Monday, 2 July 2018

அதகளம்

ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு. அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க... 'இது ஒரு ஏடாகூமான ஸ்கூலு பார்த்து ட்ரீட் பண்ணுங்க'ன்னு அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்...
முதல்ல ஒரு வகுப்புக்குள்ள நுழைஞ்சாரு... உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க...
சரி... எடுத்தவுடனேயே எதாவது கேள்வி கேக்க வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி...
"உன் பேர் சொல்லு"
"பழனி"
"உன் அப்பா பேரு" "பழனியப்பா",
அடுத்தப் பையன எழுப்பி ,
"உன் பேர் சொல்லு" "மாரி"
"உன் அப்பா பேரு" "மாரியப்பா..."
அவருக்கு கொஞ்சம் டவுட் வருது
இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி...
"உன் பேர் சொல்லு"
"பிச்சை"
"உன் அப்பா பேரு"
"பிச்சையப்பா"
இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு, சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்க அப்படினு புரிஞ்சுருச்சு
அடுத்தப் பையன எழுப்பினாரு...
"முதல்ல நீ உன் அப்பா பேரைச் சொல்லு..." மனசுக்குள்ள ஒரு பெருமிதம்
"ஜான்"
"இப்பொ உன் பேரைச் சொல்லு"
"ஜான்சன்"
கொஞ்சமா டென்சன் ஆயிடுச்சி...
அடுத்த பையன எழுப்பி,
"உன் அப்பா பேர சொல்லு..."
"டேவிட்.."
"உன் பேரு...?"
"டேவிட்சன்" கொலவெறி ஆயிட்டாரு
கொஞ்ச நேரம் நிதானமா யோசிச்சி,
அடுத்த பையன எழுப்பி,
"உன் தாத்தா பேர சொல்லு...
"சார்... அப்பாவோட தாத்தாவா?, அம்மாவோட தாத்தாவா?"
ஆய்வாளர் பல்ல கடிச்சிக்கிட்டு
"அப்பாவோட தாத்தா..."ன்னாரு
"வீரமணி",
"சரி அப்பா பேரு?",
"வீ.ரமணி",
"உன் பேரு?
"வீ.ர.மணி...
அப்புறம் என்ன... !!!! அதுக்கு அப்பறம் அந்த பள்ளிக்கு ஆய்வாளருன்னு ஒருத்தருமே எட்டி பார்க்குறதில்லியாம்...

Sunday, 1 July 2018

வலைப்பூ

“தலைவர்க்கு சொந்தமா வலைப்பூ(BLOGSPOT) ஆரம்பிக்கலாமா-னு கேட்டது தப்பாப் போச்சு?”
‘’ஏன்?”
பூ லேடீஸ் வச்சுக்கறது, வலை மீனவர்கள் வச்சுக்கறது எனக்கு எதுக்கு இதெல்லாம்? அப்படீனுட்டாராம்”

