருவிகள் அவரும் அதில் தங்கும் என்று எதிர்பார்த்தார்.
அவர் எண்ணம் ஈடேறியது. ஒரு குருவி வந்து அந்தக் கூட்டில் தங்கியது. நான்கு முட்டைகள் இட்டது. நான்கு குஞ்சுகள் வெளியே வந்தன.
” பாம்பு வரவே இல்லை. பொறுமை இழந்த அவர் ஒரு பெரிய கம்புடன் குருவிக் கூட்டை நெருங்கினார். மூன்று குஞ்சுகளை அடித்துக் கொன்றார். ஒன்றன் காலை உடைத்துக் கீழே எறிந்தார்.
பிறகு கால் உடைந்த குருவியிடம் அன்பு காட்டுவது போல் நடித்தார். வேளை தவறாமல் உணவு அளித்தார்.
கால் சரியான அந்தக் குருவி கூட்டைவிட்டுப் பறந்து போனது.
” மூன்று விதைகளுடன் குருவி மீண்டும் வரும். அரசனைவிட செல்வன் ஆவேன்” என்ற எண்ணத்தில் காத்திருந்தார் அவர்.
அவர் எதிர்பார்த்தபடியே கதவைத் தட்டியது குருவி. அவரிடம் மூன்று விதைகளைத் தந்தது. ” ஒன்றை வீட்டின் பின்புறம் நடு. இரண்டாவதை வீட்டின் முன்புறம் நடு. மூன்றாவதைக் கிணற்றோரம் நடு” என்று சொல்லி விட்டுப் பறந்து சென்றது.
எண்ணம் நிறைவேறியது என்று மகிழ்ந்தார் அவர். மூன்று தானியங்களையும் நட்டார்.
மறுநாளே மூன்று பெரிய பூசனிக் காய்கள் காய்த்து இருந்தன.
தோட்டத்தில் இருந்த பூசனிக் காயை வீட்டுக்குள் கொண்டு வந்தார். அதை வெட்டினார்.
அதற்குள் இருந்து எண்ணற்ற பூச்சிகள் வெளிவந்தன. அவர் வயலில் விளைந்திருந்த பயிர்களை எல்லாம் ஒரு நொடிக்குள் தின்றுவிட்டு மறைந்தன.
வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார் அவர். முன்புறத்தில் இருந்த இரண்டாவது பூசனிக்காயை வெட்டினார்.
அதற்குள் இருந்து தீ வெளிப்பட்டது அது அவரையும் அந்த மாளிகையையும் ஒருநொடிக்குள் சாம்பல் ஆக்கியது.
கொடிய பண்ணையார் ஒழிந்தார் என்று ஊர் மக்கள் மகிழ்ந்தனர்.
மூன்றாவது பூசனிக்காயை உடைக்க யாருமே முன்வரவில்லை. அதற்குள் பாம்பு, தேள், பூரான் போன்ற எண்ணற்றவை இருப்பதாகப் பேசிக் கொண்டார்கள்.

Tuesday, 6 March 2018

அப்ரோடைட் & பாரிஸ்


கண்களில் நீர் பெருக, Priam அரசனும் அவனது துணைவியான Hecuba அரசியும் அவர்களுக்கு பிறந்த குழந்தையை Ida மலையில் விட்டுச் செல்கிறார்கள்.

ஏன் அப்படி செய்தார்கள்? அதற்கான பதில் ஜோதிடனின் கணிப்பு. அவர்களுக்கு பிறந்த அக்குழந்தை அரண்மனையில் இருக்கும் பட்சத்தில் Troy அரசுக்கு பெறும் பாதிப்பு உண்டாகும் என ஜோதிடன் கூறுகிறான்.

ஒரு இடையனின் அரவணைப்பில் Paris எனப் பெயரிடப்பட்டு அக்குழந்தை வளர்கிறது. காலம் கழிகிறது. அவனும் வீரனாய் வளர்கிறான்.

ரோமானிய புனைக்கதைகளில் காணும் ஒரு தேவதையின் பெயர் Eris.

ஒரு சமயம் அவளுக்கு கடுங்கோபம் உண்டாகிறது. கோபத்தின் காரணம் என்ன? Thetis எனப்படும் கடல் தேவதை தனது திருமணத்திற்கு Eris தேவதையை அழைக்காமல் போகிறாள். இதனால் அவள் சினம் கொள்கிறாள்.

Thetis எனும் அக்கடல் தேவதையை கேவலப்படுத்தவும், திருமணத்தை நிலைகுலையச் செய்யும் பொருட்டும் Eris திருமண நிகழ்வின் போது கலகம் உண்டாக்கத் திட்டமிடுகிறாள்.

திருமண நிகழ்வின் போது ஒரு ஆப்பிளைத் தூக்கி எறிகிறாள். தேவதைகளுள் சிறந்த தேவதைக்கே அந்த ஆப்பிள் கொடுக்கப்பட வேண்டும் என்பது விதி.

ஆதலால் அந்த ஆப்பிள் யாரைப் போய்ச் சேர வேண்டும் என்பதில் திருமண நிகழ்வின் போது பெருங் குழப்பம் ஏற்படுகிறது. பிரச்சனையைத் தீர்க்கும் பொருட்டு அந்த ஆப்பிளுக்கு தகுதியானவர்கள் என மூன்று தேவதைகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் முறையே Athena, Aphrodite மற்றும் Hera எனப்படும் தேவதைகள்.

Zeus எனும் தலைமைக் கடவுளரின் ஆலோசனைபடி Paris எனும் அவ்விளைஞன் சிறந்த தேவதையை தேர்ந்தெடுக்கப் பொறுப்பாகிறான்.

அம்மூன்று தேவதைகளும் Paris தன்னை சிறந்தவனாக தேர்ந்தெடுக்க வேண்டும் எனும் நோக்கில் ஆளுக்கு ஒரு வரம் அவனுக்கு கொடுக்கிறார்கள்.

Athena அவன் கலந்துக் கொள்ளும் எல்லா போர்களிலும் வெற்றி பெற வரம் கொடுப்பதாக சொல்கிறாள். Hera பல இடங்களை அவன் ஆட்சி செய்ய வரம் கொடுப்பதகச் சொல்கிறாள். Aphrodite உலகில் மிகச் சிறந்த அழகியை அவனுக்கு கொடுப்பதாகச் சொல்கிறாள்.

Aphrodite-ன் வரத்தை ஏற்கும் Paris அவளையே சிறந்த தேவதையென அறிவிக்கிறான்.

யார் அந்த உலகின் மிகச் சிறந்த அழகி? துரதிஷ்டவசமாக அவள் கிரேக்க நாட்டின் Sparta நகர அரசனின் மனைவியான Helen என அறியப்படுகிறது. சில பல சதிவேளைகளால் Helen வெற்றிகரமாக Troy நகருக்கு அழைத்துச் செல்லப்படுகிறாள்.

இதன் வினையாக Troy-க்கும் Spartaவில் இருக்கும் Achaea இனத்துக்குமிடையிலான Trojan போர் உண்டாகிறது. சுமார் 10 வருட காலத்தை விழுங்கிய இப்போரில் கிரேக்கர்கள் தந்திரமான ஒரு சாதுர்ய வகையில் தோல்வியை ஒப்புக் கொள்ளவும் போர் நிறுத்தம் காண்கிறது.

Troy நகரிலிருந்து கிளம்பும் முன் கிரேக்கர்கள் கடற்கரையோரமாக பூதாகரமான ஒரு மரக் குதிரை ஒன்றை விட்டுச் செல்கிறார்கள்.அதனுள்ளே மிகச் சிறந்த கிரேக்க வீரர்கள் ஒளிந்து இருப்பது யாருக்குமே தெரியாத மாபெரும் ரகசியம் ....

வெற்றி வாகைச் சூடியதாக எண்ணம் கொண்டு Priam அரசனும் அவனது இராணுவமும் அன்றய தினம் மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள்.

உற்சாக மிகுதியில் பிரமாண்டமான மரக்குதிரையையும் கோட்டைக்குள் கொண்டு போகின்றனர்...அந்தோ !!!!! விளைவு ...

அந்த இரவு யாரும் அறியா வண்ணம் கிரேக்கர்கள் மீண்டும் கடற்கரைக்கு வருகிறார்கள். மேலும் கோட்டைக்குள் மரக் குதிரையில் மறைந்திருக்கும் வீரர்களும் வெளியேறி Troy அரசை எதிர்க்கிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் அதிரடித்தாக்குதல் நிகழ்வில் மொத்த Troy அரசு அழிந்து போகிறது.

