Sunday, 25 December 2016

ஜப்பான் நாட்டுக் கிராமியக் கதை
ஜப்பான் நாட்டில் ஒரு சின்ன ஊர். சின்ன ஊரில் ஒரு பெரிய குடும்பம்.
பண்ணையார் குடும்பம் என்றால் எல்லோருக்கும் தெரியும். பண்ணையாருக்கு ஆறு மகன்கள்;ஆறு மகள்கள். அந்த ஆறில் ஒருவன் பெயர் ஜோஜி.
ஜோஜி நன்றாக படங்கள் வரைவான்.உட‌னே எல்லா ப‌ட‌ங்க‌ளையும்
வ‌ரைய‌க்கூடிய‌வ‌ன் என்று எண்ணிவிடாதீர்க‌ள். அவ‌ன் வ‌ரைவ‌து
பூனை...பூனை...பூனைப் ப‌ட‌ங்க‌ள்தான். வேறு எந்த‌ வேலையும் செய்ய‌
மாட்டான் ஜோஜி! கையில் குச்சி என்று எதாவ‌து கிடைத்தால் போதும்.
மாட்டுச் சாண‌த்தைத் தொட்டுக்கூட‌ ஒரு பூனையை வ‌ரைந்துவிடுவான்.
அவ‌ன் வ‌ரைவது எல்லாமே பூனைதான்.
Publish Post
பூனை.....பூனை மேலும் பூனைக‌ள்! சிறிய‌ பூனைக‌ள், பெரிய‌ பூனைக‌ள்,
ஒல்லியான‌ பூனைக‌ள்,குண்டான‌ பூனைக‌ள்,பூனைக‌ள்...பூனைக‌ள்...பூனைக‌ள்,
பூனைக‌ள்...பூனைக‌ள்!
அவ‌னுடைய‌ அப்பா ஒரு நாள் ஜோஜியைக் கூப்பிட்டு,"உட‌னே நீ பூனை
ப‌ட‌ம் வ‌ரைவ‌தை நிறுத்த‌னும். நீ பூனையா வ‌ரைஞ்சுகிட்டு இருந்தா நீ
என்னைக்கு ஒரு விவ‌சாயியாவ‌து?" என்று ச‌த்த‌ம் போட்டார்.
"ம‌ன்னிச்சுக‌ங்க‌ அப்பா,நான் வ‌ரைவ‌தை நிறுத்த‌ முய‌ற்சி ப‌ண்றேன்,"
என்றான், ஜோஜி.
ஜோஜியும் முய‌ற்சி ப‌ண்ணினான். இனிமே வ‌ரையக்கூடாது என்று
சொல்லிக்கொள்வான். ப‌ண்ணையில் எங்காவ‌து ஒரு பூனையைப் பார்த்து
விட்டால் அவ்வ‌ள‌வுதான். அவ‌ன் உறுதி த‌ள‌ர்ந்துவிடும். உட‌னே அந்த‌ப்
பூனையை வ‌ரைய‌ உட்கார்ந்துவிடுவான்.
ஜோஜி நிச்ச‌ய‌மா ஒரு விவ‌சாயி ஆக‌ மாட்டான். அவ‌னோட‌ அண்ண‌ன்
த‌ம்பிக‌ள் எல்லாம் என‌க்கு நில‌த்துல‌ ஒத‌வி ஒத்தாசையா இருக்காங்க‌.
இவ‌ன் ம‌ட்டும் பூனை...பூனைன்னு அலைய‌றான்,"என்று விவ‌சாயி த‌ன்
மனைவியிட‌ம் சொன்னான்.
"அவனோட தலையெழுத்து கோவில் அர்ச்சகராஆகனும்ன்னு இருக்கோ
என்னமோ! நீங்க‌ ஏன் அவ‌னை கோயிலுக்கு கூட்டீட்டுப் போக‌க்கூடாது?"
விவ‌சாயி த‌ன் ம‌க‌னை அருகிலுள்ள‌ கிராம‌க் கோவிலுக்கு அழைத்துச்
சென்றார். அங்குள்ள‌ த‌லைமை அர்ச்ச‌க‌ரிட‌ம் அழைத்துச் சென்று த‌ன்
விருப்ப‌த்தைச் சொன்னார். அவ‌ரும் அவ‌னை ப‌டிக்க‌வைத்து
அர்ச்ச‌க‌ராக்கிவிடுகிறேன் என்றார்.
ஜோஜி ம‌ற்ற‌ மாண‌வ‌ர்க‌ளுட‌ன் த‌ங்கி அர்ச்ச‌க‌ர் கொடுக்கும் பாட‌ங்க‌ளைப்
ப‌டிக்க‌ ஆர‌ம்பித்தான். அர்ச்ச‌க‌ர் எழுதுவ‌த‌ற்குத் தேவையான‌ மை குச்சி,
தூரிகை,சிலேட்டு போன்ற‌ க‌ல் ப‌ல‌கை போன்ற‌வ‌ற்றையும் ஜோஜிக்கு
கொடுத்திருந்தார்.
ஜோஜி எழுதுவ‌த‌ற்கு மை த‌யாரித்தான். ஜோஜி போல‌ ம‌ற்ற‌ மாண‌வ‌ர்க‌ளும்
மை த‌யாரித்து பாட‌ங்க‌ளை க‌ண்ணும் க‌ருத்துமாக‌ எழுதித் த‌யாரித்த‌ன‌ர்.
ஆனால் ஜோஜியோஅவ‌னுக்கு எழுத‌க் கொடுத்திருந்த‌ தாளில் ம‌ணிக்க‌ண‌க்கில் எதுவுமே எழுத‌வே இல்லை. அத‌ன் பின் அவ‌னுடைய‌ தாட்க‌ளில் வ‌ரைய‌த் துவ‌ங்கினான். அவ‌ன் வ‌ரைந்த‌தெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
அது பூனை!
பூனை.....பூனை மேலும் பூனைக‌ள்! சிறிய‌ பூனைக‌ள், பெரிய‌ பூனைக‌ள்,
ஒல்லியான‌ பூனைக‌ள்,குண்டான‌ பூனைக‌ள்,பூனைக‌ள்...பூனைக‌ள்...பூனைக‌ள்,
பூனைக‌ள்...பூனைக‌ள்!
"நீ பூனைக‌ள் வ‌ரைவ‌தை உட‌ன‌டியாக‌ நிறுத்த‌வேண்டும். இப்ப‌டியே பூனைக‌ள்
ம‌ட்டுமே வ‌ரைந்துகொண்டிருந்தால் நீ எப்ப‌டி அர்ச்ச‌க‌ராவ‌து?" என்று கோவில்
த‌லைமை அர்ச்ச‌க‌ர் கேட்டார்.
"அய்யா, என்னை ம‌ன்னிச்சுருங்க‌;இனிமேல் பூனை ப‌ட‌ம் வ‌ரைவ‌தை
நிறுத்த‌ முய‌ல்கிறேன்,"என்று ப‌வ்ய‌மாக‌ ப‌தில் சொன்னான் ஜோஜி.
அவ‌னும் முய‌ற்சி செய்தான். ஆனால், கோவில் பூனையை குறுக்கே
ம‌றுக்கே பார்க்கும்போது அவ‌ன் ப‌டிக்க‌வேண்டிய‌தையும் எழுத‌
வேண்டிய‌தையும் ம‌ற‌ந்து இன்னொரு பூனையை வ‌ரைய‌ ஆர‌ம்பித்துவிடுகிறான்.
இது ஜோஜியை பேராப‌த்தில் கொண்டுபோய்விட்டுவிட்ட‌து;கோவில் சுவ‌ர்,
திரைச்சீலை, காகித‌த்தாள் என்று எல்லாவ‌ற்றிலும் பூனைக‌ளாக‌ வ‌ரைந்து
த‌ள்ளினான். கோவிலில் எதைப் பார்க்கிறார்க‌ளோ இல்லையோ ப‌க்த‌ர்க‌ள்
சின்ன‌து பெரிய‌துமான‌ பூனைக‌ள் ப‌ட‌ங்க‌ளையே அதிக‌ம் பார்த்த‌ன‌ர்.
ப‌க்த‌ர்க‌ள் த‌லைமை அர்ச்ச‌க‌ரிட‌ம் புகார் செய்த‌ன‌ர்.
"ஜோஜி நீ ஒரு போதும் அர்ச்ச‌க‌ராக‌ப் போவ‌து இல்லை," என்று
மிகுந்த‌ வ‌ருத்த‌த்தோடு சொன்னார்.
அதும‌ட்டும‌ல்ல‌ உன்னுட‌ய‌ மூட்டை முடிச்சுக‌ளை எடுத்துக்கொண்டு
வீட்டுக்கே போய்விடு என்றும் சொல்லிவிட்டார்.
ஜோஜி த‌ன் அறைக்குச் சென்று அவ‌னுடைய‌ பொருட்க‌ளை எல்லாம்
மூட்டை க‌ட்டினான். ஆனால் வீட்டுக்குப் போவ‌த‌ற்குப் ப‌ய‌மாக‌ இருந்த‌து.
அவ‌னுடைய‌ அப்பா கோப‌த்தில் என்ன‌ செய்வார் என்ப‌து அவ‌னுக்கே
தெரியாது. அத‌னால் வீட்டுக்குப் போவ‌தை விட‌ அருகிலுள்ள‌ இன்னொரு
கோவிலுக்குப் போய் அங்கு த‌ங்க‌ முடியுமா என்று பார்ப்போம் என‌ முடிவு செய்துகொண்டான்.