பழையமுது

இன்னிக்கு வீரிய ஒட்டு ரக நெல் வகைகள் ஏராளம் ...அதில் கிடைக்கும் அரிசியில் ஒரு சத்தும் கிடையாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி / வெள்ளிடைமலை
உண்மை ...
நான் பள்ளி பருவத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பதினொன்று வரை (1975-78).....மலையாள / இரத்தின சம்பா எனும் சிவப்பு அரிசி ..இது மாணிக்கக்கல் போல மினுங்கும் அழகை கண்டால் மட்டும் தான் புரியும் ....ஒரு கைப்பிடி அள்ளி வாயில் வைத்து அரைத்தால் உமிழ்நீர் ஊற்று போல சுரக்கும்...கடைவாயில் பால் வழியும்..அருமையான அனுபவம்...உங்களுக்கு உண்டா ?
இந்த அரிசி சாதமாய் பொங்கி வேகும்போது மணம் நெஞ்சை அள்ளும்...அதன் வடிதண்ணி கஞ்சி அமிர்தத்தை மிஞ்சும் சுவை ...எங்கள் வீட்டில் ஒரு துண்டு கருப்பட்டி தந்து அதைக் கடித்து இதைக்குடித்து வளர்ந்தவர்கள் நாங்கள் ...
நண்பர்கள் சிலர் இதைப்பார்த்து என்னலே மாடு குடிக்கும் கழனித் தண்ணிய குடிக்கிதிய..ம்பாங்க ...அவங்க வீடுகளில் இதைக் குடிப்பதில்லையாம் ....எல்லாப்பயலும் இன்னிக்கு சொல்றான் ...உன்னோட ஆரோக்கிய ரகசியம் இப்பதான்ல புரியுதுன்னு ....
அப்புறம் முந்தின நாள் பழையமுதில் மோர் விட்டு பிசைந்து கை மணக்க சாப்பிட்ட காலம் இனி வராது...
தொட்டுக்க அவித்த மிளகாய் , வறுத்த மோர் மிளகாய் , நாரத்தை ஊறுகாய் , புளிக்கலவை...அதெல்லாம் சொர்க்கம் ....
இன்றைக்கும் ஞாயிறுகளில் உளுந்தங்களி , சிறு பயிறு கஞ்சிகூட தொட்டுக்க பிரண்டைத் துவையல் , கோவைக்காய் மசியல் , கத்திரிக்காய் புளிக்காய்ச்சல்...அவ்வப்போது சாப்பிடும் வழக்கம் உண்டு .....
ஆனால் அந்த பழைய அமிர்தம் தோற்றுப்போகும் சுவை ...போனது ....போனதே !!!!!கை மணக்க வாய் மணக்க வயிறு குளிர ...என்னா அமுதம் !!!!!பாலும் தேனும் கலந்த பேரமுதம் !!!!!

பக்குவம்



பக்குவமடையும்போதுதான் சில விஷயங்கள் புரியும்.
முப்பது ரூபாய் கெடிகாரமும் சரி, மூன்று லட்சம் ரூபாய் கெடிகாரமும் சரி.. ஒரே நேரம்தான் காட்டும்.
செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் மணிபர்சில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான்.
நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும் 30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான்.
ஆகவே..உங்களைச் சுற்றிலும் இருக்கும் அனைவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி!

இடி மின்னல்

ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள்.
ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது.
பயந்து போன அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர்.
வெகுநேரமாகியும் மின்னல் வெட்டுவதும் இடி இடிப்பதும் நிற்கவில்லை. அவற்றின் உக்கிரம் வேறு அதிகரித்துக் கொண்டே போனது.
பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் 'நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான் கடவுள் இடியையும் மின்னலையும் ஏவியிருக்கிறார். அந்தப் பாவியை வெளியே அனுப்பிவிட்டால் மற்றவர்கள் பிழைத்துக் கொள்ளலாம்' என்று சொன்னான்.
மற்றவர்கள் இதனை ஆமோதித்தார்கள்.
இத்தனை பேரில் அந்தப் பாவியை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று விவாதம் நடந்தது. விவாதத்தின் முடிவில் தீர்ப்பைக் கடவுளிடமே விட்டு விடுவது என்று முடிவாயிற்று. அதன் படி அனைவரும் தத்தம் தொப்பிகளைக் கையில் பிடித்துக் கொண்டு தொப்பியை மழையில் நீட்டுவது என்று முடிவாயிற்று.
அனைவரும் தத்தம் தொப்பிகளை மழையில் நீட்டினர்.
பயங்கரமான இடி முழக்கத்துடன் ஒரு மின்னல் வெட்டியது. அதில் ஒரு விவசாயியின் தொப்பி மட்டும் எரிந்து சாம்பலாகியது.
மற்ற ஒன்பது விவசாயிகளும் "இவன்தான் பாவி. இவனை முதலில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு" என்று கத்திக் கொண்டே அவன் மேல் பாய்ந்தனர்.
அந்த விவசாயி கெஞ்சிக் கதறி தான் அப்பாவி என்று மன்றாடினான். மற்றவர் யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவனை பலவந்தமாகக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினர்.
அவன் கதறிக் கொண்டே மழையில் ஒடினான்.
அப்போது அதி உக்கிரமாக ஒரு மின்னல் தாக்கி இடி இடித்தது. ஒடிக்கொண்டிருந்த விவசாயி அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான். சற்று நேரத்தில் நிலைக்குத் திரும்பி மண்டபத்தைத் திரும்பிப் பார்த்தான்.
மண்டபத்தில் இடி விழுந்து நொறுங்கிக் கிடந்தது. ஒரு புண்ணியவானின் புண்ணிய பலத்தில் தப்பித்திருந்த ஒன்பது விவசாயிகளும் அவனை வெளியே தள்ளிப் பாதுகாப்பை இழந்து பரிதாபமாகக் கருகிச் செத்துப் போய் விட்டனர்.

