Monday, 2 April 2018

பக்தி.....

‘இன்றும் ஒன்றுகூட தேறாது போலிருக்கிறதே’ என்றான் முத்தண்ணன் ஏக்கத்துடன்.
 
‘கடலம்மாவிற்கு நம் பரதவர்குலம் மீது ஏனிந்த கோபமோ தெரியவில்லை’ என்று பதில் சொல்லி தன் மைத்துனனைத் தேற்ற முயன்றான் களமன்.
 
அந்த பெரிய மரக்கலம் ஆர்ப்பரிக்கும் வங்கக்கடலில் இரண்டு நாட்களாக ஊசலாடிக்கொண்டிருந்தது. இருப்பினும் இன்னும் ஒரு மீனைக்கூட  பிடிக்கமுடியவில்லை.
 
‘என்ன சிந்தனை முத்தண்ணா?’
 
‘எல்லாம் உன் தமக்கையை எண்ணித்தான்.’
 
‘அவளுக்கென்ன? பரதவர்களில் வலிமையான உமக்கல்லவா மணம்புரிந்து கொடுத்துள்ளோம். பின் என்ன கவலை?’
 
‘நீ அறியாததா? இக்கடல்மாதா தொடர்ந்து நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள். பாவம் என்னவள்; பசிப்பிணி எனும் பாவியால் சூழப்பட்டிருப்பாள். ’
 
‘இது இறைவனின் திருவிளையாடலேயன்றி வேறெண்ண சொல்ல?’
 
‘நம் தலைவர் ஏதோ குற்றம் புரிந்திருப்பாரென்று நினைக்கிறேன்’
 
‘என்ன மூடத்தனமிது? நம் பரதவக்குலத்தலைவர் மீது பழிசுமத்தினால் உண்ண ஒருபருக்கை நெல்லும் கிடைக்காது முத்தண்ணா’
 
‘இப்போது மட்டும் இங்கே என்ன வாழ்கிறது?’
 
‘சரி வா. வீசிய வலையை எடுக்கலாம். ’ என்றவாறே இருவரும் அங்கிருந்து கலத்தின் ஓரத்தினை அடைந்தனர் அவர்களிருவரும் சோழமண்டலத்தின் ஆளுகைக்குட்பட்ட நாகை மாவட்டத்தின் தென்கோடி முனையிலிருக்கும் சிற்றூரான முளைப்பாடியில் வசித்துவரும் பரதவ குலத்தோர். சில நாட்களுக்கு முன் வரை கடல்தாயின் அருளால் அளவிடற்கரிய மீன்கள் பிடித்து பசியெனும் சொல்லின் பொருளறியாது சிறப்பாக வாழ்ந்துவந்த குடியினர். ஆனால் இப்போதோ ஒருவேளை உணவிற்கு வழியில்லாமல் பழங்கருவாடுகளையும் வீட்டிலுள்ள பெண்டுகள், குழந்தைகளின் நகைகளையும் விற்று வயிற்றை நிரப்பிவந்தனர். ஏறத்தாழ அச்செல்வமும் தீர்ந்து போய் அடுத்தவேளை உணவிற்கு என்ன செய்வதென்று அச்சத்துடன் வாழ்ந்துவருகிறார்கள். தம் வாணிகம் சார்ந்த மருதநிலத்தில் வாழும் உற்றார், உறவினரிடம் கடன் வாங்கவும் அவர்களுக்கு மனம் வரவில்லை. இயற்கையின் அதிசயம் அவ்வப்போது கெடுதலாகவும் முடியும் என்பதை அவர்களுக்கு உணர்த்தும்படியாக கடந்த ஒருமாத காலம் இருந்தது.
 
 
கடல் தாய் இவ்வளவிற்கும் எதுவும் தராமல் விடவில்லை. ஆரம்பத்தில் பல மீன்களிலிருந்து சிலவாக்கி தற்போது தினமும் ஒரே ஒரு பெரியமீன் மட்டும் எண்ணித் தருகிறாள். அவ்வொரு மீனையும் அதிதீவிர சிவபக்தனாகிய முளைப்பாடி பரதவர்களின் தலைவன் கடலில் விட்டுவிடுகிறான். ஏதோ அம்மீனை வைத்து தாணுன்னா விட்டாலும் தன் குழந்தைகளாவது உண்டு பசியாறும் என்றெண்ணிய அங்கிருந்த குடும்பங்களுக்கு இது பேரடியாக இருந்தது.
 
வலையில் ஏதோ சிக்கியது போலுணர்ந்தான் முத்தண்ணா.
 
‘மைத்துனனே! ஏதோ பெரும் திமிங்கலம் சிக்கியுள்ளது என எண்ணுகிறேன்’ என்று கூறிய முத்தண்ணாவும் அவன் மைத்துனனும் சிரமப்பட்டு வலையை இழுத்தார்கள். இருவரும் வலையில் துடித்துக்கொண்டிருந்த அந்த மீனைப் பார்த்து அதிசயித்து நின்றனர். தங்கள் வாழ்நாளில் அப்படியொரு மீனை அவர்கள் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம். தங்கத்தால் ஆன உடலில் ரத்தினங்களால் ஆன செதில்களும், மாணிக்கத்தால் ஆகிய கண்ணும், வைர, வைடூரியத்தால் ஆன வாலுமென அது ஒரு புதையலாய்க் காட்சியளித்தது.
 
‘முத்தண்ணா! இவ்வதிசயத்தைப் பார்த்தாயா? யாருக்கும் கிடைக்காத பெரும்பேறு நமக்கு கிட்டியுள்ளது.’
 
‘ஆம் மைத்துனனே! இதைக் கொண்டு சென்று புகாரில் விற்றால் பெரும்பொருள் கிடைக்கும். அதைக்கொண்டு நம் குலத்தோர் இன்னல்களைத் தீர்த்துவிடலாம்’
 
‘ஏன் இப்படி உன் சிந்தனை மாறிப்போகிறது? கடலில் கிடைக்கும் பொருளை நம் தலைவனிடம் சமர்பிக்கவேண்டுமென்று தெரியாதா உனக்கு?’
 
‘சொல்வதைக் கேள் களமா. நம் தலைவரிடம் இதைக்கொண்டு சென்றால் இதையும் கடலில் விட்டுவிட்டு, சிவபெருமானே உனையும் உணர்வேன் நன்காய் எனப்பாடத்துவங்கி விடுவார். என் பேச்சைக் கேள். பொருளீட்டினால் ஒழிய உன் தமக்கையையும் அவளின் மகனையும் இன்றிரவு பசியினில் இருந்து காக்க முடியாது.’
 
‘உடல் வாடினாலும் பசிமீறினாலும் வழிமாறாமலே வாழ்ந்திடுவோம் முத்தண்ணா.’
 
அதற்குமேல் முத்தண்ணாவினால் பேச முடியாமல் போய்விட அக்கலம் கரையை நோக்கித் திரும்பியது. அந்த நவரத்தின மீனைப் பார்த்தவாறே திக்கில் ஆழ்ந்திருந்த முத்தண்ணன், தன் மைத்துனன் களபனிடம் கேட்டான்.
 
‘ஒருவேளை இதையும் நம் தலைவன் கடலில் விட்டுவிட்டால்?’
 
‘அவரை வெட்டி கடல்மீன்களுக்கு உணவாய்ப்போடவும் அஞ்சேன்’ என்றான் களபன்.
 
கரை வந்தடைந்த இருவரையும் எதிர்பார்த்து அவர்களின் குடும்பம் காத்திருந்தது. அவர்கள் இருவரும் ஒருசேரத் தூக்கிவந்த நவரத்தின மீனைப் பார்த்ததும் அங்கிருந்த நெய்தல்நில பரதவர்கள் அதிசயத்து நின்றனர். ஊரே ஒன்று கூடியது.
 
‘எம்மக்களே! இம்மீனைப் புகார்ப்பட்டிணத்திலோ மதுரை அறுவை வீதியிலேயோ விற்றால் பெரும்பொருள் கிடைக்கும். அப்பொருள்கொண்டு நம் துயர் தீர்த்துவிடலாம். ஆனால்,’ என்றவாறே இழுத்தான். அவன் இழுத்த ஆனாலின் அர்த்தம் அங்கிருப்பவர்களுக்கும் தெரியும்.
 
‘அப்படியாகாது முத்தண்ணா. நம் தலைவரிடம் பேசிப்பார்க்கலாம். ஏற்றுக்கொள்ளவில்லையெனில் நாம் ஒருசேர அவரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கலாம். வாயினால் அல்ல; கையினால்’ என்றான் கூட்டத்திலிருந்த ஒரு இளைஞன்.
 
அக்கூட்டத்திலுள்ளோர் அம்முடிவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டு பரதவக்குடித் தலைவனின் தாழைமடல் குடிலை அடைந்தனர்.
 
‘பரதவக்குடி காக்கும் பெருமானே! வெளியே வரவும்.’
 
உள்ளேயிருந்து அமைதியே உருவெடுத்த சிவபக்தனும் பெரும் வீரனுமான தலைவன் வெளியே வந்தான். கடந்த சில நாட்களாக உண்ணாமல் இருந்ததால் அவனின் முகம் வாடியிருந்தாலும் அம்முகத்தின்வழி ஒழுகும் கருணை ஒளி, அன்பைப் போதிப்பதாய் இருந்தது. வெளியே நின்றவர்கள் அவனிடம் நடந்ததைக் கூறி மீனை ஒப்படைத்து அதைவைத்து தங்கள் துன்பத்தை நீக்கவேண்டும் என்றும் வேண்டினர். அம்மீனைப் பார்த்த தலைவன் ,
 
‘சிறந்வையெல்லாம் தென்னாடுடைய எம்பெருமானுக்கே அர்ப்பணம்’ என்று கூறிவிட்டு நேராய் கடலில் சென்று அதை விட்டான். சிறையிலிருந்து விடுபட்ட கைதிபோல் மிகவேகமாக கடலில் சென்று அம்மீன் மறைந்தது. குழுமியிருந்த கூட்டத்தினரின் முகத்தில் கோபம் கொப்பளிக்க, மக்கள் அனைவரும் ஒருசேர அத்தலைவனை நோக்கி வந்தனர். அப்போது வானில் பிரகாசமான ஒளி அத்தலைவன் மீது பரவ, அசரீரி ‘அதிபத்தா’ என்றது. கூடியிருந்தவர்களின் வயிறும், மனமும் நிறைந்தது.

பேய் !!!!!

அமாவாசை. வெள்ளிக்கிழமை. இரவு. மண்டை ஓடு.
இந்த நான்கு வார்த்தைகளைக் கொண்டு இது ஒரு பயங்கரமான பேய் கதை என்று நீங்கள் ஊகித்திருந்தால்........ நான் உங்களுக்குத் தமிழ் வாசிக்கத்தெரியும் என்று மட்டும் ஒத்துக்கொள்கிறேன். பத்தில் எட்டு பேய்க்கதைகள் இப்படித்தானே துவங்குகின்றன. நாமும் பழகின வழியிலேயே போவோம். அப்போதுதான் அதிக பயம் இருக்காது. 

உங்களுக்குப் பேய் கதைகள் மேல் நம்பிக்கை இருக்கிறதா ? சும்மாதான் கேட்டேன். தொடர்ந்து படியுங்கள். 

குப்பையோடு குப்பையாக இருளில் அந்த மண்டை ஓடு விகாரமாக வாய் பிளந்து கிடந்தது. கட்டடம் கட்ட அஸ்திவாரம் தோண்டின போது தட்டுப்பட்டதாம். அதன் உடலில் இருந்து பிரித்துக் குப்பையில் வீசிவிட்டிருக்கிறார்கள். சுடுகாட்டின் மேல் எழும்பிக் கொண்டிருக்கும் கட்டடம். எங்கள் துறைக்காக அரசுப் பணத்தில் புதுசாய் விரசாய் எழும்பிக் கொண்டிருக்கிறது. 