ஜோஜி ந‌ட‌க்க‌த் துவ‌ங்கினான். இருட்டிக்கொண்டு வ‌ந்த‌து. வேக‌வேக‌மாக‌
அந்த‌க் கிராம‌த்தை நோக்கி ந‌ட‌ந்தான். ஒருவ‌ழியாக‌ கோவிலுக்கு வ‌ந்து
சேர்ந்தான். கோவில் ப‌டிக்க‌ட்டுக‌ளில் ஏறி கோவில் க‌த‌வைத் த‌ட்டினான்.
ஒருத்த‌ரும் வ‌ந்து க‌த‌வைத் திற‌க்க‌வில்லை. பெரிய‌ க‌த‌வை மிகுந்த‌ சிர‌ம‌ப்
ப‌ட்டு க‌த‌வைத் த‌ள்ளித் திற‌ந்து உள்ளே போனான். கோவிலுக்குள் எங்கும்
ஒரே இருட்டு. ஜோஜிக்கு ஒன்றும் புரிய‌வில்லை.
"ஏன் கோவிலுக்குள் விள‌க்கு இல்லை;ஆட்க‌ளும் இல்லை. என்னாச்சு இந்த‌க்
கோவிலுக்கு என்று அவ‌னுக்கு அவ‌னே கேட்டுக்கொண்டான்.
க‌த‌வுக்கு அருகே இருந்த‌ விள‌க்கு ஒன்றை எரிய‌விட்டான். அப்போதுதான்
பார்த்தான். அதையெல்லாம் பார்த்த‌போது அவ‌னுக்குள் ம‌கிழ்ச்சி ஏற்ப‌ட்ட‌து.
ம‌கிழ்ச்சியில் கைத‌ட்டி ஆர‌வார‌மாக‌ச் ச‌த்த‌ம்போட‌வேண்டும் என்று
நினைத்தான். "ஐ,ஜாலி..ஜாலி..ந‌ம‌க்கு இப்ப‌ ஜோலி வ‌ந்துருச்சு" என்று
வாய்விட்டுப் பாட‌வும் செய்தான்.
அப்ப‌டி என்ன‌ ஜோஜி பார்த்தான்?
அந்த‌ப் பெரிய‌ அறையில் அறையைச் சுற்றித் திரைச்சீலைக‌ள், பெரிய‌ பெரிய‌
வ‌ரைப‌ட‌த் தாள்க‌ள் சுருட்டி வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. அதுதான் அவ‌ன் மகிழ்ச்சிக்குக் கார‌ண‌ம்.
உட‌ன‌டியாக‌த் த‌ன்னுடைய‌ பையிலிருந்து மை,தூரிகை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டான். த‌ன்னுடைய‌ வ‌ரையும் ப‌ட‌ல‌த்தைத் துவ‌ங்கி விட்டான்.
வ‌ழ‌க்க‌ம்போல‌ ஒன்றை ம‌ட்டுமே வ‌ரைந்தான்...வெவ்வேறுவ‌டிவ‌ங்க‌ளில்!
அது பூனை!
பூனை.....பூனை மேலும் பூனைக‌ள்! சிறிய‌ பூனைக‌ள், பெரிய‌ பூனைக‌ள்,
ஒல்லியான‌ பூனைக‌ள்,குண்டான‌ பூனைக‌ள்,பூனைக‌ள்...பூனைக‌ள்...பூனைக‌ள்,
பூனைக‌ள்...பூனைக‌ள்!
இந்த‌த்த‌ட‌வை அவ‌ன் ஒன்றைக் க‌டைசியாக‌ வ‌ரைந்தான். அந்த‌ அறையின்
நீள‌ அக‌ல‌த்துக்கு இருந்த‌ திரைச் சீலையின் அள‌வுக்கு பெரிதாக‌ ஒரு இராட்ச‌ச‌ப்
பூனையை சிர‌ம‌ப்ப‌ட்டு வ‌ரைந்தான். அந்த‌ப் பிர‌ம்மாண்ட‌மான‌ பூனை மிக‌த்
த‌த்ரூப‌மாக‌ அழ‌காக‌வும் வ‌ந்திருந்த‌து. அவ‌ன் இதுவ‌ரை அவ்வ‌ள‌வு பெரிய‌
பூனையை வ‌ரைந்த‌தே இல்லை. அவ‌னுக்கு அந்த‌ப் பூனையை மிக‌வும்
பிடித்துப் போயிற்று.
அவ‌னுக்கு மிக‌வும் க‌ளைப்பாக‌ இருந்த‌து.
அந்த அறையிலேயே படுத்தான்;ஆனால் தூக்கம் வரவில்லை. பெரிய‌
அறையாக இருந்ததால் உலகத்திலேயே அவன் ஒருவன் மட்டும்
இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. எழுந்து எதாவது சின்ன‌
அறை இருக்குமா என்று அங்குமிங்கும் நடந்து போய் பார்த்தான்.
சுவற்றில் அலமாரி போன்று இருப்பதைக் கவனித்தான்.
அதைத் திறந்துபார்த்தால் வரிசையாக நாலைந்து பேர்கள் படுப்பதற்கு
வசதியான இடமாகத் தெரிந்தது. கதவை இழுத்து மூடுவது போல‌
வசதி இருந்தது. அது அவனுக்குப் பிடித்திருந்தது. உள்பக்கம்
நுழைந்து படுத்துக்கொண்டு கதவை இழுத்து மூடித் தூங்க‌
ஆரம்பித்தான்.
திடீர் என பின்னிரவில் ஒரு உறுமல் சத்தம் கேட்டு விழித்தான்.
கொஞ்சம் பயந்தும் போனான். உர்ர்ர்ர்ர்ர்...உர்ர்ர்ர்ர் என்ற சத்தம்
அவன் இருக்கும் அறையில் கேட்டது. சத்தத்தை வைத்துப் பார்க்கும்
போது இது ஒரு பெரிய மிருகமாகத்தான் இருக்கவேண்டும், என்று
நினைத்தான்.
இது போன்ற பிராணிக்குப் பயந்துதான், அர்ச்சகரோ,
பக்தர்களோ இரவில் இங்கு தங்குவது இல்லை போலிருக்கிறது
என்று நினைத்துக்கொண்டான். இப்படி தெரியாத்தனமா வந்து
இங்க மாட்டிக்கிட்டோமே என்று எண்ணினான்.
இப்போது இவ‌ன் ப‌டுத்திருக்கும் இட‌த்துக்கு நேர் கீழே
அந்த‌ப் பிராணியின் உறும‌ல் ச‌த்த‌ம் கேட்ட‌து. சிறிது நேர‌த்தில்
அந்த‌ப் பிராணிக்கும் இன்னொரு பிராணிக்கும் ந‌ட‌க்கும்
ச‌ண்டைபோல‌ கேட்ட‌து. இர‌ண்டு வில‌ங்குக‌ள் ஒன்றோடு ஒன்று
க‌ட்டிப்புர‌ளுவ‌து போலிருந்த‌து.
உறும‌ல் இப்போது ஒருவித வ‌லியினால் வ‌ருவ‌து போல கேட்ட‌து. திடீர் என‌ ஒரு பெருத்த‌ ஒலி; அத‌னைத் தொட‌ர்ந்து பாதத்தை தரையில் தட்டினால் ஒரு
மெல்லிய "தட்..தட்" ச‌த்த‌ம் கேட்குமே, அப்ப‌டிக் கேட்ட‌து. அதுவும்
கொஞ்ச‌ நேர‌த்தில் நின்று போன‌து. எந்த‌ ச‌த்த‌மும் இல்லை.
ஜோஜிக்கு உள்ளூர‌ ந‌டுக்க‌ம். அந்த‌ மிருக‌ம் நாம‌ கீழ‌ இற‌ங்கி வ‌ர‌க்
காத்திருக்கோ, என்ற‌ ப‌ய‌ம். க‌த‌வைத் திற‌ந்து பார்க்க‌வும் ப‌ய‌ம்,அவ‌னுக்கு.
என்ன‌வாக‌ இருக்கும்? அவ‌னால் இந்த‌ப் பிராணியாகத்தானிருக்கும்
என்ற உறுதியான‌ முடிவுக்கு வ‌ர‌முடிய‌வில்லை.
அப்ப‌டி இப்ப‌டி என்று தூங்காமல் கொட்டகொட்டவிழித்திருந்தான் ஜோஜி.
சில‌ ம‌ணிநேர‌ங்க‌ளில் விடிந்துவிட்ட‌த‌ற்கான‌ அறிகுறி தெரிந்த‌து. விடிய‌ல்
காலை சூரிய‌க் க‌திர்க‌ள் க‌த‌வைத்தாண்டி உட்புகுவ‌தை உண‌ர்ந்தான்.
எப்ப‌டியாவ‌து இற‌ங்கித்தானே ஆக‌வேண்டும் என்று முடிவு செய்து
கீழே இறங‌க முடிவு செய்தான்.
ஜோஜி மெல்ல‌ க‌த‌வைத் திற‌ந்துகொண்டு கீழே இற‌ங்கினான்.
இறங்கியதும்,திடுக்கிட வைத்தது அவ‌ன் க‌ண்ட‌ காட்சி.
