Wednesday, 27 June 2018

பெண் பிறவி

பெரும்பாலும் ஒரே மாதிரியான சிறிய ரெட்டைத் திண்ணைகளும், திண்ணையின் மேலிருந்து சரியும் தாழ்வார ஓட்டு முகப்பை இரண்டு மரத்தூண்களும் தாங்கிக்கொண்டிருக்கும் படியான வளைவான செருகு ஓடு வேயப்பட்ட வீடுகள் இருக்கும் பழைமையான தெருவுக்குள் அந்த வாகனம் நுழைந்தது. எல்லா வீட்டின் முற்றங்களிலும் விடுபடாமல் நெளிவு நெளிவான வெள்ளை நிறக் கோலங்கள் இருந்தன. பாலாமணி கையைக் காட்டி, கோலமிடப்படாத இடதுபக்க வீட்டின் முற்றத்தில் வாகனத்தை நிறுத்தச் சொன்னான். வெளியே வயதான நான்கைந்து ஆண்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.

இறங்கி, வண்டியின் முகப்பைத் தெருவிலிருந்து வெளியேறும் பாதை நோக்கித் திருப்பி நிறுத்துமாறு ஓட்டுநரிடம் சொன்னான். பாலாமணியின் ஒரு கையில் கறுத்த கோழியும், மறு கையில் அரசு முத்திரை பதிந்த ஓரிரு காகிதங்களும் இருந்தன. வீட்டுக்குள் நுழையப் போனவனை நிறுத்தி ஒரு பெரியவர் சொன்னார்,

``ஏன்டா பாலாமணி, நீயாவது அவகிட்ட சொல்லக் கூடாதா? ஏற்கெனவே அஞ்சாறு வருஷம் படுக்கையில கிடந்த உடம்பு. அவ்வளவு தூரம் தாங்காதுடா. பூரணிகிட்ட சொல்லு. சட்டுபுட்டுன்னு இங்கேயே எல்லா ஈமக் காரியத்தையும் முடிச்சுடலாம்.’’
46p1_1527502499.jpg
``நீங்க செத்த நேரம் கம்முனு இருங்க மாமா’’ என்றவாறு வீட்டுக்குள் நுழைந்தான். மாதவனின் இறந்த உடலின் தலைமாட்டில் பாந்தமாய் சிறிய திரி நாவிலிருந்து விளக்கு ஒன்று சுடர்விட்டுக்கொண்டிருந்தது.

பழைமையான மூன்று கட்டு வீடு. நடுக்கட்டில் கிடத்தியிருந்தார்கள். அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து வயதான பெண்கள் சிலர், பாலாமணியின் மனைவி, அவரின் இரண்டு பெண் குழந்தைகள், வீட்டின் நுழைவாயிலில் திண்ணையில் நான்கைந்து ஆண்கள் அவ்வளவுதான் கூட்டம்.

பூரணி, பாலாமணியைப் பார்த்ததும் கேள்விக்குறிபோல் முகத்தை வைத்து அவனைப் பார்த்தாள். அவன் வீட்டின் சமையல்கூடத்துக்கு அவளை வரச்சொல்லி சைகை காட்டிவிட்டு, முன்னால் போனான். இடுப்பில் சுற்றியிருந்த மங்கிய மஞ்சள் நிறப் பையிலிருந்து பணத்தை எடுத்து அவளிடம் கொடுத்தான் .

``நாலஞ்சு இடத்துல அலைஞ்சுட்டேன். பிணத்தை ஏத்திக்கிட்டு வாரணாசி வரைக்கும் வர, எந்த ஆம்புலன்ஸ் வண்டியும் தயாரில்லை. வர ஒப்புக்கிறவனும் நோக்கத்துக்கு வாடகை கேட்கிறான். இந்த வண்டிக்காரன் மட்டும்தான் ஒப்புக்கிட்டான். வாடகை குறைச்சல்தான். ஆனா, வண்டி கொஞ்சம் பழசு. பின்னாடி குளிர்ப்பதனமெல்லாம் நல்லாவே வேலைசெய்யுது. மூணு, நாலு நாள் ஆனாலும் உடம்பு தாங்கும். கெடாது. அவன்கிட்ட கேட்டுட்டேன். `மூணாம் நாள் சாயங்காலத்துக்குள்ள போயிடலாம்’னு சொன்னான்.’’

பூரணி அவனைப் பார்த்தபடி இருந்தாள்.

``இந்தா...’’ கையில் இருந்த அரசு முத்திரைக் காகிதத்தைக் கொடுத்தான். ``அவ்வளவு தூரம் எடுத்துட்டுப் போறச்ச, வழியில போலீஸ்காரங்க மறிச்சு ஏதாவது கேட்க வாய்ப்பிருக்கு. அதான் கவர்ன்மென்ட் டாக்டரைப் பிடிச்சு `டெத் சர்ட்டிஃபிகேட்’ வாங்கிட்டு வந்தேன். பத்திரமா வெச்சுக்கோ.’’
வாங்கிக்கொண்டாள்.

தலையைத் திருப்பிக் காசிப்பானையைப் பார்த்தவாறு சொன்னான், ``மன்னிக்கணும் பூரணி என்னால வர முடியலை.’’

அவளின் உதடுகள் நீர் படாமல் உலர்ந்து ஒட்டிக்கொண்டு பிரிய முடியாமல் பிரிந்தன. `` பரவால்ல...’’ அவ்வளவுதான் பேசினாள்.

பாலாமணி, பூரணியின் பெரியம்மா மகன். சகோதரன் உறவு. ஓரிரு வயதுதான் அவளினும் குறைவாய் இருக்கும். பூரணிக்கு நாற்பதை நெருங்கும் வயது. குழந்தைப்பேறில்லை. உறவினர்கள் யாரும் அவளோடு பெரிதாகப் புழக்கத்திலில்லை. காண்போரிடமெல்லாம் பூரணி பணம் கேட்பாள் என்பதுதான் அவர்களின் பெரும்பாலான குற்றச்சாட்டு. ஓரளவுக்கு அது உண்மைதான். இப்போதுகூட மாதவனின் இறப்புக்கு அதிகம் பேர் வராததற்குக் காரணம் அதுவாகத்தானிருக்கும்.

படுக்கையில் விழுவதற்கு, ஆறேழு வருடத்துக்கு முன்னர் வரை மாதவன் கும்பகோணம் விசாலம் சிட்ஸில் உதவி மேலாளராக வேலைபார்த்தான். கைநிறைய சம்பளம். வேலைப்பளு எனக் காரணம் சொல்லி, மெள்ள குடிப்பழக்கத்தையும் சீட்டாட்டத்தையும் தொடங்கினான். வாரக் கடைசியில் மீனாட்சி லாட்ஜில் அறை எடுத்து இரவெல்லாம் குடியும் சீட்டாட்டமும் தொடர்ந்தன. அப்போதெல்லாம் சனிக்கிழமை மாலை தொடங்கும் ஆட்டம், ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை நீளும். ஒருசிலர் மட்டும் வீட்டுக்குப் போய்த் தலையைக் காட்டிவிட்டு வந்து ஆட்டத்தைத் தொடர்வார்கள். மாதவனுக்கு இரவு வேலை. `கணக்கு முடிக்க லேட்டாகிவிட்டது’ எனக் காரணம் சொல்வான். பூரணி கொஞ்சம் கடுமை காட்டத் தொடங்கியதும், மதுவாடை போன பிறகு லாட்ஜிலிருந்து அதிகாலை கிளம்பி உறக்கக் கலக்கத்தோடு வீட்டுவாசலைத் தட்டி நிற்பான்.
ஒருநாள் அதிகாலையில் மதுபோதையோ, உறக்கக் கலக்கமோ அல்லது ரெண்டும் கலந்துமா எனத் தெரியவில்லை, வீட்டுக்கு வரும் வழியில் விபத்தாகி ரத்தக்காயத்தோடு கிடந்தான். எதிலோ மோதியோ அல்லது எதுவும் மோதியோ தெரியாது, விபத்தில் தண்டுவடம் உடைந்துவிட்டது. உயிரை மீட்டெடுக்கப் பெரும்பொருட்செலவு.

மாதவனின் அலுவலகத்தில் சொற்பமாகப் பணம் கொடுத்தார்கள். வீட்டில் சமீபத்திய சேமிப்பு என்று பெரிதாக ஒன்றும் இல்லை. கையில் இருந்த கடைசி நகை வரை விற்றும் மருத்துவச் செலவு அடைபடவில்லை. அப்போது ஆரம்பித்ததுதான். உறவினர்களிடம் கடன் கேட்கத் தொடங்கியது. எவ்வளவு செலவு செய்தாலும் மாதவனை முழுதாய் மீட்க முடியவில்லை. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புகையில், ``இனி கழுத்துக்குக் கீழ் நிரந்தரமா இயக்கமிருக்காது. மீதி வாழ்நாளை படுக்கையில்தான் கழிக்க முடியும். வேறு வாய்ப்பில்லை’’ என்று சொல்லிவிட்டார்கள் மருத்துவர்கள்.

வீட்டுக்குத் தூக்கிவந்துவிட்டாள். மாதவனின் வயதான பெற்றோர், இவளைத்தான் குறை சொன்னார்கள். ``ஆரம்பத்திலேயே குடிப்பதை அறிந்து கண்டிப்பாக நடந்திருந்தால், இப்படி நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை’’ என்று சொல்லிவிட்டு, அவளை அப்படியே கைவிட்டு விட்டுக் கிளம்பிவிட்டார்கள். ஏறக்குறைய எல்லா உறவினர்களுமே எந்த மாற்றமும் இல்லாமல் அப்படித்தான் செய்தார்கள். அதன் பிறகு இப்போது வரை யாரும் இந்த வீட்டுக்கு வருவதில்லை. பாலாமணி மட்டும் அடிக்கடி வந்து பண உதவிகள் செய்தான்.

ஆரம்பத்திலெல்லாம் மாதவன் பூரணியைப் பார்த்துக் கண்ணீர் வடிப்பான். தன்னால்தான் பூரணியின் வாழ்வு இவ்வளவு மோசமான நிலையை அடைந்துவிட்டதாகப் புலம்புவான். திறந்த மனதோடு அவளிடம் மன்னிப்பு கேட்பான். அதுவும் சிறிது நாளைக்குத்தான். பிறகு அவனும் ``நீ ஆரம்பத்திலேயே என்னைக் கண்டுகொள்ளாமல் விட்டதால்தான் நான் இப்படியான நிலையை அடைந்து விட்டேன்’’ என, புகார் கூறத் தொடங்கினான். பூரணி எப்போதும்போல் எதுவும் பதில் பேச மாட்டாள். மௌனமாய் ஓரிரு துளி கண்ணீர் வடிப்பு. அவ்வளவுதான், அங்கிருந்து நகர்ந்துவிடுவாள்.

எது என்னவானாலும் மாதவனை அதிகாலையிலேயே குளிப்பாட்டிவிடவேண்டும். பிறகு நல்ல வெளுத்த வேட்டியை உடுத்திவிட்டு… கிழக்கு திசைக்கு அவனைக் காட்டி நெற்றியில் திருமண் இடச் சொல்லுவான். இயக்கமற்றுத் துவண்டு கிடக்கும் கரங்களை அவளிடம் சொல்லி அள்ளி எடுத்து ஒருசேர வைத்து சுவாமிகளின் திரு உருவப் படங்களை நோக்கி ஒரு கும்பிடு, விஷ்ணு சகஸ்ரநாமம், பிறகு சில மந்திர உச்சரிப்புகள், அதன் பிறகுதான் உணவூட்டச் சொல்வான். இறுதியில் மருந்திட்டு அவனைக் கிடத்துவாள். இடையில் சிறுநீர், மலம் கழிக்க வேண்டுமென்றால், கத்தி அழைப்பான். பூரணிதான் அள்ளிப்போட்டுவிட்டுத் துடைத்தெடுப்பாள்.

பூரணி தனது கடமையாக நினைத்து எல்லாவற்றையும் சரியாக எந்த முகச்சுளிப்பும் எரிச்சலும் இல்லாமல் செய்து வந்தாள். மாதவன்தான் எதற்கெடுத்தாலும் நொட்டை சொல்லிக்கொண்டிருப்பான். உப்புச் சேர்மானம் சரியில்லை என உணவை அவள் முகத்தில் துப்புவான். பூரணியை வீட்டின் நிலைப்படி தாண்ட விடமாட்டான். மளிகை, காய்கறி என எதற்கும் கடைவீதிக்குப் போக விட மாட்டான். போனவள் திரும்ப வீடு வர மாட்டாள்; தன்னை இப்படியே விட்டுவிட்டு, வேறு யாருடனோ பேருந்து ஏறிவிடுவாள் என பயம்கொள்ளத் தொடங்கினான். எந்தப் பொருள் என்றாலும் மளிகைக் கடையில் சொல்லி வீட்டில் எடுத்து வந்து சேர்க்கும்படி சொல்லச் சொல்வான்.

மளிகைக்கடையிலிருந்து பொருள்கள் கொண்டுவருபவன் இளம் வயதினனாய் இருந்துவிட்டால் அவ்வளவுதான். நிமிடத்துக்கு ஒருமுறை அவள் தன் கண்முன்தான் இருக்கிறாளா எனச் சோதித்துக்கொண்டே இருப்பான். அவன் கண்களிலிருந்து ஐந்து நிமிடம் அவள் நகர்ந்தால் போதும். ``எவனோடு படுத்த? என்னால முடியலைன்னுதானே இப்படிப் பண்ற?’’ என்று கத்திக் கூப்பாடுபோடுவான். ஊரிலிருக்கும் அத்தனை கடவுளையும் கூப்பிட்டு ``என்னை ஏன் இப்படி ஆக்கிட்ட. பகவானே, வேகமா என்னை எடுத்துக்கோ’’ என்று அழுது அரற்றுவான். பூரணியின் சிவந்த நிறமும் இளமையும், அவனது இயலாமையையும், கையாலாகாத்தனத்தையும் உறுத்திக் கொண்டேயிருக்கும் .
உறவுகளில் பாலாமணி ஒருவன்தான் இவளுக்குப் பல வகைகளிலும் உதவியாக இருப்பவன். மாதவன், பல நேரங்களில் பாலாமணியையும் இவளையும் இணைத்துப் பேசுவான். ``நீ இவ்வளவு அழகா இருப்பதால்தான் அவன் உனக்குப் பணம் அளிக்கிறான்’’ என்று வாயும் மனதும் கூசாமல் பழிபோடுவான். பாலாமணிக்குத் தெரிந்து, அவன் ``இந்த ஆளை விட்டுவிட்டு, என் வீட்டுக்கு வா’’ என்று கோபமாய் ஏசினான். மறுத்துவிட்டாள்.  சில நேரத்தில் சொற்களால் அனுதினமும் தன்னைச் சாகடிக்கும் இவனை, கழுத்தை நெரித்துக் கொன்றுவிடத் தோன்றும் அவளுக்கு.
பூரணியிடம் இப்போதெல்லாம் உடல் முழுக்க இறுக்கமும் பெரும் அமைதியும் குடிகொண்டுவிட்டன. மோசமான சொற்களைக் கேட்டுக் கேட்டு அவளின் உடல் இறுக்கமான கற்களைப்போன்று மாறிவிட்டது. ஆனால், காதுகள் மட்டும் நெகிழ்வான சதைத் துளையாய் இருக்கிறதாய் உணர்கிறாள். எவ்வளவு முயன்றும் அதுமட்டும் கல்தன்மைக்கு மாறாமல் இருக்கின்றன. அதுவும் அப்படியாக மாறிவிட்டால், எந்தச் சொல்லும் தன்னைக் காயப்படுத்தாது என நம்பத் தொடங்கினாள். மாதவனின் வைத்தியத்துக்கு என, சுற்றி இருந்த அத்தனை மனிதர்களிடமும் கடன் வாங்கிவிட்டாள். பாலாமணியிடமும் கணக்கு வழக்கில்லை. இப்போதெல்லாம் அவன் வீட்டுக்குள் வருவதில்லை. வாசலிலேயே பணத்தைக் கொடுத்துவிட்டு நிமிடத்துக்குள் கிளம்பிவிடுவான்.

ஐந்தாறு வருடமாய் படுக்கையில் கிடந்து மாதவனின் உடல் மிகவும் தேய்மானமாகிவிட்டது. கைகளும் கால்களும் சூம்பி, தலை மட்டும் பருத்துத் தெரிந்தது. இறுதியாக சேஷாத்திரி டாக்டர்தான் சொன்னார், ``இன்னும் சொற்ப வாழ்நாள்தான். மூணு மாசம்கூட அதிகம். எந்த ஒளிவுமில்லாமல் மாதவனின் முன்னால்வைத்தே சொல்லிவிட்டார். மாதவன் ஓங்கி ஓங்கி அழுதான். வாழ பிரயாசை கொண்டவனைப் போல் அரற்றினான். தாரை தாரையாய்க் கண்ணீர்விட்டான். பூரணியின் காது கொஞ்சமாய் கல்லின் தன்மைக்கு மாறிவிட்டது போல. எந்த அதிருப்தியும் இல்லை; திருப்தியும் இல்லை.