இலியட் எனப்படும் இக்கதை Homer எனும் ஒரு கிரேக்க குருடனால் எழுதப்பட்டது. இலியட் உலகப் புகழ் வாய்ந்த புத்தகம் என்பதை நமது பள்ளிக் காலங்களில் படித்திருப்போம்.

இலியட் புனைக் கதை மட்டும் தானா?....!!!!!!

Sunday, 4 March 2018

தெரியுமா ?...

ஒரு பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் ஒரு மிதி வண்டியை வரைய முயற்சியுங்கள்.
(எந்த வித reference உம் இல்லாமல்).
உங்களால் சரியாக வரைய முடிந்ததா?
எந்த ஒரு பாகத்தையும் விட்டு விடாமல் ?
The knowledge illusion என்ற புத்தகத்தில் Steven Sloman இந்த ஆய்வை விளக்குகிறார்.
பேப்பரைக் கொடுத்து சைக்கிளை வரையச் சொன்னதும் நிறைய பேர் திண்டாடினார்கள்.
ஹேண்டில் பார் எப்படி சைக்கிளில் இணைக்கப் பட்டிருக்கும்,
பெடல் எப்படி சக்கரத்துடன் இணையும்,
முன் சக்கரத்துடன் இணையுமா பின் சக்கரத்துடன் இணையுமா,
சைக்கிள் சீட் , முகப்பு விளக்கு எல்லாம் எப்படி இணைக்கப்படும் என்றெல்லாம் அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை.
நம் நிலையும் இதுதான். சைக்கிளைப் பற்றி 'எல்லாம்' தெரியும் என்று நினைக்கிறோம். ஆனால் அதை வரைய முடிவதில்லை.
பிள்ளைகளின் வீட்டுப்பாடக் கணக்கை போட்டுத் தருகிறேன் பேர்வழி என்று எப்போதேனும் கிளம்பி விடாதீர்கள்.
பாதியில் மாட்டிக் கொள்வோம். அது பேசிக் அல்ஜீப்ரா , ட்ரிக்னோமெட்ரி யாக இருந்த போதிலும்.
ஒரு பாட்டு முழுவதும் தெரியும் என்ற குருட்டு நம்பிக்கையில் எத்தனை முறை நாம் பாட வாயெடுத்து நடுவில் வரி மறந்து போய் திணறி இருக்கிறோம்?
கம்பெனியில் ஒரே டெக்னாலஜியின் மீது வருடக்கணக்கில் வேலை செய்திருப்போம்.
ஆனால் அதைப்பற்றி நம்மால் ஒரு பத்து நிமிடத்துக்கு மேல் வகுப்பெடுக்க முடியாது. திணறுவோம்.
சொன்னதையே சொல்ல ஆரம்பித்து விடுவோம்.
இண்டர்வீயூ ஒன்றுக்குப் போயிருந்தேன். prepare செய்யவில்லை. சும்மா அப்ளை செய்திருந்தேன். திடீரென்று கூப்பிட்டு விட்டார்கள்.
போய் உட்கார்ந்ததும்...
செல்போன் எப்படி வேலை பண்ணுகிறது , முதலில் இருந்து கடைசி வரை படம் வரைந்து சொல்லு என்றார்கள்.
காலை 11 மணி. டிஃபனுக்கு சாப்பிட்டிருந்த பொங்கல் கண்களை சுழற்ற ஆரம்பித்தது. சும்மா ஏதோ உளறினேன்.
செல்போனில் இருந்து சிக்னல்கள் டவருக்குப் போகும். டவர் இன்னொரு டவருக்கு அனுப்பும். அதில் இருந்து மற்றொரு செல்போனுக்கு போகும் என்றேன்.
Is it that simple? என்றார் அந்த சிடுமூஞ்சி.
நான் சொன்னது theoretically சரி தான் .
At a very broad level.
என் மூளைக்கு அதற்கு மேல் வேறெதுவும் அப்போது தோன்றவில்லை.
"If you wish to make an apple pie from scratch, you must first invent the universe" என்ற கார்ல் சாகனின் quote நினைவுக்கு வந்தது.
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்து சுமார் 2 வருடங்கள் ஆகி விட்டன.
சமீபத்தில் பெங்களூருவுக்கு ஒரு வேலையாகப் போயிருந்தேன்.
கன்னடத்தில் basic காகப் பேசவே தடுமாறினேன்.
அங்கே இருந்த போது சொற்பொழிவு செய்யும் அளவு சரளமாகப் பேசுவேன்.
'தெரியாது' என்பதற்கு கன்னடத்தில் என்ன என்பதை நாக்குக்குக் கொண்டு வர மூளை சற்று நேரம் எடுத்துக் கொண்டது.
திடீரென்று உலகம் அழிந்து நீங்கள் மட்டுமே இங்கே எஞ்சி இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்.
அப்போது உங்களால் எந்த டெக்னாலஜியை மீண்டும் கொண்டு வர முடியும்?
மின்சாரம், தொலைபேசி, இன்டர்நெட் ?
விடை 'எதுவுமில்லை' என்பதாகவே இருக்கும்.
எதையும் நம்மால் உருவாக்க முடியாது.
இன்டர்நெட்டை விடுங்கள்.
இருட்டை விரட்ட ஒரு மெழுகுவர்த்தியை எப்படி செய்து கொள்வது என்றே நமக்குத் தெரியாது.
ஒரே வாரத்தில் பரிதாபமாக செத்துப் போவோம்.
இவற்றில் இருந்து சில விஷயங்கள் தெரிய வருகின்றன.
* நமக்கு ஒரு விஷயம் தெரியும் என்று நாம் சொல்வது ஒரு மாயை.
நமக்கு ஏதோ கொஞ்சம் அரைகுறையாகத் தெரியும். அதுவும் கொள்கை ரீதியான அறிவு மட்டுமே.
* தெரிந்த பாட்டு தானே, தெரிந்த டாபிக் தானே, தெரிந்த நடனம் தானே தெரிந்த மொழி தானே ரிகர்சலே வேண்டாம் என்று நினைக்காதீர்கள்.
ஆடியன்ஸ் முன்பு அவமானம் ஆகி விடும்.
தேசிய கீதமாகவே இருந்தாலும் நான்கைந்து முறை முதல்நாள் இரவு சொல்லிப் பார்த்துக் கொள்ளுங்கள்.
'தமிழ்' உங்களுக்கெல்லாம் தெரியும் தானே?
தமிழ் இலக்கியம் பற்றி அரை மணிநேரம் பேசுங்கள் என்றால் முடியுமா?
அரை நிமிடம் கூட கஷ்டம் தான்!
* விக்கிப்பீடியாவில் செல்போன் பற்றி இரண்டு பத்தி படித்து முடித்ததும்...
வாவ், செல்போன் பற்றி எல்லாம் தெரிந்து கொண்டு விட்டேன் என்று துள்ளிக் குதிக்காதீர்கள்.
தற்போதைய டெக்னாலஜி ரொம்பவே complicated .
It's complicated than you think,
complicated than you can think.
ஆயிரக்கணக்கான மூளைகளின் ஒருமித்த உழைப்பு அது.
செல்போனின் CDMA டெக்னாலஜி பற்றி தெரிந்து கொள்வோம் என்று இன்டர்நெட்டை புரட்டினால்...
Start with a set of vectors that are mutually orthogonal. என்றெல்லாம் வரும்.
லேப்பை மூடிவைத்து விட்டு ராத்திரி டின்னருக்கு உப்புமாவா என்று கேட்க ஆரம்பிப்போம்.