நேராக அந்த மண்டை ஓட்டின் பார்வை படும் திசையிலேயே கட்டடச் சுவரில் கரியில் எழுதியிருக்கிறது அந்த வாக்கியம். 
பத்தடி தூரத்தில் வாட்ச்மேன் கைலாசம் தாத்தா கடிகாரத்தில் மணி ஒன்றடிக்கவும் கொட்டாவி துரத்திவிட்டுத் தன் நாற்காலியில் அமர்கிறார். இரண்டு கம்பளிகள் கொண்டு இருக்கை சூடாக்கிய உலோக நாற்காலி. தன் 74 வருஷங்களையும் கோவையிலேயே கழித்தவர் கைலாசம். இதே நிலம் சுடுகாடாய் இருந்தபோது இரண்டு மூன்று இழவுகளுக்காக வந்திருக்கிறார், கொலை வழக்குகள் உட்பட. வாலிபத்தில் கத்தி பிடித்த கை, இப்போது ஒரு கம்பைத் தரையில் தட்டிக் கொண்டு கடனே என்று காவலுக்கு உலாத்திக்கொண்டிருக்கிறது. 

சுற்றுப்பட்டுப் பேய்க்கதைகள் அத்தனையும் , சிலபல பேய்களும் கூட அவருக்கு அத்துப்படி. அவரின் பேரன் ஒருவன் எப்போதாவது வரும்போது எங்களிடம் மட்டையும் பந்தும் கடன் வாங்கி தப்புத்தப்பாக விளையாடுவார். அப்படித்தான் பழக்கம். விடுதிக்குப் பக்கத்தில் எழும்பிக் கொண்டிருக்கும் புதுக் கட்டடத்தின் பேய் வரலாற்றை எங்களுக்கு அவர்தான் சொன்னார். இதுவரை ஏழெட்டு மண்டை ஓடுகள் தட்டுப்பட்டிருக்கிறதாம். இதில் ஏதோ தப்பு நடக்குதென்று கிட்டத்தட்ட தினமும் எங்களிடம் சொல்கிறார். 

"கடலைக் காட்டையும், களத்துமேட்டையும் கட்டடமாக்கலாம். புல்லு பூண்டால பெரச்சினை வராது. இப்பிடி சுடுகாட்டில தூர் வாரினா புதைச்சு வெச்சதுக்கெல்லாம் ரோஷம் வந்துருமே. என் கெரகம்..... நானே பாக்கப் பொதைச்சதுக்கெல்லாம் நானே காவல் காக்க வேண்டியிருக்கு. ராவைப் போல அடிக்கடி வெளியே வராதீங்க தம்பீ இந்தப் பக்கம்..."

அவரின் கம்புச் சத்தம் காற்றில் மேலேறி வரும்போது அவரின் புலம்பல் சத்தம்தான் கேட்கிறது. நிலவற்ற நிர்மல இருளின் கீழ் மொட்டை மாடியில் வரிசையாகப் பாய் போட்டுப் படுத்திருக்கிறோம் நாங்கள். நான், ராகேஷ், அர்ஜுன், சித்தார்த், அருள். இன்னும் கொஞ்ச தூரங்களில் ஆங்காங்கே இன்னும் சில பல போர்வைகள். 

நான் மல்லாந்து பார்த்து இருளை வெறித்தவாறே கேட்டேன், " ஏன் மச்சி, இந்தப் பேய் கதை எல்லாம் பாதி சுடுகாட்டிலயும் மீதி சூசைடிலயும் தான் வருதில்லே ? "

இருளே இறங்கி வந்து அசரீரியாய்ப் பேசுவது போல ராகேஷின் குரல் வந்தது, "ஆமாண்டா..நீதான் மச்சி புதுசா ஏதாவது எழுதணும். இங்கேயே பாரு.. முதல் வருஷம் அந்தத் தற்கொலைக் கேசு.. ரெண்டாம் வருஷம் அந்த பாத்ரூம் பேய். அதுவும் சூசைடு. இப்போ கடைசியா சுடுகாட்டுக் கதையும் கேட்டாச்சு இங்கே." 

"இது போருடா ராகேஷ். அந்த ரெண்டு கதைலயாவது பேய்க்கு ஒரு முகம் இருந்துச்சு. சுடுகாடுன்னு சும்மா சொன்னா ஒரு பயமே வரல. கிழடுகட்டைங்களதான் மூடியிருப்பாங்க. பாப்போம். நீ எழுதி வெச்சதுக்கு ஏதாவது யூத்தா ஒரு பேய் பதில் சொல்லுதான்னு", சித்தார்த்தும் கலந்து கொண்டான். 

எழுத்துப் பிழையோடு அந்தக் கட்டடத்திலிருந்த கரி வாக்கியம் ராகேஷ் எழுதினதுதான். ஒரு மணி நேரத்துக்கு முன்னால் அவனும் நரேனும் நாலைந்து பேரிடம் பந்தயம் கட்டி, சரியாகப் பன்னிரெண்டு மணிக்கு, கைலாசம் தாத்தா வைகை ஹாஸ்டல் பக்கம் போன நேரத்தில் மறைந்து சென்று அந்த மண்டை ஓட்டுப்பேய்களுக்கு எழுதி வைத்து வந்த தகவல். பேயெல்லாம் புளுகு என்றும் தனக்குப் பயம் இல்லை என்றும் நிரூபிக்க நடந்த பந்தயம். 

தொடர்ந்து பேச்சும் அரட்டையும் பேய்களையே புரட்டி வந்தது. பேச்சு கொஞ்சம் சூடு பிடிக்கும் நேரத்தில் சடாரென்று அருள் கூவினான, "டேய்.. அங்க பாரு.. எரியுது"

தூரத்தில் மருதமலை உச்சியில் கொழுந்து விட்டு எரியும் ஜுவாலை தெரிந்தது. முருகன் படிக்கட்டுகள் பாதி மலையிலேயே முடிந்துவிடும். அதற்கும் மேலே யாரும் அறியாத மலை உச்சிக்காடுகளில் பல இரவுகள் இபடிப் பற்றி எரிவதைப் பார்த்திருக்கிறோம் எங்கள் மொட்டை மாடியிலிருந்து. சிலர் காட்டுத்தீ என்கிறார்கள். அங்கே ஆதிவாசிகள் இருப்பதாகவும் ஒரு பேச்சு உண்டு. கைலாசம் மாதிரி ஆட்கள் மூலம் சில பேய் விளக்கங்களும் உண்டு. இந்தப் பேச்சின் தொடர்ச்சியோடு, பற்றி எரியும் நெருப்பைப் பார்க்கையில், அந்த மண்டை ஓட்டுப் பேய்களுக்கு ரோஷம் வந்துதான் விட்டதோ என்றொரு சிறு பிரமை ஏற்பட்டது. 

நான் ராகேஷிடம் கேட்டேன், "மச்சி இது ஒரு வேளை நீ எழுதினதுக்குப் பேய் சொல்ற பதிலோ? அந்த நெருப்பிலே ஒரு மண்டை ஓடு ஷேப் தெரியல உனக்கு?"

அப்போதுதான் சட்டென்று அவனும் கவனித்தான். எரியும் ஜுவாலையில் ஒரு மண்டை ஓட்டு உருவ இருள் அப்பட்டமாகத் தெரிந்தது. "டேய் சிவா.. நெஜமா மச்சி. அங்க பாரேன் தெரியுது. ஆனா ஏண்டா இங்க எழுதினா அங்க எரியுது ?"

அவன் பதிலைக் கிழித்தபடிக்கு ஒரு மின்னல் சடாரென்று அருகில் பாய்ந்தது. அருள் மறுபடியும் கூவினான், "டேய் ராகேஷ்.. இதோ வந்திருச்சு பாரு பக்கத்துலயே பதில்"

"ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி உன்னை கவனிச்சிட்டிருக்கு மச்சி.. உன்னைப் பேய் பொறாண்டப் போகுது பாரு" நான் இன்னும் கொஞ்சம் ஆழம் கூட்டி அமைதியாகச் சொன்னேன். ஒரு சின்ன நெருக்கடியான அமைதி தொடர்ந்தது. 

அர்ஜுன் தான் கலைத்தான். "டேய் சும்மா உளறாதீங்கடா. தூங்குங்கடா மூதேவிங்களா" என்று எரிச்சலாகப் பேசி விட்டுப் போர்வைக்குள் போய்விட்டான். ஆனால் அவன் இப்போதைக்குத் தூங்கமாட்டான். இப்படி நான்கு பேர் பேசிக் கொண்டிருக்கையில் நான் மட்டும் தூங்கப் போகிறேன் என்று நடுவில் போர்வைக்குள் போனவன் எவனும் என்றும் தூங்கிப் போனதாகச் சரித்திரமே இல்லையே. 

மீண்டும் இரண்டு மின்னல்கள் நெருங்கித் தெறித்தன. குளிரும் இருளும் போட்டியிட்டுக் கூடின. எந்த நட்சத்திரமும் கண்ணில் படவில்லை. அவ்வப்போது காற்று வந்து வேகமாக அறைந்து போனது. 

"சித்தார்த்து.... இது ஜென்மம் X, மர்ம தேசத்துல வர்ற மாதிரியே இருக்குல்லடா?"

அவன் பேசவில்லை. எவனுமே பதில் பேசவில்லை. நிசப்தம் இருளில் பெருகித்தெரிந்தது. 

"மச்சி மச்சி எனக்கொண்ணு தோணுதுடா" - மூன்றாம் முறையாக அருள் கூவினான். இம்முறை அவன் அமைதியைக் கலைத்த விதம் கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது. திகிலோடே தொடர்ந்தான், "எங்க ஊருல இதே மாதிரி மொட்டை மாடியில தூங்கும்போது விடியுற நேரத்துல வெள்ளை உருவமா ஆவி கண்ணுக்குத் தெரியும்னு சொல்லுவாங்கடா. அப்போ படக்குன்னு கையைக் காலை அசைக்க முடியாம இறுகிக்குமாம். ரொம்பக் குளிருமாம். எங்க பாட்டி கூட சொல்லுவாங்க..."

"வெள்ளை ஆவி.... விடியற நேரம்.... நான் கூடக் கேள்விப்பட்டிருக்கேன்டா. எங்க ஊருல இசக்கிப்பேய்னு ஒண்ணு தினமும் காலைல வெள்ளந்திப் பசங்களையெல்லாம் மொட்டை மாடில வந்து எழுப்புமாம்"

நான் மிக அமைதியாகக் கேட்டேன். "ஏன் அர்ஜுனு , நீ எதும் பேயைப் பாத்திருக்கியாடா மொட்டை மாடில?"

அவன் ஈனஸ்வரத்தில் முனகினவாறே போர்வையை விலக்கிச் சொன்னான், "டேய் தூங்க விடுங்கடா...வேற பேச்சே கெடக்கலையா உங்களுக்கு, பயமா இருக்குடா".... நான் சொல்லலை, போர்வைக்குள் போகிறவனெல்லாம் தூங்கிப் போவதாகச் சரித்திரமே கிடையாது!

இவனுக்கு மட்டும் ஒரு சரித்திரம் உண்டு. அர்ஜுன்.. இவன் ஆரோக்கியா பால் அர்ஜுன் இல்லை. ஒரு அப்பாவி பயந்தாங்கொள்ளி அர்ஜுன். இரண்டு பேய்களைப் பார்த்ததாக உறுதியாக நம்புகிறவன். அதில் ஒன்று நாங்கள் நடத்தின நாடகம் என்று இன்னும் தெரியாது அவனுக்கு. இன்னொன்று யார் நடத்தின நாடகம் என்று எங்களுக்கும் கூட தெரியாது. நிஜத்தில் பேய் கண்டால் இவனெல்லாம் பயந்து செத்தே பேயாவது உறுதி. அவ்வளவு தைரியம்! என்னதான் கும்மிருட்டில் கதவடைத்து, விளக்கணைத்து, சரவுண்ட் சவுண்டில் பேய் படங்கள் பார்த்தாலும், சில படங்கள் கிச்சுகிச்சு மட்டும்தான் மூட்டும், அப்பேற்பட்ட சம்பவங்களைக் கூட சுவாரசியமாக்குவதற்கு ஒரு பயந்தாங்கொள்ளி நண்பன் கூட்டத்தில் தேவை. அப்படித்தான் எங்களுக்கு அர்ஜுன். சுருக்கமாகச் சொன்னால், சந்திரமுகி பார்த்ததற்கே இரண்டு இரவுகள் தனியாக ஒண்ணுக்கு போகப் பயந்த வீரன் ! ராகேஷின் அறைத்தோழன்.