பொய் எந்திரம்

News Feed

கழுத்தில் கட்டி இருந்த டை வெயிலுக்கு கசகசத்தது. மானேஜிங் டைரக்டர் என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்த அந்த அறைக்குள் நுழைந்தேன். சற்று பருமனாக இருந்த அந்த நடுத்தர வயதுக்காரர் என்னை பார்த்து புன்னகைத்தார்.
“வாங்க அசோக். உங்களுக்காகத்தான் வெயிட் பண்றேன்”
“சாரி சார். கொஞ்சம் லேட் ஆகிடிச்சு”
“அது பரவாயில்ல. நீங்க பேப்பர்ல குடுத்த விளம்பரம் உண்மையா? நெஜமாவே உங்க கிட்ட அந்த மெசின் இருக்கா?”
“என்ன சார் நீங்க. மெசின் இல்லாமலா விளம்பரம் குடுப்போம்”
“அதுக்கு இல்ல அசோக். நான் இன்டர்நெட் முழுக்க தேடிட்டேன். அப்படி மிசின் எதுவும் இருக்குற மாதிரி தெரியலை. நீங்க இந்த மெசின் பத்தி கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா?”
“அதுக்குதான சார் வந்திருக்கேன். நான் பேப்பர்ல என்ன விளம்பரம் குடுத்து இருந்தோம்னு நியாபகம் இருக்கா?”
“பொய் சொன்னா கண்டுபிடிக்கிற புதுமையான மிசின் விற்பனைக்கு இருக்கு. தேவையானவர்கள் தொடர்பு கொள்ளவும்னு போட்டு இருந்தது ”
“ரைட். அந்த இப்போ நான் அந்த மெசின் பத்தி சொல்றேன். அதுக்கு முன்னாடி இப்போ நான் சொல்லப்போறது ரொம்ப ரகசியம். நீங்க இந்த ரகசியத்தை வெளிய சொல்லமாட்டேன்னு உத்தரவாதம் குடுக்கணும். நான் உங்களைப்பத்தி நிறைய கேள்விப்பட்டு இருக்கேன். நீங்க ரொம்ப நம்பிக்கையானவர்னு சொல்லுவாங்க. அந்த நம்பிக்கையிலதான் நான் உங்களைப் பார்க்கவே வந்தேன்”
“என்னங்க நீங்க. ரொம்ப சஸ்பென்ஸ் குடுக்குறீங்க. நான் நீங்க சொல்றதை வெளிய சொல்ல மாட்டேன். நீங்க விசயத்தை சொல்லுங்க”
“நான் இப்போ விக்குற மெசின் அமெரிக்க உளவுத்துறை விசாரணை கைதிகள் கிட்ட பயன்படுத்துறது. அந்த மிசின் எப்படியோ என் கைல வந்து சேர்ந்திருச்சு. என்கிட்ட இருக்கிறது இந்த ஒரு பீஸ் மட்டும்தான்”
“எப்படியோன்னா? திருட்டுத்தனமாவா?”
“அதெல்லாம் கேக்காதீங்க சார் ப்ளீஸ். இந்த மிசினோட மதிப்பு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய். ஆனா நீங்க வாங்க முடிவு செஞ்சா நான் பத்து லட்சத்துக்கு தரேன்”
“அசோக். எனக்கு பணம் பிரச்சினையே இல்ல. இந்த ஆபீஸ்ல அறுபது பேர் வேலை பாக்குறாங்க. ஆனா இதுல யாரை நம்புறதுன்னு எனக்கு தெரியல. என்னை யாருமே உண்மையா இல்லைன்னு எனக்கு ஒரு சந்தேகம்”
“கவலைய விடுங்க சார். இந்த மிசின் மட்டும் வாங்கி யூஸ் செஞ்சு பாருங்க. யாரு உங்ககிட்ட உண்மைய பேசுறா யாரு பொய் பேசுறான்னு சுலபமா கண்டுபிடிக்கலாம். நம்ம ஊரு போலீஸ் பயன்படுத்துற மிசின் மாதிரி இல்ல இது .இந்த மிசின் எப்பிடி வொர்க் ஆகுதுன்னு காட்டுறேன் பாருங்க ”