அய்யனார்

அய்யனார் சாமி
==============
மூவாநல்லூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் எருமை வாகனத்துடன் எமதர்மராஜாவே நேரில் வந்து நின்னாக்கூட பயப்படமாட்டார்கள். ஆனால் தமிழாசிரியர் புலவர் “எமன்“ சவுந்தர்ராஜன் பெயரைக்கேட்டாலேயே பசங்களுக்கு பயத்தில் கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்ம்பித்து விடும்.
வெள்ளை வேட்டி, சட்டை, முருக்கிய பெரிய மீசை, இடுப்பில் சொருகியிருக்கும் கத்தி, கையில் ஒரு நீண்ட மூங்கில் கம்பு சகிதமாக தமிழ் ஐயா நடந்து வருவதைப் பார்த்தால் பரவை முனியம்மா பாடும் “மதுரை வீரன் தானே.... “ என்ற பாடல்தான் நினைவுக்கு வரும்.
“கயவாலிப் பயலுகளா... என்னாடா அங்க சத்தம்...? வந்தேன்னா... குன்டிய ராவிபுடுவேன்“ என்று எமன் ஒரு குரல் கொடுத்தாரென்றால் பசங்களோடு சேர்ந்து பள்ளிக்கூடத்தைச் சுற்றியிருக்கும் மரம், செடி கொடிகள் கூட ஆடாமல், அசையாமல் அமைதி காக்கும்.
நாயகன் வேலு நாயக்கரப்போல தமிழ் ஐயா நல்லவரா ? கெட்டவரா ? என்று புரிந்து கொள்ள முடியாத கேரக்டர்.
பாடம் படித்து வராத, வீட்டுப்பாடம் செய்து வராத மாணவர்களை மூங்கில் கம்பாலும், கிளோரியா கம்பாலும் வகுப்பின் மூலை முடுக்கெல்லாம் விரட்டி, விரட்டிச் சென்று அடி பிண்ணி எடுப்பார். பெண்களை கொஞ்சம் கூட அவருக்கு பிடிக்காது. பெண்களின் கட்டுரை நோட்டுப்புத்தகத்தை வாங்கி பேருக்கு ஏனோதானோவென்று ஒரு பார்வை பார்த்துவிட்டு “இது என்ன கையெழுத்து ? “ என்று கூறி எழுதிய பக்கங்களை கிழித்து எறிவார். ஆனால்.. சில பசங்களின் கோழி கிறுக்கல் கையெழுத்தை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்.
ஏழை மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பார். பத்தாம் வகுப்பு மாணவர்களையெல்லாம் பொதுத்தேர்வு படிப்பு விடுமுறை மற்றும் பரீட்சை நாட்களில் மன்னார்குடி டவுனில் உள்ள தனது வீட்டில் தங்க வைத்து, சாப்பாடு போட்டு, பாடங்கள் சொல்லிக்கொடுத்து படிக்க வைப்பார்.
ஐயாவைப் பார்த்து மாணவர்கள் மட்டுமல்ல... தலைமையாசிரியர் அப்பிரானி நாரயணன் மற்றும் சக ஆசிரியர்கள் கூடப் பயந்து ஐயா முன்பு அடகக ஒடுக்கமாக நடந்து கொள்வார்கள்.
ஐயாவுக்கு தலைமையாசிரியார் நாரயணனை கொஞ்சம்கூட பிடிக்காது. எப்படி பிடிக்கும்...? ஐயா பழுத்த நாத்திகவாதி. பெரியாரின் சீடர். பசங்க தப்பித்தவறிக்கூட சாமி, பேய், பூதம் என்று சொன்னால் தொலைத்து விடுவார். ஆனால் தலைமையாசிரியர் நாரயணனோ பழுத்த ஆத்திகவாதி. நெற்றி நிறைய நாமத்துடன் வலம்வரும் ஓர் அப்பிரானி.
கல்வி அதிகாரி (D.E.O) எந்த நேரத்திலும் பள்ளியை ஆய்வு செய்ய வருவார் என்ற பயத்தில் ஆசிரியர்கள் எல்லாம் ஒழுங்காக பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொன்டிருந்த காலக்கட்டத்தில் ஓர் நாள் தமிழ் ஐயா தலைமயாசிரியர் நாரயணன் அறைக்குச்சென்று கிராமத்திலுள்ள அவருடைய வயலில் அறுவடை நடைபெறுவதால் “ரெண்டு நாட்கள் லீவு வேண்டும் “ என்று தலைமையாசிரியரைப் பார்த்து கேட்டார்.
“என்ன சார்... D.E.O எந்த நேரத்திலும் ஆய்வுக்காக வருவார். இப்ப போய் லீவு கேட்கிறீங்களே.. ? “ என்று இழுத்தார் நாரயணன்.
சரேலென்று இடுப்பில் சொருகியிருந்த கத்தியை எடுத்து மேசை மீது ஓங்கி குத்திவிட்டு “பாப்பாரப் பயலே...இப்ப லீவு தர முடியுமா ? முடியாதா ? “ என்றார் எமன்.
“நீங்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானானும் லீவு எடுத்துக் கொள்ளுங்கள் சார்.. D.E.O கேட்டால் உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லிவிடுகிறேன் “ என்று நடுங்கிக்கொண்டே சொல்லி அன்று எமனோட கத்திகிட்டேயிருந்து தப்பித்தார் நாரயணன்.
மூவாநல்லூர் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் கிராமங்களிலுள்ள அய்யனார், மதுரை வீரன், கருப்பண்ணசாமி போன்ற கோவில்களில் ஆடுகள், கோழிகள் பலி கொடுத்து... கரகாட்டம், வள்ளித் திருமணம், பவளக்கொடி நாடகங்களுடன் திருவிழாக்கள் களை கட்டும் ஆடி மாதத்தில் ஓர் நாள்...
ஏழாம் வகுப்பு மாணவர்கள் எல்லாம் ரெண்டாவது பீரியட் தமிழ் பாடத்தை நினைத்துக்கொண்டு மனதில் திகிலோடு அமர்ந்திருந்தார்கள். காரணம்... தமிழ் ஐயா திடீரென்று நேற்று இன்று எல்லோரும் மூன்று செய்யுள்கள் ஒப்புவிக்க வேண்டும் என்று கூறிவிட்டார். பள்ளி விட்டவுடன் வீட்டிற்குச் சென்று புத்தகப்பையை ஒரு மூலையில் கடாசிவிட்டு வயல்வெளிகளிலும், குளத்திலும் ஆட்டம் போடும் பசங்க... அடுத்த நாள் காலையில பள்ளிக்கூடத்திற்கு போகும்போதுதான் புத்தகப்பையைத் தேடுவார்கள். இப்படிப்பட்ட படிப்பாளிகளிடம் திடீரென்று மூன்று செய்யுள்களை ஒரே நாளில் படித்து ஒப்புவிக்க வேண்டும் என்று எமன் கூறினால் பாவம்... அவர்கள் என்ன பண்ணுவார்கள் ? குறைந்தபட்சம் ஒரு மூன்று, நான்கு நாட்கள் கொடுத்தாலாவது கொஞ்சம் முயற்சி செய்து பார்ப்பார்கள்.
முதல் மார்க் வாங்கும் ரவிச்சந்திரனைத் தவிர மற்ற எல்லோருக்கும் இன்று சரியான மண்டகப்படி உண்டு என்ற பயத்தில் மாணவர்களிருக்க இரண்டாவது பீரியட் தொடங்குவதற்கான மணியும் அடித்தது. ஐந்து நிமிடங்களாயிற்று... பத்து நிமிடங்களாயிற்று.. ஐயா இன்னும் வரவில்லை. வகுப்புத் தலைவன் ரவி ஆசிரியர்கள் அறைக்குச் சென்று பார்த்துவிட்டு வந்து “சார்.. இன்னிக்கு வரலைடா“ என்றான். மகிழ்ச்சி வெள்ளத்தில் மாணவர்கள் எல்லாம் ஆரவாரம் செய்தார்கள்.
“டேய்... சத்தம் போடாதிங்கடா... புகழேந்தி சாருக்கு டீ வாங்க நான் காடுவெட்டியார் கடைக்குப் போறேன்... சத்தம் போடாம இருங்கடா “ என்று கூறிவிட்டு ரவி சென்றுவிட்டான். கணக்கு வாத்தியார் புகழேந்திக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஊருக்குள்ளிருக்கும் காடுவெட்டியார் கடை டீதான் பிடிக்கும். பக்கதிலுள்ள கோவிந்தராசு டீக்கடை டீ அவருக்கு பிடிக்காது.
செய்யுள் படித்து வரச்சொன்ன எமன் வரவில்லை. ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் கொஞ்சநேரம் கூட சுதந்திரமாக பேசவிடாமல் பேசியவர்கள் பெயர் என்ற லிஸ்ட் ஒன்றைக் கொடுத்து வாத்தியார்களிடம் மாட்டிவிடும் சகுனி ரவியும் வகுப்பில் இல்லை. மாணவர்களின் மகிழ்ச்சியைக் கேட்கவும் வேண்டுமா ? அடி தூள் பறக்குது.....
ரவி போன ஐந்து நிமிடங்கள் கழித்து வயலுக்குச் சென்றுவிட்டு சற்று லேட்டாக வந்த தமிழ் ஐயா பள்ளியை சைக்கிளில் நெருங்கும்போது அமைதியாக இருக்க வேண்டிய அவருடைய ஏழாம் வகுப்பு சென்னை கார்ப்பரேசன் கவுன்சில் மீட்டீங் போல சத்தமாக இருப்பதைக்கண்டு அதிர்ந்து போனார். பள்ளியின் முன்வாசல் வழியாக பள்ளிக்குள் வராமல் அப்படியே பள்ளியின் பின்பக்கம் சென்று அங்கிருக்கும் ஒத்தையடிப்பாதை வழியாக உள்ளே நுழைந்து பள்ளிக்குள் வந்தார்.