பிரம்மாண்டமான எலி செத்துக்கிடந்தது. அந்த‌ எலி "பசு" மாடு
போல‌ பெரிய‌தாக‌ இருந்த‌து. இந்த‌ எலி எந்த‌ மிருக‌த்துட‌ன் ச‌ண்டை
போட்டு ம‌டிந்த‌து? சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கே அப்ப‌டி
எந்த‌ மிருக‌மும‌ அவ‌ன் க‌ண்ணில் தென்ப‌ட‌வில்லை.
அறையைச் சுற்றி எந்த‌ மிருக‌மும் தென்ப‌ட‌வில்லை. அறையில்
இருந்த‌தெல்லாம் நீண்டு தொங்கிய‌ திரைச்சீலைக‌ள்; அதில் அவ‌ன்
வ‌ரைந்த‌ சின்ன‌தும் பெரிய‌துமான‌ பூனைக‌ள் ப‌ட‌ங்க‌ள்தான்.
அவ‌ன் வ‌ரைந்த‌ பெரிய‌ பூனைப் ப‌ட‌த்தை மீண்டும் பார்த்தான்; அந்த‌ப்
ப‌ட‌ம்....!? நான் த‌லையை வ‌ல‌து ப‌க்க‌மாக‌வும் வாலை இட‌துப‌க்க‌மாக‌வும்
அல்ல‌வா வ‌ரைந்திருந்தேன்.
இப்போது த‌லை இட‌துப‌க்க‌மாக‌வும் வால் வ‌ல‌து ப‌க்க‌மாக‌வும்
அல்ல‌வா திரும்பியிருக்கிற‌து. இது எப்ப‌டி ந‌ட‌ந்த‌து?
"பூனை" ஜோஜி ஒரு முறை அழுத்த‌ம் திருத்த‌மாக‌ச் சொன்ன‌வன்,
என்ன நடந்தது என்பது புரிந்துவிட்டது". அவ‌ன் க‌ண்க‌ள் விய‌ப்பால்
விரிந்த‌து.
நீதான் இந்த‌ எலியிட‌மிருந்து என்னைக் காப்பாற்றினாயா? கீழே இற‌ங்கி
காரியத்தை முடித்துவிட்டு மீண்டும் மேலே ஏறிக்கொண்டாயா?" என்று
த‌ன‌க்குத்தானே சொல்லிக்கொண்டான்.
அந்த‌ப் பெரிய‌ பூனையின் பாத‌ங்க‌ளை கைக‌ளால் த‌ட‌வி,"என்னைக்
காப்பாற்றியதற்கு ரெம்ப‌ ந‌ன்றி என் மதிப்பிற்குரிய பூனையாரே,"
என்றான் ஜோஜி.
இனிமேல் என் உயிர் உள்ள‌வ‌ரை "பூனை" ப‌ட‌ம் வ‌ரைவ‌தை
யாரும் த‌டுக்க‌ முடியாது என்றும் த‌ன‌க்குள் சொல்லிக்கொண்டான்.
அப்போது கோவில் அர்ச்ச‌க‌ர் ம‌ற்றும் ஊர் பொதும‌க்க‌ளில் சில‌ர்
அங்கு வ‌ந்த‌ன‌ர்.
அந்த‌க் கிராம‌த்துக்கே ச‌வாலாக‌ இருந்த‌ எலி இற‌ந்து கிட‌ப்ப‌தையும்
அருகில் ஜோஜி நிற்ப‌தையும் பார்த்த‌ன‌ர். ந‌ட‌ந்த‌தை ஜோஜி அவ‌ர்க‌ளுக்கு
விள‌க்கினான்.
ஊராருக்கு இந்த‌ச் செய்தி தேனாக இனித்த‌து. ஜோஜி அந்த‌க் கிராம‌த்தாருக்கு
"ஹீரோ"ஆனான். அந்த‌க் கோவில் அர்ச்ச‌க‌ர் ஜோஜியை அந்த‌க் கோவிலில்
அவ‌ன் விரும்பும் கால‌ம் வ‌ரைக்கும் வ‌சிக்க‌லாம் என்று சொன்னார்.
ஆனால் ஜோஜி ஒரு அர்ச்ச‌க‌ராக‌வும் ஆக‌வில்லை; அவ‌ன் அப்பா
விரும்பிய‌வாறு ஒரு விவ‌சாயியாக‌வும் ஆக‌வில்லை.
அவ‌ன் ஒரு ஓவிய‌க் க‌லைஞ‌னான்! மிக‌ச் சிற‌ந்த‌ ஓவியன்!
அனைத்து நாடுக‌ளும் அவ‌னைக் கெள‌ர‌வித்த‌து!
"பூனை"யை ம‌ட்டுமே வ‌ரையும் ஒரே க‌லைஞ‌ன் அகில‌ உல‌கிலும்
"ஜோஜி" ஒருவ‌ன் ம‌ட்டுமே!

Friday, 16 December 2016








கொழுக்கட்டைச் சாமியார் கதை


கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி இன்று சிற்றூர்கள் பல இருக்கின்றன. அவற்றுள் ஒன்றில்தான் கொழுக்கட்டைச் சாமியார் மடம் இருக்கிறது. அவருக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது?
பொதுவாக, மக்கள் ஒரு பழமொழி சொல்லுவார்கள். நதியின் வரலாற்றையும் சாமியாரின் வரலாற்றையும் விசாரிக்கக் கூடாது என்று. அப்படியே விசாரித்தாலும் கிடைப்பது உண்மையா என்று யாருக்குத் தெரியும்! ஆனால் கொழுக்கட்டைச் சாமியாருக்கு ஏன் அப்படியொரு பெயர் வந்தது என்று ஓர் உள்ளூர் அம்மாள் மூலம் எனக்குத் தெரிய வந்தது. ஆஜானுபாகுவான அவர் வடநாட்டிலிருந்து வந்தவராம். வந்தபொழுது, அவருக்குத் தமிழ் தெரிந்திருக்கவில்லை. வந்தபிறகும் தமிழை முழுமையாகத் தெரிந்துகொள்ளும் விருப்பமும் இல்லை. இந்தச் சனங்களுக்கு 'கொஞ்சம் கொஞ்சம்' தமிழ் தெரிந்தால் போதும் என்று கொழுக்கட்டைச் சாமியார் கணக்குப் போட்டார். நம்ம சனங்களைப் பற்றி அவர் கணக்கு இதில் மட்டுமல்ல, பலவற்றிலும் தவறானது பற்றி இந்தக் கதை, தான் முடிவதற்கு முன் வாக்குமூலம்போல் சொல்லிவிடப் போகிறது... அப்பொழுதுதான் தெரியும், நம்ம தமிழ்ச் சனத்தை ஏமாத்த நினைக்கிறவங்க கதி என்ன ஆகும் என்பது. சும்மாவா பாடினாரு நம்ம எம்ஜியாரு? "தவறு என்பது தவறிச் செய்வது / தப்பு என்பது தெரிந்து செய்வது / தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும் / தப்பு செய்தவன் வருந்தி யாகணும்"ன்னு.. கொ.சா. திருந்தலை..வருந்தவுமில்லை.. கடைசி'ல என்ன ஆச்சு?
***
அந்த ஊருக்குக் கையில் காலணாகூட இல்லாமல் அவர் வந்தார்.
அந்தக் காலத்திய மரக்காணம் சாலையான இந்தக் காலத்திய கிழக்குக் கடற்கரைச் சாலையில், இப்பொழுது புகழ்பெற்றிருக்கும் 'புரோட்டா'க் கடைபற்றி ஒருவரும் கனவுகூடக் கண்டிருக்க மாட்டார்கள். தற்காலம் பிரான்சிலிருந்து வருபவர்கள் ''மெனக்கெட்டுக் கார் போட்டுக் கொண்டு போய்," குறைந்த அளவு பத்துப் புரோட்டாவாவது குருமா மற்றும் பட்டாணிக் கலவையோடு காலிபண்ணி வருகிறார்கள். அதே இடத்தில் - அன்று, கொழுக்கட்டைகளைக் கூடையிலேந்திக்கொண்டுபோய் மரத்தடியில் வைத்து விற்றுப் பிழைத்திருந்தாள் ஒரு பாட்டி.