சொல்லிவிட்டு அறைக்கு வெளியே பார்த்தேன். ஒரு பெண் வேர்க்க விறுவிறுக்க அந்த அலுவலகத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்.
“யாரு சார் அது. உங்க ஏம்ப்ளாயியா”
“ஆமா”
“9 மணிக்கு வர்ற ஆபீஸ்க்கு பத்து மணிக்கு வராங்க”
“அந்த பொண்ணு அடிக்கடி லேட்டா வரும். கேட்டா அப்பாவை கூட்டிட்டு ஹாஸ்பிடல் போனேன்னு சொல்லும்”
“அந்த பொண்ணை உள்ளே கூப்பிடுங்க”
அவர் தனதுமேஜையில் இருந்த தொலைப்பேசியை எடுத்து தட்டினார்.
“ரேகா. கொஞ்சம் உள்ளே வாங்க”
சில வினாடிகள் கழித்து அந்த பெண் உள்ளே வந்தாள். என்னை பார்த்ததும் சற்று தயங்கினாள்.
“ஹலோ மேடம். உங்ககிட்ட என்ன ஒரு கேள்வி கேக்க சொன்னார் உங்க MD” என்றேன்
“கேளுங்க சார்” என்றாள் தயக்கம் மாறாமல்.
நான் என்னுடைய கைப்பையை திறந்தேன். அதனுள் இருந்த பெட்டியை எடுத்து சூயிங்கம் வடிவில் இருந்த அந்த கருவியை சகல மரியாதையுடன் திறந்தேன்.
“கொஞ்சம் இந்த மிசினை உங்க நாக்குக்கு அடியில வச்சுக்கிட்டு பதில் சொல்லமுடியுமா?” என்றேன்
“என்ன சார் இது?”
“பயப்படாதீங்க. இது ஒன்னும் செய்யாது. சும்மா வச்சுக்கோங்க”
அவள் MDயை பார்த்தாள்.
“சார் சொல்ற மாதிரி செய்மா.”
சில நொடி தயக்கத்துக்குப்பின் அதை நாக்கின் அடியில் சொருகிக் கொண்டாள்.
“சொல்லுங்க மேடம். ஏன் லேட்?” என்றேன்.
“பீப் பீப் பீப் பீப் பீப்”
MD என்னை வியப்புடன் பார்த்தார். அந்த பெண் தனது தொண்டையை செருமிக் கொண்டு மீண்டும் பேச முயன்றாள்.
“பீப் பீப் பீப் பீப் பீப்”
“சார். என்ன சார் இது. குரல் வெளிய வர மாட்டேங்குது” என்றாள் அந்த ரேகா. இப்போது அவள் சொன்னது இப்போது தெளிவாகக் கேட்டது.
“மேடம். இப்போ உங்க வாய்ல இருக்கிறது அமெரிக்கன் மேட் லை டிடக்டர் மிசின். நீங்க உண்மை பேசாட்டி உங்க குரல் வெளிய வராது.”
அவள் மனதுக்குள் அதிர்வது தெளிவாகத் தெரிந்தது
“சாரி சார். நான் உண்மைய சொல்லிடுறேன்நான் நேத்து நைட் ஷோ என்னோட பாய் பிரண்ட் கூட போனேன். காலைல அசந்து தூங்கிட்டேன்”
“ஓகே. இப்போ வாய்ல இருக்குற அந்த மிசினை எடுத்து என்கிட்ட குடுத்துட்டு போய் உங்க வேலைய பாருங்க”
அவள் வெளியே சென்றாள்.
“அசோக். என்னால நம்பவே முடியல. அப்போ இந்த மிசின் வாய்ல இருக்கும்போது பீப் சவுண்ட்தான் வருமா?”
“இன்னும் சந்தேகமா. உங்க ப்யூன் வெளியே இருக்கார் பாருங்க. அவரை கூப்பிடுங்க”
அவர் கையில் இருந்த பஸ்ஸரை அழுத்தினார். அந்த முதிய வயது ப்யூன் காக்கிசட்டையில் உள்ளே ஓடி வந்தார்.
“சொல்லுங்க சார்”
“நான் உங்க சாரோட சொந்தக்கார பையன். நீங்க சாரை பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?”
“அவர் ஒரு மகாராசர். தங்கமான குணம். இவரை மாதிரி ஆளுங்க இருக்குரதாலதான்”