ஓர் அதிகாலையில் நீராடிவிட்டு சுவாமியை வழிபட்டு முடிந்ததும் பூரணியிடம் கேட்டான், ``பூரணி, எந்த ஜென்மத்தின் கடனோ நீ எனக்காக நிறைய செஞ்சுட்ட. பார்த்த இடத்துலலாம் கடன் வாங்கி வைத்தியம் பண்ணிட்ட. கடைசியா எனக்காக இந்த ஒண்ண மட்டும் செஞ்சுடு.’’ பூரணி `என்ன?’ என்பதுபோல் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். ``எனக்கு அடுத்த பிறப்பு வேண்டாம். வேதத்தையும் சாஸ்திரத்தையும் நம்புறவனா சொல்றேன். சாஸ்திரப்படி இறந்த உடலை வாரணாசிக்குக் கொண்டுபோய் எரிச்சு, அந்தச் சாம்பலை கங்கையில கரைச்சுட்டா, எனக்கு பிறப்புச் சங்கிலி அறுபட்டு மறுஜென்மம் இல்லாமப்போகும். எனக்காக இந்த ஒரு காரியத்தை மட்டும் மறுக்காமச் செய்வியா?’’ என்றபடி ஒருவித வணங்குதலோடும் நன்றியோடும் பார்த்தான். பூரணி, லேசாகத் தலையை ஆட்டினாள்.

இருவருமே இறப்பின் நாளை எதிர்நோக்கி, அந்த நாளுக்காகக் காத்திருந்தார்கள். மாதவன் இருக்கும் நாள்களை முழுக்கப் பார்த்துவிட வேண்டும் என இரவும் பகலுமாய் முழுக்க உறங்காமலேயே இருந்தான். அடிக்கடி பூரணியை அருகில் அழைத்து அமர்த்தி, அவளின் முகத்தைப் பார்த்துக்கொண்டேயிருந்தான். தீடீரென வெடித்து அழுதான். பூரணி எப்போதும்போல் இறுக்கமாக இருந்தாள். மாதவன் அடிக்கடி கேட்டுக் கொண்டேயிருந்தான். ``நான் இறந்ததும் நீ வேறொரு கல்யாணம் பண்ணிப்பல. நீ பாவம் பூரணி, கட்டிக்கோ! என்னைக் கட்டிக்கிட்டு ரொம்பக் கஷ்டப் பட்டுட்ட. அவன் முகத்தை ஏறிட்டு எந்தச் சலனமுமில்லாமல் பார்த்தாள். சிறிது நேரம் கழித்து பூரணியை அழைத்து, ``நீ வேற கல்யாணம் பண்ணிக்காத பூரணி. உன்னை வேற யாரும் தொடக் கூடாது. இப்படியே இருந்துடு. ஏன்... இருக்க முடியாதா? அப்படித்தான் இருக்கணும்’’ என்று கூறி, பற்களைக் கடித்துக்கொண்டு அழுவான்.

பூரணி இப்போதும் அவன் முகத்தை ஏறிட்டு, எந்தச் சலனமுமில்லாமல் பார்த்தாள். காது முழுக்க நிரம்பிக் கிடக்கும் இந்தச் சொற்களையெல்லாம் செரிக்கமாட்டாமல் கிடந்தாள் பூரணி.

இன்று அதிகாலையில்தான் உயிர் பிரிந்தது. இன்று அழுகையில்லை. இப்போதும் இறுக்கமாய் முகத்தில் சிறு சலனமுமில்லாமல் அவன் முகத்தை ஏறிட்டபடி வீட்டுக்குள் நின்றுகொண்டிருந்தாள். மாதவனின் உடலை முகம் மட்டும் தெரியும்படி வெள்ளை காடாத் துணியால் ஒருவன் சுற்றினான். சிறிய கைப்பையில் இரண்டு மாற்றுத்துணிகளை எடுத்து வைத்துக்கொண்டு பாலாமணியின் மனைவி வந்தாள்.

வெளியே வண்டியை பாலாமணி காட்டிய திசைக்குத் திருப்பி வைத்துவிட்டு, காரிலிருந்து நட்ராஜ் தரைக்கு இறங்கினான். ஏதோ ஒரு வீட்டிலிருந்து தீக்கங்குக்குள் பால் சாம்பிராணியைப் போட்டு வாசனையைப் பெருக்கிக்கொண்டிருக்கிறார்கள்போல. வாசனை, வீட்டிலிருந்து தெருவுக்குள் இறங்கி வந்துகொண்டிருந்தது. வேறொரு வீட்டிலிருந்து கிருஷ்ணனின் பிருந்தாவனப் பாடல்களின் ஓசை தம்புராவின் பின்னணியோடு அறுந்து அறுந்து செருமலோசையோடு கசிந்து வந்தது. யாரேனும் ஒரு பெண் பழகிக்கொண்டிருப்பாள்போல. நடுவிலிருந்து கொஞ்சம் பசுஞ்சாணம், ஈர வைக்கோல் வாடை கலந்த தொழுவத்தின் வாசனை அடித்தது. நட்ராஜுக்கு 41 வயது. மனைவி, இவனிடமிருந்து விலகி வேறு திருமணம் செய்துகொண்டாள். எவர்மீதும் அவனுக்கு திடகாத்திரமான நம்பிக்கையில்லை. சிறுவயதிலிருந்து மோட்டாரில் இருக்கிறான். நான்கு ஆண்டுகளாய், சொந்தமாக இரண்டாம் கை மாறிய ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று வைத்து ஓட்டுகிறான்.
ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைக்க நெருப்புக்குச்சி தேடி எங்கிருந்தோ பற்றவைத்துவிட்டு வந்தான். பாலாமணி ``கிளம்பலாமா?’’ என்று கேட்டான். தலையசைத்ததும் ``வந்து ஒரு கை பிடிக்க முடியுமா?’’ என்று கேட்டான். நட்ராஜ் மறுத்துவிட்டான். பிறகு மனது கேட்காமல் பாலாமணியின் முதுகை நோக்கி நடக்க ஆரம்பித்தான். வீட்டுக்குள் நுழைந்ததும் முதலில் பூரணியைத்தான் பார்த்தான். இந்த இறப்புக்காக அல்லாமல், பல ஆண்டுகளாய் வேரூன்றிய சோகம்கூடிய முகம். பாலாமணி, தலைமாட்டில் பிடிக்கும்படி சொன்னான். பாலாமணியும் வேறொருவரும் உடலைப் பிடித்துக் கொள்ள நட்ராஜ் பின்னோக்கித் தெருவுக்கு நடந்தான். வாகனத்தின் இரண்டு கதவுகளும் தன் நெஞ்சைத் திறந்துகொண்டு நிற்பதுபோல் நின்றன.

நட்ராஜ் மேலேறி, தலையை வாகனத்துக்குள் நுழைத்தான். முழு உடலும் நுழைந்ததும் பூரணி வீட்டிலிருந்து வெளியேறினாள். அவள் பாதங்கள் அந்தத் தெருவில் நடந்தே பல ஆண்டுகள் ஆகியிருந்தன. வண்டியில் ஏறி அமர்ந்தாள். சில வீடுகளிலிருந்து பெண்கள் எட்டிப்பார்த்து ஏதோ பேசிக் கொண்டார்கள். பாலாமணி, மாற்றுத்துணி அடங்கிய கைப்பையை அவள் காலடியில் வைத்தான். வேறொருவன் இரு கால்களும் கட்டியிருந்த கறுத்த கோழியை மாதவனின் உடல் இருக்கும் சிறு கட்டில் மாதிரியான அமைப்பின் கால்மாட்டில் கட்டிவைத்தான். `இது எதற்கு?’ என்பதுபோல் பாலாமணியைப் பார்த்தாள்.

``இது சாஸ்திரம். சனிப் பொணமில்லையா!’’ என்று சொல்லிவிட்டு, கதவடைத்தான். அந்தக் கோழியும் இவளைப்போலவே எந்தச் சத்தமும் இல்லாமல் இறுக்கமாய் இருந்தது. சிறிது நேரத்தில் வாகனம் கிளம்பியது. கதவின் மேல் பொருத்தியிருந்த வெளிப்படையான கண்ணாடியின் வழியே பார்த்தாள். எல்லா வீடுகளும் பின்னோக்கிச் சென்றுகொண்டிருந்தன. பாலாமணி மூடிய கதவின் வெளி நின்று ஏதோ பேசினான். வாசலில், திண்ணையில் நிற்கும் மனிதர்கள் ஏதேதோ பேசினார்கள். அவளுக்கு எதுவும் கேட்கவில்லை. ஒரு நிமிடம் காது முழுக்க இறுகிக் கல்லாய் மாறிவிட்டதாகத் தோன்றியது.

கடந்துபோகும் கும்பகோணத்தின் தெருக்களைப் பார்த்தபடியிருந்தாள். எந்த நினைவுகளும் காட்சிகளும் உள் தங்காது கலைந்துகொண்டேயிருந்தன. வாகனம் கும்பகோணத்தின் வெளிப்புறம் வந்து அகலமான கறுப்பு நிறச் சாலைக்கு வந்தது. உடலில் சட்டெனக் குளிர் அறைந்தது. தான் இருக்கும் இடத்தை உணர்ந்தாள். தப்ப முடியாத இறுக்க மூடிய சிறிய அறைக்குள் இருப்பது மாதிரி உணர்ந்தாள். எதிரே இருக்கும் மாதவனின் உடலின் வாயைப் பார்த்தாள். அந்த வாய் எப்போது வேண்டுமானாலும் திறந்து தன்னை மோசமாகப் பேசக்கூடும் என்று பயப்படத் தொடங்கினாள். தன்னால் இந்த உடலோடு இவ்வளவு தூரம் பயணம் செல்ல முடியாது. மறுபடியும் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய் அங்கேயே எரித்துவிடலாம் என நினைத்தாள். சட்டென மூச்சு முட்டுவதைப்போல் உணரத் தொடங்கினாள். பார்வையை வேறு எங்கோ மாற்ற நினைத்து, கோழியின் மீது எடுத்துச் சென்றாள். கோழி அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.

வாகனத்தின் முன் பக்கத்துக்கும், அதன் பின் பக்கத்துக்கும் தொடர்பில் இருக்கும் சிறிய கண்ணாடிக் கதவைத் திறந்து நட்ராஜை வண்டியை நிறுத்துமாறு சொன்னாள். அவனுக்குக் கேட்கவில்லை. கதவைத் திறக்கச் சொல்லி சத்தமாய் அவனிடம் சொன்னாள். வண்டியை ஓர் ஓரமாக நிறுத்தினான். ஒரு கணம், ‘தன்னால் பேச முடியுமா? என் நாவுகள் கல் நாவு அல்ல’ என்பதுபோல் நினைத்துக் கொண்டாள். கதவு திறக்கும் ஓசைக்காகக் காத்திருந்தாள். திறக்கப்பட்டதும் கீழே வேகமாக இறங்கி நன்றாக மூச்சு எடுத்தாள். ஆசுவாசமாய் இருந்தது. தனிமையான சாலையைப் பார்த்தாள். சாலையோரங்களில் வரிசை தப்பாமல் மரங்கள் இருந்தன. இந்த ஏழு ஆண்டுகளில் தன் கண்கள் இதைக்கூடப் பார்க்கவில்லையே என்று தன்னைத்தானே நொந்துகொண்டாள். ``அந்தக் கோழியின் கட்டை அவிழ்த்து, அதை விடுவிக்க முடியுமா?’’ என்று கேட்டாள். அவன் கோழியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு மறுகையால் கட்டை அவிழ்த்து தரையில் இறக்கி விட்டான். அது புளியமரத்தின் ஓரமாகச் சத்தமிட்டவாறு ஓடியது.
மீண்டும் தன்னால் மாதவனின் அருகில் போய் அமர்ந்திருக்க முடியாது என நினைத்தபடி அந்த உடலைப் பார்க்காமல் கதவைச் சாத்தச் சொன்னாள். நட்ராஜ் குழப்பத்துடன் கதவைச் சாத்தினான். அவள் வாகனத்தின் முன் இருக்கையை நோக்கி நடந்தாள். தனக்கு அடிக்கடி சிகரெட் பிடிக்க வேண்டும் என்று நட்ராஜ் சொன்னான். அவள் எந்தச் சலனமுமில்லாமல் நடந்து முன்னிருக்கையில் அமர்ந்தாள். அவனும் வந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தபடி ``பின்னாடிதான் குளிர்ப்பதனம் இருக்கிறது. முன்னால் வெக்கைதான்’’ என்று சொன்னான். அவள் வெறுமனே கண்ணாடியின் வழியாகச் சாலையை நோக்கி உறைந்த கண்களால் பார்த்தபடியிருந்தாள். வாகனம் கிளம்பியது.

மதிய உணவுக்காக வாகனத்தை நிறுத்தினான் நட்ராஜ். அவள் ``விருப்பமில்லை’’ எனச் சொல்லி மறுத்தபடி தலையசைத்துவிட்டாள். நட்ராஜ் போன வேகத்தில் ஒரு தேநீர் மட்டும் பருகிவிட்டு வந்துவிட்டான். அவனுக்கு சிகரெட் பிடிக்காமல் என்னவோபோலிருந்தது. ``சாப்பிட எதுவும் வேண்டுமா?’’ என்று மீண்டும் ஒருமுறை அவளிடம் கேட்டான். அவள் மறுத்து லேசாகத் தலையசைத்தாள். வாகனத்தை இயக்கி மீண்டும் கிளம்பினான். புதிய புதிய ஊர்களை, மனிதர்களை, மரங்களை, பறவைகளை, மலைகளை, கால்நடைகளை, வயல்வெளிகளை இறுக்கமான முகத்தோடு பார்த்தபடியே கண்களால் அந்தக் காட்சிகளைப் பருகிக்கொண்டே வந்தாள். அவளின் முகம், சிறிது சிறிதாய் இறுக்கம் தளர்ந்துகொண்டே வருவதைப்போலிருந்தது. வெயில் முடிந்து ஒரு புள்ளியில் மாலை நேரம் தொடங்கி அவள் முகத்தில் மெதுவான குளிர்ந்த காற்று அடித்து, கண்கள் செருகி, பிறகு அயர்ந்து உறங்கிவிட்டாள். `பாவம் எத்தனை நாளின் உறக்கமோ!’ என்று நட்ராஜ் அவளை எழுப்பாமல் விட்டுவிட்டான். இரவு நெடுநேரத்துக்குப் பிறகுதான் எழுந்தாள்.

தெலுங்குப் பாடல்கள் ஒலிக்கும் ஏதோ ஒரு ஹோட்டலின் முன்னால் வாகனம் நின்றுகொண்டிருந்தது. சட்டென விழித்துப் பார்த்தாள். வண்ண வண்ண சிறு விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. பெரிய கல் அடுப்பில் வெள்ளைப் புகை மேலெழும்ப, தோசை வார்த்துக்கொண்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கில் லாரிகள் நின்றுகொண்டிருந்தன. வாகனத்திலிருந்து இறங்கி நட்ராஜைத் தேடினாள். முழுக்க முழுக்க அங்கே ஆண்கள்தான் இருப்பதுபோலப்பட்டது. நிறைய பேர் அவளைப் பார்த்துக்கொண்டிருப்பதுபோலிருந்தது. சிறிது தூரம் முன் நடந்ததுமே எதிரில் அவளைப் பார்த்தபடி வந்துகொண்டிருந்தான்.

``சிறுநீர் கழிக்கவேண்டுமா?’’ என்று கேட்டான். இவ்வளவு நேரம் மறந்து இருந்துவிட்டு இப்போது சட்டென சிறுநீர்ப்பை நிரம்பி கனமேறிக் கடுப்பது போலிருந்தது. ஆமாம் என்பது போல் தலையை ஆட்டினாள். அவன் முன் நடக்க, தொடர்ந்து போனாள். கொஞ்சம் தூரமாய் இருளுக்குள் ஆங்காங்கே நின்றபடி ஆண்கள் சிறுநீர் கழித்தபடி இருந்தார்கள். ஒரு நிமிடம் அவள் தன்னையும் இப்படியான இருளுக்குள் நின்று சிறுநீர் கழிக்கச் சொல்வான் என நினைத்தாள். அவன் கடைக்குள் சென்றான். தூரத்தில் ஒரு பெண்ணிடம் பேசுவது தெரிந்தது. அவளைக் கடையின் உள்ளே அழைத்தான். கடையின் உள்ளே போய் பின்னால் ஒரு பாதை சென்றது. அங்கே அந்தக் கடைப் பெண் பயன்படுத்தும் ஒரு கழிவறை இருந்தது. கதவைத் திறந்துகொண்டு வெளியே வருகையில் அவன் ஓரமாய் நின்று புகைபிடித்துக் கொண்டிருந்தான்.

சிறிய மஞ்சள் குண்டு பல்பின் வெளிச்சத்தில் அவனை முதன்முறையாகப் பார்த்தாள். ஓரளவு சிவந்த நிறம், முகம் முழுக்கச் செழிப்பாயிருந்த தாடி, கொஞ்சம் முரட்டு உருவமாய்க் காட்டியது. முகத்தில் நிறைய மலையாளத் தன்மையிருந்தது. அவன் அவளைப் பார்த்ததும் சிகரெட்டை அணைக்கவில்லை. தூக்கி வீசவுமில்லை. அவன் அவளிடம் ``ரெண்டு நிமிஷம்’’ என்று சொன்னான். ``அடிக்கடி பிடிப்பவன். மதியத்திலிருந்து பிடிக்கவில்லை’’ என்று சொன்னான். முடிக்கும் வரை அவள் நின்றுகொண்டிருந்தாள். அந்த இரண்டு நிமிடத்தில் ஒரு புதிய ஆடவனோடு எந்த உறுத்தலுமில்லாமல் எப்படி சகஜமாக இருக்க முடிகிறது என்று நினைத்துக்கொண்டாள்.