வியாபாரத்துக்குப் போவதற்காக கொழுக்கட்டை சுட்டுவிட்டு குடிசைக்கு வெளியில் வந்தாள் அவள். அங்கே பசியோடு நின்றிருந்தவர், மொழி தெரியாததால், அவர் அந்தப் பாட்டிமுன் கையை ஏந்தினார். பாட்டி உடனே வீட்டினுள் ஓடி("ஓடி" என்பது, எம்.கே.டி. பாகவதர் காலப் படங்களை நினைவூட்டவேண்டும்; இல்லையென்றால், அவ்வாறு நினைவூட்டப் பெறாதவர்கள், சென்ற நூற்றாண்டின் இறுதியில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்!) சூடான கொழுக்கட்டைகளை ஒரு வாழைநறுக்கில் இட்டுக் கொண்டுவந்து அந்த வடநாட்டுக்காரரின் சிவப்புக் கைகளில் தர, அவர் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.(ரொம்பவும் சூடோ?) நன்றியுணர்வு என்று அந்தப் பாட்டி எடுத்துக் கொண்டாள். சாப்பிட்டதும், அவருக்குக் கொழுக்கட்டை மிகவும் பிடித்துப்போனது. பாட்டியிடம் அந்தப் பலகாரம் என்ன என்று இந்தியில் கேட்டார். கொடுத்த பலகாரம் பற்றிக் கேட்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள மொழி தேவையா என்ன?(பிரகாஷ்ராஜ் கவனிக்க) 'கொழுக்கட்டை' என்று அழுத்தந் திருத்தமாகச் சொன்னாள் பாட்டி. அவரே அப்படித்தான் இருந்தார் என்பது, வேறு செய்தி. 'கொல்லுக்கட்டாய்' என்று உரக்கச் சொல்லிப் பார்த்தவர், பாட்டியால் திருத்தப்பட்டு 'கொல்லுக்கட்டை' 'கொள்ளுக்கட்டை' என்றெல்லாம் சொல்லி, மீண்டும் மீண்டும் திருத்தப்பட்டு கொழுக்கட்டை என்று சரியாகச் சொல்ல அரைமணி நேரமாவது ஆகியிருக்கும். இதன் விளைவாக, அந்த ஊரிலேயே தங்கிக் கொண்டு, அவர் திறமையாக 'மேஜிக்' செய்ய ஆரம்பித்து, சனங்களை அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து மட்டுமல்லாமல் அருகிலுள்ள பட்டணத்திலிருந்தும் ஈர்க்கத் தொடங்கிய காலகட்டத்தில், முதல் 'சிஷ்யை'(தலைமைச் சிஷ்யை)யாக அந்தப் பாட்டிதான் ஆனார்.('ஆனாள்' என்பது, 'ஆனார்' ஆவது.. இப்படித்தான்)
தலைமைச் சிஷ்யையே அனுபவசாலி ஆனதால், ஒரு கொழுக்கட்டை விற்று வந்த காசுபோல் பலமடங்கு ஒரு சீடரைச் சேர்த்துக் கொள்வதில் தேறியது. அப்புறமென்ன? மடம் வந்தது. மண்டபம் வந்தது. சீடகோடிகள் தங்குவதற்குப் பெரிய தங்குமிடம் வந்தது. யாருக்கும் தெரியாமல் இன்னும் என்னென்னவோ வந்தன.
முன்பே சொன்னதுபோல், 'மொழி'யைச் சிக்கனமாகப் பயன்படுத்தி அருள்வாக்கும் சொல்லத் தொடங்கினார் அவர். அவர் சொல்லும் அருள்வாக்குகளில் கட்டாயம் கொழுக்கட்டை இடம்பெறும். அதை வைத்தே மக்களை - அவரவர்கள் மனதில் இருக்கும் சேதிகளைத் தான் சொன்னதாக அர்த்தப் படுத்திக் கொள்ளச் செய்வார் சாமியார். அப்படியே அவர்கள் குழம்பினாலும், பக்கத்தில் இருக்கும் 'சிஷ்ய'கோடிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு 'வியாக்கியானம்' எடுத்துவிட்டு அசத்துவார்கள். வந்த ஒருவர்கூட அதிருப்தியாகத் திரும்பிச் சென்றதில்லை என்றால் பாருங்களேன்! கொழுக்கட்டைச் சாமியார் என்று அவர் அன்புடன் அழைக்கப்படுவதற்குக் காரணங்களான 'அருள் வாக்கு'கள் சில.........
"சாமீய்......எம் புள்ளை கெட்ட சகவாசத்தால சீர்கெட்டு திரியிறான் சாமீய்.. எப்பத்தான் அவன் திருந்துவான்?........"
"திருந்துவாம்'மா.. திருந்துவான்..கொழுக்கட்டை நல்லா வேந்ததும் திருந்திடுவான்...போ..போ.. காசுபோட்டுடு.."
"சாமி என்ன சொல்றாருங்க?......என்னமோ கொழுக்கட்ட... அத்த இத்த'ன்னுட்டு.."
"அதுவா..ஒனக்குப் பக்குவம் இல்ல.. அதான் சாமி வெளக்கமாச் சொல்றது புரியல்ல..கொழுக்கட்டை நல்லா வேந்தாக்காத்தான் நீ அத்தத் தின்னுவே! அத்தப்போலவே ஒம் பையனுக்கு கிரகங்கள்'ல்லாம் கூடி நன்மை செய்யற காலம் வரப்போகுது.. அப்ப அவன் திருந்தீடுவான்'கிறாரு சாமி.. சரி..சரி அந்த உண்டி'ல தாரளமாப் போட்டுட்டுப் போ.. எல்லாம் நல்லா நடக்கும் போ.." (இது பக்கத்தில் உள்ள சீடர் கூற்று)
விளக்கவே முடியாத மாதிரி 'சாமி' சொல்லிடுச்சுனா?... கொழுக்கட்டைப் பாட்டிக்கு ஆள் போகும். கொழுக்கட்டை சம்பந்தமான அத்தனை தொழில் நுணுக்கங்களையும் அறிந்தவரல்லவா தலைமைச் சிஷ்யையான அவர்? அப்படித்தான் ஒருநாள் ஆனது...
தனக்குப் பிள்ளையே பிறக்கவில்லை என்று முறையிட்ட, பட்டணத்திலிருந்து வந்த பணக்காரப்பெண் ஒருவரிடம் - ''ஒழுங்கா மொறையா கொழுக்கட்டை தின்னா இப்'டியா இருப்ப....?" என்று கொழுக்கட்டை சாமியார் சொல்ல, பட்டணத்துப் பணக்காரப்பெண் அவர் 'வாக்கை' 'அசிங்கமாக'ப் புரிந்துகொண்டு அழ ஆரம்பிக்க, ஆள் போனது. ஓடி வந்தார் மேனாள் கொ. பாட்டி மற்றும் த.சிஷ்யை. ''அட, என்னாத்துக்கும்மா அழற..சாமியார் அப்படியென்ன வாக்குச் சொல்லிப் போட்டாரு?" என்று கேட்க, ப.ப.பெண் அந்த வாக்கைத் தயங்கித் தயங்கிச் சொல்ல, விபரீதம் புரிந்துகொண்டு, சூழ்நிலையை உடனடியாக மாற்றும் விதத்தில் "ஓ!'வென்று உரக்கச் சிரித்து, அதே சமயம், சாமியாருக்குப் பக்கத்திலிருந்த சிஷ்யர்களை "சமாளிக்கத் தெரியாத மடையன்'களா" என்று லேசர் பார்வையில் முறைத்துப் பாட்டி சொன்னதாவது: "அட என்னம்மா..சாதாரணமான விசயம் புரிஞ்சிக்காம..பட்டணத்துல பெறந்து நாலு எழுத்துப் படிச்சுட்டா சாமி வாக்கு விளங்கிடுமா...(ப.ப.பெண் முகத்தில் நம்பிக்கை - இலேசான புன்முறுவல்...இந்த 'சிக்னல்' போதாதா பாட்டிக்கு?).. நம்பணும்'மா, நம்பணும்..நம்பனவங்களுக்குத்தான்நடராசன்...நம்பாதவங்களுக்கு?..(மறந்தே போனது!) சரி..சரி அத்த விடு.. சாமி சொல்லுது.. "ஒழுங்கா மொறையா கொழுக்கட்டை தின்னா" - அப்படின்னா இன்னா தெரியுமா..(பாட்டி மூளையில் பளீர் வெளிச்சம், டிடர்ஜெண்ட் விளம்பரத்தில் வரும் அடுத்த வீட்டு ஆண் சட்டையைப் போல)ஆங்.. ஒவ்வொரு செவ்வா வெள்ளியும் எண்ணத் தேச்சு முழுவோணும்.. கோயிலுக்குப்போய் அரச மரத்த அம்பத்தியோரு தடவை 'கொழந்த பொறக்கணும்'னு தெடமா வேண்டிக்கிட்டு சுத்திச்சுத்தி வரணும்.. குலதெய்வத்துக்கு நேந்துக்கோணும்.. ஏழ'பாழகளுக்கு அன்னதானம் பண்ணோணும்.. இத்தத்தான் சாமியார் 'சூசகமா'ச் சொன்னா புரிஞ்சுக்காம..அவர் பேரே கொழுக்கட்டைச் சாமி..பின்ன எப்படிச் சொல்வாருனு நெனைக்கிறே, நீ போயி........"
நன்றியுடன் சிரித்த அந்தப் பட்டணத்துப் பணக்காரப் பெண், ஒரு நோட்டுக்கற்றையை உண்டியில் திணித்துப்போட்டுவிட்டு, கொ.சாமியார் முன் விழுந்து வணங்கி, தன்மேல் அன்புபூண்டு "உரிய" விளக்கம் தந்த தலமைச் சிஷ்யையின் கைகளைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு காருக்குச் செல்ல, அங்குள்ளோர் அனைவரும் ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்கள். அப்புறம் கொழுக்கட்டைப் பாட்டி கைகளால் அவர்கள் மொத்துப் பட்டது கிளைக்கதை.
இப்படியாக நாள்கள் இனிதே போக, சாமியாருக்கு திடீரென்று கிறுக்குப் பிடித்தது. மண்டபத்தின் சுவர்மேல் ஒருவர் கைவைத்தால் போதும். ஓடிவந்து, 'என்னோட கொழுக்கட்டை!" என்று கூவி அந்த ஆள் சுவர்மேலிருக்கும் தன் கையை எடுக்கும் வரை கலாட்டா பண்ணிவிடுவார். இன்னும் இதுபோல எத்தனையோ தலைவலிகளைக் கொடுக்கத் தொடங்கிய அவர், படிப்படியாக வளர்ந்து மண்டையிடி கொடுக்கவும் தொடங்கினார். தன் சிஷ்யகோடிகளையும் ஏன் தலைமைச் சிஷ்யையும்கூட, "இதெலாம் என் கொழுக்கட்டை.. எல்லாம் வெளிய போங்க!" என்று மூர்க்கமாகத் தாக்கத் தொடங்கவே, அவர்களெல்லாம் கூடி ஒரு தீர்மானத்துக்கு வந்தார்கள்.