அர்ஜுனின் கருணை மனுவை ஏற்றுக்கொண்டு நாங்களும் பேயுரையாடல்களை முடித்துக் கொண்டு போர்வைக்குள் போனோம். மணி இரண்டரை. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு மூச்சு விடுவது கேட்குமளவு நிசப்தம் மூழ்கியது, இடையில் சில நாய் ஊளைகள். பேய் நடமாட்டம் நாய் கண்ணுக்குத் தெரியுமாமே !

நீண்ட நிசப்தத்துக்குப் பிறகு, தூரத்தில் ஒரு கட்டைக் குரல் கேட்டது. படக்கென்று அர்ஜுன் விழித்தெழுந்தான். புதுக்கட்டடத்தின் திசையிலிருந்து அவனுக்குக் குரல் கேட்கிறது. "நரேன், நரேன் ..... ராகேஷ்.. ராகேஷ்.... இது உங்களுடைய இடம் இல்லை. எங்களுடைய இடம்.. நரேன்..  ராகேஷ்.." தூக்கிவாரிப்போட்டது அவனுக்கு. மிகத் துல்லியமாக வந்தது குரல். இதே விஷயத்தைத் தொடர்ந்து இரண்டு மூன்று முறை சொன்னது. அர்ஜுன் வியர்த்துப் போனான். சுற்றிப் பார்க்கிறான். மற்ற அனைவரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அர்ஜுன் சித்தார்த்தை உலுக்கி உலுக்கி எழுப்புகிறான், "மச்சி, உனக்குக் கேக்குதா?"

உறக்கம் கலைந்த உளைச்சலில் சித்தார்த்துக்கு ஒன்றும் புரியவில்லை. அர்ஜுன் மீண்டும் படபடத்தான், "டேய் நல்லாக் கேளுடா, உனக்கு எதுவுமே கேக்கலையா?"

சித்தார்த் முயற்சி செய்து கூர்ந்து கவனித்தான்.

"... ராகேஷ்... இது உங்களுடைய இடம் இல்லை... எங்களுடைய இடம்.... நரேன்.."

"எதுவும் கேக்கலையேடா , என்னடா உளர்றே , லுச்சா லூசு, போய்த் தூங்குடா"

"கேக்கலையா .. " அர்ஜுன் லேசாக நடுங்கத் தொடங்கினான். அவன் காதில் இன்னும் ஒலிக்கிறது அந்தக் குரல். "உன்னைப் போய் கேட்டேன் பாரு.. செவிட்டு மூதேவி. தூங்குடா.. நான் பாத்துக்கிறேன்"

சித்தார்த் போர்வைக்குள் மறைந்து கொண்டான். அர்ஜுன் முழுத்தூக்கமும் கலைந்து பயந்து உறைந்தான். ராகேஷை எழுப்பலாமா? ஒரு வேளை அவனைப் பார்த்ததும் பேய் ஏதாவது பண்ணிவிட்டால்? நரேன்..... நரேன் கீழே அவன் அறையில் உறங்குகிறான். அவனுக்கு எதுவும் ஆகிவிட்டதா?

அத்தனை தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு எழுந்து அந்தக் குரல் வரும் திசையில் நடக்கத் தொடங்கினான். எதையோ முணுமுணுத்துக் கொண்டே போனான். நடக்க நடக்க குரல் இன்னும் தெளிவாகக் கேட்டது. அத்தனையும் ஒரு நிமிட நேரத்துக்குள் நடந்து கொண்டிருக்கிறது, வழியில் ஏதோ ஒரு போர்வையில் அவன் கால் படவும், போர்வைக்குள் இருந்தவன் வன்மையாகப் புரண்டு உருண்டு படுத்தான். அந்தக் குரல் சட்டென நின்றுவிட்டது.

அர்ஜுன் உறைந்து நின்றுவிட்டான். உருண்டு போனவனோ மூச்சு பேச்சில்லாமல் கிடக்கிறான். முகம் தெரியவில்லை. குரல் கேட்கவில்லை. குனிந்து பார்க்க பயம். திரும்பி நடக்க பயம். நேராக நடக்கவும் பயம். இருளில் ஒரு பேயை எதிர்த்து நிர்க்கதியாய் நிற்கிறான். அப்படியே ஐந்து நிமிடங்கள் கழிந்திருக்கும்.

"நரேன், நரேன்... ராகேஷ்... ராகேஷ்... இது உங்களுடைய இடம் இல்லை...."

மீண்டும் அதே குரல். அப்போது உருண்டவன் இன்னும் அப்படியே உயிரற்றுக் கிடக்கிறான். ஒரு நொடியில் அத்தனை அட்ரினலினும் பீய்ச்சிப் பாய, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கீழே ஓடுகிறான் அர்ஜுன். நேராக அவன் அறைக்குள் புகுந்து, கதவைத் தாழிட்டு, விளக்கையெல்லாம் போட்டு, சிரமப்பட்டு மூச்சு விடுகிறான். அலமாரியைத் திறந்து வியாயகர் அருகிலிருந்து விபூதியை வாரிப் பூசுகிறான். ஏதோ தப்பு நடந்திருக்கிறது. கைலாசத்தின் குரல் இப்போது காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த அமானுஷ்யக் குரலை நினைத்தாலே பயத்தில் மூத்திரம் வருகிறது. ஆனால் தனியாகப் போகவும் முடியாத பயம். மர்ம அவஸ்தை !

அந்த அமானுஷ்யம் நரேனையும் ராகேஷையும் தேடிக் கொண்டிருக்கிறதா ? என்ன ஆனான் அந்தப் போர்வைக்குள் இருந்தவன்? ஒன்றுமே தெரியாமல் மேலே ராகேஷ் தூங்கிக் கொண்டிருக்கிறானே?

இரண்டு மூன்று பூச்சுகள் விபூதி அப்பிக் கொண்டு ஒரே ஓட்டமாக மீண்டும் மொட்டை மாடிக்கு வந்தான் அர்ஜுன். இடது பக்கம். அந்தப் போர்வைக்குள்ளிருந்தவன் அப்படியே கிடக்கிறான், அசைவே இல்லை. வலது பக்கம் திரும்பினால், பெரிய அதிர்ச்சி... வெறும் போர்வைகள்தான் இருக்கின்றன. எங்கள் நால்வரையும் காணவில்லை. நாய் ஒன்று ஏப்பம் விடுவது போல தூரத்தில் ஊளை இடுகிறது.

கையெல்லாம் நடுங்க நடுங்க, தன் செல்லை எடுத்து என்னை அழுத்துகிறான் அர்ஜுன். முதல் முறை மணியிலேயே பட்டென்று நான், "டேய் எங்கடா போனே? உடனே நரேன் ரூமுக்கு வா" என்று பதட்டமாகப் பேசி அணைத்துவிட்டேன். அர்ஜுன் தன் பயம் ஊர்ஜிதமான அதிர்ச்சியில் அரக்க பரக்க ஓடி வந்தான்.

நரேன் அறை வாசலில் அவன் கண்ட காட்சி........

நானும் அருளும் நரேனைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு வருகிறோம். கூடவே பதட்டமாகவும் குழப்பமாகவும் மற்றவர்கள். நரேனுடன் அறையிலிருக்கும் ரத்னகுருவுக்கே ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான். உள்ளே கொண்டு சென்று கட்டிலில் கிடத்தினால், நரேன் ஏதோ எல்லாம் தெரிந்த ஞானி மாதிரி எதையோ வெறித்து விழித்துக்கொண்டிருக்கிறான்.

அர்ஜுன் பயத்தோடும் பதட்டத்தோடும் கேட்டான், "டேய் என்னடா ஆச்சு.... இவனுக்கு என்ன ஆச்சு? எங்க இருந்தான்?"

ரத்னகுரு சொன்னான், "அர்ஜுன், ஒரு பத்து நிமிஷம் முன்னாடி நான் எந்திரிச்சு பாத்ரூம் போகப் போனேன். எழுந்தப்பவே இவனை ரூமில காணோம். போய்ப் பாத்தா பாத்ரூமுக்குள்ள இவன் படுத்திட்டிருக்கான்டா இதே மாதிரியே எதையோ வெறிச்சு மொறைச்சுகிட்டே, தலைக்குக் கையை அண்டக் குடுத்து ஸ்ரீரங்கநாதர் மாதிரி போஸ் குடுத்திட்டிருக்கான். புடிச்சு எழுப்பி விசாரிச்சா, எதுவுமே ஞாபகம் இல்லைங்கிறான். நாலு வருஷத்தில இவன் இந்த மாதிரியெல்லாம் தூக்கத்தில நடந்ததேயில்லைடா"

"நடந்தது இவன் இல்லை குரு.. இங்கே என்னென்னமோ நடக்குது. எனக்கு இப்போ கொஞ்ச கொஞ்சமாப் புரியுது. ராகேஷ்.. ராகேஷ் எங்கே? அவனை உடனே காப்பாத்தணும்? நீங்க எப்போடா கீழே வந்தீங்க?"

சித்தார்த் சொன்னான், "குருதான் மச்சி செல்லில கூப்பிட்டான். உடனே ஓடி வந்தோம். என்னடா புரியுது உனக்கு?"

"நான் உன்னை எழுப்புனேனே ஞாபகமிருக்கா? எனக்குக் கேட்டுச்சுடா.... அந்தக் குரல் கேட்டுச்சு எனக்கு. இவனையும் ராகேஷையும் தேடிட்டிருக்கு அது இப்போ" . எல்லாரும் உறைந்து போய் ராகேஷைப் பார்க்கிறார்கள். அவன் பயந்து போய் நரேனைப் பார்க்கிறான்.

தண்ணீர் தெளித்து, சகஜமாக்கி, மூச்சு விட நிறைய காற்று விட்டு நரேனிடம் துருவித்துருவி விசாரித்தோம். அவனுக்கு ஒன்றுமே ஞாபகமில்லை. நொடிக்கு  நொடி திகில் கூடிக் கொண்டே போனது. விளக்கை எல்லாம் எரியவிட்டு ராகேஷையும் நரேனையும் சுற்றி எல்லாரும் அமர்ந்து கொண்டோம்.

அர்ஜுனுக்கு மட்டும் குரல் கேட்டிருக்கிறது. அதுவும் துல்லியமாக கணீரென்று கேட்டிருக்கிறது. அதுதான் அவனை இன்னும் கொஞ்சம் பயமுறுத்தியிருக்கிறது. மற்றவர்களை விட அவன் ரொம்பப் பயந்து போயிருந்தான். பேயை எவனும் பார்க்கவில்லை. அது பிறாண்டிவிட்டுச் சென்றவனுக்கும் ஞாபகமில்லை. அர்ஜுன் மட்டும்தான் கேட்டிருக்கிறான். அவன் ஏதாவது செய்ய வேண்டும் என்று துடித்தான். ஏன் தனக்கு மட்டும் கேட்க வேண்டும் என்று பயந்து குழம்பினான். நேரம் மெல்ல மெல்ல இருளை விழுங்கி வீங்கிக் கொண்டே போனது.

4 : 30 . எல்லாரும் அர்ஜுனையே பார்த்துக் கொண்டிருக்கிறோம். திடீரென்று அவன் மௌனம் குலைத்துப் பயந்தவாறே முனகினான் , "டேய் , ஒரே வழிதான் இருக்கு. எல்லாம் வாங்க, கைலாசம் வாசல்லதான் இருப்பாரு. அவரைப் பாப்போம். அந்தக் குரலும் இப்ப அமைதியாயிடுச்சு." சொல்லிவிட்டுக் கதவைத் திறந்து முன்னே நடக்கவும் தொடங்கிவிட்டான்.