அவன் அணைத்துவிட்டு வந்தான். கையைக் கழுவிவிட்டு சாப்பிட்டு வரச் சொன்னான். அவள் மறுத்து வாகனத்தை நோக்கி நகர்ந்தாள். பின்னாலேயே அவனும் வந்துவிட்டான். `சாப்பிடலையா?’ என்பதுபோல் அவனைப் பார்த்தாள். அவன் பதில் பேசாமல் வாகனத்தில் சாவியை நுழைத்தான். நமக்காக ஏன் ஒருவன் சாப்பிடாமல் கிடக்கிறான் என நினைத்தபடி, ``நீங்க சாப்பிட வேண்டியதுதானே!’’ என்று கேட்டாள்.

``எனக்குத் தெரிஞ்சு நீங்க மதியத்திலிருந்து சாப்பிடலை. எப்ப இருந்து நீங்க சாப்பிடலைனு எனக்குத் தெரியாது. ஆனா, நம்மகூட இருக்கிற ஒருத்தர் சாப்பிடாம இருக்கும்போது நமக்கு சாப்பிட எப்படி மனசு வரும்?’’ என்று கேட்டான்.

``சாப்பிடப் போகலாம்’’ என்று சொல்லி, கீழே இறங்கினாள்.

காலையிலிருந்து நீர்கூடப் பருகவில்லை. நீரைப் பார்த்ததும் கடகடவென எடுத்துப் பருகினாள். தன் முன் இருக்கும் உணவில் சுவை எல்லாம் தெரியவில்லை. ஏதோ சாப்பிட்டாள். பிறகு வாகனத்தை நோக்கி நடந்தாள். சட்டென ஞாபகம் வந்தவளாய் ``சாப்பிட்டது சைவ உணவா... அசைவ உணவா?’’ என்று கேட்டாள். ``எனக்குத் தெரியும்... உங்களுக்கு சைவம்தான்’’ என்று சொன்னான். சட்டென நிம்மதியாக இருந்தது.

வாகனத்தைக் கிளப்பினான். அவன் மணிக்கட்டில் நேரம் என்ன ஆகிறது எனப் பார்த்தாள். மணி இரண்டைத் தாண்டியிருந்தது. சாலையோரங்களில் இருளுக்குள் வயல்கள் கறுப்பு நிறமாய்த் தெரிந்தன. மைல்கல்களில் தெலுங்கிலும் ஆங்கிலத்திலும் ஊரின் பெயர்கள் எழுதியிருந்தன. எப்படியும் இன்னும் ஆயிரத்தி சொச்சம் கிலோ மீட்டர்களைக் கடக்க வேண்டும் என நினைக்கும்போதே அவளுக்கு அயர்ச்சியாய் இருந்தது. மறுபடியும் உறங்கிவிட்டாள்.

காலையில் சிறிய தேநீர்க் கடையின் முன்னால் வாகனம் நின்றது. படிக்கும்போதிருந்தே அவள் பலமுறை நினைத்திருக்கிறாள், `பெண்ணுக்கான குறைந்த சுதந்திரம் என்பது ஒரு தேநீர்க் கடைக்குப் போய் ஒரு தேநீர் சொல்லிவிட்டு அங்கேயே மர பெஞ்சில் அமர்ந்து தினசரி வாசித்தபடியே அதைப் பருக வேண்டும்’ என. யாரோ ஒருவர், தெலுங்கு தினசரியை வாசித்துக்கொண்டிருந்தார். அவளே `இரண்டு தேநீர்’ எனச் சொல்லலாம் என வாய் திறக்கையில், நட்ராஜ் அழைத்தான். ``பல் துலக்கவும் காலைக்கடன் கழிக்கவும் பின்னால் இடம் இருக்கிறது’’ என்றான். சிறிது நேரத்துக்குப் பிறகு வந்து அவள் தேநீர் பருகினாள். தேநீர்க் கடைக்காரர் ஏதோ கேட்கவும் அவன் வாகனத்தின் பின் பாகத்தைச் சுட்டிக்காட்டி அவளையும் காட்டி தெலுங்கில் ஏதோ சொன்னான். அப்போதுதான் அவளுக்கு மீண்டும் மாதவனின் ஞாபகமே வந்தது. சட்டென ஒரு நிமிடம் அவளுக்குள் எல்லாமே இருண்டன. முழுவதும் பருக முடியாமல் மீண்டும் வாகனத்தில் போய் அமர்ந்தாள்.

ஆங்காங்கே நிறுத்தி நட்ராஜ் சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டான். மதியம் அவன் எவ்வளவோ வற்புறுத்தியும் அவள் சாப்பிட மறுத்துவிட்டாள். நட்ராஜ் ஓரிரு வார்த்தைகள் பேசத் தொடங்கினான். மாதவன் இங்கே என் முதுகுக்குப் பின்னால்தான் இருக்கிறான் என்ற உணர்வே அவளை மீண்டும் இறுக்கமாக்கியது. அவனோடு பேச மறுத்தாள். நட்ராஜ் அவளை மிகவும் கனிவாய் நடத்தினான். சிறிது நேரத்துக்கு ஒருமுறை நீர் குடிக்கச் சொல்லி வற்புறுத்தினான். மாலை 4 மணிதான் இருக்கும். சாலை முழுக்க இருள் சூழ்ந்திருந்தது. தூரத்தில் எங்கேயோ மழை பெய்துகொண்டிருக்கிறதுபோல, குளிர்காற்று வீசத் தொடங்கியது. கண்ணாடி இறக்கிவிடப்பட்ட பகுதியில் முழங்கையைத் தாங்கியபடி அமர்ந்திருந்தாள்.
ஓரிரு கிலோமீட்டர்கள் முன் நகர்ந்துபோனதும் மழைத் தூறல்கள் அவளின் முழங்கையில் பட்டன. `ஒரு துளி மழை தன் மேல் பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன’ என நினைத்தாள். முழங்கையை வெளிநோக்கி மேலும் தள்ளினாள். வெளியே மழை கொட்டியது. நிறைய துளிகள். நட்ராஜ் தன் பக்கத்துக் கண்ணாடியை மேலேற்றி அடைத்தான். அவள் தன் உடலை மெள்ளச் சரித்து, கழுத்தையும் மழை விழும் பக்கம் சரித்தாள். அவள் உடலெல்லாம் நீர்த்துளி பட்டு நனைந்தது. நட்ராஜ் வாகனத்தை அகலமான ஓர் ஆற்றுப் பாலத்தில் நிறுத்தி அவளை மழைக்குள் இறங்கச் சொன்னான். `இறங்கின... பாத்துக்கோ!’ சட்டென மாதவனின் குரல் எங்கிருந்தோ கேட்டதும் உள்ளொடுங்கி அமர்ந்தபடி மழையில் இறங்க மறுத்து அப்படியே தன்னை உள்ளேயே இருத்திக்கொண்டாள். எதற்கோ பயந்தவளைப் போல் கண்ணாடியை விரைந்து ஏற்றி மழைத்துளி தன்மேல் படாமல் தடுத்துக்கொண்டாள்.

நட்ராஜ் வேகமாக இறங்கி அவளின் புறத்துக் கதவைத் திறந்து அவளின் கரத்தைப் பிடித்துச் சட்டென வெளியே இழுத்தான். அவள் எதிர்பார்க்கவேயில்லை. ஒரு நிமிடத்தில் மழைக்குள் வந்துவிட்டாள். மழை, அவள்மீது கொட்டித் தீர்த்தது. மழையின் சத்தத்துக்குள் நின்று ஹோ... வெனக் கதறி அழ ஆரம்பித்தாள். தன் கல் பாரம் நீரோடு மெள்ளக் கரையக் கரைய நெடுநேரம் அழுதாள். மழையின் ஓசை நின்றும் அவளின் அழும் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. இனி அழ ஒன்றுமில்லை என்பதுபோல் அழுதாள். நட்ராஜ் அருகில்கூட வரவில்லை, விட்டுவிட்டான்.
அழுது முடித்து, சோர்ந்து நின்று கொண்டிருந்தாள். பருத்தித் துண்டு ஒன்றை எடுத்து அவளின் தலைமீது வைத்தான். அவள் அப்படியே நின்றாள். அப்படியே முகத்தின் மீதும், உடல் முழுக்கவும் இருந்த கல் போன்ற இறுக்கமான கல் தன்மை நீங்கி ஒரு குழந்தையின் முகம்போல் இருந்தது. பருத்தித்துண்டை எடுத்து அவளின் தோள்மீது போட்டான். அவள் கொஞ்சமாய்த் துவட்டிக்கொண்டாள். வாகனத்தில் ஏறி அமர்ந்தாள். வயல்வெளியும், நீண்ட ஆறுகளும் சட்டென எல்லாப் புறங்களும் ஈரமாகி அவளை நெகிழ்த்தின. ஓரிடத்தில் தேநீர் குடிக்க நிறுத்தச் சொன்னாள். அவளே ``ரெண்டு தேநீர்’’ என்று சொன்னாள். பருகிவிட்டு, மீண்டும் மீண்டும் தேநீர் சொல்லிப் பலமுறை பருகினாள். நட்ராஜுக்கு இது விநோதமாய் இருந்தது.

மைல்கற்களில் தெலுங்கு  எழுத்துகள் மறைந்து ஹிந்தி எழுத்துக்கள் தோன்றின.  நட்ராஜுக்கு மழைக்கு முன் வேறொரு பெண்ணோடும் மழைக்குப்பின் வேறொரு பெண்ணோடும் பயணிப்பதுபோல் தோன்றியது. ஈர ஆடையை நெகிழ்த்திவிட்டு வேறொரு ஆடையை அணிந்துகொள்ளச் சொன்னான். அவள் இந்த ஈரம் என் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கட்டும் என்று சொல்ல நினைத்தபடி, ‘இருக்கட்டும்’ என்று மட்டும் சொன்னாள். தொடையிடையில் பிசுபிசுப்பை உணர்ந்தவள், சட்டென ஏதோ சரியில்லாததுபோல் இருக்க, குனிந்து ஆடையைப் பார்த்தாள். உதிரப்போக்கு. நீல நிறச் சேலையெங்கிலும் முன்புறம் சிவப்பு படர்ந்திருந்தது. நட்ராஜும் பார்த்துவிட்டான். செல்லும் வழியெங்கிலும் எங்கேனும் நாப்கின் கிடைக்கிறதாவெனப் பார்த்தான். கொஞ்சம் பெரிய கிராமமொன்றில் ஒரு கடையில் கிடைத்தது. வாகனத்தை நிறுத்தி, பின்புறம் ஏறி மாற்றிக்கொள்ளும்படி சொன்னான். மாதவனின் முன்னால் ஒருபோதும் நிர்வாணமாய் நிற்க முடியாது என நினைத்துக்கொண்டு, ‘முடியாது’ என்று மட்டும் சொல்லிவிட்டு இருளில் வயல்வெளியின் நடுவே அகன்ற ஒரு மரத்தின் பின்னால் நின்று மாற்றிக்கொண்டாள். இரவு உணவெடுத்துவிட்டு அயர்ந்து உறங்கினாள். குளிர் அதிகமெடுத்தது. நட்ராஜ் வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு தனது இரண்டு போர்வைகளை வைத்து அவளை மூடி, கதவிலிருக்கும் கண்ணாடியைக் குளிர் நுழையாதவாறு உயர்த்திவிட்டான். புகைமூட்டமான அதிகாலையில் வாரணாசிக்குள் வாகனம் நுழைந்தது. பூரணியை எழுப்பினான். அந்த அதிகாலைக் குளிரிலும் கங்கையின் கல்படியின் ஓரத்தில் அவ்வளவு பேர் நீத்தார் சடங்குகள் செய்துகொண்டிருந்தார்கள். நிறைய ஆண் பெண் தலைகள் முங்கி எழுந்து கொண்டிருந்தன. புரோகிதர்களும் சாதுக்களும் பசுக்களும் பிணங்களும் அலைந்து கொண்டிருந்தனர். ‘அரிச்சந்திரன் படித்துறை’ எங்கிருக்கிறதென ஒருவரிடம் விசாரித்தான். விறகுகளின் மேல் மாதவனைக் கிடத்தி நெருப்பிட்டார்கள். சடசடவென உடல் எரிந்தது. நெருப்பு தூய்மையின் அடையாளம்.  அது எல்லாவற்றையும் அழித்து வேறொரு புதிய பொருளை நமக்கு வழங்கிவிடுகிறது என்று ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் எரிப்புச் சடங்கின் பிந்தைய சடங்குகளுக்காக கங்கையில் மூழ்கியெழுந்து  கல்படிக்கு வர பூரணியை அழைத்தார்கள். பூரணி நட்ராஜிடம் தான் விடாய்த் தீட்டிலிருப்பதாய்ச் சொன்னாள். ‘அந்த தெய்வமும் அங்கிருந்துதான் வந்திருக்கக் கூடும். ஒன்றும் தீட்டில்லை’ என்றான்.

ஒரு நிமிடம் அவளுக்கு அவன் மீது அன்பு பெருகி அணைத்துக்கொள்ளத் தோன்றியது.குறைந்தபட்சம் அவன் கரங்களை இறுகப் பற்றிக்கொள்ளவாவது தோன்றியது.

நாகம்

வனுக்கு, இப்போது பஞ்சாலையின் இதயமான `கார்டிங்’ பிரிவின் இயந்திரப் பராமரிப்புத் துறையில் பணி. துறையில் மொத்தம் இரண்டு குழுக்கள். இயந்திரத்தை அக்கு அக்காகக் கழட்டி மாட்டுபவரை பொருத்துநர் எனலாமா? அல்லது... கழட்டி? பெருசுகள்கூட ``ஆ...மா இவுரு பெரிய கழட்டி, போடா மூடிட்டு!’’ என்பார்கள்.

இந்தப் பிரிவின் `கழட்டி’ வின்சென்ட். கழட்டிக்கு ஓர் `எடுபிடி’ ஜெயக்குமார். எடுபிடிக்கு ஓர் `அல்லக்கை’ குமரவேல். ஆக, மூவர் உள்ளிட்ட `பழுதுபார்க்கும் குழு’. இரண்டாவது குழு `சுத்தக்குழு’. இந்தக் குழுவினர் ஓடிக்கொண்டிருக்கும் இயந்திரங்களை முறைவைத்து வாரம் ஒருமுறை நிறுத்தவேண்டும். பிறகு அவற்றின் உடைகளைக் களைந்து, `கம்ப்ரசர்’கொண்டு காற்றில் குளிப்பாட்டவும், இண்டு இடுக்குகளில் சேர்ந்த பஞ்சும் தூசுமான அழுக்குத் திரிகளை நீக்கித் துடைக்கவும் வேண்டும். பற்சக்கரங்களின் பல்லிடுக்குகளில் கெட்டித்து இறுகிப்போய் உயவு நெய்க்கட்டிகள், ஓடி ஓடித் தேய்ந்து உதிர்ந்த உலோகத்துகள்கள், வறண்ட பிசிறுகள் போன்றவற்றை மிகக் கவனமாகக் கிளறி எடுத்துத் துடைத்துவிட்டு, புதிய உயவுக் களிம்பை அதற்கான பிரத்யேகமான துப்பாக்கி வாயிலாக வார்க்க வேண்டும்.

இவன் தலைமையிலான இந்தக் குழுவில் மொத்தம் ஐந்து பேர். இரண்டு பொடியன்கள், இரண்டு பெருசுகள். பெருசுகள் இரண்டும் சுவாரஸ்யக் கேந்திரங்கள். அதிலும் அந்த முருகன் என்கிற அக்கிரமக்காரக் கிழவனின் பேச்சு இருக்கிறதே... பையன்கள், கிழவனின் பேச்சுக்கு போதையாகித் திரிந்தார்கள். பேசுவது எல்லாமே இரட்டை அர்த்தம்தான்.
காலை 7 மணி ஷிஃப்ட்டுக்கு, வீட்டிலிருந்து 6:30 மணிக்கு சைக்கிளை எடுத்திருக்க வேண்டும். 6:30 மணிக்கு சைக்கிளை எடுக்கவேண்டுமென்றால், 6:15 மணிக்குச் சாப்பிட்டிருக்க வேண்டும். 6:15 மணிக்குச் சாப்பிட வேண்டுமென்றால், 6 மணிக்குக் குளித்திருக்க வேண்டும். 6 மணிக்குக் குளிக்க வேண்டுமென்றால், 5:30 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். இவனுக்கு 5:30  மணிக்கு  எழுவதில் சிரமம் எதுவுமில்லை.

இதற்குமுன் பார்த்த வேலைக்கு அதிகாலை 3:30 மணிக்கு  எழவேண்டும். செய்தித்தாள் போடும் வேலை. கேரளத்திலிருந்து போத்தனூருக்கு 4 அல்லது 4:15 மணிக்கு வரும் ரயிலிலிருந்து `மாத்ருபூமி’ பொட்டலத்தை எடுத்துக்கொண்டு நிலையத்தின் வாசலுக்கு வந்தால், பெட்டிக்கடைக்காரர் ஏற்கெனவே பிரித்து வைத்திருக்கும் தினமணியையும் இந்தியன் எக்ஸ்பிரஸையும் கொடுப்பார். அவற்றையும் வாங்கிக்கொண்டு வந்து ஏதாவது ஒரு கடை வாசலில் உட்கார்ந்து கூடுதல் பக்கங்கள், துண்டுப்பிரசுரங்கள், இணைப்புகளைச் சேர்த்து எண்ணி, தரையோடு ஒரு தட்டு, பக்கவாட்டில் ஒரு தட்டுத் தட்டிச் சேர்த்து, சைக்கிளில் கட்டிக்கொள்ள வேண்டும்.