அடுத்த நாள் விடியலுக்கு முன்னால்.. மத்திய அரசுப் பணியிலுள்ள கொ.சா. சீடர் ஒருவர் வந்து என்னை அவசர அவசரமாக அழைத்துச் சென்றார். விவரம் கேட்ட என்னிடம் மூச்சிறைக்க "கொழுக்கட்டை சாமி வேந்துடுச்சு!"(அதாவது முக்தி...கட்டாய ஓய்வோ?!) என்றார். போனேன். மடத்துக்குள்ளோ, மண்டபத்திலோ வைக்காமல். வெளியில் இருந்த வயலருகே அவரைக் கட்டிலின் மேல் வெள்ளைத் துணியொன்றில் போர்த்து(கட்டி!) வைத்திருந்தார்கள். 'அதன்' முன் நின்று கைக்குப்பி வணங்கினேன். கூப்பிடுவதுபோல் இருந்தது. பக்கத்தில் சென்றேன். அந்த மூட்டைக்குள்ளிருந்து "நா'ந்தான்..கொழுக்கட்டை......" என்று ஒரு தீனக்குரல். "பாவிகளா! என்ன செய்தீர்கள்?" என்பதற்குள் அங்கு திரண்டிருந்த சிஷ்யகோ(கே)டிகள் என்னை முரட்டுத் தனமாகத் தள்ளிவிட்டு, கொழுக்கட்டைப் பாட்டி/தலைமை சிஷ்யையின் ஆணையேற்று, அந்தக் கட்டிலோடு அவரைக் கட்டாய சமாதியாக்க(உயிரோடு புதைக்க) எடுத்துச் சென்றார்கள். நொந்துபோய் அங்கிருந்து நான் அகல, அம்மாள் ஒருவர் ஓடிவந்து தடுத்து, சாமியார் சமாதியானதை முன்னிட்டு, கொழுக்கட்டை வினியோகம் நடக்கிறது என்று சொல்லி வாங்கிச் சொல்லுமாறு பணித்தார். போய் வரிசையில் நின்று வாங்கினேன், வாழைநறுக்கில் ஒரு பெரிய கொழுக்கட்டையை வைத்துக் கொடுத்தார்கள். வரிசையை விட்டு வெளியே வந்தேன். அங்கு ஓர் உருவம் விரைவாக என்னை நோக்கி வரவே அருகில் பார்க்க, அதிர்ந்தேன். தலைமைச் சிஷ்யை, தன் 'கோலத்தை' மாற்றிக் கொண்டு, பழைய கொழுக்கட்டைப் பாட்டி ஆகியிருந்தார்கள். என்னருகில் வந்து, காதோடு சொன்னார்கள். "அப்பேன்! ('அப்பன்' என்னும் சொல்லின் திரிபு).. அத்தத் துன்னுடாதே..அது வேகாத கொழுக்கட்டையாக்கும்.." என்று சொல்லிச் சிரித்தார்கள்..சிரித்துக் கொண்டே இருந்தார்கள்..

இடைக்காட்டுச் சித்தர்


இவரு ஓர் இடையரு.. ஆடு, மாடு மேய்ப்பவரு.. தன்னோட குரு மூலம் எல்லா ஞானமும் அடைஞ்சவரு. தென் தமிழ்நாட்ல கடல்கரை ஓரம் வாழ்ந்ததாச் சொல்றாங்க..
ஒரு நா இவரு ஜோசியப்படி கணக்கு போட்டுப் பாத்தப்ப அடுத்த பத்து, பன்னண்டு வருசத்துக்கு மழையே பெய்யப் போறதில்ல. கடும் பஞ்சம் வரப்போவுதுன்னு தெரிஞ்சிக்கிட்டாரு...
பஞ்ச காலத்துல ஆடு, மாடு சாப்பிட புல்லு, தழ இருக்காது.. எருக்கஞ்செடி ஒண்ணுதான் இருக்கும்..குடிக்கத் தண்ணி இருக்காது..கடல் தண்ணி உப்பா இருக்கறதத்தான் குடிக்கணும்..இத எல்லாம் யோசிச்ச சித்தரு தன்னோட குடிசைய மாத்திக் கட்டிகிட்டாரு.. கம்பு, கேவரகு தானியத்தை களிமண்ணுல கலந்து குடிசையோட சுவரா எழுப்பினாரு..
தெனம் ஆடு, மாடுகளுக்கெல்லாம் எருக்கம் இலைய சாப்பிடக் கொடுத்துப் பழக்குனாரு.. கடல் தண்ணியை குடிக்க வுட்டாரு.. இதனால ஆடு, மாடுகளுக்கெல்லாம் ஒடம்பு அரிக்கும்.. குடிசை சொவத்துல வந்து முதுகத் தேச்சிக்கும்.. அப்ப சொவத்துல இருந்து கொஞ்சம் தானியம் செதறும்.. அத எடுத்து நம்ம சித்தரு கஞ்சி காச்சி குடிச்சிப்பாரு.. இப்படியே நல்லா பழகிட்டாங்க
எதிர்பாத்தபடி கடுமையான பஞ்சம் வந்துச்சி.. ஊர் ஜனங்கல்லாம் வேற இடத்துக்கு போயிட்டாங்க..ஒரு பச்ச இலைய பாக்க முடியல..ஒரே வறட்சி..
வானத்துல இருந்த கெரகமெல்லாம் கீழப் பாத்து " நம்ம சக்திய ஜனங்க நல்லா புரிஞ்சுக்கணும்..நம்ம இப்ப இருக்குற பொசிசன்படி இப்பதிக்கு இங்க மழை கிடையாது " ன்னு சொல்லிக்கிட்டிருக்கப்ப புதன் கீழ ஒரு இடத்தைக் காட்டிச்சு
அங்க நம்ம சித்தரு தன்னோட ஆடு, மாடுகளோட புல்லாங்குழல் வாசிச்சுக்கிட்டு ஜாலியா கடக்கரைக்கு போய்க்கிட்டுருந்தாரு..
கெரகங்களுக்கெல்லாம் ஒரே கொழப்பம்...எப்படிடா இவனும், இந்த ஆடு மாடெல்லாம் நல்லா இருக்காங்கன்னு யோசிச்சுதுங்க..
அவன்கிட்டே நேரே பொய் கேப்போம்ன்னு பூமிக்கு கிளம்புனாங்க...
சனி " நம்ம பொசிசன மாத்தாம அங்கப் போவணும்" ன்னு சொல்லிச்சு..
அதே மாதிரி கெரகங்கல்லாம் சித்தரச் சுத்தி நின்னாங்க..
வந்துருக்கறது யாருன்னு சித்தருக்குப் புரிஞ்சுப் போச்சு..அவங்கள வரவேத்து கம்பு சாதம், பால், தயிர், வெண்ணை எல்லாம் வச்சு விருந்து கொடுத்தாரு..எருக்கம் இல சாப்பிட்டு கடல் தண்ணி குடிச்சு வளர்ந்த ஆட்டு, மாட்டு பால் அல்லவா.. இந்த மாதிரி ருசியோட பால், வெண்ண சாப்பிட்டதே இல்லன்னு சொல்லி எல்லா கெரகங்களும் விருந்த ஒரு கட்டு கட்டுச்சிங்க.. உண்ட மயக்கத்துல எல்லா கெரகங்களும் நல்லா தூங்க ஆரம்பிச்சுடுச்சிங்க..
சித்தரு இப்ப ஒரு கணக்கு போட்டுப் பாத்தாரு..எந்த கெரகம் எந்த எடத்துல இருந்தா மழை நல்லப் பேயும்..பஞ்சம் போவும்ன்னு பாத்து கெரகங்கள இடம் மாத்திப் போட்டாரு..ஒடனே செம மழ புடிச்சுது.. ஏரி, கொளமெல்லாம் நெரம்பி வழிஞ்ச்சுச்சு.. கெரகங்கெல்லாம் கண்ணு முழிச்சப்ப பஞ்சம் பறந்து போயிருந்துச்சி..வேற வழியில்லாம சித்தருக்கு வரங்கெல்லாம் தந்துட்டு வானத்துக்கு போயிடுச்சுங்க
இடைக்காட்டு சித்தரு பாட்டு ஒண்ணு பாக்கலாமா.
மனம் என்றும் மாடு அடங்கின்
தாண்டவக் கோனே! முத்தி
வாய்த்தனென்று எண்ணேடா
தாண்டவக் கோனே!
( மனம் என்பது கட்டுக் கடங்காத ஒரு முரட்டு மாடு, அது நமது கட்டுக்குள் அடங்குமானால் வீடுபேறு அடையலாம் என்று கூறுகிறார்.)
மொத்தம் இவரு 130 பாட்டு பாடியிருக்காரு
இடைக்காட்டு சித்தரு ஒரு நல்ல ஜோசியரு , Cosmologist ன்னு தெரிஞ்சுக்கலாம்.