அறைக்குள்ளே அரை நிமிஷம் எல்லாரும் மாறி மாறி பார்த்துக்கொண்டோம். பின்பு ஒரு வெடிச்சிரிப்புச் சத்தம் கேட்டது. வெளியே நடந்த அர்ஜுன் குழம்பி ஓடி வருகிறான். ராகேஷ் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்து பைத்தியம் பிடித்தது போல சிரிக்கிறான், "டேய்... சொல்லிருங்கடா.. யப்பா முடியலைடா .. நாலு மணி நேரம் ஆச்சு"

அர்ஜுனுக்குக் குழப்பத்தில் கண்ணீர் வந்துவிட்டது. நானும் சிரித்துக் கலங்கின கண்களுடன் அவனுக்கு முன்கதை விளக்கம் சொன்னேன். ஒரு குரலை நாங்களே செல்லில் பதிவு செய்து வைத்து, அலாரம் டோனாக வைத்து, செல்லை தூரமாக வைத்துவிட்டு, வேண்டுமென்றே மொட்டை மாடியில் ஒன்றரை மணி நேரம் பேய்க் கதையாகப் பேசிப் பேசி, கீழே நரேனின் அறையையும் ஒருங்கிணைத்து ஒரு உச்சகட்ட திகில் நாடகத்தை ஒரே ஒருவனுக்காக அரங்கேற்றியிருக்கிறோம். மருதமலைத் தீயும் அந்தப் போர்வைக்குள் பிணமாய்த் தூங்கினவனும் முருகனாய்ப் பார்த்துக் கூட்டிச் சேர்த்த திருவிளையாடல்கள்.

சிரிப்பினூடே சிரமப்பட்டு அர்ஜுனுக்குப் புரியவைத்தேன். ஏமாற்றமும் பயமும் கோபமும் கொப்பளிக்க அவன் எங்களைக் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டிவிட்டு ஓடிவிட்டான். பரவாயில்லை. அவமானத்தில் அழுதமாதிரி கூட இருந்தது. பின்னால் உதவும். நரேன் நடித்து முடித்த பரவசத்தில் ஆச்சரியமாகக் கேட்டான், "செம கெத்து மச்சி... இந்த நாளை அவன் மறக்கவே மாட்டான்....." அந்த அலாரம் வைத்த செல்லை எடுத்துத் தடவியவாறே "செம சத்தம்டா இது.. அவனுக்கு மொட்டை மாடியில கேட்ட அலாரம் டோன் எனக்கு கிரவுண்ட் ஃப்ளோர் பாத்ரூம் வரைக்கும் கேட்டிருக்கே"

"என்னது மொட்டை மாடில வெச்ச அலாரம் உனக்கு மூணு மாடி தாண்டி கீழே கேட்டுதா... காமெடி பண்ணாதேடா டேய்" நாங்கள் அனைவரும் சிரித்த திருப்தியில் அப்படி அப்படியே பிய்த்துக்கொண்டோம்.

நரேன் மட்டும் குழப்பமாக குருவிடம் சொல்வது கேட்டது, "டேய் குரு. உனக்குக் கேட்டிச்சா டா? நான் நெஜமாவே கேட்டேனே.. குழப்பமா இருக்கே.. ஒருவேளை................."

-------------------------------------------------------------------------

திங்கட்கிழமை மதியம். நரேன் எங்களெல்லாரையும் அழைத்து வைத்து அமைதியாக நிற்கிறான். அவன் முகத்தில் ஒரு படபடப்பு குவிந்திருக்கிறது. கொஞ்சம் நடுக்கத்துடன் தன் செல்லில் எடுத்து வைத்திருந்த புகைப்படத்தைக் காட்டினான்.



காட்டிவிட்டு எங்களனைவரையும் மேலும் கீழும் பார்த்தான். பின்பு வேகமாக எல்லோரையும் இழுத்துக் கொண்டு அந்தக் கட்டடச் சுவர் பக்கம் ஓடினான், "என்ன எழுதியிருக்கு , வாசி...."


"என்னடா நரேன் . அதேதானே இது?"

"டேய் சிவா.. நல்லாப் பாருடா. நாங்க எழுதுன தமிழில எழுத்துப்பிழை இருக்கு. இப்போ அதை யாரோ திருத்தியிருக்காங்க. நீங்க யாராவது செஞ்சீங்களா இதை?"

ஒருவரை ஒருவர் பார்த்து மறுத்து மண்டையாட்டினோம். நரேன் தொடர்ந்தான், "அந்த 'டை'யை யாரோ திருத்தியிருக்காங்க. நம்ம தலைமுறைல 'டை' எழுதணும்னா துணைக்கால்தான் போடுவோம். இப்படிக் கொம்பு போடுற பழக்கம் ரொம்பப் பழசு.......... கிட்டத்தட்ட இங்கே புதைச்சு வெச்ச பொணமெல்லாம் உயிரொட இருந்த காலம்"

"டேய் என்னடா உளர்றே... என்ன சொல்ல வர்றே?"

"இல்லடா..... யோசிச்சுப் பாரு. நம்ம அலாரம்ல வெச்ச குரல் எனக்கும் கேட்டிச்சு. எனக்கென்னமோ............."

அவன் பேச்சை முடிப்பதற்குள் அர்ஜுன் அங்கிருந்து பிய்த்துக்கொண்டு ஓடினான். நாங்கள் அதிசயித்து உறைந்து நின்றோம். ஐந்து நிமிடம் கழித்து நரேன் செல்லில் அழைத்தான். "டேய் கன்ஃபார்ம்டா..கைலாசம் ரெண்டு நாளா வேலைக்கு வரலே, வெள்ளிக்கிழமை ராத்திரிதான் மத்த எல்லா வாட்ச்மேனும் அவரைக் கடைசியா பாத்திருக்காங்க. சனிக்கிழமை காலைல கூட அவரை யாரும் பாக்கலை. அன்னிக்கு ராத்திரி இங்கே ஏதோ தப்பு நடந்திருக்கு"

-------------------------------------------------------------------------

திங்கட்கிழமை. அதே நேரம்.

கைலாசம் தாத்தா வீட்டு வாசலில் கவலை தோய்ந்த முகங்கள். ஓரமாய் உட்கார்ந்தொருவன் பாடை கட்டிக் கொண்டிருக்கிறான். இழவு விழுந்த வீடு துக்கத்தைக் காற்றில் தெளித்துக் கொண்டிருக்கிறது. கைலாசம் தாத்தாவின் பேரன் ஒரு தபால் காகிதக் கட்டிலிருந்து ஒன்றை உருவி, தலைப்பு எழுதுகிறான்.


பட்டென்று அவன் தலையில் தட்டி, கைலாசம் தாத்தா அவனிடமிருந்து வாங்கித் தானே அதைத் திருத்திவிட்டுத் தொடர்ந்து எழுதுகிறார்.

'நேற்று அதிகாலை எனது அண்ணன் புஷ்பவனம் மாரடைப்பால்......'

"என்னத்த இங்கிலீஷு மீடியத்துலே படிக்கிறீங்களோ. இந்தக் காலத்து இளசுகளுக்கு ஒரு வாக்கியம் எழுதத் தெரியலையே நல்ல தமிழில..."

-------------------------------------------------------------------------

உங்களுக்குப் பேய் கதைகளில் நம்பிக்கை உண்டா?

சும்மாதான் கேட்கிறேன்.

நரேனுக்கும் கேட்டிருக்கிறதே !

திரும்பிப் பார்

அரும்பிய புனிதவாழ்வை
கரும்புச்சாறு, கற்கண்டு இனிப்பாய்
விரும்பிய வகையில் வாழ, நன்கு
திரும்பிப் பார்த்து வாழ்ந்திடுவாய்!

மதுவருந்தி மாதோடலைவதும்
மாயையினால் மானமிழப்பதுவும் வீண்!
மாண்புடையோர் நல் வாழ்வை
மாதிரியாய்த் திரும்பிப் பார்!
தளர்ந்தோர் நிலையைத் திரும்பிப் பார்!
தவறுகளைத் திருத்திடத் திரும்பிப் பார்!
தருமம் செய்ய விரும்பிப் பார்!
தன்னம்பிக்கைச் சிகரத்தில் ஏறிப்பார்!
திராணி பெற்றிட முன்னைய
தித்திக்கும் சாதனைகளையும் என்றும்
திரும்பிப் பார்! மனத்திண்மை சேரும்.
திடகாத்திரமாக முன்னேறி உயர்வாய்!
பெற்றோருக்குக் கடமை புரிந்திட
பெறுமான வாழ்வு வாழ்ந்திட
பெயரினை உலகில் பொறித்திட
பொறுப்பின்றிப் போகாமற் திரும்பிப் பார்!

Alcohol

Image may contain: indoor
https://www.facebook.com/smichaelxavier/videos/1666146623420275/

Sunday, 1 April 2018

எகிப்தின் பேரழகியே வருக !!!!!