சைக்கிளை ஓட்டியபடியே கையை நீட்டி உருவினால், தாள் கிழியாமல் வர வேண்டும். ரங்கசாமி அண்ணனெல்லாம் மழைக்காகிதத்தையும் சேர்த்துக் கட்டியிருப்பார். மழை வந்தாலும் நனையாது. உருவினாலும் புதுப்பணம் மாதிரி மணக்க மணக்க வரும். எந்த வீட்டுக்கு தினமணி, எந்த வீட்டுக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் என நினைவுவைத்துப் போட வேண்டும். ஆங்கிலப் பள்ளிக்குப் போகும் பையனின் சீருடையைப் பார்த்து இந்தியன் எக்ஸ்பிரஸைப் போட்டுவிட்டு அடுத்த நாள் அந்தப் பையனின் தாத்தாவிடம் இவன் வாங்கிக்கட்டிக்கொண்ட வசவு இருக்கிறதே..! எந்த வீட்டுக்கு உள்ளே போட வேண்டும், எந்தெந்த வீடுகளில் கதவில் செருக வேண்டும், எல்லாவற்றையும் நினைவுவைத்திருக்க வேண்டும். மழை வந்தால் போச்சு, `நனைந்த தாளில் செய்திகளை எப்படிப் படிக்க முடியும்?’ எனக் கேட்டு, காசு தராமல் தவிர்ப்பார்கள். பிறகு நாய்கள் தொல்லை. பழகும்வரைதான். அப்புறம் வாலாட்டும்.

 நல்ல வேலைதான். சின்னச்சின்னப் பிரச்னைகளும் இருக்கத்தான் செய்யும். ஆனால், இவன் அம்மாவைப் பொறுத்தவரை உலகத்திலேயே கௌரவமான தொழில் என்றால், அது பஞ்சாலையில் பணிபுரிவதுதான்.

மோகண்ணன் ``எங்க மில்லுல ஆளெடுக்குறாங்க’’ என்றதும்

``எப்படியாவது இவனை அங்கே சேர்த்துவிட்ரு மோகா’’ என்று சொன்னதோடு மட்டுமல்லாது, ``கூடவே போ’’ என்று அனுப்பியும்விட்டது.

சேர்ந்த புதிதில் 11 மணிக்கு மதியச் சாப்பாட்டு நேரத்தில் வெள்ளியங்கிரியண்ணன், ``ஏனப்பா, உன்ற சோத்துமூட்டை எங்கியப்பா? எடுத்தா போ’’ என்றார், அவருடைய ஐந்து அடுக்குகளைப் பிரித்தவாறு.

இவன், வாரச்சீட்டு வசூல்செய்பவர் வைத்திருப்பது போன்ற கிச்சுப்பைக்குள்ளிருந்து சின்ன டிபன்பாக்ஸை எடுக்கவும், சிரித்தார்.

``தம்பி... வூட்ல என்ன இருந்தாலும் சரி,  பழைய சோறும் பச்சமொளகாயானாலும் அடுக்குல கொண்ட்டு வரணும் தெரியுமா?”

இவன் பதில் ஒன்றும் சொல்லாமல் சாப்பிட ஆயத்தமானான். வெள்ளை உப்புமா. ஆங்காங்கே கடுகு தெரிய அழகாக இருந்தது. அதைப் பார்த்ததும் கோபித்துக்கொண்டார்.

``அடே... ஆர்றாவன் திருவாத்தானாட்டாம்.’’

“தம்பி... மில்லுக்கு வேலைக்குச் சேந்தாச்சுன்னா பஞ்ச நாம திங்கற மாதிரியிருக்கணும். பஞ்சு நம்பள தின்னுறக் கூடாது, புரியுதா?’’

ஒரு கிண்ணத்துச் சாப்பாட்டில் குழம்பை ஊற்றி, இவன் பக்கமாகத் தள்ளி ``ரெண்டையும் தின்னோணும் சரியா?’’ என்று ஏறக்குறைய மிரட்டினார்.

நூற்றுக்கு நூறு சரி. `மில்லுக்காரன் சாப்பிடுற மாதிரி’ என்றொரு வழக்குண்டு. அப்படிச் சாப்பிட்டால்தான் மாடு மாதிரி பாடுபட முடியும். மாதிரியெல்லாம் இல்லை மாடேதான்! படுத்த அடுத்த நிமிடத்தில் தூங்கிப்போவதும் இந்த உழைப்பு தரும் வரம்தான். அசதியென்றால் மெஷினை இறக்கி மாட்டும் வாரத்தில் வரும் அசதிபோலிருக்க வேண்டும். தோளும் நெஞ்சுப்பட்டையும் கெண்டைக்காலும் விரல்களும் தினவுக்குத் தகுந்த வேலை செய்து விடைத்திருக்க, குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வந்தால் அம்மாவோ அக்காளோ புதுப்பொண்டாட்டியோ துண்டை எடுத்துத் தர, முழுவதும் ஈரம் உலராத உடலோடு ஆவி பறக்கும் சோற்றில் கையை வைப்பதொரு சுகமென்றால், வெயிலில் சுக்காய்க் காய்ந்த பனியனும் வேட்டியும் தரும் மிதவெப்பத்தோடு குளிர்ந்த வெறுந்தரையில் தலையணையை இட்டு படுப்பது ஒரு சுகம். அப்போதுதான் அவள் கேட்டாள். இவன்தான் தொடங்கினான்...

``ஏதாச்சும் கேளுபுள்ள வாங்கித்தர்றேன்.’’

``ஒண்ணும்வேண்டா!’’

``அட கிறுக்கீ... கேள்றீன்றேன்!’’

``ம்ம்... வேண்டான்னா சும்மாயிரேன்.’’

``ஓ... ரொம்பத்தான் பண்ணுவா!’’

``அய்யே, ஆமா... பண்றாங்க அஞ்சாறு.’’

``பின்னென்ன, ப்ச், ஏய்... கம்மல் குத்துதுடீ!’’

``அய்யிய்யோ வலிக்குதா? ம்ம்... சரி, நான் ஒண்ணு கேப்பேன். மாட்டேங்காமக் கொண்டாரணும்.’’

``ஏய், சொல்றீ!’’

``நீயி மில்லுக்குள்ளாற பாம்பு புடிப்பியாமா?’’

சின்னப்பையனாக இருக்கும்போது விளையாட பொம்மைகள் கிடையாது. அப்புறம் எப்படி விளையாடுவது? பூச்சி, புழு, கோழி, ஆடு, அணில், ஓணான், குருவி இவற்றோடுதான். அணில், ஓணான், குருவியெல்லாம் இவன் கைக்கு எப்படிச் சிக்கும்? வேடிக்கை பார்க்கத்தான் முடியும். கட்டி வைத்திருக்கும் ஆட்டைத் தொட்டுப்பார்க்கலாம். அடித்துக்கூடப் பார்க்கலாம். அது குதிரை மாதிரி முன்னங்கால் இரண்டையும் தூக்கி முட்டினால், கீழே விழுந்து அலறலாம். தொரத்தொரவென ஊற்றும் அதன் மூத்திரத்தில் கையை நனைத்துச் சிரிக்கலாம். புழுக்கைகளைச் சேகரித்து விளையாடலாம். யாராவது சேவக்கோழியைப் பிடித்து, கொண்டுவந்து காட்டினால், அதன் சொரசொரப்பான செங்கொண்டையைப் பிடித்துத் திருகலாம்.

நெஞ்சில் சேகரித்து வைத்திருக்கும் தானியப் பொதியை அழுத்தி `அரிசீ...’ என்று கண்ணை விரித்துக் கத்தலாம். அவ்வளவுதான். மேயும்போது பிடிக்கப்போனால், பொக் பொக்கெனக் கத்திக்கொண்டே கொத்த வரும். அதனால் பூச்சிகள்தான் பொம்மைகளைவிடவும் சுவாரஸ்யம். சாவி கொடுக்காமலேயே சுருளும் ரயில் பூச்சி! கறுப்பும் மஞ்சளுமான ரயில் பூச்சியைத் தொட்டால் சுருள்வதும் கொஞ்ச நேரம் கழித்து விரிந்து ஊர்வதும் எவ்வளவு ஆச்சர்யம்! சாகும் வரையிலும் சாதுவாகவே இருக்கும் பிள்ளைப்பூச்சி, தொட்டால் தீக்குச்சியை உரசினாற்போல் துளி நெருப்பைச் சிந்தும் தீப்பூச்சி, கருவண்டு, சிவப்புத்தலை பொன்வண்டு, பச்சைப் பொன்வண்ணச் சிறுவண்டு, சிவப்பில் கறுப்புப் பொட்டுள்ள வண்டு, மயில் நிறத்துக் குளவி, சிவப்புத் தலையும் கோடுபோட்ட றெக்கைகளும் உடைய பெரிய ஈ, மஞ்சள் பட்டாம்பூச்சி, ராணி பட்டாம்பூச்சி, மணல் பட்டாம்பூச்சி, உலர்ந்த இலை நிறத்திலும், தளிர்ப்பச்சை நிறத்திலும் தயிர் கடையும் முக்கோணத் தலைப்பூச்சி, தும்பி, வெட்டுக்கிளி, சிறுபாம்பு... சிறு பாம்போடு விளையாடினால் உடம்பெல்லாம் வரிவரியாய்த் தடித்துவிடும். அப்புறம் பொட்டப்புள்ள மூத்திரத்தில் அடுப்புச் சாம்பலைக் கரைத்து அம்மணமாய் நிற்கவைத்துப் பூசிவிடுவார்கள். மறுநாள் சரியாகிவிடும். பாதிப்பு அவள்களுக்கென்றால், நம்முடைய மூத்திரம் கொட்டாங்குச்சியில் குறிபார்த்து அடிக்கும்போது கூச்சமும் மகிழ்ச்சியுமான கலவையால் சிரிப்பு வந்துவிடும்.

அன்றைக்கு சீமைக்கருவேல மரத்திலிருந்து மாட்டுக்கொம்புப் பூச்சிகளைப் பிடித்துவந்து திண்ணையின் வழுவழுப்பான தரையில் தலைகீழாய் நிறுத்திச் சுழலவிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தபோது, வாசலில் வந்து நின்ற பெண்ணைப் பார்த்தான். அவள் தோளில் தொட்டில் மாதிரி ஒரு மூட்டை. கையில் இருந்த தட்டில் படமெடுத்த நிலையில் ஒரு பாம்பு. ஆர்வம் பொங்க ஓடிப்போய்ப் பார்த்தான். சந்தனக் குங்குமப் பொட்டுடன் பளபளத்து மின்னிய பித்தளை நாகம். அழகோ அழகு! `அப்படியே ஊர்ந்து கீழிறங்கி, இவனது கையில் ஏறிக்கொள்ளாதா?’ என்று ஏக்கமாக இருந்தது. ஆனால், அரளிப்பூவையும் துளசியையும் விளக்கையும் தாண்டி அது நகரவேயில்லை.
84p2_1528793155.jpg
``யம்மா... தாயீ... வாழத்தோட்டய்யங்கோயிலுக்குக் காணிக்க போடம்மா மகராசி!’’

அம்மா குருணையரிசியைக் கொண்டுவந்து அவள் தோளிலிருந்த தொட்டில் பையில் கொட்டும்போது, இவன் கையை நீட்டி நாகத்தைத் தொட்டுப்பார்த்தான். வெயிலிலும் சில்லென்றிருந்தது. இவனுடல் அனிச்சையாகச் சிலிர்ப்பில் உதறிக்கொண்டது.

வனது பள்ளிக்கு ஒருமுறை `பாம்பு மன்னன்’ பார்த்தசாரதி வந்தார். அத்தனை பேரையும் மைதானத்தில் அமரவைத்தார்கள். விதவிதமான பாம்புகளைக் காட்டி. “சாரைப்பாம்புக்கும் தண்ணீர்ப்பாம்புக்கும் விஷமில்லை. பாம்புகளுக்குக் காதுகள் கிடையாது. அவற்றுக்குப் பழிவாங்கத் தெரியாது” என்றெல்லாம் விளக்கிக்கொண்டிருந்தவர், ``யாராவது ஒருத்தர் வாங்க’’ என்றபோது இவன் போனான்.

இவன் கழுத்தைச் சுற்றி மாலையாக ஒரு மலைப்பாம்பை அணிவித்தார். நல்ல பாரமாக இருந்தது. ஒருவித நெடியும். ``ஒண்ணும் செய்யாது தைரியமாப் புடி’’ என்றார். படபடவென பையன்கள் கைகளைத் தட்ட இவன் கண்ணும் நெஞ்சும் விரியச் சிரித்தான். பாம்பு, அம்மாவின் பைபிளில் கெட்டதாகவும் அப்பாவின் சாமிப்படங்களில் நல்லதாகவும் இருந்தது. முருகன் காலடியில் நின்று, இல்லாத கைகளைக் குவித்து வணங்குகிறதே! ஆனால், இந்த மயில் ஏன் அதை மிதித்துக்கொண்டிருக்கிறது? யார் மேலாவது தெரியாமல் கால் பட்டாலே தொட்டுக் கும்பிட வேண்டும் என்கிறார்கள். முருகனும் சிரித்தபடி அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது குழப்பமாய் இருக்கிறது. உண்மையில் பாம்பு என்னவாக இருக்கிறதென்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தான்.

``சொல்லு... நீயி மில்லுக்குள்ளாற பாம்பு  புடிப்பியா?’’

``ஆரு சொன்னா?’’

``தெரியி!’’

``ஹே... சொல்றீ! ஆரு சொன்னா?’’

``அய்யோ  கத்தாத... அம்மாதான் சொல்லுச்சு. நீ கேட்றாத!’’

``ஓஹோ!’’

`` ‘அவன் ஸ்கூலுக்குப் போயிட்டு வர்றப்ப அணிலு, நாய்க்குட்டி, மைனா, பொரிக்குயிலுன்னு எதையாச்சும் புடிச்சுட்டு வந்திருவான். இப்போ மில்லுக்குள்ள சும்மா இருக்காம பாம்பைப் பிடிக்கிறானாட்டம் தெரியுது பாப்பா. இனிமேலும் சின்னப்பையனாட்டம் அதையெல்லாம் செய்யக் கூடாதுன்னு கட்டன்ரைட்டா சொல்லிரு சாமீ. ஒரு நேரம் மாதிரி ஒரு நேரமிருக்காது’ன்னுச்சு’’

``அதுக்கென்ன இப்போ?’’

``பிடிச்சா கொண்ட்டுவர்றியா... தொட்டுப் பார்க்கணும்.’’

``வளத்தறியா!’’

``அய்யெ ச்சீ!’’

``அது என்னடி, எல்லாப் பொம்பளைங்களும் ஒரே மாதிரி இருக்கீங்க? தொட்டுப் பார்க்கோணும். ஆனா, வளத்தறதுக்கு மனசில்ல.’’

``பயமாவும் இருக்கு. கொஞ்சூண்டு ஆசையாவும் இருக்கு. ஆனா, பிரியமெல்லாம் கெடையாது.’’

இந்தக் கொஞ்சூண்டு ஆசையில்தான் எல்லாமே தொடங்குகின்றன.

ரக்கு ஊர்தியிலிருந்து டன் கணக்கிலான எடையில் இருக்கும் இயந்திரத்தை, செயின் பிளாக் உபயோகித்து இறக்கி, ஆலையில் அதிகாரிகள் குறிப்பிடுகிற இடத்தில் சேர்க்க வேண்டும். காலை 7:30 மணிக்கு எட்டுப் பத்து பையன்களை இவன் வசம் ஒப்படைத்துவிட்டால், மதியம் சாப்பாட்டுக்குக் கைகழுவும்போது சொன்ன இடத்தில் இயந்திரம் உட்கார்ந்திருக்கும் என்பதால், மேற்பார்வை அலுவலர் `கங்காணி’ சம்பத்தும், பராமரிப்புத் துறை அதிகாரி ராஜ்குமாரும் இவனையே சிக்கவைப்பார்கள்.

இவனுக்கும் அது பிடித்திருந்தது. அவ்வளவு பெரிய இயந்திரத்தின் மீது பத்துப் பேரின் புஜபலங்களும் நெம்புக்கோல் போட்டு `ஐலசா’ பாட, அது `க்க்ர்ர்க்க்க்’ என அனத்தி, ஓர் அங்குல தூரம் நகரும். நெம்புகோல் என்பது நீங்கள் நினைப்பதுபோல் கடப்பாரைகள் அல்ல. தடிச்சிகளின் கெண்டைக்கால் அளவுள்ள இரும்புக்குழாய்கள். முந்தைய வாரத்திலேயே பட்டறையில் ஆறுமுகம் சம்மட்டி கொண்டு பட்டை தட்டிய நுனியைக்கொண்ட ஆறடி நீளக்குழாய்கள். பையன்கள் பெரும்பாலும் உடையாம்பாளையத்து கோதாப்பட்டிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். நல்ல பீமராயன்கள்போல் இருக்கும் பையன்கள் அருகில் வந்து பேசும்போதுதான் சிறு வயதுடையவர்கள் என்பதே  தெரியும்.

``நீங்க போத்தனூரா அண்ணா? அங்கே ஒரு பாய் கடை இருக்காமா... நிறைய கறியும் எலும்புமா ருசியா இருக்கும்னு பசங்க சொல்வானுக. ஒருநாள் வரணும்ணா’’ என்பான் மணி.