வேட்டைக்குச் செல்லும் புலி போல மெல்ல பதுங்கி அடிமேல் அடி எடுத்து வைத்து மெதுவாக ஏழாம் வகுபின் பின்பகுதிக்குச் சென்று பாதி சுவருக்கு மேலேயிருக்கும் மூங்கில் தட்டியின் ஒட்டை வழியாக எட்டிப் பார்த்தார். உள்ளே முதல் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் ரவியை காணவில்லை. மாணவர்கள் சத்தம் போட்டு ஓடி பிடித்து விளையாடுகிறார்கள். மாணவிகள் பெஞ்சு மேல் சாக்பீசால் கட்டம் போட்டு தாயம் விளையாடுகிறார்கள். என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் என்று அப்படியே நின்று பார்க்க ஆரம்பித்தார் எமன்.
அந்த நேரம் பார்த்தா... கடைசி பெஞ்ச் ராமமூர்த்திக்கு சாமி ஆட வேண்டும் என்ற ஆசை வரவேண்டும் ? திடீரென்று பெஞ்ச் மேல ஏறி “டேய்... நான்தான்டா அய்யானார் சாமி “ என்று கூறிக்கொண்டு ”டேய்..டேய்.. ” என்று சத்தம் போட்டு சாமி ஆட ஆரம்பித்தான். மாணவர்கள் எல்லாம் தங்களுடைய சத்தத்தை நிறுத்திவிட்டு ராமமூர்த்தியின் சாமியாட்டத்தை ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
உடனே பக்கத்திலிருந்த அவன் நண்பன் வேல்மணி பூசாரியாக மாறி “அய்யனார் சாமீ... நீதான் எங்களை காப்பத்தனும்... உனக்கு என்ன குறையிருந்தாலும் எங்ககிட்ட சொல்லு... நாங்க தீர்த்து வைக்கிறோம் சாமீ “ என்றான்.
“எனக்கு ஏன்டா... இந்த வருஷம் ரெண்டு கரும்புதான் (ஆடு) வெட்டியிருக்கீங்க “ ”அடுத்த வருஷம் நெறைய வெட்றோம் சாமி “
பக்தன் செல்வராசு அய்யனார் சாமியிடம் சென்று “சாமீ...நான் படிக்காமலேயே பாசாகனும் சாமீ.. அதுக்கு நீதான் ஒரு வழியச் சொல்லனும் சாமீ “ என்றான்.
“டேய்.. எனக்கு ஒரு குஞ்சு (கோழி) காவு குடுடா...நீ படிக்காம பாசாக நான் ஏற்பாடு பன்றேன் “
பிறகு மேலும் ஒரு சில பக்தர்களுக்கு வரம் கொடுத்துவிட்டு மலையேறி விட்டது அய்யனார் சாமி. அய்யனார் சாமி ஆட்டத்தைப் பார்த்துவிட்டு எமன் ஒன்றும் செய்யாமல் ஆசிரியர்கள் அறைக்குச் சென்றுவிட்டார்.
அன்று மதியம் ஏழாம் வகுப்பிற்கு மூன்றாவது பீரியட் ஓவிய வகுப்பு. ஓவிய வகுப்பென்றால் மாணவர்களுக்கு ஒரே ஜாலிதான். ஏனென்றால் ஓவிய ஆசிரியர் முருகன் அம்புலிமாமா, ரத்னபால சிறுவர் கதை புத்தகங்களை படித்து அந்த கதைகளை ”அழகி” பட பிச்சாண்டி வாத்தியார் போல ஆக்சன் போட்டு ரசித்து சொல்லுவார். இதனால் பசங்களுக்கு முருகன் வாத்தியாரை ரொம்பப் பிடிக்கும். “மகேந்திரபுரி இளவரசி“ கதையின் நான்காம் பாகத்தைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தார்கள்.
மூன்றாவது பீரியட் தொடங்குவதற்கான பெல் அடித்தவுடன் ஒவிய ஆசிரியர் முருகனுக்குப் பதிலாக தமிழ் ஐயா வகுப்பினுள் நுழைந்தார். ஓவிய ஆசிரியரிடம் அனுமதி பெற்று அவருக்குப் பதில் எமன் வந்துவிட்டார். பசங்களுக்கு செய்யுள் சொல்லவேண்டுமே என்ற பயத்தில் குப்புனு வேர்க்க ஆரம்பித்துவிட்டது. நாற்காலியில் வந்து அமர்ந்து ஒரு ஐந்து நிமிடங்கள் பசங்களைப் பார்த்துக்கொண்டே அமைதியாக உட்கார்ந்திருந்தார். புயல் அடிப்பதற்கு முன்பு நிலவும் மயான அமைதி.
“டேய்.. ரவி காலையில வகுப்ப பார்த்துக்காம எங்கடா போயிருந்தே? “
“புகழேந்தி சாருக்கு டீ வாங்கிவர காடுவெட்டியார் கடைக்கு போயிருந்தேன் சார் “
“சரி..சரி... போயி வேப்ப இலை நிறைய ஒடிச்சுக்கிட்டு வாடா “
“டேய்.. செல்வம் நீ போயி ஒரு டப்பாவுல எதிர்த்த வீட்டு குப்பையில சாம்பல் அள்ளிகிட்டு வாடா “
“டேய்.. மதி நீ போயி பெரிசா ஒரு ஏழெட்டு கிளோரியா கம்பு ஒடிச்சிகிட்டு வாடா “
ஐயா சாலமன் பாப்பையா சொல்வது போல பசங்களுக்கு ஒன்னும் புரியல.. வெளங்கல....
வேப்ப இலை, சாம்பல், கிளோரியா கம்புகள் எல்லாம் எமன் முன்னாடி உள்ள மேசையில்.
“யாருடா.. அந்த அய்யனார் சாமி? “
பசங்களுக்கு இப்ப வெளங்கிடுச்சி. அந்த அய்யனார் சாமியே வந்தாக்கூட நம்மல இன்னிக்கு எமன்கிட்டேயிருந்து காப்பாத்த முடியாது என்று நினைத்துக்கொண்டே மரண பயத்துடன் மெதுவாக எழுந்தான் ராமமூர்த்தி.
“பூசாரியும், படிக்காமலேயே பாசக வேணும்னு வரம் கேட்ட பக்தனும் எழுந்திருங்க“
வேல்மணியும், செல்வராசுவும் மெதுவாக எழுந்தார்கள்.
எமன் திடீரென்று ஒரு கையில் சாம்பலையும் மறுகையில் வேப்பிலையும் எடுத்துக்கொண்டு ராமமூர்த்தி தலையில் சாம்பலைக் வீசிக்கொண்டே “அய்யனாரே... என்னோட மாணவனவிட்டுட்டு ஓடிப்போடிடு “ என்று கூறிக்கொண்டே வேப்பிலையால் அடிக்க ஆரம்பித்தார்.
பிறகு ராமமூர்த்தி, வேல்மணி, செல்வராசு மூன்று பேரையும் கிளோரியா கம்பால் தாக்க ஆரம்பித்தார். பசங்க மூனு பேரும் அடி தாங்கமுடியாம வகுப்போட ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு மாறி மாறி ஓடறாங்க. எமன் விடாமல் துரத்தித் துரத்தி அடிக்கிறார். பசங்க மூனு பேரும் போட்ட அலறல் சத்தத்தைக்கேட்டு மத்த வகுப்பு ஆசிரியர்களெல்லாம் பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு ஏழாம் வகுப்பை திகிலுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
மீண்டும் மீண்டும் ராமமூர்த்தியை மட்டும் கட்டம் கட்டி “அய்யனார் சாமீ.. என்னோட மாணவனவிட்டுட்டு ஓடிப்போடிடு “ என்று சொல்லிக்கொண்டே வேப்பிலையாலும், கிளோரியா கம்பாலும் அடி பிண்ணி எடுக்கிறார். அடி தாங்கமுடியாமல் “நான் ஓடிப்போயிடுறேன்.. நான் ஓடிப்போயிடுறேன் “ என்று ராமமூர்த்தி அலறுகிறான்.
அவிழ்ந்த கோவணத்தை ஒரு கையால் பிடித்துக்கொண்டே மறு கையிலுள்ள கிளோரியா கம்பால் ராமமூர்த்தியை தாக்கிக்கொண்டே இருக்கிறார் எமன். இதற்கு மேல் இங்கேயிருந்தால் மனுசன் இன்னிக்கு அடிச்சே கொன்னுடுவார் என்ற பயத்தில் ராமமூர்த்தி வகுப்பை விட்டு வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தான்.
அன்று பள்ளியைவிட்டு ஓடியவன்தான் அதற்குப் பிறகு பள்ளிக்கூடத்திற்கு ராமமூர்த்தி திரும்பி வரவேயில்லை......! * * *
பி.கு:
தமிழ் ஐயாவிடமிருந்து எங்கள் வகுப்பில் ஒரு முறை கூட அடி வாஙகமல் தப்பித்தவன் நான் ஒருவன் மட்டும்தான்! “குன்டமுட்டு பயலே எங்கிட்டேயிருந்து அடி வாங்காம தப்பிகிறவன் நீதான்டா” என்று அடிக்கடி சொல்லி காட்டுவார். தமிழ் ஐயாவின் அடியிலிருந்து தப்பிப்பதற்காக மற்ற பாடங்களை விட தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனுக்குடன் படித்து விடுவேன். தமிழ் ஐயாவிடம் பயம் இல்லாமல் இருந்திருந்தால் இப்ப்டி வலைப்பதிவில் தமிழில் என்னால் எழுதிக்கொண்டிருக்க முடியாது. தமிழ் ஐயாவிற்கு என் நன்றிகள்!
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஊருக்கு சென்றிருந்தபோது தமிழ் ஐயாவை பார்த்து பேசிக்கொண்டிருந்தேன். “தம்பீ.. எப்படிடா இருக்கே என்று வாஞ்சையுடன் கையைப் பிடித்து கேட்டபோது” உடம்பில் ஏற்பட்ட சிலிர்ப்பை விவரிக்க முடியாது!! நீரிழிவு நோயினால் ஐயாவின் உடல் தளர்ந்து விட்டது. ஆனால் முறுக்கிய நரை மீசையுடன் அதே “அய்யனார் சாமி” கம்பீரம் முகத்தில்! சிங்கம் எப்போதும் சிங்கம்தான்....