“வருக வருக! எகிப்தின் பேரழகியே, வருக, வருக!” என்றான் கிலேபர். “உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வெகு நேரம் இந்தக் கூடாரத்தின் வாயிலில் காத்திருக்கிறேன்!”
பின்னர் தன் பணியாட்களைப் பார்த்து, “இன்னும் ஏன் அவளைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவளை விட்டு விடுங்கள். நம்மை விட்டு அவள் எங்கும் ஓடிப் போய் விடமாட்டாள். அவள் நம் அன்புக்குக் கடமைப்பட்டவள்!” என்றான்.
பாத்திமா நடுங்கினாள். அவள் அதரங்கள் புயலில் சிக்கிய இலைகளைப் போன்று துடித்தன. ஆனால் இந்தக் கலக்கத்தினிடையே ‘இந்தப் பிரெஞ்சுக்காரன் அரபிமொழி பேசுகிறானே!’ என்ற எண்ணமும் அவள் உள்ளத்தில் தோன்றத் தவறவில்லை.
“பாத்திமா! நீ ஏன் இப்படி நடுங்குகிறாய்? மெல்லிய – மென்மையான உன் உதடுகள் ஏன் இப்படித் துடிக்கின்றன? உனக்கு இங்கு எவ்விதத் துன்பமும் ஏற்படாது. பயப்படாதே! இங்கு வந்து உன்னை யாரும் துன்புறுத்த முடியாது. நீ என் அன்பிக்குரியவள்… உனக்கென்று ஒரு கூடாரம் தயாராயிருக்கிறது. அதில் உனக்கு வேண்டிய எல்லாம் இருக்கின்றன. ஆக வேண்டிய காரியங்களைப் பற்றி நாளைக்குப் பேசுவோம்!’ பல நாள் பழக்கப்பட்டவனைப் போன்று அவன் பேசினான்.
பாத்திமாவுக்கு ஓரளவு தைரியம் பிறந்தது. அலங்கோலப்பட்டிருந்த தன் துணியைச் சரிப்படுத்திக்கொண்டாள்.
”நாளைக்கு உன்னுடன் பேசுவதற்கு என்ன இருக்கிறது? ஒரு பெண்ணை இப்படி நடத்துவதுதான் பிரான்ஸ் நாட்டின் பண்பா? உன் கூடாரம் உன்னோடேயே இருக்கட்டும். அது எனக்கு வேண்டியதில்லை. அதில் நான் தங்கப் போவதுமில்லை. அந்தக் கூடாரத்தைப் பற்றி எனக்கு நிச்சயமாய் ஒன்றும் தெரியாது. அனால் அதில் கொடுமையான அநீதிகள் இழைகப்படுகின்றன என்று மட்டும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக நான் உன் கையில் சிக்கிக்கொண்டு விட்டேன்!”
கிலேபர் வெற்றிவீரனைப்போன்று சிரித்தான். திடீரென்று சிரிப்பை அடக்கிக்கொண்டு பாத்திமாவைப் பார்த்தான். அவள் கண்ணோரங்களில் கண்ணீர் மின்னிற்று. திரும்பிப் பார்த்தாள். பணியாட்கள் சென்றுவிட்டார்கள்.
“அசடுமாதிரி அழுகிறாயே!…அப்படியானால் உன் முடிவுதான் என்ன? நீ என்னிடமிருந்து தப்பி விடமுடியாது என்பதையும் மறந்து விடாதே! சொல், உன் நோக்கமென்ன?”
“என் நோக்கத்தை நீ தெரிந்துதான் வைத்திருப்பாய். ஒன்று மட்டும் நான் கூற விரும்புகிறேன். என்னைப் கறைப்பட்டவளாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை”
“நீ விரும்பவில்லை, ஆனால் உலகில் விரும்பாதவை எத்தனையோ நடக்கின்றனவே!”
“அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் என்றைக்கும் மாறாத கறையை என்மீது உண்டாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. எந்தக் கறையும் எனக்கு ஏற்படாது; ஏற்படக்கூடாது. என்னால் அதைத் தடுக்க முடியும். நான் எதையும் எதிர்ப்பேன்”
அவன் சிரித்தான் – ஒரு பேதை பிதற்றுகிறாள் என்று! அவள் விம்மினாள் – மானத்தை காப்பதற்கென்று!
“அப்படியானால் தற்கொலை செய்து கொள்ளத் துணிந்து விட்டாய்; அப்படித்தானே! என் பிடியிலிருந்து நீ தப்புவதற்கு அந்த ஒரே வழிதான் உண்டு!”
”அது என் சொந்த விஷயம். அதைப்பற்றிக் கேட்க நீ யார்?” நெருப்பைக் கக்கினாள் பாத்திமா.
“நீ துடுக்கான பெண்!” என்று அவன் ’தாஜா ’ செய்தான். உன் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் உன் துடுக்குத்தனத்தைப் பற்றிக் கேள்விப் பட்டதில்லை”
அதற்குப் பிறகு அவள் நிற்கவில்லை. பணியாட்களுக்குக் கட்டளை பிறப்பித்துவிட்டுப் போய் விட்டாள்.
எங்கேயோ ஒரு பள்ளியில் ’இஷா’த் தொழுகைக்கு ‘பாங்கு’ சொல்லப்படுவது மெதுவாகக் கேட்டது. அவளைச் சுற்றிலும் பயங்கர நிசப்தம் நிலவியது. அவள் இதயத்துடிப்புகூட அவள் செவிக்கு எட்டுவது போலிருந்தது. அத்தனை நிசப்தம். பிரத்தியேகமான ஒரு கூடாரத்தில் அவள்கொண்டு தள்ளப்பட்டிருந்தாள். கூடாரத்தில் பிரான்ஸிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த விசித்திரமான ஒரு விளக்கு தயங்கித் தயங்கி எரிந்து கொண்டிருந்தது. அதன் மங்கலான ஒளி கூடாரத்தில் வியாபித்திருந்தது.
பாத்திமா கண்ணோட்டமிட்டாள். மூலையில் ஒரு மேசை கிடந்தது. அதைச் சுற்றிலும் சில நாற்காலிகள். மேசையின் மேல் பெரிய பெரிய கண்ணாடிப் புட்டிகள் – மதுவகைகள் என்று பாத்திமா தீர்மானித்தாள். மேசைக்கடியில் சில காகிதங்கள் கசங்கிக் கிடந்தன – அவன் இந்த அறையில் கசங்கிக் கிடப்பதுபோல் போர்க்கருவிகள் மூலைக்கு மூலை காணப்பட்டன. அதோ ஒரு கத்தி! அவள் கண்கள் மலர்ந்தன. உயிரைக் காக்கும் நண்பனைப் போலவே அதை அவள் கருதினாள்- உயிரைக் காக்கும் நண்பனல்ல, மானத்தைக் காக்கும் வீரன்!
அரை வினாடியில் அவள் தீர்மானித்து விட்டாள். இந்தப் பிரெஞ்சுக்காரனுக்கு உடன்படுவதை விட, அவனுக்கு மனைவியாவதை விட, தற்கொலை செய்துகொள்வது எவ்வளவோ மேலான காரியம் என்று முடிவு கட்டிவிட்டாள். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவனைக் கொலை செய்துவிடவேண்டும். அதற்கு முனைய வேண்டும்.
புத்துணர்ச்சி பெற்ற பாத்திமா துள்ளி எழுந்தாள். கத்தியை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள். பின்னர் அது அவள் மடியில் அடைக்கலம் புகுந்தது.
பொழுது விடிந்தது.
”இரவு நன்கு தூங்கினாயா, பாத்திமா?” என்று கேட்டான் கிலேபர்.
“ம்!” என்றாள் பாத்திமா. இயன்ற அளவுக்குத் தன் உணர்ச்சியை மறைத்துக் கொண்டாள்.
“பிரெஞ்சு முதுமொழி ஒன்றுண்டு. ‘இரவு என்பது மனிதனுக்கு நல்ல தீர்மானத்தைக் கொடுக்கிறது’ என்று சொல்வார்கள். நீ இன்றிரவு என்ன தீர்மானம் பண்ணினாய்?”
“அது போகப் போகத் தெரியும்” என்றாள் பாத்திமா.
“பேரழகியே! நீ கோபப்படுவதுகூட அழகாகத்தானிருக்கிறது!”
“அந்த அழகை அழித்துவிடத் தீர்மானித்து விட்டேன்!”
“அதை பலவந்தமாக அடைய நான் முற்பட்டால்?”
“அது நடக்காத காரியம்!” தொண்டை தெறிக்கும்படி கத்தினாள் பாத்திமா. “ என் உடலில் அணுவத்தனை உயிருள்ளவும் நான் எதிர்த்து நிற்பேன்!”
அவன் சிரித்தான்.
“என் கையில் பல வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை நீ மறந்திருக்க மாட்டாய் என்று எண்ணுகிறேன்”
பெண்புலி சீறிற்று : “அவர்களை எனக்குத் தெரியும். அநியாயக்காரர்கள்; கெய்ரோவில் நடந்த கொடிய அட்டகாசங்களுக்கு மூலமானவர்கள். அவர்களால் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது. நான் உண்மையில் தேசப்பற்றுள்ள பெண்மணி!”
கிலேபர் தணிந்து பேசினான்.
“அப்பப்பா! எத்தனை கோபம்! முகம் சிவந்து விட்டதே!..அவர்கள் கிடக்கிறார்கள். சரி, உன் முடிவு என்ன? உன் தீர்மானத்தைப் பற்றி ஒன்றுமே நீ சொல்லவில்லையே!”
பாத்திமா சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டாள். புன்னகையை வலுக்கட்டாயமாக உண்டாக்கிக் கொண்டாள்.
”எனக்கு அவகாசம் வேண்டும். இன்றிரவு நான் எதையும் சிந்திக்கவில்லை. நான் சிந்தித்து முடிவு காண்பதற்கு அவகாசம் வேண்டும்!”
“தாராளமாகத் தருகிறேன்!” என்ற கிலேபர் போய்விட்டான்.
2
அது கூடாரம்தான். என்றாலும் அவளுக்கு அது இரும்புக் கம்பிகள் பொருந்திய சிறையைப் போன்று காட்சியளித்தது. சிறைவாயிலில் இருப்பதுபோல் இந்தக் கூடாரத்தின் வாயிலிலும் ஒரு காவல்.
பாத்திமா வேதனைப் பட்டாள். தன் அழகு இத்தனை பெரிய விபரீதமாக முடிந்து விடும் என்று அவள் கனவில் கூட எண்ணிப் பார்க்கவில்லை. “பாத்திமா! உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும். பசியே எடுக்காது. அவ்வளவு அழகாயிருக்கிறாய் நீ!” என்று ஹஸன் கூறியதை இப்போது அவள் எண்ணிப் பார்த்தாள். உண்மையிலேயே அவள் ஒரு பேரழகிதான். இல்லா விட்டால் இரண்டு இளங்காளைகளை அவளால் ஒரே சமயத்தில் கவர முடியுமா? அவளைப் போலவே மர்தானும் அவள்மீது காதல் கொண்டிருந்தான். ஹஸனைத்தான் அவள் அதிகமாக விரும்பினாள். ஆனால் அவன் செய்யும் தொழில் அவளுக்குப் பிடிக்கவில்லை. அவன் பிரெஞ்சுக்காரனின் ஒற்றன். பாத்திமாவின் தந்தை கூட பிரான்ஸ் ஏகாதிபத்திய வெறியர்களின் வெறியுணர்ச்சிக்கு இரையாகி விட்டார். இதற்குக் கூட ஹஸன்தான் காரணம். பாத்திமாவின் தந்தை நாட்டுப் பற்று கொண்டவர். தீவிரவாதி என்பதை ஹஸன் பிரெஞ்சுக்காரர்களிடம் கூறி அவர் உயிருக்கு உலைவைத்து விட்டான். இதை அவன் பாத்திமாவின் உள்ளத்தைத் துன்புறுத்துவதற்காகவோ, அவளை அழுது புலம்பச் செய்ய வேண்டும் என்பதற்காகவோ செய்யவில்லை. அவன் தன் கடமையைச் செய்தான். கெய்ரோவில் யார் யார் நாட்டுப் பற்றில் ஊறிப் போயிருக்கிறார்கள் என்பதை பிரெஞ்சுக்காரர்களுக்குத் தெரியப்படுத்தினான். ஆனால் அது இத்தனை பெரிய விளைவை உண்டாக்கி விடும் என்று கனவிலும் எண்ணிப் பார்க்கவில்லை. அவனும் கெய்ரோவில் பிறந்தவன்தான். இங்குதான் படித்தான்; வளர்ந்தான். ஆனால் இப்போது அவன் பிரெஞ்சுக்காரர்களுக்கு ஒற்றனாகப் பயன்படுகிறான். தாய் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் இழிய தொழிலைப் பார்க்கிறான்.
அவன் பாத்திமாவை உள்ளன்போடு நேசித்தான்; அவள் மீது கலப்படமற்ற காதல் கொண்டிருந்தான். அவனது காதலை அவளால் ஏற்க முடியவில்லை. தேசாபிமானம் குறுக்கே நின்றது.
நேற்றுக் காலை அவன் பாத்திமாவைக் காணவந்த போது அவள் முகம் ஏன் அப்படி விகாரமாய் இருந்தது? உதிரத்தில் தோய்ந்து எடுத்தாற்போல் அவள் கண்கள் சிவந்திருந்தன.