நம்பியாறு

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒருகாலத்தில் நம்பியாறு என்று ஒரு ஆறு ஓடியது. நம்மை நம்பி ஓடிய ஆறு அது. நம்பிக் கெட்ட ஆறு அது. நம்பிக்கை துரோகம் இழைக்கப்பட்ட ஆறு அது. அந்த ஆறு இன்று இல்லை. செத்துவிட்டது. கொலை செய்துவிட்டோம். இளமையில் மணலும் நறும் புனலுமாக ஓடிய ஆறு அது. இன்று ஆற்றில் மணலும் இல்லை புனலும் இல்லை. கரிய துரோகத்தின் சாட்சியாக கலங்கி ஓடுகிறது சாக்கடை.
மேற்குத் தொடர்ச்சி மலையின் மகேந்திரகிரி, களக்காடு பகுதிகளில் உற்பத்தியாகிறது நம்பியாறு. வழியில் பரட்டையாறு, தாமரையாறு ஆகிய துணை ஆறுகளை அணைத்துக்கொண்டு அது திருநெல்வேலி மாவட்டத்தின் நம்பி மலையில் அருவியாக கொட்டுகிறது. கோடையிலும் லேசாக தண்ணீர் கசிகிறது. அங்கே இயற்கையாக அமைந்த ஒரு பள்ளம் இருக்கிறது. அதனை நிரப்பிய பின்பு வனம் வழியாக ஓடி ஊரை அடைகிறது நதி.
அதுவரை மட்டுமே ஆற்றில் நல்ல தண்ணீரை பார்க்க முடியும். அங்கிருந்து திருங்குறுங்குடி, ஏர்வாடி, திருமலஞ்சி, ராஜாக்கல் மங்கலம், சித்தூர், ஆற்றங்கரை பள்ளிவாசல் வழியாக ஓடி உவரி அருகே கடலில் கலக்கிறது.
நம்பியாறு அழியக் காரணமாயிருந்தது அது காலம் காலமாக சேர்த்து வைத்திருந்த மணல். ஒருகாலத்தில் நதி முழுக்க வாரிக் கிடந்தது மணல். கடும் கோடையிலும் கையில் பள்ளம் பறித்து குடிநீர் எடுத்துப்போனார்கள் பெண்கள். அவ்வளவு தண்ணீரை அது சேர்த்து வைத்திருந்தது. கோடையின் புழுக்கம் நிறைந்த இரவுகளில் மணல் மடியில் படுத்து உறங்கினார்கள் மக்கள். குளிர்ச்சியை வாரிக்கொடுத்தது அது. சித்தூரின் பங்குனி உத்தரமும் ஆற்றங்கரை பள்ளி வாசல் இஸ்லாமியர்களின் கந்தூரி வழிபாடும் ஆற்றின் மணல்வெளிகளில் களை கட்டின. ஆனால், அந்த மணலே ஆற்றுக்கு வினையாகிப்போனதுதான் வேதனை.
இப்போது அல்ல, நம்பியாற்றை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே அழிக்கத் தொடங்கிவிட்டோம். மணலை பொருளாக மட்டுமே நாம் பார்க்கிறோம். மணல் ஒரு கனிமம் மட்டுமல்ல. நதியின் பிள்ளை அது. தண்ணீர் தாங்கி அது. நீரை சுத்திகரிக்கும் இயற்கை வடிகட்டி அது. தண்ணீருக்கும் தாய் மடிக்கும் இடையே ஓடும் தொப்புள் கொடி அது. அந்த தொப்புள் கொடிதான் ஆற்றில் ஓடும் தண்ணீரை உறிஞ்சி நிலத்தடிக்கு அனுப்புகிறது (Aquifer).
பசுமை மாறா சோலைக்காடுகளின் பஞ்சு போன்ற வேர் அமைப்பு எப்படி மழை நீரை சேகரித்து ஆறுகளை உருவாக்குகின்றனவோ அதே வேலையை நிலத்துக்கு கீழே செய்கிறது மணல். நிலத்துக்கு கீழே ஓடும் நீரோட்டங்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று மணல். நம் வீட்டில் மோட்டார் போட்டவுடன் மேலே தொட்டிக்குள் தண்ணீர் விழுகிறதென்றால் காரணம் மணல். இன்று நிலத்தடி நீர் கணிசமாக வற்றிப் போனதற்கு பல்வேறு காரணங்களில் முக்கியமான காரணம் மணல் கொள்ளை.
மணல் தேவைதான். நாம் காட்டுக்குள் வாழவில்லை. கட்டுமானங்கள் அவசியம்தான். ஆனால், கட்டுப்பாடுகள் வேண்டாமா? ஆற்றில் இப்படித்தான் மணல் அள்ள வேண்டும். இவ்வளவுதான் மணல் அள்ள வேண்டும் என்ற விதிமுறைகள் இருக்கின்றன. ஆற்றில் எல்லா இடங்களிலும் மணல் அள்ளிவிட முடியாது. ஆற்றில் உபரியாக மணல் இருக்கும் பகுதிகளில் மட்டுமே அள்ள வேண்டும் என்கிற சுற்றுச்சூழல் விதிமுறைகள் இருக்கின்றன. குறிப்பாக, எந்திரங்கள், லாரிகள் ஆற்றுக்குள் இறங்கவே கூடாது. ஆனால், நாம் என்ன செய்கிறோம்?
ஆற்றின் படுகை எங்கும் லாரிகளை பரப்பி னோம். ஆற்றின் வயிற்றைக் கிழித்து தொப்புள் கொடியை அறுத்தோம். களிமண் தரை வரை கிழித்து கருவிலிருக்கும் நதியின் பிள்ளைகளை கடத்தி கான்கிரீட் கொண்டு அடைத்தோம். கட்டுமான தளங்களின் கனத்த எந்திரங்களில் உருள்கிறது நதியின் உயிர். நம்பியாறும் இப்படிதான் படுகொலை செய்யப்பட்டது.
ராதாபுரம், கோட்டை கருங்குளம், உறுமன் குளம், திருவெம்பலாபுரம், விளாத்திக்குளம் இங்கெல்லாம் பெரும் எந்திரங்களை கொண்டு மணல் அள்ளினார்கள். விடிய விடிய மணலை சுமந்துகொண்டு ஈரம் சொட்ட ஓடின லாரிகள். கேரளாவுக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு ஆயிரம் லாரிகள் வரை சென்றன. உள்ளூர் விநியோகம் தனி. 44 ஆறுகள் ஓடும் கேரளாவில் மணல் இல்லையா? இருக்கிறது, அதைவிட அதிகமாக மக்களுக்கு உணர்வு இருக்கிறது. ஆனால், இங்கே நம்பியாறு கொல்லப்பட்டபோது உதவிக்கு வந்தார் யாருமில்லை.
இன்னொரு பக்கம் தாது மணல் கொள்ளை. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பல்வேறு பாறை களில் உருண்டோடி வரும் நம்பியாறு அவற்றிலி ருந்து ஏராளமான கனிமங்களை தாது மணலாக கொண்டு வருகிறது. அவை எல்லாம் உவரி கடற் கரை நெடுக கொட்டி வைத்து கடலுக்குள் செல் கிறது ஆறு. ஆனால், இன்று பெரும் பள்ளங்களால் நிரம்பிக்கிடக்கிறது நம்பியாற்றின் கழிமுகம்.
கழிமுகத்தின் கரையோரம் எல்லாம் பள்ளம் தோண்டியதில் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் வேரோடு சாய்ந்தன. கடல் நீரை உள்வாங்கியது ஆறு. ஆற்று நீர் கடலில் கலக்க முடியாமல் ஆக்கிரமித்து சாலை போட்டிருந் தார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கே ஆய்வுக்கு போன ககன் தீப் பேடி அவற்றைப் பார்த்து அதிர்ந்துவிட்டார். ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். ஆண்டுகள் உருண்டோடி விட்டன. பழைய நிலைமை தொடர்கிறது.
திருக்குறுங்குடி, ஏர்வாடி, திருமலஞ்சி, ராஜாக்கல்மங்கலம் இங்கெல்லாம் ஆற்றை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. கண்ணீர் வருகிறது. நம்பி மலையில் தித்திக்கும் ஆறு திருநெல்வேலி - கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் திருமலஞ்சியை சாக்கடையாகக் கடக்கிறது. ஆறெங்கும் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. அந்தப் புதர்களை அப்புறப்படுத்துவது எல்லாம் ஒரு வேலையே இல்லை. எந்திரங்களை விட்டால் அரை நாளில் அகற்றிவிடலாம். ஆனால், மணலை அள்ள காட்டிய முனைப்பை இதில் காட்ட மறுக்கிறார்கள். ஏர்வாடியின் ஒவ்வொரு தெருவும் நம்பியாற்றில் சென்றுதான் முடிகிறது. தெருவின் சாக்கடைகள் அனைத்தும் நம்பியாற்றில்தான் கலக்கின்றன.
இன்று நம்பியாறு இல்லை. அது செத்துவிட்டது. நம்பியாற்றில் தண்ணீரும் இல்லை, மணலும் இல்லை. சிறகொடிந்த நதியை திரும்பி பார்ப்போர் யாரும் இல்லை. நம்மை நம்பி ஓடி வந்த ஆற்றுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டோம். அதன் பிள்ளைகளான மணலை அள்ளி கட்டிடங்களை கட்டிக்கொண்டோம். உங்கள் படுக்கை அறைச் சுவரில் ஒரு நிமிடம் காதை வைத்து கேளுங்கள், அங்கே புதைக்கப்பட்ட நதியின் ஆன்மா ஒருவேளை உங்கள் மனதை தைக்கக்கூடும்.