கொட்டாப்புலி காளைகள்

கொட்டாப்புலி காளைகள்
========================
”கொட்டாப்புலி காளைகள்” நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டிலிருந்த வண்டி மாடுகளின் செல்லப்பெயர். அப்பா நெல் வியாபாரம் செய்து வந்ததினால் அந்தக் காலத்தில் அவருடைய வியாபாரத்திற்கு மூலதனம் வண்டி மற்றும் காளை மாடுகள். அப்பா எப்போதும் நல்ல விலை கொடுத்து வண்டி மாடுகள் வாங்கி வைத்திருப்பார். எங்கள் வீட்டிலிருந்த மாடுகளிலேயே மறக்க முடியாத மாடுகள் “கொட்டாப்புலி காளைகள்” தான்.
ஒருமுறை அப்பாவின் நண்பர் சைவராசு ஆலம்பிரியருக்கு மாடுகள் வாங்க சைவராசு சித்தப்பாவுடன் பட்டுக்கோட்டை சந்தைக்கு சென்ற அப்பா பட்டுக்கோட்டை சந்தையிலிருந்து ஒரே அளவில் இரண்டு கன்றுக்குட்டிகளை வாங்கி வந்திருந்தார். இதைப்பார்த்த பெரியம்மா
“ஏன்யா.. இந்த கன்னுக்குட்டிகளை வாங்கிட்டு வந்திருக்கே?”
“பாத்தவுடனே.. புடிச்சிருந்தது.. அதான் சைவராசு கிட்ட பணம் வாங்கி வாங்கிட்டேன்டி. பின்னாடி நல்ல வண்டி மாடுகளா.. வரும்டி”
இருபது வயதிலிருந்து வண்டி மற்றும் மாடுகள் வைத்து வேலை செய்து வந்ததால் அப்பா எப்போதும் வண்டி மாடுகளை குழந்தைகள் போல்தான் பராமரிப்பார். அதனால் பட்டுக்கோட்டை சந்தையிலிருந்து வாங்கி வந்த காளை கன்னுக்குட்டிகளையும் குழந்தைகளைப்போல் வளர்க்க ஆரம்பித்தார். எங்கள் வீட்டில் வீட்டு நிர்வாகம் மற்றும் சமையல் செய்வது பெரியம்மா. வெளி வேலைகள் மற்றும் மாடுகளை பராமரிப்பது அம்மாவின் வேலை. எனவே அம்மாவும் கன்னுக்குட்டிகளை நன்றாக வளர்த்தார்.
எங்கள் வீட்டில் வேலை பார்த்த கைலாசத்தின் மகன் நாகநாதன் எட்டு வயதில் எங்கள் வீட்டிற்கு வேலைக்கு வந்து சேர்ந்தார். அப்பா மற்றும் அம்மாக்கள் நாகநாதனை பிள்ளை போல் பாவித்து வேலை வாங்குவார்கள். எங்களைப் பொருத்தவரையில் நாகநாதன் அண்ணன் மாதிரி. நாகநாதனும் கன்னுக்குட்டிகளுக்கு புல்,தீவனம் வைத்து நன்றாக வளர்த்தார்.
வைக்கோல், புல், கடலைச்செடி, பருத்திக்கொட்டை+புண்ணாக்கு+தவிடு கலந்த தீவனங்கள் என்ற அப்பா, அம்மா, நாகநாதன் ஆகிய மூவரின் வளர்ப்பால் கன்னுகுட்டிகள் நன்றாக வளர்ந்து வந்தன. சிறுவர்களாகிய நாங்கள் அதன் பக்கத்தில் சென்றால் கோபத்துடன் முட்ட ஆரம்பித்துவிடும். எனவே நாங்கள் கன்னுக்குட்டிகளைப் பார்த்து பயப்படுவோம். ஒன்றாக வளர்ந்து வந்த இரண்டு கன்னுக்குட்டிகளுக்கும் ஒன்றன்மேல் ஒன்றிற்கு அளவு கடந்த பாசம். ஒன்றை ஒன்று நாக்கினால் நக்கிக்கொள்ளும். விளையாட்டாக முட்டிக்கொண்டு வயல்வெளிகளில் ஓடி விளையாடும். அம்மாவின் குரல் கேட்டால் எங்கிருந்தாலும் அம்மாவை நோக்கி கன்னுகுட்டிகள் ஓடி வந்துவிடும்.
கன்னுக்குட்டிகள் வளர.. வளர.. அப்பா, அம்மா, நாகநாதன் ஆகிய மூவரைத்தவிர வேறு யாராவது கிட்டே சென்றாலும் முட்ட ஆரம்பித்து விட்டன. காளைகளின் கோபத்தைப் பார்த்து அம்மா காளைகளுக்கு வைத்த செல்லப்பெயர் “கொட்டாபுலிகள்”.
கன்னுகுட்டிகள் வளர்ந்து காளைகள் ஆனவுடன் அப்பாவும், நாகநாதனும் ஏரில் பூட்டி பழக்கினார்கள். இரண்டு காளைகளும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் உடனே ஏரில் நன்றாக பழகி விட்டார்கள். காளைகள் நன்றாக வளர்ந்தவுடன் அப்பாவும், நாகநாதனும் வண்டியில் பூட்டி வண்டி பழக்கினார்கள். ஏர் உழ கற்றுக்கொண்டது போல வண்டி இழுக்கவும் காளைகள் உடனே பழகிவிட்டன.
இரண்டு மாடுகளில் ஒரு மாட்டின் கொம்பு உயரமாக, உடம்பு சற்று ஒல்லியாக இருக்கும். இதன் பெயர் “பெரிய கொட்டாப்புலி” இன்னொரு மாடு சற்று குண்டாக இருக்கும். இந்த மாட்டின் பெயர் “சின்ன கொட்டாப்புலி”. அப்பா, அம்மா மற்றும் நாகநாதன் ஆகிய மூவரைத் தவிர யாரவது கிட்டே நெருங்கினால் முட்ட வந்து துரத்த ஆரம்பித்து விடும். அவ்வளவு கோபக்கார காளைகள்.
“வக்காலி.. யாவாரி மாட்டை யாரலயும் புடிக்க முடியலடா” என்று ஊரில் பேசிக்கொள்வார்கள்.
மாட்டு பொங்கலன்று அப்பா கொட்டாப்புலி காளைகளை நன்றாக அலங்கரித்து பிடித்துக்கொண்டு கம்பீரமாக வலம் வருவார். சில சமயங்களில் மாடுகளின் கொம்பில் நூரு ரூபாய் பணத்தை பையில் வைத்து கட்டி “வக்காலி... தைரியம் இருக்கிறவன் பணத்தை எடுதுக்கொள்ளுங்கடா” என்பார். யாரும் பணத்தை எடுத்தது கிடையாது!
இரண்டு மாடுகளும் எவ்வளவு பாரம் வண்டியில் வைத்தாலும் அனாயசமாக இழுத்துச் செல்லும். மன்னார்குடியிலிருந்து ஆறு கிலோ மீட்டர்கள் தொலைவிலிருக்கும் எங்கள் ஊரின் வழி மாடுகளுக்கு அத்துப்படி. சில சமயங்களில் இரவு நேரத்தில் மன்னார்குடி தெப்ப குளத்தை தாண்டியவுடன் அப்பா வண்டியின் உள்ளே படுத்து தூங்கி விடுவார். மாடுகள் நேராக.. வீட்டிற்கு வந்துவிட்டு கத்தி அப்பாவை எழுப்பி விடும். அவ்வளவு புத்திசாலி காளைகள்!
இந்தக் கதையின் முக்கிய காதாபாத்திரம்... திண்டாயுதம் ஆலம்பிரியர். திண்டாயுதம் அண்ணன் பெரியப்பா ”கடுப்படி” மருதமுத்து ஆலம்பிரியரின் ஒரே மகன். வெட்டிக்காட்டின் சண்டியர். நல்ல திடகாத்திரமான உடம்பு, முருக்கு மீசை, ஒரு கையில் அருவாள், மறு கையில் சுளுக்கி சகிதமாக அண்ணன் வயலிலுள்ள களத்திற்கு காவலுக்கு செல்வதைப் பார்த்தால் மலையூர் மம்பட்டியான் மாதிரி இருப்பார். சிறுவர்களாகிய எங்களுக்கெல்லாம் திண்டாயுதம் அண்ணன் ஒரு பெரிய ஹீரோ!