``வாடா... வந்து நல்லா மலைப்பாம்பு மாதிரி முழுங்கு’’ என்பான் இவன்.

இவர்களைத் தவிர சசி, செந்தில்பிரபு என்கிற இருவர் எப்போதும் இவனுடனே இருப்பவர்கள். `வைண்டிங்’ பிரிவில் பாம்பு புகுந்துவிட்டதாக குணசேகரன் வந்து கூப்பிட்டபோது, அதிர்ந்து இவனைப் பார்த்த சசியும் செந்திலும் ஒருவிதமான பரபரப்போடு கூடவே வந்தார்கள். பெண்கள் மட்டும் வேலைசெய்யும் பிரிவில் ராஜமரியாதையோடு போக யாருக்குக் கசக்கும்? பாம்பையும் பெண்களையும் பார்க்கும் ஆவல், குறுகுறுப்பு எல்லாம் சேர்ந்து சசிக்குச் சிரிப்போ சிரிப்பு!

``அவன் சிரித்துச் சிரித்து பயத்தை மறைக்கிறான்’’ என்று செந்தில் கிண்டல்செய்தான். அங்கே பாம்புக்கு பயந்து பெண்கள் கதவுக்கு வெளியே நிற்க, பெண்களுக்கு பயந்து, தண்ணீர் வெளியேறுவதற்காகப் பதித்திருந்த சிமென்ட் குழாய்க்குள் பதுங்கிச் சுருண்டிருந்தது கண்ணாடிவிரியன். பொன்னிறத்தில் சாம்பல் கலந்தது போன்ற பின்னணியில் கடுங்காப்பி வண்ணத்தில் நெளி நெளியான கோலங்களுடன் பாக்யராஜின் மஃப்ளர்போல் இருந்தது. அம்பு மாதிரி இருந்த தலையின் பக்கவாட்டில், குறுமிளகை பாலீஷ் செய்து வைத்ததுபோல் இரண்டு கண்கள்.

``பெட்ரோல் வேணும்’’ என்றான் இவன்.

கண்ணெடுக்காமல் ``சசி’’ என்றார் கங்காணி.

``கம்புக்குச்சி ஒண்ணை எடுத்துட்டு வாடா தம்பி’’ என்று செந்திலையும் அனுப்பினான். குடுவையில் பெட்ரோலோடு வந்தான் சசி. பெண்கள் இவனைப் பரிகாரம் செய்யும் சாமியாரைப் பார்க்கிற மாதிரி பயபக்தியோடு பார்த்தார்கள். அவர்களில் மையிட்ட பெரிய கண்களுடன் இருந்த ஒருத்தியும் இருந்ததைப் பார்த்தான்.

``எதுக்குடா இவ்வளவு?’’

``வேணும்கிறதை எடுத்துட்டுக் குடுண்ணா.’’

கலர் பென்சிலின் சுற்றளவில் இருந்த நீளமான ஏர் ஹோஸ் குழாயை எடுத்து செந்திலிடம் கொடுத்து, பாம்பு சுருண்டிருந்த சிமென்ட் குழாயின் பின்பக்கமிருந்து நுழைக்கச் சொன்னான். அவன் விரியனின் உடம்பில் முட்டும் வரை குழாயின் முனையைச் செலுத்தி மறுமுனையைக் கொண்டுவந்தான். இப்போது விரியனை நேருக்குநேர் பார்த்தபடி இவனும் பின்பக்கமாக செந்திலும், பெட்ரோல் குடுவையை வாங்கியபடி பெண்களிடம் சொல்வதாக மைக்காரியைப் பார்த்தபடி சொன்னான்.
``பாம்பு வெளியே வேகமா வரும். சத்தம் போட்டு பசங்களை பயமுறுத்திடாதீங்க.”

வாயில் கொஞ்சமே கொஞ்சம் பெட்ரோலைக் கவிழ்த்துக்கொண்டு, குடுவையை மூடி சசியிடம் கொடுத்துவிட்டு, குழாயில் வாயை வைத்து வேகமாய் ஊதினான். பெட்ரோலுக்கு, பாம்பு நெருப்புக்கீடாக பயப்படும். பெட்ரோல் கலந்த காற்று அதன்மேல் படவும் எதிர்பார்த்ததுபோலவே விரியன் படுவேகமாய்க் குழாயிலிருந்து வெளியேறி இவன் பக்கமாய் வந்தது. எதிர்பார்த்ததுபோலவே பெண்கள் அலறினார்கள். எதிர்பாராதவிதமாய் ``ஐயோ பாத்து!’’ என்றாள் மைக்காரி.  தலையை வாகாகப் பிடித்ததும் அழுத்தியிருந்த கம்பை எடுத்துவிட்டு விரியனோடு நடந்தான். பெண்கள், குரலிசைக் கலைஞர்கள்போல ஒரே சுரத்தில் `ஆ’வென்றார்கள். இவனுக்கு மிதப்பாயிருந்தது.

``ணா... எப்படிண்ணா இவ்ளோ தைரியமா புடிக்கிற? யார்ணா சொல்லிக்குடுத்தா?’’ விரியனை வெறித்த கண்களுடனே கேட்டான் சசி.

``அது ரொம்ப ஈஸிடா! தலைய மட்டும் புடிச்சுட்டா போதும், ஏண்ணா?’’ என்ற செந்திலை

``எங்க நீ புடி பாக்கலாம். ணா, அவன்கிட்ட குடுண்ணா’’ என்க, செந்தில் ``குடுண்ணா’’ என்றான் கையை நீட்டாமல்.

``பேசாம வாங்கடா’’ என்று அதட்டி நடக்க, கூட்டம் கூடிவிட்டது.

வித்தை காட்டுகிறவன் பின்னால் பொடியன்கள் நடப்பது மாதிரி நடக்கிறார்கள். இவன் பிடியிலிருந்து விரியன் முடிந்தவரை உடலை முறுக்குகிறான். மில்லின் பின்பகுதிக்கு வந்ததும், சசியின் நண்பர்கள் கற்களையும் கம்புகளையும் எடுத்துக்கொள்ள...

கங்காணி சம்பத் ``சட்டுன்னு கொன்னுட்டு வாங்கய்யா. ரெண்டு மெஷினு லத்தேடாயி நிக்குது’’ என்றார்.

சசியின் நண்பர்களைக் காட்டி ``சார், இவனுங்களைக் கூப்பிடுங்க’’ என்றான் இவன்.

அவரும் ``சசி, நீ ப்ளூ ரூம் போயிடு... டேய் செந்தில், அந்த மெஷினை ஓட்டிவிடு’’ என்க.

செந்தில் இவனைப் பரிதாபமாய்ப் பார்த்து ``ணா... சொல்ணா’’ என்றான்.

இவனோ இரக்கமின்றி ``போடா... போயி மெஷினை ஓட்டிவிடு’’ என்றான்.

``ணா கொன்ன உடனே போயிறலாம்... நீ போயிக் கை கழுவு. நான் போய் மெஷின ஓட்டிவிட்டுட்டு வர்றேன்.’’

``இப்போ இதைக் கீழ விடுண்ணா. ஓடவிட்டு அடிக்கலாம்’’ என்றவனை முறைத்து

``போடான்னா...?’’ என்று துரத்தினான்.

கையில் இருந்த கல்லை செந்தில் வீசியெறிந்ததில் இவன் மேலிருந்த கோபம் தெரிந்தது.

ப்போதெல்லாம் இவன் வ.உ.சி பூங்காவுக்குப் போவதில்லை. போகவும் பிடிக்கவில்லை. முன்பெல்லாம் அடிக்கடி போவான். போனால் மிருகக்காட்சி சாலையில் புறா, வாத்துக் கூண்டுகளைத் தாண்டி, வண்ணமயில், வெள்ளை மயில்களைக் கடந்தால் இடதுபுறம் வட்டமடித்துக்கொண்டே இருக்கும் குள்ளநரி, உள்ளே கிடக்கும் மாமிசத்துண்டு, அடுத்த கூண்டில் வெள்ளெலிகள், அதற்கடுத்ததில் பச்சைக்கிளிகள், ஆப்பிரிக்கக் காதல் கிளிகள் அப்புறம் ஆமைகள், முயல்கள் இவற்றையெல்லாம் தாண்டினால் கழுகுகளும் ஒட்டகங்களும் இருக்கும் இடத்துக்கு முன்பாகக் கண்ணாடித்தடுப்புக்கு அந்தப் பக்கம் ஏராளமான சாரைகள், நாகங்கள், மலைப்பாம்புகூட இருக்கிறது. கண்ணாடி விரியன்கள் பெருங்குடும்பமாய் பின்னிக்கொண்டு சுருண்டபடியும் ஊர்ந்தபடியும் இருக்க, இவன் அவற்றை வெறித்துப் பார்ப்பான்.

``அட என்ன யோசனை? புடிச்சுட்டு வந்து காட்டுவியா?’’

``ம்ம் கொண்டாறேன்.”

``என்னத்த கொண்டுவருவ... நாகத்தைக் கொண்டாருவியா?”

``நாகமா?”

``என்ன மாமா யோசிக்கிற?”

``....”

``அட என்ன?”

``ப்ச் ஒண்ணுமில்ல.”

ஞ்சாலையில் உள்ள தொழிலாளர்களின் கழிவறை, புதிதாகப் பார்ப்பவர்களைக் குழப்பும். வரிசையாக இருக்கும் பத்துப்பதினைந்து கழிவறைகளில் முன்னால் உள்ள நான்கைந்து கழிவறைகள் மட்டும் உபயோகத்துக்கு! மற்ற கோப்பைகளில் மணலை நிறைத்து அடைத்திருப்பார்கள். புதுக்கருக்கு மாறாதிருக்கும் அவை, ஓய்வறைகளாகவும் பயன்படும். அங்குதான் எந்நாளும் தீராத பெண்ணுடல் குறித்த சந்தேகங்கள், (வயித்துக்குள்ளாற இன்னொரு வயிறு இருக்கும் தெரியுமா?) திரையுலகம், அரசியல் பற்றிய விவாதங்கள், மேஸ்திரிகள், அதிகாரிகளின் மண்டையைப் பிளப்பது குறித்த ஆலோசனைகள் உள்ளிட்டவை இடம்பெறும்.

அன்றைக்கு அங்கே தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த சில்க்ஸ்மிதாவின் உடலை `பட்டறைக்கார’ ஆறுமுகமும் `கொண்டை வண்டி’ சுப்பிரமணியும் சேர்ந்து இறக்கி வைத்தார்கள். கழிவறைக்குப் பின்புறமிருந்து நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. எலெக்ட்ரீஷியன் சுந்தரம், பனியென்றும் பாராமல் சத்யராஜ் திராட்சைக் கொத்தோடு போட்டோ பிடிக்க வந்திருப்பதைச் சொன்னதும் சட்டென சிலுக்கு உயிர்த்து போஸ் கொடுக்கத் துவங்க `சிம்ப்ளக்ஸ்’ செல்வம், ராணுவச் சிப்பாய் சீருடையோடு பிரபு ஊருக்குள் வந்துகொண்டிருப்பதைச் சொன்னதும், `அந்தப் புள்ள’ அரை நொடியில் அரைப்பாவாடைக்கு மாறி, கொட்டாங்குச்சி வயலினை வாசிக்கத் தொடங்கியது. `தம்பி ராமகிருஷ்ணா’ என்று கக்கூஸிலிருந்து யாரோ முக்கலோடு சத்தம் கொடுத்தார்கள். கூளயனாகத்தான் இருக்கும்! அவனுக்கு ஏத்தம் ஜாஸ்தி! இரண்டு மூன்று நாய்கள் தொடர்ந்து குரைக்கவே சலித்துக்கொண்ட மாதேஸ்வரன் மூத்திரக் கோப்பையில் கால் வைத்து சூரிய வெளிச்சத்துக்கான சாளரத்து வழியே வெளியே பார்த்துவிட்டு

``ஒண்ணுமில்ல நாயிக சண்டைபோடுது’’ என்று சொல்லிவிட்டுக் கீழிறங்கி ஸ்மிதாவின் தாவணியை எட்டிப்பிடிக்கப் பார்த்தான்.

பொடியன் சசிதான் எட்டிப்பார்த்துவிட்டு, ``அய்யோ..! ணா, இங்கே வந்து பாரு! எவ்ளோ பெரிய நாகம்!’’ என்றான்.

``நாகமா, எங்க?’’

இவன் தவ்வி ஏறிப்பார்த்தபோது இடைவிடாது குரைத்தபடி இருந்த நாய்கள் மட்டும் தெரிந்தன. சசியைத் தள்ளியிருக்கச் சொல்லி, அங்கிருந்து பார்த்தால் தலை மட்டும் தெரிந்தது. கறுத்த கோதுமைப் பழுப்பில் பாதாணி இலை அளவு படத்தை விரித்து சீறிக்கொண்டிருந்தது. உறுமி உறுமிக் குரைக்கும் இந்த ஆறேழு நாய்களும் வீட்டுநாய்களுமல்ல, தெரு நாய்களுமல்ல. காட்டு நாய்கள்! ஆலையையொட்டி இருக்கும் காடு மாதிரியான பகுதியில் பிறந்து வளர்ந்த நாய்கள். குப்பை நிறத்திலும் கறுப்பு, செம்மண் கலந்த நிறத்திலும் இருந்தன. அவை வெறியோடு குரைத்தபடியே இருக்க, நாகம் சுவரோடு ஒண்டிக்கொள்வது குறித்து இவனுக்கு சந்தேகமாக இருந்தது. சசியும் அவனோடு சிலரும் கற்களை அள்ளிக்கொண்டதைப் பார்த்ததும் இவனுக்குக் கோபம் வந்தது.

``டேய் கேன, கல்லைக் கீழ போடுறா’’ என்றான்.

``சசிணா, உயிரோடு புடிக்கிறியாண்ணா? இது பெருசுண்ணா!’’ என்று சொல்லிவிட்டு ``ஹோய்... ஓடுங்கடா!’’ என்றபடி கையில் இருந்த பிரம்பை நாய்கள் மீது வீசினான். அவை கொஞ்சம் விலகி நின்று மீண்டும் குரைத்தன. இவன் கழிவறையின் பின்பக்கம் வந்து ஆமணக்குச் செடியின் நட்சத்திர இலைகளைக் கிளையோடு வளைத்துப்பார்த்த கணத்தில் `திக்’கென்றது.

``இல்லேங்காம ஏழடி இருக்கும்.’’

வால் நுனியைத் தேடினான். இதயம் கோம்பர் மெஷினைப்போல `திப்புடுதக் திப்புடுதக்’ என்று சத்தமிட்டது. இந்தச் சத்தம் `கோதுமை’க்குத் தெரிந்துவிடப்போகிறது என்று மறைப்பதைப்போல சட்டைக்காலரை மூடிவிட்டுக்கொண்டான். கோதுமை, வாயைத் திறந்து மூடியது. இதென்ன `ஒரு நொடிக் கொட்டாவி’யா அல்லது கத்துகிறதா?

தசை முறுக்குள்ள நல்ல வலுவான பாம்பு. உடலெங்கும் சாய் சதுர, இணைகரக் கண்ணாடிகள், வளைந்திருந்த இடத்திலெல்லாம் மின்னின. விரிந்த படத்தின் மத்தியில் வெள்ளையும் கறுப்புமாய் அந்தச் சின்னம். ரொம்பச் சின்னதான ஒரு வாளியின் கைப்பிடிக் கம்பியைக் கழட்டி தலைகீழாய் நெஞ்சில் பதித்துக்கொண்டது  மாதிரி, ஆங்கில `யூ’ மாதிரி, மேனேஜர் மகேந்திரன் நெற்றி நாமம் மாதிரி, அது என்ன சுழியத்திலிருந்து சுழியம் வரை... வாழ்க்கையின் தத்துவமா? ஒன்றுமில்லாமையிலிருந்து ஒன்றுமில்லாமைக்கு! அவற்றின் மொழியில் அதனதன் பெயரா? இல்லை கூட்டத்தின் பெயரா? சாதியோ? சிலதுக்கு ஒரேயொரு வட்டம் இருக்கும். இவன் பார்த்திருக்கிறான்.

சத்தமின்றி முன்னேறி வந்த செவலை நாயை விரட்டியபோது நாகம் இவன் பக்கம் திரும்பியது. உடல் உதற பயந்தான். அந்தக் கண்கள்...! இதுவரையில் அவன் பார்த்த மற்ற பாம்புகளுக்கெல்லாம் கறுத்த கண்களாயிருக்கும். இதற்குப் பச்சையாயிருந்தன. பச்சையில்லை.ஒருவிதமான பச்சை. நீலப்பச்சை... இல்லை சமுத்திரப்பச்சை! ம்ஹூம், இது வெளுத்த பச்சை. ஆமாம்! மொச்சைப்பயற்றைப் பதித்தாற்போல் வெளிர்ப்பச்சை! நிர்மலக் கண்கள். ஒருவேளை குருடோ? இதயம் இப்போது `திக்குரு திக்குரு’வுக்கு மாறி ஓடுகிறது. அதிர்கிற தன் நெஞ்சைத் தானே ஓங்கி அறைந்தான். தைரியத்துக்கு இரண்டொரு வசவுகளைச் சிதறவிட்டான். ரெண்டடி எடுத்து வைத்தான். இயந்திரத்திலிருந்து காற்றுக்குழாய் பிய்த்துக்கொண்டதுபோல் `ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்க்’கென சீறிப் பின்வாங்கியது.