அணைக்கட்டுகள்

திருநெல்வேலி தாமிரபரணியில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வெள்ள நீர் கால்வாய் கடந்த வாரம் பெய்த மழையில் உடைப்பெடுத்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. நமது நவீன கட்டுமானத்தின் நிகழ்கால சாட்சி அது. ஆனால், அதே தாமிரபரணியில் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியர்களாலும் நாயக்கர்களாலும் கட்டப்பட்ட அணைகள் இன்றளவும் கம்பீரமாக நிற்கின்றன. அவை இன்றைக்கும் நமது குடிநீர் தேவையையும் பாசனத் தேவையையும் பூர்த்தி செய்கின்றன.
நைல் நதிக்கரைகளில் கி.மு. 2000-ல் தொடங்கி 1730 வரை கட்டப்பட்ட அணை கள் சுட்ட களிமண், இலை தழைகள், கோரைப் புற்கள், மூங்கில் மற்றும் தாவரப் பிசின் கொண்டு கட்டப்பட்டன. தமிழகத்தில் 5-ம் நூற்றாண்டில் நீர் நிலை கட்டுமானங்கள் தோன்றின. கி.பி. 620 - 650களில் செங்கல், களிமண் பிசைந்து வைகையில் அரிகேசரி மதகை செழியன் சேந்தன் கட்டினான். கி.பி. 815 - 862களில் செங்கல், சுண்ணாம் புக் காரை, கருங்கல் ஆகியவற்றைப் பயன்படுத்தி மதகுகளையும் கால்வாய் களையும் கட்டினான் இருப்பைக்குடி கிழவன். பிற்கால சோழர்கள் செங்கல், காரை கொண்டு மதகுகளை அமைத்தார்கள்.
907 - 953களில் செம்பியன்மாதேவி வாய்க்கால், பராந்தகன்மாதேவி வாய்க் கால் கட்டப்பட்டது. கி.பி. 949 - 957களில் கண்டராதித்தனால் கட்டப்பட்டது கண்டராதித்த ஏரி. கி.பி. 957 - 973களில் சுந்தர சோழனால் வெட்டப்பட்டது சுந்தர சோழன் வாய்க்கால். 985 1014ல் ராஜராஜனால் கட்டப்பட்டது ராஜராஜன் வாய்க்கால். அதே காலகட்டத்தில் மாதே வடிகள் வாய்க்கால் கட்டப்பட்டது. கி.பி. 1012 - 1044களில் முதலாம் ராசேந் திரனால் கட்டப்பட்டது முடிகொண்ட சோழப் பேராறு கால்வாய். கி.பி. 1063 - 1069களில் வீரராசேந்திரனால் கட்டப்பட்டது வீர ராசேந்திர பேராறு - ராஜகேசரி வாய்க்கால். கி.பி. 1070 - 1120களில் முதலாம் குலோத் துங்கனால் கட்டப்பட்டது புத்தரான குலோத்துங்க சோழப் பேராறு கால்வாய். 1018 - 1054களில் ராஜாதி ராஜனால் கட்டப்பட்டது ராஜாதிராஜன் வாய்க்கால். இதே காலகட்டங்களில் தாமோதர வாய்க்கால், சோமநாதன் வாய்க்கால், திருவாஞ்சியதேவன் வாய்க்கால், தென்பூமி வாய்க்கால், அம்மையப்பன் வாய்க்கால், தருமி வாய்க்கால் ஆகியவை சிற்றரசர்களின் பெயரால் கட்டப்பட்டன. முன்னூற்றவன் வாய்க்கால், மூவாயிரவன் வாய்க்கால் ஆகியவை வணிகர்களால் கட்டப் பட்டன. உய்யக்கொண்டான் என்றொரு வாய்க்கால் அல்லது வயிரமேக வாய்க் கால் கழிமுகப் பகுதியுடன் நிலமட்டத் துடன் வேறுபாடு காண இயலாத வகை யில் சமமட்ட நிலக்கோட்டு வாய்க்காலாக (Contour canal) இருந்தது என்பது இன்றைக்கும் நீரியல் ஆய்வாளர்கள் வியக்கும் அரிய தொழில்நுட்பம்.
பின்பு நாயக்கர்கள் காலத்தில் தாமிரபரணி ஆற்றில் கி.பி. 1190 - 1258 காலகட்டங்களில் பாறைகள், சுண் ணாம்புக் காரை, இரும்பு இணைப்பு களைக் கொண்டு அணைக்கட்டுகள் கட்டப்பட்டன. அப்படி கட்டப்பட்டதுதான் கன்னடியன் அணை. கும்பகோணம் மகாமகம் குளத்தை கட்டியவர் தஞ்சை நாயக்க மன்னரின் அமைச்சர் கோவிந்த தீட்சிதர். 1524 - 1700 காலகட்டத்தில் நாயக்கர்கள் கற்கள், சுண்ணாம்புக் காரை கொண்டு அணைகளைக் கட்டினார்கள். அவை அனைத்தும் திட்டமிடப்பட்டு பொறியியல் தொழில்நுட்பங்களுடன் ஒழுங்கான அமைப்பில் கட்டப்பட்டன. மன்னர் திருமலை நாயக்கரின் அணைக் கட்டுமானம் பற்றிய குறிப்பு ஒன்று ‘திருப்பணி மாலை’யில் உள்ளது.
“அரைத்த சுண்ணாம்பை வெல்லச்சாறு விட்டு நன்றாகக் குழைத்துச் செங்கல்லும்
அடுக்காய்ப் பரப்பி கடுக்காயோடு ஆமலகம் அரிய தான்றிக்காய் உளுந்து
ஒருக்கால் இருக்கால் இடித்து நன்னீரில் ஊறிய கடுஞ்சாறும் விட்டு
ஊழிக் காலங்களில் அசையாத வச்சரிக்காரை.”
என்கிறது அந்தக் குறிப்பு.
நாயக்கர்கள் காலத்தில் தாமிரபரணி ஆற்றில் ஏழு அணைக்கட்டுகள் கட்டப்ப ட்டன. அவற்றில் அரியநாயகிபுரம் அணைக்கட்டு மட்டும் தளவாய் அரிய நாதரால் கட்டப்பட்டது என்பதற்கான கல்வெட்டு கிடைத்துள்ளது. மற்ற அணைக்கட்டுகள் யாரால் கட்டப்பட்டன என்று குறிப்பிடப்படவில்லை. இதில் முதல் அணைக்கட்டு கோடை மேலழகியான் அணைக்கட்டு. இது பாபநாசம் கோயிலுக்கு மேற்கே இருக்கிறது. இரண்டாவதாக கோட்டாரங் குளம் அருகே இருக்கிறது நதியுண்ணி அணைக்கட்டு. மூன்றாவதாக தாமிர பரணி ஆறும் மணிமுத்தாறும் சேரும் இடத்துக்கு கீழே ஆலடியூரில் இருக் கிறது கன்னடியன் அணைக்கட்டு. இது இரண்டு ஆறுகளும் சேரும் இடத்துக்கு கீழே ஆற்று நீரோட் டத்துக்கு சாய்வாகவும், தலை மதகு முன் ஆற்றின் ஒரு பகுதியை வாய்க்காலாக பயன்படும் வகையிலும் மிக சிறந்த தொழில்நுட்பத்துடன் அமைக்கப் பட்டுள்ளது. இந்த அணையில் 10 மணல்வாரிகள் அமைக்கப்பட்டுள் ளதால் அணையில் மணல் சேர்வதில்லை. தாமிரபரணியுடன் பச்சையாறும் சேரும் பகுதி வரை பாசனம் அளிக்கிறது கன்னடியன் கால்வாய்.
கன்னடியன் அணை கட்டுமானம் பற்றி வாய்வழி கதை ஒன்று அந்தப் பகுதியில் சொல்லப்படுகிறது. இந்த அணையைக் கட்ட ஒரு அரசன் அகத்தியரிடம் ஆலோசனை கேட்டான். அதற்கு அவர் ஒரு பசு மாட்டை அந்தப் பகுதியில் விட்டு அது ஓடும் வழியை வாய்க்கால் வெட்டவும், படுக்கும் இடங்களில் குளம் வெட்டவும், சாணம் கழிக்கும் இடத்தில் மடை வெட்டவும் அறிவுறுத்தினாராம். அதாவது, மாடு சரிவான இடங்களில் ஓடும். அங்கு கால்வாயை அமைப்பது நீரியல் ஓட்டத்துக்கு சாதகமாக அமையும். மாடு ஓடும்போது மேடான பகுதி வரும்போது மூச்சிறைத்து படுக்கும். மேடான பகுதியில் குளம் வெட்டுவதும் நீரியல் அம்சத்துக்கு சாதகமானதே. மீண்டும் இறக்கமான பகுதியில் அது ஓடும் பகுதியில் சாணம் கழிக்கும். அந்த இடத்தில் மடை வெட்டுவது நீரியல் அம்சத்துக்கு சாதகமாகும்.
நான்காவது அரியநாயகிபுரம் அணைக்கட்டு. முக்கூடலுக்கும் சேரன் மகாதேவிக்கும் இடையே இருக்கிறது இது. இதன் கோடகன் கால்வாய் மூலம் திருநெல்வேலியின் தாழையூத்து பகுதிகள் வரை பாசனம் பெறுகின்றன. ஐந்தாவது அணைக்கட்டான பழவூர் அணைக்கட்டு மேலச்சேவல் பகுதி யில் உள்ளது. இதிலிருந்து செல்லும் பாளையங்கால்வாய் மூலம் பாளையங்கோட்டை தொடங்கி தூத்துக் குடி மாவட்டம் வசவப்பபுரம் வரை பாசனம் பெறுகின்றன.