சண்டியர் என்பதால் ஊரில் எல்லோரையும் வாடா, போடா, வாடி, போடி என்றுதான் கூப்பிடுவார். “எலேய்... சித்தப்பா... ஏட்டி பெரியம்மா” என்று மரியாதையுடன்தான் கூப்பிடுவார். சண்டியர் என்பதால் ஊரில் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். யார் சொன்னாலும் கேட்க மாட்டார். எங்கள் கிராமத்தின் நாட்டாமை பெரியப்பா வை.சி.ராமசாமி ஆலம்பிரியர் சொன்னால் கொஞ்சம் கேட்பார். பெரியப்பாவின் நெருங்கிய நண்பர் ”கடுப்படி” பெரியப்பாவிடம் வந்து “எலேய்... ராமா...நீ சொன்னாத்தாண்டா அவன் கேட்பான்..நீ அவன்கிட்ட சொல்லுடா” என்பார்.
அண்ணன் கம்பு (சிலம்பம்) சுற்றுவதில் கில்லாடி. மாட்டுப்பொங்கல் அன்று அண்ணன் விளையாட்டுத் திடலில் இறங்கி கம்பு சுற்றி சல்லார்ஸ் எடுத்து நின்றார் என்றால் அண்ணனை எதிர்த்து சிலம்பம் விளையாட பயந்து யாரும் வர மாட்டார்கள். எனக்கு தெரிந்து அண்ணனுடன் சிலம்பம் விளையாண்டவர்கள் இரண்டு பேர் மட்டும்தான். பெரியப்பா வை.சி.ராமசாமி ஆலம்பிரியர் மற்றும் தெக்கித்தெரு சின்னபுள்ள.
ஒருமுறை திண்டாயுதம் அண்ணன் மாட்டு வண்டியில் மரவள்ளி கிழங்கு விற்பதற்காக ராயபுரம் சென்றபோது அந்த ஊர் டீ கடையில் அண்ணனுக்கும் ஊர்க்காரர்களுக்கும் ஏற்பட்ட சண்டையில் கடையின் பக்கத்தில் கிடந்த கம்பை எடுத்து சுற்றி ஏழு பேரை அடித்து நொருக்கிவிட்டு ஓடி வந்த கதை சுற்று வட்டார கிராமங்களில் புகழ்பெற்ற சண்டியர் கதை. பிறகு பெரியப்பா சென்று பஞ்சாயத்து பேசி சமாதனம் செய்து வண்டியை ராயபுரத்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்தார்.
”எந்த பொருப்பும் இல்லாமல் சண்டியர்தனம் பண்ணிக்கிட்டு இருக்கியேயடா... வீட்டில் அரிசி இல்லை.. பருதிக்கோட்டை மில்லில் போய் அரிசி அரைச்சிகிட்டு வாடா” என்று ஒரு நாள் காலையில் திண்டாயுதம் அண்ணனை பெரியம்மா திட்டிவிட்டது. அந்த கோபத்தில் நேராக எங்கள் வீட்டிற்கு வந்தார். காலை மணி பத்து மணியிருக்கும். நான் அன்று பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலிருந்தேன். பெரியம்மா வாசலில் நெல் காய வைத்துக்கொண்டிருந்தார்.
“ஏட்டீ... சின்னம்மா... ஒங்க வண்டியும், மாட்டையும் கொடுடீ. பருத்திக்கோட்டைக்கு போய் நெல் அரைச்சிக்கிட்டு வர்ரேன்”
கொடுக்க முடியாது என்று சொன்னால் சண்டை போடுவானே என்று பெரியம்மா நினைத்துக்கொண்டு “எங்க மாட்டைதான்... யாரும் புடிக்க முடியாதுன்னு ஒனக்கு தெரியுமேடா... முடிஞ்சா ஓட்டிக்கிட்டு போடா” என்றார்.
“என்னடி... பெரிய கொட்டாப்புலி மாடு.. நான் ஓட்டிக்கிட்டு போறேன்டி” என்று சொல்லிவிட்டு வீட்டின் எதிர்புறம் உள்ள வைக்கோல் போரில் கட்டியிருந்த கொட்டாப்புலி காளைகளை நோக்கி சென்றார். நல்ல காலை வெயில்... அண்ணன் சென்று காளைகளைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்தவுடன் கொட்டாப்புலி காளைகள் ரெண்டும் அண்ணனை இழுத்துக்கொண்டு தண்ணீர் தொட்டியை நோக்கி ஓடி... தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடிக்க ஆரம்பித்தன.
“ஏட்டீ... சின்னம்மா.. என்னமோ.. பெரிய..கொட்டாபுலி மாடு.. புடிக்க முடியாதுன்ன... யாருகிட்டடி... திண்டாயுதம் ஆலம்பிரியன்கிட்டவா?”
தாகம் தீர தண்ணீர் குடித்து முடித்த கொட்டாப்புலி காளைகள் “யாருடா இது... நம்மள புடிச்சிக்ருக்கிற புது ஆளு” என்று பார்த்தன. கோபத்தின் உச்சிக்கு சென்ற சின்ன கொட்டாப்புலி அப்படியே இரண்டு அடிகள் பின் சென்று சீறி வந்து அண்ணனை முட்டி பக்கத்திலிருந்த கள்ளி செடிகள் நிறைந்த வேலியில் வீசியது. சற்றும் இதை எதிர்பார்க்காத அண்ணன் சுதாரித்து எழுந்து “ஏய்.. ஏய்” என்று அதட்டிக்கொண்டு எழுந்து நின்றார். இதைப்பார்த்த பெரியம்மா “அய்யோ...அய்யோ” என்று கத்த ஆரம்பித்துவிட்டார்.
“ஏய்..சின்னம்மா... ஏன்டீ இப்ப கத்துற?” என்று சொல்லிக்கொண்டு ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தார். இந்த முறை பெரிய கொட்டாப்புலி சீறிக்கொண்டு வந்து முட்டி மறுபடியும் அண்ணனை வேலியில் தள்ளியது.
“பாவி... பயலே... எந்திரிச்சு வீட்டுக்குள்ள ஓடிப்போடா...அய்யோ கொல்லப்போகுதே... கொல்லப்போகுதே.. எல்லாரும் ஓடி வாங்கலேன்” என்று கத்திய பெரியம்மாவின் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டு பொம்பளைங்க எல்லாம் ஓடி வந்து சத்தம் போடுகிறார்கள்.
அண்ணன் சண்டியர் என்பதால் தன்னுடைய வீரம் பழிக்கப்படும் என்ற காரணத்தால் எழுந்து ஓடாமல் அப்படியே வேலியை பிடித்தபடியே நிற்கிறார். அந்த சமயத்தில் வடக்கே நல்ல தண்ணீர் கிணத்தில் தண்ணீர் தூக்கிக்கொண்டு முச்சந்திக்கு வந்தார் அம்மா. அம்மாவைப் பார்த்த பெண்மனி ஒருவர் “ஏஏஏ... குன்டு... கொட்டாப்புலி மாடுகள் திண்டாயுதத்தை கொல்ல போவுதுடீ....” என்று சத்தம் போட்டார்.
தெருவில் நிற்கும் கொட்டாப்புலி மாடுகள்.. வேலியில் கிடக்கும் திண்டாயுதம் அண்ணன்... இதைப் தூரத்திலிருந்து பார்த்தவுடன் நிலைமையை சற்றென்று புரிந்துகொண்ட அம்மா “ஏஏஏ... கொட்டாபுலிகளா... இங்க வாங்கடா....” என்று சத்தம் போட்டார்.
அம்மாவின் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தன கொட்டாப்புலி காளைகள். தூரத்தில் அம்மாவைப் பார்த்தவுடன்.. காளைகள் ரெண்டும் அம்மாவை நோக்கி ஓடின. வலது கையில் வைத்திருந்த தண்ணீர் குடத்தை கீழே வைத்துவிட்டு கையால் இரண்டும் மாடுகளையும் தடவிக் கொடுத்தார். காளைகள் இரண்டும் அம்மாவின் இரு பக்கங்களிலும் நடந்து வர இடுப்பில் ஒரு குடத்துடனும், கையில் ஒரு குடத்துடனும் அம்மா ஜான்சிரானி மாதிரி நடந்து வந்த அந்த காட்சி இன்றும் என் மனக்கண்ணில் நிற்கிறது.
திண்டாயுதம் அண்ணன் எதுவும் சொல்லாமல் எழுந்து போய்விட்டார். அதற்கு பிறகு அண்ணன் மற்ற பெண்மணிகளையெல்லாம் வழக்கம்போல் “வாடி... போடி.” என்றுதான் கூப்பிட்டு வந்தார். அம்மாவை மட்டும் அவர் அப்படி கூப்பிட மாட்டார்!