“பாத்திமா! உன்னை ஒன்று கேட்க வேண்டும். அதற்குத்தான் இங்கு வந்திருக்கிறேன். சுற்றி வளைக்காமல் உண்மையைக் கூறு. நான் கேள்விப்பட்டது உண்மையா?” புதிர் போட்டான் ஹஸன்.
“கேள்விப்பட்டீர்களா? என்ன கேள்விப்பட்டீர்கள்? கெய்ரோவின் மண்ணில் கிலேபர் என்ற பிரெஞ்சு நாயின் அட்டகாசம் துவங்கப் போகிறது என்றா? இதுவரை இங்கு நடந்த அட்டகாசம் போதாது என்று எண்ணுகிறானா அவன்?..
அவன் குறுக்கிட்டான் – “பாத்திமா! வார்த்தையை அளந்து பேசு. உணர்ச்சி வசப்பட்டு விடாதே! நான் யார் எனபதையும் மறந்து விடாதே!”
”எப்படி மறக்க முடியும்? அதுதான் தெரிகிறதே! எனக்கு மட்டுமல்ல. கெய்ரோவிலுள்ள எல்லோருக்கும் உங்களைப் பற்றித் தெரியும். நீங்கள் கிலேபரின் ஒற்றன் என்பதைப் பால்குடி மறக்காத குழந்தையும் அறிந்து வைத்திருக்கிறது. இதைப் போய் பெருமையாகக் கூறுகிறீர்களே! உண்மையில் இது பெருமைப்பட வேண்டிய செயலல்ல; வருந்த வேண்டிய ஒன்று. பிறந்த மண்ணை அந்நியனுக்குக் காட்டிக் கொடுப்பது பெருமைக்குரிய செயலா? உங்களுக்கு வெட்கமில்லை? இந்தத் தொழிலில் இருப்பதைவிட செங்கடலிலோ நைல் நதியிலோ விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ளலாமே!”
ஹஸன் பல்லைக் கடித்தான்.
“நீ வரம்பு மீறிப் பேசுகிறாய் பாத்திமா! இதன் விளைவு என்னவாகுமோ..”
“என்னவாகப் போகிறது? இனிமேல் ஒன்றும் ஆவதற்கில்லை. என் தந்தைக்கு ஏற்பட்ட கதி எனக்கும் ஏற்படலாம். அவ்வளவுதான். இதற்கு நான் அஞ்சவில்லை.”
“உண்மை! நீ ஏன் அஞ்சப்போகிறாய்? உனக்கு இன்னும் சில தினங்களில் வாழ்வின் துணைவன் கிடைக்கப் போகிறான். மர்தானைக் கணவனாக அடையப் போகிறாய். அவன் இது விஷயத்தில் என்னை விட பாக்கியசாலி. நான் தான் ஏமாந்து விட்டேன், இல்லை, ஏமாற்றப்பட்டு விட்டேன். நீ என்னை ஏமாற்றி விட்டாய்”
ஒரு கணம் பாத்திமா மரமானாள். அவள் முகத்தில் துயரம் படர்ந்தது.
“ஏன் பேசாமலிருக்கிறாய்? ஏதாவது பேசி என் மனதைப் புண்படுத்தேன்! என்னைத் துன்புறுத்துவதற்காகத்தானே நீ பிறந்திருக்கிறாய்!”
பாத்திமா பேசவில்லை. அவள் கண்கள் பேசின; கெஞ்சின – புரியாத மொழியில்.
“பாத்திமா! என்னைப் பார். உன்னை நான் காதலித்தேன். உன்னோடு “இன்பவாழ்க்கை நடத்த ஆசைப் பட்டேன். அந்த நன்னாளை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால் நீ என் ஆசையில் மண்ணைப் போட்டு விட்டாய்; என் கனவைக் குலைத்து விட்டாய்; என் இதயத்தைப் பிளந்து விட்டாய்; போதாததற்கு அந்த இதயப்புண்ணை கிண்டிக் கிளறுகிறாய் எதை எதையோ கூறி! பாத்திமா, நான் விடமாட்டேன். பழியெண்ணம் எனக்கு உண்டாகி விட்டது. உன்னை நான்தான் அடைய வேண்டும். வேறு யாரையும் அடைய விட மாட்டேன்.. உன்னை நான் காதலித்ததற்கு இதுதான் பரிசா? என் காதலை நீ மறுக்கிறாயா?”
பாத்திமாவின் வதனம் வாடிற்று.
“இல்லை, இல்லை. ஒரு போதும் கிடையாது. ஆனால்… ஆனால்.. உங்களிடம் முன்னரே கூறியிருக்கிறேன்..”
“ என்ன கூறியிருக்கிறாய்?”
“ நான் நாட்டுப் பற்றுள்ளவள். நீங்கள்…நீங்கள்..”
“நான் தேசத்துரோகி. அப்படித்தானே?”
அவள் பதிலளிக்கவில்லை. அதற்குப் பதிலாக விம்மினாள். சற்று நேரம் அமைதி. அவள் கண்ணீர் மல்கிய கண்களால் அவனைப் பார்த்தாள்.
“ உங்களிடம் நான் கெஞ்சினேன்; மன்றாடினேன் – கிலேபரிடமிருந்து விலகிவிடுமாறு. ஆனால் நீங்கள் கேட்கவில்லை; என் வேண்டுகோளுக்கு மதிப்பளிக்கவில்லை.”
ஹஸன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். உண்மையத்தான் அவள் கூறினாள். தேசத்துரோகத்தை விட்டுவிடுமாறு. அவள் எத்தனை தடவை கண்ணீருடன் கெஞ்சியிருக்கிறாள்! அவள் கண்ணீர் அவன் உள்ளத்தைத் தீய்த்தது. அவள் வேண்டுகோள் அவன் கல்நெஞ்சத்தைக் கரைத்தது. ஆனால் அந்த உத்தியோகத்தை அவனால் விட முடியவில்லையே! அவனால் அதிலிருந்து எப்படி நீங்க முடியும்? அதற்கு கிலேபர் இடம் தருவானா? கண்டிப்பாய்த் தர மாட்டான். பல்லாண்டுகள் பிரெஞ்சுக்காரர்களின் ஒற்றனாயிருந்த அவனை கொன்றாலும் கொல்வார்களே தவிர வேலையிலிருந்து விலக அனுமதி தர மாட்டார்கள். மனித இனமே சந்தேகத்திற்கு அடிமைப் பட்டதுதான். இந்த நியதிக்குப் பிரெஞ்சுக்காரர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? அவன் வேலையிலிருந்து விலகிவிட்ட பின்னர் அவர்களின் விரோதிகளுக்கே ஒற்றனாக மாறிவிட முடியாதா? கிலேபர் என்ன, அவன் தலைவன் நெப்போலியன் கூட இந்தச் சந்தேகத்திற்குக் கட்டுப்பட்டவன் தான். சந்தேகத்தின் காரணமாக எத்தனை ஒற்றர்களைக் கொன்று குவித்திருக்கிறான்! இப்போது அவன் இங்கு இல்லை. பிரான்ஸ¤க்குத் திரும்பி விட்டான். அவன் புறப்படும்போது படைத்தலைவன் கிலேபருக்குக் கூறிய சில வார்த்தைகளை ஹஸனால் மறக்கவே முடியவில்லை.
நெப்போலியன் படைத்தலைவனைத் தன் அருகில் அழைத்தான். “கிலேபர்! நீ உண்மையோடு நடந்து கொள்வாய் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கைக்குப் பங்கம் ஏற்படாதபடி பார்த்துக் கொள். உன்மீது எனக்கு சந்தேகம் உண்டாகுமாறு எதையும் நீ செய்யக் கூடாது. தெரிந்ததா? நினைவிருக்க்ட்டும்!” என்றான். அவன் கிலேபரை சுத்த அயோக்கியன் என்று எண்ணியிருக்க வேண்டும். அவன் பெண்ணுக்காக தன் கடமையையும் தவறவிடத் தயாராயிருப்பவன் என்று நெப்போலியனுக்குத் தெரியாதோ என்னவோ! நெப்போலியன் இங்கு இருக்கும்போது எகிப்தில் பல கலகங்கள் நிகழ்ந்தன. இது குறித்து ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இப்போது அவன் போய் விட்டான். கிலேபரைத் தன் பிரதிநிதியாக அமர்த்திவிட்டு! நெப்போலியன் போயிருக்க மாட்டான்தான். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் எகிப்தின் மீது தன் ஆட்சியைச் சுமத்த முடியாது என்று அவன் உணர்ந்து கொண்டுவிட்டான். இனிமேல் எகிப்து மண்ணில் எத்தனை தலைகள் உருளப் போகின்றனவோ! எத்தனை மாதரசிகள் கற்பழிக்கப் பட்டுத் தற்கொலையை நாடப் போகிறார்களோ!
“ஏன் பேசாமலிருக்கிறீர்கள்? நான் ஏதேனும் தவறாகச் சொல்லியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதைப் புண்படுத்தும் நோக்கத்துடன் எதையும் நான் சொல்லவில்லை!” என்றாள் பாத்திமா.
ஹஸன் பெருமூச்சு விட்டான். பாத்திமாவின் மீது அவனுக்குள்ள காதல் ஒருபுறம், பிரெஞ்சுக்காரர்களின் அடக்குமுறை மறுபுறம். அவன் வேதனைப் பட்டான். “சரி பாத்திமா! நான் வருகிறேன்” என்றவன் பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் நடக்க ஆரம்பித்து விட்டான்.
சூரியன் உச்சியில் நின்று எரித்தது. சூரியனை விட வேகமாகக் கொதித்தது பாத்திமாவின் உள்ளம்.
அதே தினம் மாலைநேரம். பாத்திமா ஏதேதோ சில சாமான்கள் வாங்கிக்கொண்டு வீடு திரும்ப முற்படும்போது இருள் கவிந்தது. எங்கேயோ ஒரு பள்ளில் ’பாங்கு’ சொல்லப் படும் இனிய குரல் காற்றில் கலந்து மெதுவாகத் தவழ்ந்து வந்தது. பாத்திமாவின் இதயத் துடிப்பு தெளிவாகக் கேட்டது. அவள் உள்ளத்தில் அச்சம் குவிந்தது. மங்கிய ஒளியில் நீண்டவழியில் அவள் நடந்து கொண்டிருந்தாள். கிலேபரின் கற்பனைத் தோற்றம் அவள் மனத்திரையில் பூதம் போல் தோன்றிச் சிரித்தது.
அடுத்து சிறிது நேரத்தில் அவள் மீது பல பூதங்கள் பாய்ந்தன. ஒன்று அவள் வாயைத் தன் கையால் பொத்திற்று. மற்றொன்று அவளைச் செந்தூக்காகத் தூக்கிற்று. அவள் பூதங்கள் என்றுதான் எண்ணினாள். ஆனால் பூதம் இப்படித்தானா நடந்து கொள்ளும்? பிரெஞ்சு மொழி பேசுகிறதே இந்தப் பூதம்..! ஆம், அவர்கள் கிலேபரின் கையாட்கள். பாத்திமாவின் பேரழகைக் கேள்விப்பட்ட அவன் அதை அனுபவிக்கத் துணிந்து விட்டான்!
பாத்திமா பலவந்தமாக தூக்கிச் செல்லப்பட்டாள். அவள் பணம் கொடுத்து வாங்கியிருந்த சில கனிகள் தரையில் விழுந்து உருண்டன. பட்டுப்போன்ற அவள் கூந்தல் மண்ணை முத்தமிட்டது. பாத்திமா பலம் கொண்டமட்டும் அலற எண்ணினாள். அவள் வாயைப் பொத்தியிருந்த முரட்டுக்கரம் அதற்கு இடம் தரவில்லை!
3
நடுநிசி. பலர் குறட்டை விடும் சத்தம் ஒன்றாகச் சேர்ந்து அருவருப்பை உண்டாக்கிற்று. கூடாரத்தின் விளக்கும் அணைந்து விட்டது. பாத்திமா மடியைத் தொட்டுப் பார்த்தாள். ஒருகணம் மகிழ்ச்சி, மறுகணம் இனமறியாத நடுக்கம். அவள் கொலைக்கல்லவா துணிந்து விட்டாள்!
அடிமேல் அடிவைத்து மெதுவாக முன்னேறினாள். அவள் கால்களும் கரங்களும் கடும் குளிரால் தாக்கப்பட்டாற்போல் நடுங்கின. கூடாரத்தின் வாயிலில் காவல் காத்து நின்றவன் , நின்றபடி மெல்லிய குறட்டை விட்டான். அவனுடைய நீண்ட கத்தி தரையில் படுத்துத் தூங்கி கொண்டிருந்தது!
பாத்திமா கிலேபரின் கூடாரத்தை அடைந்து விட்டாள். அன்று ஏனோ வாசலில் யாரும் இல்லை. கத்தியை எடுத்துப் பிடித்துக் கொண்டாள். அவள் உடல் முறுக்கேறியிருந்தது.
இந்த இக்கட்டான நேரத்தில்தான் அந்தப் பயங்கர சம்பவம் நடந்தது. கூடாரத்தினுள் யாரோ அலறினார்கள். அந்த அலறல் தேய்ந்து மறைந்தது. திடீரென்று ரத்தநெடி வீசிற்று. அவள் ஓரடி பின்வாங்குவதற்குள் அவளுக்கு மயக்கம் வந்து விட்டது.
மயக்கம் தெளிந்து கண்ணைத் திறந்ததும் அவள் ஹஸனைத்தான் கண்டாள். அவன்மீது அங்கங்கே ரத்தக் கறைகள் சிரித்தன.
“பாத்திமா! கிலேபரைக் கொன்று விட்டேன். அவன் கூடாரத்தைக் காத்தவன் விலகின நேரம் பார்த்து உள்ளே நுழைவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அவன் தொலைந்தான். இன்றிலிருந்து இந்த வினாடியிலிருந்து நான் புதுமனிதன். இனி நான் பிரெஞ்சுக்காரனின் ஒற்றனல்ல – கெய்ரோவின் தேசாபிமானி!”
பாத்திமாவின் பெரிய கண்கள் அகன்று விரிந்தன. அவற்றிலிருந்து வெற்றியின் அறிகுறியாய் இரண்டு வைர மணிகள் உருண்டு விழுந்தன!