இவனுக்கு ஒரு சந்தேகம். `நாய்களும் பக்கத்தில் இல்லை. நாலடி தூரத்தில்தான் நாமும் நிற்கிறோம். இந்நேரம் நாகம் காணாமல்போயிருக்க வேண்டுமே! யாருக்கோ காத்திருப்பதுபோல் படம் எடுத்தபடியே நிற்பானேன்?’ என்று. 
குழம்பியவனிடம் செந்தில் லேப்பு கம்பியைக் கொண்டுவந்து நீட்டினான். அது ரெண்டு விரல் தடிமனில் ஐந்தடி நீளமுள்ள இரும்புப் பிரம்பு. ஒரு பக்கம் மட்டும் உள்ளங்கை அகல இரும்பு வட்டோடு இணைக்கப்பட்டிருக்கும். விரல் நுனியில் வட்ட பிஸ்கட்டை வைத்து விஷ்ணுசக்கரம்போல குழந்தைகள் காட்டுமே அதுபோல. அப்படியே அழுத்தினால் கம்பியின் எடைக்கும், வட்டத்தின் அகலத்துக்கும், இவனது வலுவுக்கும் மலைப்பாம்பேயானாலும் தலை நசுங்கிப்போகும்.

``அடிணா!’’ என்றான் செந்தில் வழக்கம்போல.

`வயித்துப்புள்ளத்தாச்சிய வீட்டுல வெச்சுட்டு ஏதாச்சும் பூச்சி கீச்சிய அடிச்சுறாத சாமீ’ நெஞ்சில் கை வைத்தபடி அம்மா சொன்ன வாக்கியம் நெஞ்சுக்குள் பாம்பாய் நெளிய, தயக்கத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல், ``சசி, குடிக்கத் தண்ணி கொண்டாடா’’ என்றான்.

சசியும் செந்திலும் சிரித்தபடி ஆளுக்கொரு பாட்டிலைக் காட்டினார்கள். ஒன்றில் தண்ணீர், மற்றொன்றில் பெட்ரோல்!

``தெரியும்ணா... இப்படி ஏதாவது சொல்லி எங்களைத் தொரத்துவேன்னு சொல்லித்தான் சூப்பாங்கிட்டயே ஸ்பெசல் பர்மிட் வாங்கிட்டு வன்ட்டன்... அடிணா’’ என்றான் செந்தில்.

``ஏய்... எந்திரிடி!’’

``என்ன?’’

``எந்திரி..!’’

``என்ன மாமா, தண்ணி வேணுமா?’’

``ஷ்ஷ்ஷ்... கத்தாத!’’

``அய்யோ... என்ன சொல்லு!’’

``வெளிய வா.’’

``எதுக்கு?’’

``சத்தம் போடாம எந்திரிச்சு வாடி வெளிய.’’

``ஹூம்... என்னன்னு சொல்ல மாட்டியா? சொல்லு.’’

``ஸ்ஸ்... வெளிய வான்னா..?’’

கதவைத் திறக்கப் போனவளை எட்டிப்பிடித்துத் தடுத்தான்.

பின்கதவைக் காட்டி, கிசுகிசுப்பாக ``இந்தப் பக்கம்... இந்தப் பக்கம்...’’ என்றான்.

திறந்து வெளியே வந்ததும் ``சொல்லு...’’ என்றவளைத் தாண்டி சந்துக்குள் நடந்து சாலைக்குப் போய் நின்றான். இவள் தயங்கித் தயங்கி போய் சந்து நுனியில் ஒண்டிக்கொண்டு ``என்ன... சொல்லித்தொலை’’ என்றாள். கொட்டாவியோடும் கலைந்த முடியோடும் அழகாய்த் தெரிந்தாள். இவன் ``டட்டடொயிங்’’ என்றபடி பனியனுக்குள் கையை விட்டான். அவள் ``பூவா?’’ என்றாள் சுவாரஸ்யம் குறைந்த குரலில். ``இல்ல...’’ திரும்பி விளக்குக் கம்பத்தை நோக்கி நடந்தான். இவள் ரகசியக் குரலிலேயே கத்தினாள்.

``யோவ் நில்லுங்கறேன்!’’

``ப்ச் வாடி...’’

``மணி எவ்வளோ தெரியுமா?’’

``தெரியும்... 12:30!’’

``என்ன, கிறுக்கா புடிச்சிருக்கு? அம்மா பார்த்தா திட்டும்!’’

`நீ சத்தம் போடாம வா!’ என்பதைக் சைகையிலேயே சொன்னான்.

வந்தாள். கையில் இருந்த மழைக் காகிதப்பையைக் காட்டினான்.

``ஹை! கருகுமணியா?’’

முகம் முழுக்கச் சிரித்தாள். கை அருகே நெருங்கியவளை மறுகையால் தடுத்து, பை இருந்த கையை இவளுக்கு எதிர்த்திசையில் விலக்கினான். அவள் அப்போதுதான் பார்த்தாள் கருகுமணி நெளிவதை.

``அய்யூ... மாமா... பாம்பா! அய்யயூ...’’ என்றாள் பயமும் ஆர்வமுமாக. `தூக்கத்திலிருந்து எழுந்ததினாலா? இந்த மஞ்சள் வெளிச்சத்தினாலா? எதனால் இவ்வளவு அழகாயிருக்கிறாள்?’ என அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

``படமெடுக்க வை... படமெடுக்க வை’’ என்றாள் சிறுமியாக.

``இது விரியன்டி... கட்டுவிரியன்! அதுவும் குட்டி... படமெல்லாம் எடுக்காது.’’

``பரவால்லை... கீழ விடு.’’

``விட்டா போயிரும்.’’

``ம்ம்... போட்டும்... நீ விடு.’’

மழைக் காகிதத்தின் முடிச்சை அவிழ்த்தான்.

``ஏது? எங்க கெடச்சது?’’

``மில்லுக்குள்ளதான்... மழை பேஞ்சது, கேன்ல தண்ணி விழுந்தா எழையெல்லாம் வீணாப்போகுமுன்னு தள்ளிவெச்சிட்டிருந்தேன். கேனுக்கு அடியில கெடந்தது... நானும் புள்ளங்க பாசிதானாக்கும்னு நெனச்சேன்... பார்த்தா நெளியுது... அழகா இருக்குல்ல?’’

கீழே விட்டான். கீழே விழுந்ததும் ஒரு நொடி தயங்கி, பிறகு சுதாரித்து வேகமாய் ஊர்ந்த விரியன் குட்டி. அடர்கறுப்பில் அளவெடுத்த இடைவெளிகளில் வெள்ளைக்கோடுகள்! இளந்தோல் என்பதால் கூடுதல் மினுமினுப்பு! இவனுக்கு, `அவளது மஞ்சள் பூசிய மார்புக்கு இடையில் வைத்துப்பார்த்தால் இந்தக் கறுப்பு எவ்வளவு எடுப்பாயிருக்கும்!’ என்று ஒரு நினைப்பு.

``அழக்க்க்கா இருக்குங்க’’ என்றாள் மகிழ்ந்து.

விளக்கைத் தாண்டி வெளிச்சத்தைத் தாண்டி சாக்கடையோரம் போய் மறைந்தது.

``இப்ப சந்தோஷமா?’’

``ம்ம்ம்ம்... ரொம்ப்ப்ப!’’ தலையை ஆட்டினாள்.

``சரி, போய்ப் படு.’’

``ம்ம்ம், நீயும் வா.’’

``நீ போ... நா ஒரு தம்மடிச்சுட்டு வர்றேன்’’ என்று பனியனுக்குள் இருந்து சிகரெட்டை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு குந்தியமர்ந்து தொட்டியோரத்தில் ஒளித்து வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்தான்.

``நீ அடி, நான் இங்கே இருக்கேன்.’’

``ப்ச்! போன்னா போ.’’

பொய்யாக முனகிக்கொண்டே போனாள்.

பற்றவைத்து ஆழமாக இழுத்து மெதுவாகப் புகையை விட்டான்.

``என்னணா யோசிக்கிற?’’ என்றான் செந்தில்.

``நா வேணா இழுத்துப் போடட்டுமா?’’ என்றான் சசி ஆர்வமாக.

``எங்க போடு? போடுறா பார்க்கலாம்...” என்று அவனைச் சீண்டினான் செந்தில் ``ணா, நீ சொல்ணா’’ என்றான் சசி.

``இந்தப் பக்கம் இழுத்துப் போடு, அடிச்சுடாத’’ என்றான் இவன்.
சொன்னதுதான் தாமதம். சசி பரபரப்பாய் முன்னேறி கம்பியைக் கோதுமையின் தலைக்கு அருகில் கொண்டுபோய் கீழிறக்கி சரேலென இழுத்துப் போட்டான். இழுத்தவனே ``அய்யோ..!’’ என்று அலறவும் செய்தான்.

நிஜமாகவே ஏழடிதான்! நீளத்தைப் பார்த்துதான் அலறியிருக்கிறான் என நினைத்தால் ``அண்ணா ரத்தம்! காயமாயிருக்கு” என்றான். நாகத்தின் வயிறு கிழிந்து குடல் குந்தாணியெல்லாம் வெளியே சிதறியிருக்கின்றன. மலமும் ரத்தமும் வழிய வாயைத் திறந்து மூடியது. நாய்கள் குதறியிருக்கின்றன. ரொம்ப நேரமாக இந்தப் போராட்டம் நடத்திருக்கிறது. உடல் முழுவதும் காயங்கள். ``சீ. பாவம்ணா’’ என்றான் செந்தில். சசி ஒன்றும் சொல்லாமல் அமைதியாக நாகத்தையே வெறித்துப் பார்த்தான். தலையைத் தரைக்குக் கொண்டுபோய் நெளிவதும் பிறகு உயர்த்துவதுமாக இருந்தது.

வேகம் இல்லை. தளர்வு தெரிந்தது.

``என்னடா பண்றீங்க?’’ என்று கேட்டவாறு சீனிப்புளியங்காயைப் பறித்தவாக்கில் வந்த வெள்ளியங்கிரி அண்ணனும் இவனைப் பார்த்து ``மெஷின ஓட்டி உடோணும். மூணு பேரையும் சம்பத்து வரச்சொன்னாப்ல’’ என்று சொல்லிவிட்டு, திரும்பவும் இரண்டு காய்களைப் பறித்து இடுப்புப் பைக்குள் வைத்துக்கொண்டார். திரும்பி இவன் அருகில் வந்து கீழே கிடந்த இதைப் பார்த்ததும்,

``அடேய்... என்னடா இது? இந்தப் பெருசா இருக்கு! அடிச்சிட்டீங்களா?’’

``இல்லைண்ணா, நாய் கடிச்சுவெச்சிருக்கு’’ என்றான் சசி.

``பெரிய ஜீவனப்பா’’ என்றார். சசி, சம்பத்துக்கு பயந்து இவனிடம் ``ணா நான் முன்னாடி போறேன்... கை கழுவுற இடத்துக்கு வந்துரு” என்று சொல்லிவிட்டு லேப்பு கம்பியைக் கையில் கொடுத்துவிட்டு நகர்ந்தான்.

``ணா, அடிச்சுருணா போலாம். நேரமாச்சு” என்றான் செந்தில். இவனும் ``நட போலாம்!’’ என்க. வெள்ளியங்கிரியண்ணன் திரும்பிப் பார்த்து ``ஏண்டா அடிக்கலையா?’’

``ம்ஹூம்.’’

``அட, ஏன்?’’

``அதைப் போயி என்னனு  அடிக்கிறதுண்ணா?’’

``விட்டியினா... அந்த நாயிக வந்து திரும்பக் கொதறும். இல்லைன்னா எறும்பு அரிச்சே கொன்னுரும். ஏற்கெனவே வலி திங்குது. பாவமுடா. இந்த வேதனைக்கு அதைக் கொன்னுர்றதுதான் நல்லது.’’

``மனசு கேக்க மாட்டேங்குதுண்ணா.’’

``வா’’ என்ற வெள்ளியங்கிரியண்ணன் நாகத்தின் அருகில் போய் வீரமண்டியிட்டு அமர்ந்து இரண்டொரு விநாடி மௌனமாகப் பார்த்தார்.

``யப்பா... நாகராசா! உன்னிய வைத்தியம் பார்த்துப் பொழைக்கவெக்க எங்களுக்குத் தெரியாது. பண்ணாலும் காப்பாத்துறது கஷ்டம் சாமி! இப்பிடியே உட்டுட்டுப்போகவும் மனசு வல்ல’’ என்று சொன்ன கையோடு பாட்டிலைத் திறந்து பாம்பின் தலைமீது தண்ணீரைக் கொஞ்சமாக ஊற்றிவிட்டு எழுந்து இவனைத் தீர்க்கமாகப் பார்த்து,

``தலைய நீட்டிக் காட்டுனா அடி! ஒரே அடியில கொன்னுரு. இல்லைன்னா... விட்டுட்டு வந்துரு.”

சொல்லிவிட்டு நடந்தார். வெள்ளியங்கிரியண்ணனின் குரல் இதுவரை இவன் கேட்காத குரலாயிருந்தது.

``இந்தாளே நாகப்பாம்பு மாதிரிதான் இருக்காப்ல, கருவளையக் கண்ணு... மூக்கு மட்டும் விரிஞ்சு கூமாச்சியா, நடையே ஒரு மாதிரி பின்னிப் பின்னித்தான் போறாப்ல.’’

அவரையே பார்த்துக்கொண்டிருந்தவன் திரும்பிக் கீழே பார்த்தான். இவனுடல் அனிச்சையாகச் சிலிர்ப்பில் உதறிக்கொண்டது. நாகம் தன் படத்தைச் சுருக்காது விரித்தபடியே தலையைத் தரையோடு தாழ்த்தி இவன் காலடியில் வைத்தது.
 

நடிகை

மாதம்மாள் ரக ரகமான அரிசிகளை மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு, சந்தைகளுக்குப் போவாள். ஒவ்வொரு சந்தையிலும் பிரதான இடத்தில் அவள் கடை இருக்கும். மூட்டைகளை இறக்கி அடுக்கும்போதே வியாபாரம் ஆரம்பித்துவிடும். வேலைப்பாடு மிக்க வெள்ளிக்காப்பு அணிந்த கைகளால் படியில் அரிசியை அளக்க ஆரம்பித்தால், இரவு சந்தை கலையும் வரை ஓய்வே இருக்காது. காசுக்குக்  கொண்டு வந்து தருகிறவர்களிடம் தண்ணீர் வாங்கிக் குடித்துக்கொள்வாள். மதிய நேரம் வண்டிக்கார முத்துவிடம் “சித்தநேரம் கடைய பாத்துக்குங்க, சாப்பிட்டு வந்துடறேன்” என, அதிகாலையில் ருக்மணி அம்மாள் ஆக்கித் தந்த சோற்றைச் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் அதே களையுடன் வந்து கடையில் நிற்பாள். முகத்தில் களைப்பின் அறிகுறியோ, வெயிலின்  கொடுமையோ தென்படாது. அரிசி வாங்காவிட்டாலும் அவளின் சிரித்த முகத்தைப் பார்த்தாலே போதும் என எத்தனையோ பேர் அவள் முகத்தைப்  பார்த்துவிட்டுப் போவார்கள்.  பிச்சைக்காரர்கள் முதலில் வந்து அவள் கையில் வாங்கிக்கொண்டுதான் அடுத்த இடத்துக்குப் போவார்கள். அவர்களையும் அதே சிரித்த முகத்துடன்தான் பார்ப்பாள். முகம் அசூயையோ கர்வமோ  பெருமையோ இல்லாமல் நிர்மலமாக இருக்கும்.

அவளால்தான் அவள் கணவன் ஜம்புவுக்கு மதிப்பு. ஜம்புவும் குஸ்தி பயில்வான்போல இருப்பான். கணவனும் மனைவியும் சேர்ந்து நடந்தால், கிழவிகள் முறிக்கும் நெட்டி ஒலியால் அவர்கள் பாதை நிறைந்திருக்கும்.

ஜம்புவுக்குக் கல்யாணத்துக்கு முன் இரண்டு ஏக்கர் நிலமிருந்தது. அதில் கீரை வகைகளைத்தான் எப்போதும் பயிர் செய்வான். நடு ஜாமத்தில் எழுந்து அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக் கீரைகளை அறுத்துக் கட்டு கட்டி சூரியன் உதிக்கும் முன்பே சந்தைகளுக்கு வண்டியில் கொண்டு போவான்.

மாதம்மாள் வந்த பின் கீரை விதைப்பதை நிறுத்திவிட்டு நெல் போட்டார்கள். சிறு பச்சைக் கடலென அவர்கள் காட்டில் நெற்கதிர்களில் காற்றின் அலை அடித்தது. சட்டென அவர்கள் அந்தஸ்து வேறு தளத்துக்கு உயர்ந்தது. அதுவரை கூலிக்கார பாவனையில் இருந்த அவர்களுக்கு முதலாளி பாவம் வந்தது.