கொ வா பிசாசுகள்

கொள்ளிவாய் பிசாசுகள்:-
=======================
நெல் அறுவடை முடிந்து நெல்லை களத்தில் பட்டறை போட்டிருந்த மாசி மாத காலம். அப்பா களத்தில் காவலுக்காக தனியாக களத்திலுள்ள ஒரு சிறு கொட்டகையில் இரவில் படுத்து தூங்கி கொண்டிருந்திருக்கிறார். நடு நிசி வேலை... கடும் பனி... நல்ல இருட்டு... “டேய்... டேய்...” என்று சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்து எழுகிறார். ”யாருடா... அது” என்று கேட்டுக்கொண்டே கொட்டகையிலிருந்து வெளியே வந்து பார்க்கிறார். வெளியில் யாரும் இல்லை. களத்தை சுற்றி ஒரு வலம் வந்து பார்த்து விட்டு யாரும் இல்லை என்பதை உறுதி செய்து விட்டு ஏதாவது பிரம்மையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே சிறுநீர் கழித்து விட்டு எழுந்து திரும்புகிறார். சரேலென்று வெண்ணிறத்தில் உருவம் ஒன்று வாயில் நெருப்புடன் அப்பாவைக் கடந்து பாய்ந்து செல்கிறது.
அப்பா ஒரு கணம் திகைத்து, பயத்த்தில் வெல வெலுத்துப் போய் நிக்கிறார். அந்த தீப்பந்தம் கண்ணிமைக்கும் நேரத்தில் களத்திற்கு கிழக்கே ஒரு அரை கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அய்யனார் கோவிலை சென்றடைகிறது. பயத்தில் என்ன செய்வதென்று திகைத்து... ஓடிப் போய் கொட்டகையின் உள்ளே உட்கார்ந்து விட்டார். சற்று ஆசுவாசப் படுத்திக்கொண்டு தைரியத்துடன் கையில் அருவாளை எடுத்துக்கொண்டு கொட்டகையை விட்டு வெளியே வந்து களத்தில் நின்று கொண்டு பார்க்கிறார். இப்போது அய்யனார் கோவிலில் ஐந்து தீப்பந்தங்கள் தெரிகிறது. ஐந்து தீப்பந்தங்களும் கோயிலைச் சுற்றி அங்கும் இங்கும் ஓடி வருகின்றன். “கொள்ளிவாய் பிசாசுகள்” தன்னையறியாமலே அப்பாவின் வாய் முனுமுனுக்கிறது.
கொள்ளிவாய் பிசாசுகள் ஆட்டம் போடுவதைப் பார்த்த அப்பாவிற்கு பயம்... பக்கத்து களத்தில் நெல் போட்டிருந்தவர்கள் எல்லாம் நெல்லை எடுத்து சென்று விட்டதால் யாரும் பக்கத்தில் இல்லை. கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் தொலைவிலுள்ள களத்தில் ராஜாபதி ஆலம்பிரியர் காவலுக்கு படுத்திருக்கிறார். ஆனால்... அரை கிலோ மீட்டர் தூரததை தனியாக நடந்து சென்று ராஜாபதியை கூப்பிடுவதற்கும் பயம். என்னதான் நடக்கிறது... பார்த்து விடலாம் என்று தைரியத்துடன், கையில் பிடித்த அருவாளுடன் களத்திலிருந்த பெஞ்சில் உட்கார்ந்து விட்டார் அப்பா.
ஒரு அரை மணி நேரம் கழித்து திடிரென்று அய்யனார் கோவிலில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த கொள்ளிவாய் பிசாசுகள் ஐந்தும் மெதுவாக அங்கிருந்து நகர ஆரம்பித்தன. கொஞ்சம் நேரம் கழித்துதான் அப்பாவுக்கு உறைத்தது... அந்த தீப்பந்தங்கள் அப்பாவை நோக்கி நகர்ந்து வருகின்றன என்று. பயத்தில் நடு நடுங்கி செய்வதறியாது திகைத்து கொட்டகைக்குள் புகுந்து போய் ஒரு ஒரத்தில் ஒடுங்கி உட்கார்ந்து விட்டார். சில நிமிடங்கள் கழித்து வெளியே “டேய்.. டேய்.” என்ற இரைச்சலுடன், பயங்கரமாக காற்று வீசுகிறது. சர்... சர்... சர்றென்று பாய்ந்து செல்லும் சத்தம் கேட்கிறது. சப்த நாடியும் ஒடுங்கி நடுக்கத்துடன் அப்பா இருக்கிறார்.
கொஞ்ச நேரம் கழித்து சத்தம் எல்லாம் அடங்கி... மயான அமைதி! தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அப்பா கொட்டடகையிலிருந்து வெளியே வந்து பார்க்கிறார். வெளியே யாரும் இல்லை... கிழக்கே அய்யனார் கோவில் பக்கம் திரும்பி பார்க்கிறார்... கொள்ளிவாய் பிசாசுகள் இருப்பதற்கான சுவடுகள் எதுவும் தெரியவில்லை. அப்பாடா... என்று பெரு மூச்சுடன் திரும்பி மேற்கு பக்கம் பார்த்தவர் அதிர்ந்து போனார்...
மேற்கே.. வெட்டிக்காடு-எட கீழையூர் கிராம எல்லையில் இருக்கும் அய்யனார் கோவிலில் ஐந்து தீப்பந்தங்களும் ஆடுவது தெரிந்தது. கிழக்கேயிருந்த அய்யனார் கோவிலிருந்து ஐந்து கொள்ளிவாய் பிசாசுகளும் அப்பாவைக் கடந்து மேற்கேயிருக்கும் அய்யனார் கோவிலுக்கு சென்று விட்டன. மறுபடியும் அப்பா களத்தில் பெஞ்சில் உட்கார்ந்து விட்டார். தீப்பந்தங்கள் அங்கும் இங்கும் ஓடி விளையாடுகின்றன. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து தீப்பந்தங்கள் நகர ஆரம்பித்தன. மெதுவாக அப்பாவை நோக்கி வருவதை உணர்ந்தவர் முன்பு போல் ஓடி கொட்டகையில் உட்கார்ந்து விட்டார். ஐந்து நிமிடங்கள்.. பத்து நிமிடங்கள்.. பதினைந்து நிமிடங்களாயிற்று... எந்தவொரு சத்தமும் கேட்கவில்லை. அப்பா கொட்டகையை விட்டு வெளியே வந்து பார்க்கிறார். மேற்கு அய்யனார் கோவிலில் தீப்பந்தங்களை காண வில்லை. ஆனால்... இப்போது தீப்பந்தங்கள் களத்திலிருந்து சற்று தொலைவில் வடக்கே இருக்கும் சுடுகாட்டில்!
சுடுகாடு சற்று பக்கத்திலிருந்ததால் தீப்பந்தங்கள் அங்கும் இங்கும் ஓடி விளையாடுவது அப்பாவிற்கு நன்றாக தெரிகிறது. அவ்வப்போது திடீரென்று “டேய்... டேய்” என்ற சத்தம் கேட்கிறது. என்னதான் இந்த கொள்ளிவாய் பிசாசுகள் செய்கிறது என்று பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டு அப்பா களத்தில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்.