மகா அலெக்ஸாண்டரும் ஒரு மகோன்னத இரவும்


கி.மு 326 ஆம் ஆண்டு, குளிர் உறையும் மாதம் ஒன்றின் நள்ளிரவு, கௌரவனும், நீல்பாண்டேயும் உயரமான குன்றின் மரமொன்றின் கிளையில் ஒட்டியபடி கிடக்கிறார்கள்,நிலவு இவர்களின் தலைக்கு மேலே உலகத்தை உளவு பார்த்துக் கொண்டு மேகங்களின் இடையே மறைந்து கொள்கிறது, பனியும், குளிரும் உடலில் நடுக்கத்தை உண்டாக்கினாலும் கௌரவன் பழகி இருந்தான், பல முறை இதுமாதிரியான சூழலில் பாலைவனங்களில், அடர்ந்த காடுகளில் மாற்று அரசுகளின் நடவடிக்கை குறித்து பேரரசர் போரசுக்கு தகவல்கள் அளிக்கும் பணியை நீண்ட நாட்களாக கௌரவன் செய்து கொண்டிருக்கிறான், கௌரவனுக்கு வயது இருபத்து ஏழு, பாண்டே இன்னும் வயது இளையவன், பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் புதிய உளவுப் படையின் உறுப்பினன், பல்வேறு நம்பிக்கையான பயிற்சிகளுக்குப் பின்பு பாண்டேயை இந்தப் பணியில் தான் இணைத்துக் கொள்வதாக கௌரவன் மன்னரிடத்தில் சொன்ன போது அவர் கொஞ்சம் வியப்படைந்தார், உயரத்திலும், உடல் எடையிலும் மிகச் சிறிய மனிதனாய்க் காட்சி தரும் இவனை ஏன் கௌரவன் தேர்வு செய்தான் என்று? இருப்பினும் அரசருக்குத் தெரியும் கௌரவனின் தேர்வு எப்போதும் சரியானதாய் இருக்கும் என்று, பின்னர் ஒரு நாள் மன்னர் இது குறித்துக் கேட்ட போது கௌரவன் இப்படிச் சொன்னான், “பேரரசே, உருவத்தில் சிறியவர்களே மரங்களில் ஏறுவதற்கும், குறுகலான இடங்களில் ஒளிந்து கொள்வதற்கும் சரியானவர்கள், உடல் எடை குறைந்தவர்களின் பசி பெரிய அளவில் பணிகளில் இடையூறு செய்யாது”.
இன்று இரவு முழுதும் இப்படித்தான் கழியும், அவர்களின் பணி உளவு பார்ப்பது, இருப்பினும் இத்தனை கடுமையான சூழலில் உளவு பார்ப்பது இருவருக்கும் இதுதான் முதல் முறை, ஜீலம் நதிக்கரைக்கு அப்பால் ஒரு சதுப்பு நிலத்தில் திட்டுத் திட்டாய் சில குன்றுகள், யாரும் எளிதில் நெருங்கி விட முடியாத அடர்ந்த வனங்களைச் சுற்றி வளைந்து நெளிந்து இரைச்சலோடு விரைந்து கொண்டிருக்கும் நதியின் ஒலி, இருளை அச்சம் கொள்ள வைக்கிறது, தொலைவில் நகரும் வெளிச்சப் புள்ளிகளை கௌரவன் பார்த்து விட்டான், ஆம், அவை இயல்பாக நகரும் கிராமங்களின் நள்ளிரவுக் கூட்ட விளக்குகளோ, இல்லை நமது படையினரின் பாதுகாவல் விளக்குகளோ அல்ல, வரலாற்றின் பக்கங்களில் எப்போதும் இடம் பிடிக்கப் போகிற ஒரு மிகப் பெரிய போரின் துவக்கப் புள்ளிகள் அவை, வெளிச்சப் புள்ளிகள் மெல்ல நகர்ந்து தொலைவில் வேகம் குறைகிறது, நதியின் இரைச்சலை விழுங்கியபடி தடதடக்கின்றன குதிரைக் குளம்படிகள், உயர்ந்த அந்த மரத்தின் மீது இருந்து கொண்டு மாவீரனும் உலகை வெல்லும் படைகளை வழி நடத்தும் அலெக்ஸாண்டரின் படைகளை முதன் முதலாகப் பார்த்ததில் கௌரவனுக்கு ஒரு விதமான மலைப்பு மேலிடுகிறது, பாண்டேயின் உடல் குளிரில் நடுங்குவதைப் போலத் தெரியவில்லை கௌரவனுக்கு, இருப்பினும் மெல்லிய குரலில் பாண்டேயின் அச்சத்தை நீக்க முயற்சி செய்கிறான் கௌரவன், நமது பேரரசரின் யானைகளுக்கு முன்னாள் இந்தப் படை சின்னஞ்சிறியது என்று சொல்லி விட்டுப் புன்னகைக்கிறான் கௌரவன், கௌரவனின் முகத்தில் புன்னகை வர மறுப்பதை பாண்டே அந்த இரவின் மெல்லிய நிலவொளியில் கண்டு கொள்கிறான், மீண்டும் அமைதி குடி கொள்கிறது இருவரிடத்திலும், தீவட்டிகளின் ஒளியில் நிறுத்தப்பட்டிருக்கும் அந்த மாபெரும் படையை அருகில் காண்பது ஒரு அரிய காட்சி மட்டுமில்லை மிகுந்த ஆபத்தானதும் கூட என்பதை கௌரவன் நன்கறிவான். இருப்பினும் படை குறித்த தெளிவான செய்திகளை அவன் பேரரசர் போரஸ் இடம் கையளிக்க வேண்டும், அந்தச் செய்தியும் அதன் சாரமும் தான் நமது தேசத்தின் வல்லமையை, அதன் மரியாதையை உலகம் உள்ள வரைக்கும் பறை சாற்றப் போகும் அடிப்படை என்பதால் உயிர் பற்றிய துளிக் கவலையும் இருவருக்கும் இல்லை, அவர்கள் ஒரு எழுச்சி பெற்ற மன நிலையில் வாழ்ந்து பழக்கப்பட்டிருக்கிறார்கள், தங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம் என்று அவர்கள் நினைக்கும் ஒரே நிகழ்வு, அவர்கள் பேரரசர் போரசை எந்த நேரத்திலும் எந்தச் சூழலிலும் சந்திக்கும் வல்லமை பெற்றவர்கள் என்பது தான்,
பலம் பொருந்திய அரேபியக் குதிரைகள், கம்போளினக் குதிரைகள் என்று முன் வரிசையில் கம்பீரமாகத் தலையசைத்தபடி குன்றுகளின் கீழிருக்கும் சம வெளியை அடைகிறது மாவீரன் அலெக்ஸாண்டரின் படை. அவை முதன் முதலாய் ஆசியாவின் ஒரு நிலப்பகுதிக்குள் நுழைகின்றன. ஏறக்குறைய 35,000 காலாட்படை வீரர்கள், 10,000 குதிரை வீரர்கள் பல ஆயிரம் கிலோ மீட்டர்களைக் கடந்து ஆசியாவுக்குள் நுழைகிறார்கள், ஏறத்தாழ ஒரு நகரம் இடம் பெயர்ந்து வருவது மாதிரியான நிகழ்வு, போரிடும் படைகளைத் தவிர படைகளுக்கு உணவு தயாரிக்கும் பணியாளர்கள், படையினரை உற்சாகம் செய்ய வந்திருக்கும் கலைஞர்கள், வழியில் வெற்றி கொண்ட நாட்டின் அடிமைகள், நிலப்பரப்பு குறித்த அறிவு மிகுந்த புவியியல் அறிஞர்கள், அலெக்ஸாண்டரின் தனி ஆலோசனைக் குழு, தளபதி கிரேடோரஸ், ஆறுகளைக் கடக்க உதவும் படகுகள், ஏனைய ஆயுதங்களைத் தாங்கி வரும் தனிப் பணியாளர்கள், இவர்கள் எல்லாம் சேர்ந்து 50,000 தென்கிழக்கு ஐரோப்பிய மனிதர்கள், நெடிய உயரமும், உயர்ந்த தோள்களும், வெளுத்த தோலும் கொண்ட மொழியறியாத மனிதர்கள், கௌரவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை, உடனடியாக மன்னரிடத்தில் தகவல்களைச் சொல்லி விட வேண்டும், இந்தப் இடப்பெயர்வு ஏனைய இடப்பெயர்வுகளைப் போல எளிதாகக் கையாளப்பட இயன்றது அல்ல, மிகுந்த கவனத்தோடும், சிரத்தையோடும் அணுக வேண்டிய ஒரு நிகழ்வு.
அடுத்த ஒரு மணி நேரம் மிகக் கவனமாக கண்களால் குறிப்பெடுக்கிறான் கௌரவன், நிலவைப் பார்த்து நேரத்தைக் கணிக்கிறான் பாண்டே, நள்ளிரவு கடந்து இரண்டு மணி ஆகி இருக்க வேண்டும், பாண்டேயும் பணியில் இணைந்து கொள்கிறான், கீழே குனிந்து மரத்தின் நிழலைப் பார்க்கிறான் கௌரவன், மரக்கிளைகளின் நிழலில் சிதறிக் கிடக்கும் நிலவொளி, தவளை ஒன்றை விரட்டிச் செல்லும் அரவம், இவை தவிர வேறொன்றும் இல்லை. இன்னும் ஒரு மணி நேரம் இருந்து விட்டு மெல்ல நகர வேண்டும், தவழ்ந்து தவழ்ந்து சமவெளிக்குச் செல்ல வேண்டும், சமவெளியில் இருந்து சரியும் மணல் பள்ளத்தின் வழியாக ஆற்றுக்குள் குதித்து மெல்லோராவில் கரை ஏற வேண்டும் என்பது தான் கௌரவனின் திட்டம், அடுத்த அரை மணி நேரத்தில் அரவம் துரத்திச் சென்ற தவளையின் கதறல் மழைக் குன்றுகளில் பட்டு எதிரொலிக்கிறது, அரவம் வெற்றிகரமாய் தனது இரையை ஆட்கொண்டு விட்டது, இந்த மாபெரும் தேசத்தின் கரைகளில் யாரும் அறியாமல் ஒரு மிகப்பெரிய ஆற்றல் பொருந்திய அரவம் கூடாரம் அடித்திருக்கிறது, இந்த அரவத்தின் வரவு நாட்டின் எதிர்காலத்துக்கும், பேரரசரின் ஆட்சிக்கும் அத்தனை நல்ல காலம் இல்லை என்பதை அந்த எளிய ஒற்றர்கள் இருவரும் அறிவார்கள், ஆயினும், தங்கள் கடமைகளில் அவர்கள் கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள்.
கௌரவனுக்கு இப்போது ஏதோ பொறி தட்டியது, வித்தியாசமான ஒலிகளை அந்த இரவில் அவன் கேட்கிறான், பாண்டேயைக் கீழே இறங்கி தப்பிச் செல்லுமாறு சொல்கிறான், ஆபத்துக் காலங்களில் பயிற்சியில் இருக்கும் இளையவர்களைத் தப்ப வைப்பதே சிறந்த உளவு முறை என்கிற எளிய போர்முறையை கௌரவன் நன்கறிவான், பாண்டே மலைச்சரிவில் முன்னரே கட்டி வைக்கப்பட்டிருந்த கயிற்றின் உதவியோடு சறுக்கியபடி தப்பி விட வேண்டும், பிடிபடும் நிலை உண்டானால், கௌரவன் பிடிபட்டு கூடுதல் தகவல்களை மன்னருக்குக் கொண்டு சேர்க்க முடியும், அருகில் சென்று படைகளை அவற்றின் ஆற்றலை உளவு பார்க்க முடியும் என்பதே அவனது திட்டமாக இருந்தது, குதிரைக் குளம்படிகள் மலைச்சரிவில் நெருங்கி வரும் ஓசையை ஒரு விதமான குழப்பத்தோடு கவனிக்கிறான் கௌரவன், ஒரு மரப் பல்லியைப் போல கிளைகளில் ஒட்டியபடி.அதிகமான குதிரைகள் இல்லை, மூன்றே குதிரைகள், குதிரைகளின் செந்நிற உரோமம் நிலவொளியில் பட்டு வெள்ளிக் கம்பிகளைப்போல மின்னுகிறது, ஒரு தேவதையின் கூந்தலைப் போல வாலில் செதுக்கப்பட்டிருக்கும் குதிரைகளின் கூந்தல் படைகளை அலெக்ஸாண்டர் எவ்வாறு உயிர்ப்போடு வைத்திருக்கிறான் என்பதை கௌரவனுக்கு அறியத் தருகின்றன. மரத்தின் அடியில் குதிரைகள் கணைக்கும் ஒலி மட்டுமே கேட்கிறது, அறியாத நீட்டி முழக்காத குறுகிய சொற்றொடர்களால் ஆன மொழியில் அங்கொரு உரையாடல் கேட்கிறது, இருவர் பேசி முடித்த பின்னர் கௌரவனின் மொழியில் அதட்டல் குரல் ஒன்று அவனை நோக்கி வருகிறது.