வற்றாத  கிணற்றால், களத்தில் பொற்குவியலாய்க் குவிந்த நெல்லை வியாபாரிகளுக்கு விற்காமல், கோட்டை அடுப்பில் கொப்பரை வைத்து மாதம்மாளே அவித்தாள். புழுக்கிய நெல்லை வண்டிகட்டிக் கொண்டு போய் மில்லில் அரைத்து, மூட்டை பிடித்து, மல்லூர்ச் சந்தையில் கடை போட்டாள். வீட்டு உபயோகத்துக்குப் போக, வைத்திருந்த அத்தனை அரிசியும் ஒரே வாரத்தில் விற்றுத் தீர்ந்தது. சேலம் அரிசி மண்டியில் அரிசி வாங்கி வந்து கடையைத் தொடர்ந்தாள். பனமரத்துப்பட்டி, வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, குமாரபாளையம் எனச் சந்தை சந்தையாய் அவள் அரிசிக்கடை ராஜ்ஜியம் விரிந்தது. காலங்காலமாய் அரிசி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த செட்டியார்களை ஆறே மாதத்தில் ஓரங் கட்டினாள். அப்போதிருந்தே அவர்களுக்கு ராஜயோகம்தான். நான்கைந்து வருடங்களிலேயே வியாபாரம் பிரமாண்டமாய் வளர்ந்தது. அரிசி மூட்டைகளோடு மூட்டையாய் பணத்தையும் கட்டிக்கொண்டு மாதம்மாள் வீட்டுக்குப் போனாள்.

ஏக்கரா ஏக்கராவாய் நிலம் வாங்கினார்கள். நெல் விளைவித்தார்கள்.

பழைய வீட்டை இடித்து, நடுவில் பத்து மூட்டை நெல் காய வைக்கும் அளவுக்குக் களம் போட்டு, இரட்டை மாடியுடன் தொட்டிக் கட்டு வீடு கட்டினார்கள். வாசலில் ஐம்பது மூட்டை நெல் காய வைக்கலாம். பால் மாடுகள் பத்து கொட்டிலுக்கு வந்தன. வீட்டு வேலை செய்ய, சமைக்க ருக்மணி அம்மாள் வந்தார். பால் கறக்க ஆள், பண்ணையம் பார்க்க ஆள், காட்டு வேலைகளை மேற்பார்வை செய்து, கூலியாட்களைத் தயார் செய்ய கனகரத்தினம் எல்லாம் வந்தார்கள்.

ஜனங்கள் ஏதோ மாயாஜாலப் படத்தைப் பார்ப்பதைப்போல வாயைப் பிளந்துகொண்டு இவர்களைப் பார்த்தார்கள். ஊர் ஊராய் இவர்களைப் பற்றிப் பேச்சாய் இருந்தது.

இவ்வளவு செல்வாக்கு வந்தபிறகுதான் அவர்களுக்குக் குழந்தை இல்லாத குறை நிவர்த்தியானது. பவித்ரா பிறந்தாள். பெயர் சூட்டு விழாவில் ஐந்நூறு பேருக்குச் சாப்பாடு போட்டார்கள். கவிழ்ந்து விழும்போது, குழந்தையின் எடைக்கு நிகராக, அம்மனுக்குக் வெள்ளிக் காசு துலாபாரம் கொடுத்தார்கள். ஏழு மாதத்தில் தங்கக்கிண்ணத்தில் மகளுக்குச் சோறூட்டினார்கள். அவள் நடந்தது, பள்ளிக்கூடம் போனது எல்லாம் திருவிழாவானது.

ஊரில், மாதம்மாளுக்கு ராணியின் மதிப்பு இயல்பாக வந்து சேர்ந்தது. ‘அவங்க போன ஜென்மத்தில மங்கம்மாவா இருந்திருப்பாங்க’, ‘ஜமீன்தாரினி குமுதவல்லியா இருந்திருப்பாங்க’ என, ஊரில் கதை கதையாய்ப் பேச்சு எழுந்தது.

பவித்ரா சிறுமியாய் இருக்கும்போதே, தாயின் அழகைத் தூக்கிச் சாப்பிட்டுவிடும் பேரழகியாய் வரப்போவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. அவள் விழிக்கோளங்களில் அப்படி ஒரு வெண்மை. வட்ட முகம். கன்னங்களும் வாயும் சிற்பக் கலை.

வெள்ளைக் குதிரை பூட்டிய வில் வண்டியில் பள்ளிக்கூடம் போனாள். ஆனால், பவித்ராவுக்குப் படிப்பு சுமாராகத்தான் வந்தது. மாதம்மாளுக்கு ஏமாற்றமாய் இருந்தது. பெண் ஒருவேளை சூட்டிகை இல்லாமல் போய் விடுவாளோ எனக் கவலைப்பட்டாள். ஆனால், அவளுக்குப் படிப்புதான் சரியாய் வரவில்லையே தவிர புத்தி அபாரமாக வேலை செய்தது.

‘நீ மட்டும் சினிமாவில நடிக்கப் போனியனா டி.ஆர்.ராஜகுமாரி, அஞ்சலிதேவியெல்லாம் கண்காணாத தேசம் போயிடுவாங்க’ என ருக்மணி வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டிருந்தாள். மாதம்மாளுக்கு அதைக் கேட்கும்போது அவ்வளவு பெருமையாய் இருந்தது. அந்த வார்த்தைகள் அவள் ஆழ்மனதில் சென்று செய்த வேலையோ என்னவோ பவித்ராவுக்கு சினிமா பாவனை சின்ன வயதிலேயே வந்துவிட்டது.

 நறுவிசான அழகு, உணர்வுகளை எழிலாய் வெளிப்படுத்தும் முகம், செல்வச் செழிப்பில் ஒளிவீசும் உடல்...இதெல்லாம் சினிமாவில் நடிப்பதற்கென்றே தனக்கு இறைவன் வழங்கியதாக பவித்ரா நினைத்துக் கொண்டாள்.

அவளுக்கு சினிமா என்றால் உயிர். வாரம் ஒருமுறை கணபதி டாக்கீசுக்குக் கூட்டிப் போய்விட வேண்டும். ருக்மணி அம்மாளின் வேலைகளில் இதுவும் ஒன்று. அப்படி கூட்டிப் போக மறுத்தால், அவள் சாப்பிட மாட்டாள். ஒரு கவளம் அவள் வாயில் இறங்காது. படம் பார்த்துவிட்டு வந்ததும், படத்தின் முழு வசனத்தையும் அதே ஏற்ற இறக்கத்தோடு அதைவிடப் பலமடங்கு வசீகரத்தோடு பேசிக் காட்டிவிடுவாள். மாதம்மாளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. இதென்ன இப்படி ஒரு திறமை. பவித்ராவின் சினிமா மோகமும், நடிப்புத் திறமையும் ஊராரிடமிருந்து மறைத்து வைக்க முடியாததாய் இருந்தது. எங்கே போனாலும் `கண்ணு, அந்தப் படத்துல ராணி பேசின மாதிரி பேசு’, `இந்தப் படத்துல அந்தப் பாட்டை ஒரு தரம் பாடு’ என்ற வேண்டுகோள்களுக்கு அவள் உற்சாகமாய் நடித்துக்காட்டினாள். பள்ளிக்கூடத்தில் வாத்தியாரினிகள் கூட அவளை நடித்துக்காட்டச் சொல்லி மெய்மறந்து பார்த்தனர்.

‘போகப் போக எல்லாம் சரியாகிடும். விவரம் தெரிந்த பின்னால் பெண் சரியாகிவிடுவாள்’ என மாதம்மாள் நம்பியிருந்தாள்.

 வருடத்துக்கு வருடம் அவள் அழகு காட்டாற்று வெள்ளமாய்ப் பெருகியது. உடல் காம அஸ்திரங்களால் நிரம்பியது. மாதம்மாளிடம் இருந்த தெய்விக அமைதி அவளிடம் இல்லை. பவித்ரா மோகினி அவதாரம்போல இருந்தாள். இளமை அவளை வசீகரத்தின் எல்லை வரை கொண்டு செல்லப்போகிறது என்பதே எல்லோரின் கணிப்பாய் இருந்தது.

பன்னிரண்டு வயதில் பவித்ரா பெரியவளானாள். அப்போதே எங்கெங்கிருந்தோ அவளைப் பெண் கேட்டு வர ஆரம்பித்துவிட்டார்கள்.

தான் இனி பள்ளிக்கூடம் போகப்போவதில்லை என பவித்ரா அறிவித்துவிட்டாள். ஆனால், அவள் சினிமா மோகம் இம்மியும் குறையவில்லை. வயதுக்கு வந்தபின் சினிமாவுக்குப் போகக் கூடாது என மாதம்மாள் தடை போட்டாள். பவித்ரா அதை ஒப்புக்கொள்ளவில்லை. ஜம்பு புளிய விளாரால் அவள் கால்களுக்குக் கீழே வீறினான். மாதம்மாள் கணவனைத் தடுத்தாள். “வேண்டாம், அவள் இஷ்டப்படி விடுங்க” என்றாள்.
மகளை மடியில் சாய்த்துக்கொண்டு ரத்தம் கன்றிய கால்களை நீவி விட்டாள்.  “பவித்ரா, நமக்கு எதுக்கும்மா இந்த ஆசையெல்லாம்? குல நாசம் வந்து சேரும். மானம் மரியாதை போயிரும். கடவுள் கொடுத்த இந்த அழகெல்லாம் விகாரமாப்போயிடும். சொன்னா கேளு. சினிமாங்கறது வெறும் காமக் கூத்து. அதிலே வேற ஒண்ணும் கிடையாது. அதுக்கு நீ பலியாகணுமா?”

பவித்ரா எதுவும் பேசவில்லை. அவளின் அழகான கண்களில் இருந்து பரிசுத்தமான கண்ணீர்த் துளிகள் உருண்டு விழுந்தன.

“சரி இனிமே முதலாட்டத்துக்குப் போக வேண்டாம். படம் முடிஞ்சி வர நேரமாயிடும். என்னால வயித்தில நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்க முடியாது. பகல் காட்சிக்குப் போ” என அனுமதியளித்தாள்.
மாரியம்மன் கோவிலுக்குப் போய் `மகளை இந்தப் பைத்தியக் காரத்தனத்தில இருந்து மீட்டுக் கொடம்மா தேவி. நான் கன்ன அலகு குத்தி உன் கோயிலை வலம் வர்றேன்’ என மாதம்மாள் வேண்டிக்கொண்டாள்.
பட்டுப் பாவாடை தாவணி கட்டி பவித்ரா ருக்மணியுடன் கணபதி டாக்கீசுக்குப் படம் பார்க்கப் போனால், தியேட்டரின் வண்ணமே மாறியது. அந்தப் படத்தில் நடித்த நடிகையே படம் பார்க்க வந்ததுபோல் காட்சிக்குக் காட்சி விசில் சத்தத்தால் திமிலோகப்பட்டது கொட்டகை.

அந்த வருடம் கோயில் விழாவில், நீண்ட நாள்களுக்குப் பிறகு, வாணியம்பாடி சுலோசனாவின் `வள்ளி திருமணம்’ நாடகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சுலோசனா தங்குவதற்கு ஜம்பு வீட்டில்தான் ஏற்பாடு ஆகியிருந்தது. சுலோசனாவின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஜம்பு, மாதம்மாள் இருவருக்கும் சுலோசனாவை மிகவும் பிடிக்கும். அவள் தங்கள் வீட்டில் வந்து தங்குவதைப் பெரும்பேறாய் நினைத்தார்கள்.

பண்டிகை இரவு சுலோசனா கோஷ்டிக்கு என, விசேஷமாய் விருந்து தயாரானது. கூட்டும் பொரியலும் வடை பாயசமும் வீடே மணத்தது. சாயந்திரம் நாடகக்காரர்களின் குதிரை வண்டிகள் வீட்டு வாசலில் வந்து நின்றன. சுலோசனா வண்டியிலிருந்து இறங்கினாள். கணவன் மனைவி இருவரும் கைகூப்பி வரவேற்றார்கள்.

மாதம்மாள் அவளையே வைத்த கண் வாங்காது பார்த்தாள். சுலோசனாவும் எதிர்பாராத ஏதோ ஒன்றைக் கண்டது போல மாதம்மாளைப் பிரமிப்புடன் பார்த்தாள். மாதம்மாளின் பார்வையைப் பார்த்து அவளுக்கு வெக்கமாய் இருந்தது. “அக்கா என்னை ஏன் அப்படிப் பாக்கறீங்க, நான் அல்லவா உங்களை அப்படிப் பார்க்க வேணும்?” எனக் கூச்சத்துடன் அவள் கைகளைப் பற்றிக்கொண்டாள். அப்போது அங்கு வந்த பவித்ராவைப் பார்த்து சுலோசனாவுக்கு உலகம் கீழ்மேலாய்ச் சுழன்றது. “அக்கா இது உங்க மகளா?” என்றாள். ஏனோ அவள் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.  பவித்ரா ஜென்ம ஜென்மமாய்ப் பழகியவளைப் போல சுலோசனாவின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

வீட்டில் வறுத்து அரைத்த காபிக்கொட்டைத் தூளைப் போட்டு, கறந்த பாலில் எல்லோருக்கும் முதலில் காபி வைத்துக் கொடுத்தார்கள். மேளக்காரர் பிரபுலிங்கம் “அம்மா இந்தக் காபி போதும், சம்பளமே வேணாம்” என்றார்.

பவித்ரா மான்குட்டியைப்போல சுலோசனாவிடமே உட்கார்ந்துகொண்டாள். வந்ததிலிருந்தே கேட்டுவிட வேண்டும் என வாய்க்குள்ளேயே சுழன்றுகொண்டிருந்த கேள்வியைக் கேட்டாள். “அக்கா, நீங்க ஏன் சினிமாவுல நடிக்கப் போகலை?”

சுலோசனா வசீகரமாய்ச் சிரித்தாள்.  “சினிமாவுல நடிக்கலாம் வான்னு என்னை எப்பவோ கூப்பிட்டாங்க. எனக்கு என்னவோ அது பிடிக்கலை. ஆயிரம் ஜனங்களுக்கு முன்னால நடிக்கறதுக்கு ஈடாகுமா அது?” என்றாள். அப்போ “அக்கா, உங்களுக்கு சினிமா எடுக்கறவங்களை யெல்லாம் தெரியுமா?” எனக் கேட்டாள். அவள் கண்களிலிருந்து ஒளிமிகுந்த பட்டாம்பூச்சிகள் பறந்தன. சுலோசனா அந்த ஒளியைக் கண்டு பிரமித்தாள். “ஏன் தெரியாம, ‘மேனகையின் காதல்’ படம் எடுத்த பூபதி ராஜா, ‘நீ எப்போ சினிமாவுல நடிக்க வர்றே. உனக்காகவே நான் ஒரு கதை பண்ணி வச்சிருக்கேன்’னு பாக்கும்போதெல்லாம் சொல்லிக்கிட்டே இருப்பார். மெட்ராஸ்ல நாடகம் போட்டா ஒரு நாலு டைரக்டர்ங்களாவது வந்து சினிமாவுல நடிக்க வான்னு கூப்பிடுவாங்க. ஆனா, எனக்குதான் அதுல இன்னும் ஆசையே வரலை’’ என்றாள்.
 நடிப்பு, சினிமா என இருவரும் மெய்மறந்து பேசுவதைக் கேட்க மாதம்மாளுக்கு சங்கடமாய் இருந்தது.  மகளை இந்தப் பக்கம் வரும்படி கூப்பிட்டாள்.

 உணவு எல்லோரும் அளவாகத்தான் சாப்பிட்டார்கள். இரவு விடிய விடிய கண் விழிக்க வேண்டும். நன்றாகச் சாப்பிட்டால் தூக்கம் வந்துவிடும் என்றார்கள்.

சாப்பிட்டு முடித்து, கூடத்தில் உட்கார்ந்த சுலோசனா திடீரெனக் கேட்டாள்.  “பவித்ரா, எங்கூட மேடையில தோழியாய் நிக்கிறியா? வசனம் எல்லாம் பெரிசா இல்லை” என்றாள்.

அதைக் கேட்டதும் மாதம்மாளுக்கு நெருப்பை வாரிக் கொட்டினாற்போல இருந்தது.  ‘என்ன காரியம் செய்துவிட்டோம். ராஜநாகத்துக்கு அல்லவா பால் வார்த்துவிட்டோம்’ என நினைத்தவளாய், ‘`சுலோசனா, என்ன சொன்னே?’’ எனக் கத்திவிட்டாள்.

சுலோசனா அவளை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள். மெள்ள  அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. “அக்கா எம்மேல கோவிச்சிக்கிட்டியா? தப்பு, கேட்டது தப்பு, மன்னிச்சிக்க” என்றாள். ஆனால் பவித்ரா, “அக்கா கூடதானே நிக்கப்போறேன். நானும் வர்றேன்” என்றாள்.

மாதம்மாளின் உடல் நடுங்கியது. யோசிக்காமல் சுலோசனாவின் காலில் விழுந்தாள். சுலோசனா தீயில் விழுந்ததைப்போலப் பதறிப் போனாள். “அக்கா, என்ன காரியம் செஞ்சீங்க. ஐயோ நான் பாவி” என அழ ஆரம்பித்துவிட்டாள்.

சட்டெனத் தன்னைத் தேற்றிக்கொண்டு, “அக்கா, நீங்க கவலைப் படாதீங்க. பவித்ரா என்னைக்கும் உங்க மகளா மகாராணியா இருப்பா” என்றாள்.

 பவித்ராவின் தலையை ஆதுரமாய்த் தடவி, “வேண்டாம் கண்ணே, என் வாயில தெரியாத்தனமா அந்த வார்த்தை வந்திடுச்சு. போம்மா, உனக்கு அதெல்லாம் வேண்டாம்” என்றாள்.