அதிகாலை மணி சுமார் நான்கு இருக்கும்.. திடிரென்று சுடுகாட்டில் ஆடிக்கொண்டிருந்த ஐந்து தீப்பந்தங்களையும் காணவில்லை. அதன் பிறகு எந்த சத்தமும் கேட்கவில்லை. கொள்ளிவாய் பிசாசுகள் காற்றோடு காற்றாக மறைந்து விட்டன. பொழுது விடிய ஆரம்பித்தது. ஓரளவு பொழுது விடிந்தவுடன் ஓட்டமும் நடையுமாக வீட்டை நோக்கி ஓடி வந்து விட்டார் அப்பா! * * *பி.கு:
இந்த கதை உண்மையா அல்லது அப்பாவின் அதீத கற்பனையா என்று எனக்கு தெரியாது. ஆனால்... அப்பா இந்த கதையை பல முறை சொல்ல கேட்டிருக்கிறேன். நான் பயந்தாங்கொள்ளியாக விளங்கியதற்கு இந்த பேய்க்கதையும்.. இது போன்ற பல பேய்க்கதைகளும்தான் முக்கியமான காரணம். இதனால்... நான் இரவில் தனியாக எங்கும் செல்ல மாட்டேன். நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊரில் மின்சாரம் கிடையாது. அதனால் தெருவில் விளக்குகள் கிடையாது. நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போதுதான் கிராமத்த்திற்கு மின்சாரம் வந்தது. எட்டாம் வகுப்பு படிக்கும் போதுதான் வீட்டிற்கு மின்சாரம் வந்தது. அதுவரையில் இரவில் படிப்பது, எழுதுவது எல்லாம் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்தான்!
இளம் வயதில் மனதில் விதைக்கப்பட்ட பேய்கதைகளால் வளர்ந்து ஓரளவு பெரியவனான பிறகும் பயம் என்னை விட்டு போக வில்லை. இரவிலோ, மதிய வேளையில் தனியாக நடந்து செல்லும் போதோ அல்லது தனியாக மாடுகளையும், ஆடுகளையும் மேய்த்துக் கொண்டிருக்கும் போது உடனே மனக்கண் முன் தோன்றுவது சமீபத்தில் இறந்தவர்கள், அவர்களை பிணமாக தூக்கிக்கொண்டு செல்லும் காட்சி மற்றும் சமீபத்தில் கேள்விப்பட்ட பேய்க்கதைகள்தான்.
பத்தாம் வகுப்பு படிக்கும்போது டியூசனுக்கு செல்லும் போது ஒவ்வொரு நாளும் மரண பயம்தான். பத்தாம் வகுப்பில் ஆங்கில பாடத்திற்காக G.N (G.Natarajan) சாரிடம் டியூசன் வைத்திருந்தேன். ஆனால் டியூசன் நேரம் காலை ஆறு மணி. எங்கள் ஊர் வெட்டிக்காட்டிலிருந்து மன்னார்குடியிலிருக்கும் G.N சார் வீடு கிட்டத்தட்ட எட்டு கிலோ மீட்டர்கள். எனவே தினமும் காலை நான்கரை மனிக்கு எழுந்து குளித்து, சாப்பிட்டு விட்டு ஐந்தேகால் மணியளவில் சைக்கிளில் கிளம்பி மன்னார்குடியை நோக்கி அதிகாலை இருட்டில் பயத்துடன் பயணிப்பேன்.
மன்னார்குடியை நெருங்கும்போது குறுக்காற்று பாலத்திற்கு அருகிலிருக்கும் சுடுகாடு என்னுடைய பயம் சென்டர். அது கொஞ்சம் பிஸியான சுடுகாடு... எனவே, ரெகுலராக பிணம் எரிந்து கொண்டிருக்கும். சுடுகாட்டை நெருங்க... நெருங்க பயம் எகிற ஆரம்பிக்கும். சுடுகாட்டிற்கு கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் தொலைவில் சைக்கிளை நிறுத்தி விடுவேன்.. யாரவது பால்காரரோ அல்லது வேறு யாரோ சைக்கிளில் வந்தால் அவருடன் சேர்ந்து போய்விடுவேன். சில நாட்களில் ரொம்ப நேரம் காத்திருந்தும் யாரும் வர மாட்டார்கள். அந்த நாட்களில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு சைக்கிளை புயல் வேகத்தில் மிதித்து தெப்ப குளக்கரை வந்துதான் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்வேன்.
இப்படிப்பட்ட பயந்தாங்கொள்ளியான என்னை ஓரளவு தைரியசாலியாக்கியது இந்திரஜித் அண்ணன். பெரியப்பா மகன் இந்திரஜித் பெயருக்கேற்றார்போல் மிகப் பெரிய தைரியசாலி. இரவில் தன்னந்தனியாக எங்கும் செல்லும் துணிச்சல்காரர். சண்டை என்று வந்து விட்டால் முதல் அடி இந்திரஜித்துடையதாகத்தான் இருக்கும். தற்போது வெட்டிக்காட்டின் நாட்டாமை!
அண்ணன் இந்திரஜித்தும் நானும் நல்ல நண்பர்கள். தன் தம்பி இப்படிப்பட்ட பயந்தாங்கொள்ளியாக இருக்கிறானே என்று நினைத்து தைரியமாக இருப்பதற்கான பல ஆலோசனைகளை எனக்கு கூறுவார். இரவில் அண்ணன் தனியாக செல்லும் போது என்னையும் கூட்டி செல்வார். கொஞ்சம் கொஞ்சமாக பயம் தெளிய ஆரம்பித்தது. ஆனால்.. சுடுகாட்டு பயம் விலகவில்லை. இதை நன்றாக தெரிந்து வைத்திருந்த அண்ணன் யாரோ ஒருவர் இறந்த அடுத்த நாள் தெற்கே குளத்திற்கு போயிட்டு வரலாம் வாடா என்று இரவு பதினோரு மணிக்கு கூப்பிட்டார். சரியென்று அண்ணனுடன் கிளம்பினேன். பள்ளிக்கூடத்தைக் கடந்து தெற்கே செல்லும் ரொட்டில் நடந்து போகிறோம். தெற்கே சிறிது தூரம் சென்று மேற்கே திரும்பும் குளத்திற்கான பாதையில் திரும்பாமல் அண்ணன் சுடுகாட்டை நோக்கி செல்லும் பாதையில் நடக்க ஆரம்பித்தார். எனக்கு பயத்தில் உடம்பு நடுங்க ஆரம்பித்து விட்டது.
அண்ணன் என்னைப்பார்து “உன்னோட பயத்தை போக்கத்தான் நான் குளத்திற்கு போவலாம்னு சொல்லி கூப்பிட்டு வந்தேன்டா.. பேய்.. பிசாசெல்லாம்... கட்டுக்கதைகள்.. நேரா இப்ப சுடுகாட்டுக்கே போய் நேத்து செத்து போனவர் பேயா இருக்கிறார்ன்னு பார்த்துடலாமுன்னு” என்று சொல்லிக்கொண்டே என் கையைப் பிடித்து அழைத்து (இழுத்து) சென்றார். இருட்டில் சுடுகாட்டில் மாலைகள் மற்ற பொருட்கள் சிதறி கிடக்கின்றன். “பார்டா.. எங்கடா பேய்.. எங்கடா பிசாசு” என்று சுடுகாட்டை சுற்றிக் காட்டுகிறார். பிறகு எரிக்கப்பட்ட பிணத்தின் எலும்புகளையும், மண்டை ஓட்யையும் காண்பிக்கிறார். அண்ணணின் கையைப் பிடித்துக்கொண்டே நிற்கிறேன்... பார்க்கிறேன். பேய்.. பிசாசு இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.. பயம் கொஞ்சம் தெளிய.. அண்ணனின் கையை விட்டு விட்டேன். பயத்தையும் விட்டு விட்டேன்!
* * *