“போதும் போதும். இப்போ இந்த மிசினை உங்க நாக்குக்கு கீழ வச்சுக்கிட்டு இதையே திரும்ப சொல்லுங்க”
“பீப் பீப் பீப்”
“என்ன ஆச்சு ஐயா? குரலே வரல என்று கூறி சிரித்தேன்.
“என்னனு தெரியலையே” என்று இப்போது அவர் தொண்டையை பிடித்துக்கொண்டு கூறியது தெளிவாக கேட்டது.
“ஐயா. உங்க வாய்ல இருக்கிறது பொய் கண்டுபிடிக்கிற மிசின். நீங்க இப்போ உங்க ஐயாவை பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு உண்மைய சொல்லுங்க”
“வேண்டாம் சார்”
“சும்மா சொல்லுங்க. உங்களுக்கு இதை தவிர வேற வழி இல்ல. சொல்லுங்க”
”.....மனுசனா அவன். சரியான .....,........ நாயி. ....... பய”
“போதும் போதும்” என்றேன். MDயின் முகம் சுருங்கியது.
“ராமசாமி. நீங்க போய் செட்டில்மெண்ட் வாங்கிக்கோங்க. இனிமே நீங்க வேலைக்கு வர வேண்டாம்” என்றார்.
ராமசாமி எதுவும் சொல்ல முடியாமல் வெளியேறினார்.
“ராமசாமி. வாய்ல இருக்குறதை என்கிட்ட குடுத்துட்டுப் போங்க” என்று வாங்கிக் கொண்டேன்.
“என்ன சார். டெமோ போதுமா?” என்றேன்.
“போதும். இந்த மிசினை நானே வாங்கிக்குறேன். பணத்தை வாங்கிக்கோங்க ” என்றார்.
மறுநாள் இரவு கடற்கரையில் நானும் ரேகாவும் பேசிக் கொண்டிருந்தோம்.
“எப்படியோ அந்த ஆளை ஏமாத்தி பணம் பிடுங்கிட்ட. அந்த கிறுக்குப்பய ஆபீஸ்ல யாரு கிட்டப் பேசினாலும் இதை வாய்ல போட சொல்லிட்டுதான் பேசுறான். அது சரி அது எப்படிடா அந்த பீப் சவுண்ட் எப்போ வரணும், வரக் கூடாதுன்னு கண்ட்ரோல் பண்ண?”
“அது ரொம்ப சுலபம். இந்த ரிமோட் கண்ட்ரோல் பிரஸ் பண்ணா அந்த மிசின்ல சவுண்ட் வரும். டெமோ குடுத்தப்போ நான் தேவைப்படும்போதெல்லாம் பிரஸ் பண்ணேன். அவ்ளோதான்”
“அப்போ இனிமே அதுல பீப் சவுண்ட் வராதா?”
“வராது.”
“ஆனா அநியாயமா அந்த ராமசாமியை வேலையை விட்டு தூக்கிட்டாரே?”
“நீ வேற. ராமசாமி கூட நான் போன வாரமே பேசிட்டுதான் இந்த நாடகமே நடத்துனேன். பத்து லட்சத்துல அவருக்கும் பங்கு இருக்கு. அது மட்டும் இல்ல. அந்த MDயை ஆசை தீர திட்டியும் தீர்த்துட்டார்”
“பக்கா கிரிமினல்டா நீ. நானும் அடுத்த மாசம் வேலைய விட்டுடுவேன். அப்புறம் நாம கல்யாணம் செஞ்சுக்கலாம்”
“சரி செல்லம்”
“ஆனா நாம அவர எமாத்தலையா?”
“ஏன் ஏமாத்துனோம்னு நினைக்கிற. இனிமே எல்லாரும் அவர் கிட்ட பொய் சொல்றாங்கன்னு குழம்பாம அவர் மனசு நிம்மதியா வாழ்வார்ல”
“சரிதான். செய்யுறதும் செஞ்சுட்டு எதாச்சும் சமாதானம் சொல்றது” என்றாள் ரேகா.

மினி ஜோக்

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.
ஆனா,
ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?
நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது!!!