 அன்றிரவு நாடகம் பார்க்க மாரியம்மன் கோயில் மைதானம் முழுவதும் ஜனக்கூட்டமாய் நிறைந்திருந்தது.  சுலோசனாவின் ஒவ்வொரு வார்த்தைக்கும் சிரிப்புக்கும் இளவட்டங்களின் விசில் சத்தம் காதைப் பிளந்தது. பவித்ராவின் மனம் எங்கெங்கோ மிதந்தது. அவளுக்குள் புதிய புதிய சிந்தனைகள் உயிர் பெற்றன. எதிர்காலத்தைப் பற்றிய சித்திரம் வலிமையாய் உருக்கொண்டது. மறுநாள் நாடக கோஷ்டி கிளம்பும்போது, பவித்ரா சுலோசனாவின் கையைப் பிடித்துக்கொண்டு, “அக்கா நானும் உன்னை மாதிரி நடிகையாகப்போறேன், சினிமாவில் நடிக்கப்போறேன். என்னைக் கூட்டிக்கிட்டுப் போ” என்றாள்.

சுலோசனா அவள் கைகளை ஆதுரமாய்ப் பற்றிக்கொண்டு, “இதெல்லாம் கனவு கண்ணே, ஒருநாள் எல்லாம் மாறிடும். தீயில் விழும் விட்டில் பூச்சியாய் இதிலே விழுந்திடாதே. அம்மா சொல்றதைக் கேள். அம்மாவின் மனம் நோகும்படி நடந்துகொள்ளாதே” என்றாள்.

மாதம்மாளுக்கு உயிரே போய்விட்டதைப்போல இருந்தது. மகளை எந்த அளவுக்கு விட்டுவிட்டோம். இனியும் இவள் போக்குக்கு விடக்கூடாது என நினைத்துக்கொண்டாள். பவித்ரா எக்காரணம் கொண்டும் இனி சினிமாவுக்குப் போகக் கூடாது என, வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டாள்.

ஒரு வாரம் போனது. அன்று வெள்ளிக் கிழமை காரிப்பட்டியில் சந்தை வியாபாரத்தை முடித்துக்கொண்டு இரவு எட்டு மணிக்குமேல் மாதம்மாள் வீட்டுக்கு வந்தாள். ஜம்பு எரு ஓட்ட வண்டி கட்டிக்கொண்டு ஒடுவன்குறிச்சி போனவன் இன்னும் வரவில்லை. ருக்மணியும் வீட்டில் இல்லை.

மாதம்மாளுக்கு என்னவோ வித்தியாசமாய்த் தெரிந்தது. அடிவயிற்றில் பயம் உருண்டது. ‘பவித்ரா’ எனச் சத்தம் போட்டுக்கொண்டே வீட்டுக்குள் போனாள். வீடு ஆள் அரவமின்றிக் கிடந்தது.

பவித்ராவைக் காணவில்லை. ‘இதென்ன மோசம். பாவிப் பெண் இப்படிப் பழி கொண்டு வந்தாளே’ என உடைந்துபோய் உட்கார்ந்துவிட்டாள். ‘பவித்ரா எங்கே போனே? உன்னை எங்கே தேடுவேன்?’ எனப் பைத்தியம் பிடித்தது மாதிரி பிதற்றிக்கொண்டி ருந்தாள். ஜம்பு உரக்குழியில் சாணத்தை இறக்கிவிட்டு வீட்டுக்கு வந்தான். மாதம்மாள் தலை தலையாய் அடித்துக் கொண்டு, பவித்ரா காணாமல் போன செய்தியைச் சொன்னாள்.

ஜம்பு இடிந்து விழுந்தான். “அடிப்பாவி, பிள்ளைய ஒழுங்கா வளக்காம இப்படி நாசம் பண்ணிட்டியேடி” என இடுப்பில் கட்டியிருந்த தோல் பெல்ட்டைக் கழற்றி வீறினான். மாதம்மாள் கூப்பிய கைகளோடு அடிகளை வாங்கிக்கொண்டாள்.  “என்னை அடிச்சுக் கொன்னுடுங்க” எனக் கண்களை மூடிக் கொண்டாள்.

அன்றிரவு எப்படிப் போனதோ எங்கே போனதோ தெரியவில்லை. ஜம்பு விடியற்காலையில் வண்டி கட்டச் சொன்னான். “ஊர் ஊராய் போய்த் தேடுவோம், போலீசில சொல்லுவோம்” என்றான்.
ஆனால், பொழுது புலரும் முன்பே சுலோசனாவின் குதிரை வண்டி வீட்டு வாசலில் வந்து நின்றது. பவித்ரா அதிலிருந்து இறங்கினாள். பின்னாலேயே சுலோசனா இறங்கினாள். மாதம்மாள் ஓடிப்போய் மகளைக் கட்டிக் கொண்டாள்.

சுலோசனா சங்கடம் தோய்ந்த குரலில் மெள்ளச் சொன்னாள். “அக்கா, இந்தப் பிறவிய மாத்த முடியாது. அவளை அவ இஷ்டத்துக்கு விட்டுடு”. “அவ இஷ்டத்துக்கா விட? நான் உயிரோட இருக்கிறவரைக்கும் நடக்காது. இவளைக் கண்டந்துண்டமாய் வெட்டிப் போட்டாலும் போடுவேன். சினிமாவுல நடிக்க விட மாட்டேன்” என்றாள்.

“ஏய் பவித்ரா, என்னடி சொல்ற, ஒழுங்க இருக்கிறியா இல்லை செத்துப் போறியா?” என்று மகளைப் பார்த்துக் கேட்டாள். மாதம்மாளின் கண்களில் தீக்கங்குகள் காந்துவதை அப்போதுதான் பவித்ரா முதன் முதலாகப் பார்த்தாள். பயமாய் இருந்தது. “அம்மா, இனிமே நான் உன் பேச்சைக் கேட்டு ஒழுங்கா இருக்கேம்மா” என்றாள். பிறகுதான் அந்த வீட்டில் நிம்மதியின் இளம்காற்று வீசியது. தன்னுடைய வேண்டுதலை அம்மன் நிறைவேற்றிவிட்டாள். ‘அடுத்த ஆண்டு பண்டிகையில் சொன்னபடி கன்ன அலகு குத்திக் கொள்கிறேன் தாயே பராசக்தி’ என, மாரியம்மன் கோயில் இருந்த திசையில் கையடுத்துக் கும்பிட்டாள். எல்லாம் ஒரு வாரம்தான். அடுத்த வாரமே பவித்ரா மீண்டும் காணாமல் போய்விட்டாள். இந்த முறை அவள் சுலோசனா வீட்டுக்குப் போகவில்லை. மெட்ராஸ் போகும் சாயந்திர ரயிலில் அவள் ஏறியதைப் பார்த்ததாகச் சிலர் சொன்னார்கள்.

இருவரும் பைத்தியம் பிடித்ததுபோல் ஆனார்கள். மாதம்மாள் சந்தைக்குப் போகவில்லை. அரிசி மூட்டைகள் விற்காமல் அடுக்கியபடியே கிடந்தன. மாதம்மாளின் கண்கள் ஒளி குறைந்து சூனியம் குடிகொண்டது. வெறுமையும் ஏக்கமும் பீடித்தவளானாள். அவளை அப்படிப் பார்க்க ஊருக்கே சகிக்கவில்லை.

ஒரு வாரம் கழித்து பவித்ரா வந்தாள். தான் மெட்ராஸ் போயிருந்ததாகவும், அம்மன் கருணையினால் தனக்குத் துன்பம் எதுவும் நேரவில்லை என்றும் சொன்னாள். மாதம்மாளுக்கும் ஜம்புவுக்கும் மகள்மீது இருந்த பற்று விட்டுப்போனது. யாரோ எவரோ போல் அவளைப் பார்த்தார்கள். அவள் சொன்னதை மௌனமாகக் கேட்டார்கள். பவித்ரா சென்னையில் ஒரு நாடக ஆசிரியரிடம் சேர்ந்துவிட்டதாகச் சொன்னாள். அவர் அவளுக்கு முறையாகப் பயிற்சி கொடுத்து, சினிமாவில் சேர்த்துவிடுவார் என்றாள்.

ஆக, பவித்ரா திரும்பவும் போய்விடுவாள் என்பது உறுதியாகத் தெரிந்த பின், “இதைச் சொல்லத்தான் இங்கே வந்தியா? நீ அங்கேயே போயிரு. திரும்ப வந்து எங்க முகத்தில விழிக்காதே” எனக் கையெடுத்துக் கும்பிட்டாள் மாதம்மாள். பவித்ரா அன்றிரவே மீண்டும் மெட்ராஸுக்குக் கிளம்பிவிட்டாள். அதற்குப் பின் அவளைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

மாதம்மாள், ஜம்பு இருவரும் மெள்ள மெள்ள தங்களைத் தேற்றிக்கொண்டார்கள். கடவுளின் சித்தத்தைத் தாங்கள் எப்படி மாற்ற முடியும் என்றார்கள். தங்களுக்கு வாரிசு எதுவும் இல்லை என்றும் சொத்துகளைக் கோயிலுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் எழுதி வைக்கப்போவதாகச் சொன்னார்கள்.

மாட்டு வண்டிகள் மீண்டும் அதிகாலையில் சந்தைகளுக்குக் கிளம்பின. பழையபடியே நெளிநெளியான கூந்தலை எண்ணெய் வைத்துப் படியச் சீவி ஜடை போட்டு, தலைநிறைய மல்லிகைப் பூவைச் சூடிக் கொண்டு மாதம்மாள் வியாபாரத்துக்குக் கிளம்பிவிட்டாள். ஆனாலும், அவள் இப்போது வேறொரு மாதம்மாளாய் இருந்தாள். அவள் நடவடிக்கைகளுக்குப் பின்னால் மெல்லிய சோகத்தின் நிழல், விலக்க முடியாமல் படிந்திருந்தது.

அந்த ஆண்டு புரட்டாசியில் நல்ல மழைக்காலமாய் இருந்தது. எல்லாக் கிணறுகளும் தரை மட்டத்துக்கு நிரம்பின. வயல்களில் எல்லாம் வெள்ளாமை செழித்துக் கிடந்தது. மக்கள் வேலை வேலை எனப் பறந்தார்கள். புரட்டாசியைத் தொடர்ந்து வந்த ஐப்பசியிலும் மழை தொடர்ந்தது என்றாலும், அந்த ஆண்டு தீபாவளி சிறப்பாய் இருந்தது.

 தீபாவளிக்கு வந்த `மின்னல் மோகினி’ படத்தில் பவித்ரா நடித்திருப்பதாய் ஊரெல்லாம் ஒரே பேச்சாய்க் கிடந்தது. ‘மின்னல் மோகினி’ படம் சேலத்தில்தான் ஓடியது.

மாதம்மாளைப் பார்த்தவர்கள் எல்லாம் ‘உங்க பொண்ணு நடிச்ச படம் வந்திருக்குதே, நீங்க பாத்தீங்களா?’ என்று கேட்டார்கள். அவள் புன்னகை ஒன்றையே பதிலாகச் சொன்னாள்.

சேலம் ஓரியண்டல் தியேட்டரில் நூறு நாள்களுக்கும் மேல் ஓடி, அதற்குப் பின் தான் கணபதி டாக்கீசுக்கு ‘மின்னல் மோகினி’ வந்தது. ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டியிருந்தது. மாதம்மாள் அதில் பவித்ராவின் படம் இருக்கிறதா எனப் பார்த்தாள். அப்படி எதுவும் இல்லை.

குதிரை வண்டியில் ரேடியோ கட்டிக் கொண்டு, ‘நம்ம ஊர்ப் பொண்ணு நடிச்ச மின்னல் மோகினி படம் பார்க்க, மக்களே வாரீர்! வாரீர்!’ எனக் கூவினார்கள்.

கணபதி டாக்கீசில் அன்று எம்.ஜி.ஆர். படத்துக்கு வரும் கூட்டத்தைவிட அதிகமான கூட்டம் வந்திருந்தது. உட்கார்ந்து பார்த்தவர்கள் அளவுக்கே நின்றுகொண்டு படம் பார்த்தவர்களின் கூட்டமும் இருந்தது.

திரையில் தெரிந்த முகங்களை எல்லாம் மக்கள் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்த்தார்கள். வெகு நேரமாக அந்தப் பெண்ணைக் காணவில்லை. ஒருவேளை பொய்யோ என மக்கள் யோசிக்க ஆரம்பித்தபோது, திரையில் ராணிக்கு அருகே, அந்தத் தெரிந்த முகம், உள்ளூர் முகம் பவித்ரா தோன்றினாள். தியேட்டரே இடிந்து விழும் அளவுக்கு விசிலும் கைத்தட்டலும் பறந்தது. அவ்வளவுதான்! அதற்குப் பின் எந்த சீனிலும் அவள் வரவில்லை. கணபதி டாக்கீசிலேயே அந்தப் படம் முப்பது நாள் ஓடியது. அதற்குப் பிறகு வந்த படங்களில் எல்லாம் மக்கள் பவித்ராவைத் தேடினார்கள். கூட்டத்தில் ஒருத்தியாய் தோழிகளில் ஒருத்தியாய் அவள் தென்படக்கூடும் என எதிர்பார்த்தார்கள்..

இரண்டு மூன்று ஆண்டுகள் இப்படியே ஓடிவிட்டன. மக்கள் மெள்ள மெள்ள பவித்ராவை மறந்துபோனார்கள்.

ஒருநாள் திடீரென்று பவித்ரா ஊருக்கு வந்தாள். அவள் உடல் நோயினால் பீடிக்கப்பட்டதைப் போல இருந்தது. சரியான உணவில்லாதவளைப்போல போஷாக்கின்றி, மகிழ்ச்சியற்று இருந்தாள். ஆனாலும் உற்சாகமாகப் பேசினாள்.

மாதம்மாளின் கால்களைக் கட்டிக்கொண்டு அழுதாள். “அம்மா, என்னை ஏத்துக்க” என்று கதறினாள். மாதம்மாள் காதில் அது ஏறவே இல்லை. ஜம்பு மகளைப் பார்த்துக் கண்கலங்கினார். அருகில் அழைத்து நெற்றியில் முத்தமிட்டு,  “இப்படிச் செய்யலாமா அம்மா, எங்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை?” என அழுதார்.

அன்றிரவே அவள் கிளம்பிவிட்டாள்.

மேலும் இரண்டு வருடங்கள் கழித்து  பவித்ரா கதாநாயகியாய் நடித்த `மாமியார் மருமகள்’ என்ற படம் திரைக்கு வந்தது.

போஸ்டர்களிலேயே பவித்ரா அவ்வளவு அழகாய் இருந்தாள்.

காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பெண், மாமியார் கொடுமைக்கு ஆளாகி, பின் தெளிவு பெற்று, திட்டமிட்டு மாமியாரின் கர்வத்தை அடக்கி அவளை வழிக்குக்கொண்டு வருவதுதான் படத்தின் கதை.
அதில் பவித்ரா அவ்வளவு அற்புதமாய் நடித்திருந்தாள். உண்மையான கிராமத்து மருமகளைக் கண் முன் நிறுத்தினாள். படம் வெளியான தியேட்டர்களில் எல்லாம் சக்கைப்போடு போட்டது. பெண்களின் கூட்டம் தியேட்டர்களில் குவிந்தது.

கணபதி டாக்கீசுக்கும் ‘மாமியார் மருமகள்’ படம் வந்தது. குதிரை வண்டி விளம்பரம் மக்களைக் குதூகலமடையச் செய்தது. `நம் ஊர்ப் பெண், பெண் குலம் போற்றும் ஒப்பற்ற பாத்திரத்தில் நடித்த மாமியார் மருமகள் படத்தைக் காண இன்றே வாருங்கள்.’
மாதம்மாளையும் ஜம்புவையும் பார்க்க எங்கெங்கிருந்தோ யார்யாரெல்லாமோ வண்டி கட்டிக் கொண்டு வந்தார்கள். ஜம்புவின் முகத்தில் பழைய சிரிப்பு வந்தது. மாதம்மாள் முகத்திலும் சிரிப்பு இருந்தது. ஆனால் இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. ‘மகளை ஊருக்குக் கூட்டிக்கொண்டு வாருங்கள்’ என வந்தவர்கள் எல்லாம் கேட்டுக்கொண்டார்கள். ஜம்புவுக்கு ‘ஆகட்டும், பார்க்கலாம்’ என்று சொல்லிச் சொல்லி வாய் வலித்தது.

மாதம்மாள் வழக்கம்போல விடியற்காலையில் வண்டி கட்டிக்கொண்டு அரிசி மூட்டைகளோடு சந்தைக்குப் போனாள். வழியில்தான் ‘கணபதி டாக்கீஸ்’ இருந்தது. தியேட்டருக்கு முன்னால் ஒட்டியிருந்த போஸ்டர் வெகுதூரத்திலிருந்தே தெரிந்தது.

வண்டியோட்டி முத்து, தியேட்டருக்கு முன்னால் வண்டியை நிறுத்தி போஸ்டரைப் பார்த்தான். மலர்ந்த முகத்தோடு மாதம்மாளைப் பார்த்தான். மாதம்மாள் `வண்டியை வேகமா விடப்பா, சந்தைக்கு நேரமாகுது’ என்றாள். அவள் கண்களில் எந்தச் சலனமும் இல்லை.

போஸ்டரில் மாமியாரின் கொடுமை தாங்காமல் பவித்ரா அழுதுகொண்டிருந்தாள். அது மாதம்மாளைப் பார்த்து அழுவதைப் போலவே முத்துவின் கண்களுக்குத் தெரிந்தது.