“கீழே இறங்கு, தப்பிக்க எண்ணாதே, உன்னை மேன்மை பொருந்திய மாமன்னர் அலெக்ஸாண்டர் பார்த்து விட்டார்”.
குறு வாளைக் கையில் ஏந்தியபடி கீழே குதிக்கிறான் கௌரவன், தாக்குதல் நடத்தித் தப்பிக்கலாம் அல்லது தன்னையே அழித்துக் கொள்ளலாம் என்கிற எண்ணம் கௌரவனிடத்தில் மேலோங்கி இருக்கிறது, தன்னிடம் இருந்து எந்தத் தகவலையும் அலெக்ஸாண்டர் அறிந்து கொள்ளக் கூடாது, அது தனது தேசத்தின் அழிவுக்கு வழி வகுக்கும் என்கிற வீர உணர்வு அது. கீழே குதித்த மறு நொடி கௌரவனின் கைகளை மடக்கிப் பிடிக்கிறது வலிமை மிகுந்த மாவீரன் அலெக்ஸாண்டரின் கரங்கள், உடனடியாகக் குறுவாள் பிடுங்கி எறியப்படுகிறது,
விலங்குகளால் பூட்டப்படுகின்றன கௌரவனின் கைகள். நிலவொளியில் ஜொலிக்கும் அந்த மிகப் பெரிய வீரனின் கண்களை நேருக்கு நேர் சந்திக்கிறது கௌரவனின் கண்கள், அந்தக் கண்களில் அறிவுப் பேரொளி படர்ந்து கிடக்கிறது, உலகை வெல்லும் அவன் கனவின் வீரியம் காட்சியாய் விரிந்து கிடக்கிறது கௌரவனின் கண்களில், அந்தக் கண்களை நேருக்கு நேர் சந்திக்கும் ஆற்றலை கௌரவன் வரவழைத்துக் கொள்கிறான், அலெக்ஸாண்டர் சில கேள்விகளை கௌரவனை நோக்கி வீசுகிறான், அது மொழி பெயர்க்கப்படுகிறது அந்த நள்ளிரவில், உனது அரசனின் படை பலம் என்ன? அவனிடத்தில் இருக்கும் யானைகளின் எண்ணிக்கை எவ்வளவு? தேர்ப்படையின் முக்கியத்துவம் என்ன? என்பது மாதிரியான வழக்கமான கேள்விகள் இல்லை அவை, நீ என்னுடன் இருக்க ஒப்புக் கொள்கிறாயா? என்பது தான் அலெக்ஸாண்டரின் முதல் கேள்வி, உயிர் இருக்கும் வரை மாட்டேன் என்பது கௌரவனின் பதில், எனது படையினரின் வருகை உன் மன்னனுக்கு எப்படி முன் கூட்டியே தெரியும், இந்தச் செய்தியை உனது மன்னனுக்குச் சொன்னது யார்? இது இரண்டாவது கேள்வி, மௌனம் ஒன்றே பதிலாக வருகிறது கௌரவனிடம் இதற்கு, மூன்றாவது கேள்வி உன்னோடு இங்கே இருந்த இன்னொரு மனிதன் எங்கே? மூன்றாவது கேள்வி மரத்தடியில் படிந்து கிடக்கும் காலடித் தடங்களை நிலவொளியில் உற்று நோக்கியபடி வருகிறது அலெக்ஸாண்டரிடம் இருந்து, அவன் தப்பிச் சென்று விட்டான் என்று துணிவோடு சொல்கிறான் கௌரவன்.
“நீ இந்த உலகத்தின் மிகப் பெரிய வீரனிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என்கிற அச்சம் உன் கண்களில் காணக் கிடைக்கவில்லை” என்கிறான் அலெக்ஸாண்டர், “நான் உன்னிலும் மிகப் பெரிய வீரனிடம் பணியாற்றுகிறேன்”, “உன்னை வெற்றி கொண்டு இந்த தேசத்தின் வீர வரலாற்றை உன் குதிரைகளின் குழம்புகளில் முத்திரையாகப் பதிக்கப் போகும் போரஸின் உளவுப் பிரிவுத் தளபதி நான்” என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறான் கௌரவன். அலெக்ஸாண்டர் குதிரையில் இருந்து கீழே குதிக்கிறான், அவனது வாளை அகற்றி அருகில் இருக்கும் படை வீரனிடம் கொடுக்கிறான் அலெக்ஸாண்டர், நெருங்கி மிக அருகில் வருகிறான் அலெக்ஸாண்டர், கௌரவனின் தோளில் தனது கையை வைத்து அழுத்தி அவனது உரையாடலை ஆமோதிக்கிறான் அலெக்ஸாண்டர், நான் வீரர்களை நேசிக்கிறேன், நான் வீரர்களோடு போரிடவே விரும்புகிறேன், உனது மன்னன் ஒரு தூய்மையான வீரனாய் இருப்பான் என்கிற நம்பிக்கை எனக்கு இப்போது இருக்கிறது, உன்னையே என் தூதுவனாய் அனுப்புகிறேன், நான் போரஸின் வீரத்தோடு போரிட வந்திருக்கிறேன் என்று அவனிடம் போய்ச் சொல், இந்தியாவை வெற்றி கொள்ள வேண்டும் என்கிற என் தந்தை பிலிப்பின் கனவுகளை என் கூடவே அழைத்து வந்திருக்கிறேன், அந்தக் கனவுகள் தான் என்னை வழி நடத்துகின்றன என்று உனது அரசனிடத்தில் போய்ச் சொல். உயிர் மீது அச்சம் இருந்தால் பரிசுப் பொருட்களை அனுப்பி என்னை வரவேர்க்கச் சொல், இல்லையென்றால் போருக்கான உங்கள் இந்தியச் சங்கை என் செவிப்பறைகளில் செலுத்தட்டும் உனது மன்னன்” சொல்லி விட்டுப் புன்னகைத்தான் அலெக்ஸாண்டர்.
விலங்குகளை அவிழ்த்து விடுமாறு அருகில் இருந்த படை வீரனிடத்தில் கண்களால் சொல்கிறான் அலெக்ஸாண்டர், கௌரவனுக்கு உடல் ரோமங்கள் சிலிர்த்துக் கொண்டன, மரியாதை செய்யும் வண்ணம் முழங்காலைத் தாழ்த்தி வணக்கம் சொல்கிறான் கௌரவன், அது ஒரு வீரனுக்குரிய வணக்கம், ஆயுதங்கள் அற்ற மனிதர்களை அவமதிக்காத எவனும் வீரன் என்று போரஸ் அடிக்கடி சொல்வது கௌரவனின் காதுகளில் பட்டு எதிரொலிக்கிறது. அலெக்ஸாண்டர் தனது குதிரையின் கழுத்தில் கையை வைத்தபடி அதன் கண்களைக் கூர்ந்து கவனிக்கிறான், கழுத்துக் கூந்தலுக்குள் தனது விரல்களை நகர்த்தி குதிரையை அவன் வருடிக் கொண்டிருக்கிறான், அவனது குதிரை கணைத்தபடி முன்னங்கால்களை உயர்த்தி குளம்புகளைத் தரையில் மோதுகிறது. பயணிக்க அவன் தயாராகி விட்டதை குதிரைக்கு முன்னரே உணர்த்தி விட்டான் அலெக்ஸாண்டர், அந்த மலைக் குன்று ஒரு முறை ஆட்டம் கண்டது போலிருக்கிறது, குதித்து ஏறுகிறான் அலெக்ஸாண்டர் தனது குதிரையில், குதிரை ஒரு முறை திரும்பி வேகத்தைக் கூட்டுகிறது, மலைச்சரிவில் பயணிக்கும் அந்த மாவீரனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் கௌரவன்.
இப்போது கௌரவனின் மனத்திரையில் தெளிவாக ஒரு செய்தி உணர்த்தப்படுகிறது, நமது தேசம் தோல்வியை முதல் முறையாகச் சந்திக்கப் போகிறது, இந்த மாவீரன் வெறும் உடல் வலிமையை நம்பி இத்தனை தொலைவு பயணம் செய்திருக்கவில்லை, இவன் தனது அறிவையும், திட்டமிடுதலையும் நம்பிச் செயல்படுகிறவன், படைகளை நிலை நிறுத்துகிற அதே இரவில் உளவாளிகள் குறித்த இந்திய மரபுகளை இவன் அறிந்து கொண்டிருக்கிறான், எதிரியின் உளவாளி ஒளிந்திருக்கிற பழக்கப்பட்டிராத நிலப்பரப்பின் மலைக் குன்றை நள்ளிரவில் அவனே அடையாளம் காண்கிறான் என்றால் இவன் நமது நிலப்பரப்பு குறித்த ஆழ்ந்த அறிவை முன்னரே தயார் செய்திருக்கிறான், ஆழ்ந்த கனவுகளின் மீது கட்டப்பட்டிருக்கும் நம்பிக்கையை ஆயுதமாய்க் கொண்டிருக்கும் இவனிடம் போர் குறித்த அச்சமோ அவநம்பிக்கையோ இல்லை. போரிடப் போகிற நிலப்பரப்பின் மொழியை அந்த மொழி பேசும் மக்களை இவன் முன்னதாகவே அறிந்து வைத்திருக்கிறான்.ஒவ்வொரு படை வீரனிடம் மாவீரன் அலெக்ஸாண்டருக்கு இருக்கும் நெருக்கத்தை அவனது குறிப்புகள் உணர்த்துகின்றன, இரவிலும் காலடித் தடங்களை வைத்து அங்கே இன்னொரு மனிதன் இருந்தான் என்பதை உணரும் அவனது கூர்மையான பார்வை விரிந்து பரந்த அவனது அறிவை உணர்த்துகிறது. கூடவே ஆயுதங்கள் அற்ற மனிதர்களிடம் தனது வீரத்தை எடுத்துரைக்கவும், பறை சாற்றவும் அவனது கைகள் எப்போதும் தயங்குகின்றன. உயிரை உறைக்கும் குளிர் காற்றின் வீச்சை வலிமை மிகுந்த அவனது தோள்கள் சட்டை செய்யவே இல்லை, இயற்கையோடு பேசுகிற, குதிரைகளை சிலிர்க்க வைக்கிற போர்க் கலைகளை அலெக்ஸாண்டர் சிறுவனாய் இருக்கும் போதே கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும் என்பதை அவனது குதிரையில் கால்கள் உணர்த்துகின்றன.
மெல்ல நடக்கிறான் கௌரவன், வழக்கமான தனது குறிப்புகளை பேரரசரின் கைகளில் ஒப்படைக்க வேண்டும், தன்னால் இயன்ற உளவுக் குறிப்புகளைக் கொண்டு மன்னரின் திட்டமிடுதலை வலிமை செய்ய வேண்டும், ஜீலம் நதியின் கரைகளை நோக்கி கௌரவன் நடந்து கொண்டிருக்கையில் அலெக்ஸாண்டர் தனது படுக்கையில் புரள்கிறான், உளவு வேலை செய்யும் ஒரு மனிதனின் கண்களில் காணக் கிடைத்த துளியும் அஞ்சாத வீரத்தில் தான் இந்த தேசம் வெற்றி அடைந்திருக்கிறது, போரஸ் அத்தனை எளிதாக வெற்றி கொள்ளப்படுகிற மன்னன் இல்லை என்பதை உணர்ந்தபடி திட்டங்களை நோக்கித் தன் கனவுகளை விரட்டி விட்டு உறங்கச் செல்கிறான். சூரியன் இரவில் நடந்த எந்த நிகழ்வும் தனக்குத் தெரியாது என்கிற அசட்டையில் மெல்ல எழும்பி மேலே வருகிறான். அலெக்ஸாண்டரின் காலடித் தடங்களை வரலாறு தன்னுள் ஏந்திக் கொள்கிறது. ஜீலம் நதி வழக்கம் போலவே இரைச்சலோடு ஓடிக் கொண்டிருக்கிறது, வரலாற்றைத் தன் கரைகளில் அலையடித்தபடி………..
************************************************************************************