ஆறாவது அணைக்கட்டான சுத்தமல்லி அணைக்கட்டு திருநெல் வேலி நகரில் இருக்கிறது. பழந் தமிழரின் அதிசயக்கத்தக்க இதன் கால்வாயில் சாக்கடையை கலக்க விடுகிறோம் நாம். குளத்தூர் ஜமீனின் வீடு இன்று நெல்லை டவுன் - பேட்டை சாலையில் இருக்கிறது. அவரது வீட்டின் பின்புறம்தான் சுத்தமல்லி அணைக் கட்டின் திருநெல்வேலி கால்வாய் ஓடுகிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தக் கால்வாயில் படகு கள் ஓடியதை பார்த்ததாக குறிப்பிடுகிறார் குளத்தூர் ஜமீனின் மகனான குட்டி என்கிற சண்முகசுந்தரம்.
ஏழாவது அணைக்கட்டான மருதூர் அணைக்கட்டு மருதூரில் இருக்கிறது. இதன் அபாரமான தொழில்நுட்பம் குறித்து ஏற்கெனவே விரிவாக பார்த்து விட்டோம். இன்னொரு தகவலையும் பார்ப்போம். இந்த அணையின் மேலக் கால்வாயை ஒட்டி மருதவள்ளி - சோமவள்ளி கோயில் இருக்கிறது. அந்தக் காலத்தில் மழை பொய்த்துவிட்டது என்றால் மக்கள் திரண்டு வந்து இந்தக் கோயிலில் கெடா வெட்டி வழிபாடு நடத்துவார்கள். வழிபாடு முடிந்து கோயிலில் இருந்து கிளம்பும்போது கும்ப லாக கால்வாய் வழியாக நடந்தே சென்று மண்வெட்டிகளையும் இதர சாதனங் களையும் கொண்டு வழி யெங்கும் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டே ஊர் சென்று சேர்வார்கள். அவர்கள் ஊர் சேர்வதற்கும் மழை வருவதற்கும் சரியாக இருக்கும்.
ஆம், அன்றைக்கு மக்கள் இயற்கை மீது நம்பிக்கை வைத்தார்கள். இயற்கையும் நம்பினாரை கைவிடவில்லை. அன்று மட்டுமல்ல; இயற்கை என்றுமே நம்மை கைவிடாது.

நீர்ப்பங்கீடு சூட்சுமம்

இன்று தண்ணீர் பங்கீட்டுக்காக அண்டை மாநிலங்களிடம் பிரச்சி னைகளை தீர்த்துக்கொள்ளும் வழி தெரியாமல் தவிக்கிறோம். உச்ச நீதிமன்றம் வரை சென்றும் தீர்வு கிடைக்க வில்லை. காவிரி நீர் பங்கீடு பிரச்சினை தீராத நிலையிலும் கர்நாடகம், மேகதாட்டுவில் அணையைக் கட்டத் துடிக்கிறது. காவிரி ஆற்றின் நீரியியல் ஓட்டம் முக்கியத் துவம் வாய்ந்த மேகாதாட்டுவில் மட்டும் அணை கட்டப்பட்டுவிட்டால், காவிரியை நாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.
ஆனால், நமது முன்னோர்கள் துளி பாரபட்சம்கூட இல்லாமல் நீரைப் பங்கீடு செய்தார்கள்.
இன்றைக்கு காவிரி ஆற்றில் தமிழகத் துக்கு மேல் பகுதியில் அணையைக் கட்ட முயற்சிக்கிறது கர்நாடகம். ஆனால், அன்றைக்கு ‘ஆற்றில் இருந்து நீர் எடுத்துவரும் வாய்க்காலுக்கு மேல் பகுதியில் இன்னொரு வாய்க்கால் வெட்டக்கூடாது; ஒரு ஏரிக்கு நீர் வரத்து கிடைக்கும் மேற்பகுதியில் இன்னொரு ஏரி வெட்டக்கூடாது’ என்பது பழந்தமிழர் வகுத்த கடுமையான சட்டம். இதனை ‘காலுக்கு மேல் கால் கல்லலாகாது’ என்று கி.மு. 1117- ஆண்டு ஸ்ரீவல்லப பாண்டியனின் குருவித்துறை பெருமாள் கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
தற்போது மதுரையின் சோழவந்தான் கிராமத்தின் அன்றைய பெயர் சதுர்வேதி மங்கலம். அந்தக் கிராமத்தின் ஊர் சபைக் கூட்டத்தில் இந்த விதி இயற்றப்பட்டதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஆற்றின் மேல் பகுதியில் புதியதாக ஒரு கால்வாய் வெட்டினால் கீழ் பகுதியில் இருக்கும் பாசனதாரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை அறிந்திருந்தார்கள் அவர்கள். இந்த விதிகளை மீறி தொண்டை மண்டலத்தில் புலியூர்க்கோட்டத்தில் மாங்காடு நாட்டைச் சேர்ந்த சோழ முத்தரையன் என்கிற அரசு அதிகாரி, பராக்கிரம பாண்டியன் கால்வாய்க்கு மேலாக ஒரு கால்வாயை வெட்டினான். அப்போது மக்களே ஒன்றுசேர்ந்து அரசனுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, அந்தக் கால்வாயை மூடினார்கள் என்கிறது கல்வெட்டு குறிப்பு.
அதேபோல ஏரிகளில் தண்ணீர் வெளியேறுவதற்கு அமைக்கப்பட்ட மடை, மதகு, குமிழி, தூம்பு போன்ற அமைப்புகள் நீர்ப் பங்கீட்டு அளவுக்கு கருவிகளாகவும் அமைந்தன. ஒவ்வொரு ஏரியிலும் ஆயக்கட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடும்போது நான்கு நாழிகைகளுக்கு நீர் பாயும் மதகு ஒன்று, ஆறு நாழிகைகளுக்கு நீர் பாயும் மதகு ஒன்று, 12 நாழிகைகளுக்கு நீர் பாயும் மதகு ஒன்று என தனித் தனி மதகுகள் அமைக்கப்பட்டன. மூன்று மதகுகளையும் ஒருசேர திறந்துவிட்டால் ஒரு குறிப்பிட்ட ஆயக்கட்டுப் பகுதிக்கு இரண்டு நாழிகைகளில் முழுமையாக தண்ணீர் பாய்ந்துவிடும் என்பது அவர்கள் கண்டுபிடித்த கணக்கு. இந்தக் கணக்கின் அடிப்படையில்தான் மதுராந்தகம் ஏரி, தூசு மாமண்டூர் ஏரிகளில் தண்ணீர் திறந்துவிடப்பட்டன.
இதுதவிர ‘முறைப்பானை’என்கிற முறையும் இருந்தது. அதாவது, 10 முதல் 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பானையின் அடிப் பாகத்தில் சிறு துளையிடப்படும். ஒரு ஏக்கருக்கு ஒரு துளை, ஐந்து ஏக்கருக்கு ஒரு துளை, 10 ஏக்கருக்கு ஒரு துளை என இந்தத் துளைகள் பல்வேறு அளவுகளில் இருந்தன. மதகைத் திறக்கும் அதே நொடியில் நீர் நிரப்பிய பானையின் துளையை திறந்துவிடுவார்கள். பானையின் நீர் முழுவதும் காலியானால் குறிப்பிட்ட அளவு நிலத்துக்கு தண்ணீர் பாய்ந்ததாக கணக்கிட்டனர். இது சுழற்சி முறை பாசனம் என்று அழைக்கப்பட்டது. தண்ணீர் திறந்துவிடும்போது நாழிகை யைக் கணக்கிட ஆட்கள் நியமிக்கப் பட்டிருந்தனர். இதில் தவறு செய்தால் தண்டனையும் வழங்கப்பட்டது. இதனைப் பின்பற்றிதான் மொகலாயர் ஆட்சிக் காலத்தில் ‘வாரபந்தி’ என்கிற சுழற்சி பாசனமும், 18-ம் நூற்றாண்டில் பாலாற்று ஏரிகளில் ‘மாமூல் நாமா’ என்கிற சுழற்சி முறை பாசனமும் உருவாக்கப்பட்டது. இதைப் பற்றி எல்லாம் தனது ஆய்வுகளின் மூலம் விரிவாக எழுதியிருக்கிறார் பொதுப்பணித்துறையின் வடிவமைப்புப் பிரிவு தலைமை பொறியாளரும் நீர் பாசன ஆய்வாளருமான முனைவர் பழ.கோமதிநாயகம்.
ஏரிகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களுக்கு அடிப்படை மழை நீர். அதனை ஏரிகள், குளங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தொழில்நுட்பங்களைச் செயல்படுத்தி யும் சேகரித்தனர் பழந்தமிழர். ‘மழை நீர் சேகரிப்பு’ என்கிற விஷயம் கடந்த 15 ஆண்டுகளாகத்தான் பொதுவெளியில் வெகுவாக அறியப்படுகிறது. அதற்கு முன்பு மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நம்மிடையே இருந்த தில்லை. அதிகபட்சம் கூரையில் ஒழுகும் தண்ணீரை பாத்திரத்தில் பிடித்தோம். ஆனால், கி.பி. 10- நூற்றாண்டிலேயே பழந்தமிழர் மழை நீரை சேகரிக்கும் தொழில்நுட்பங்களில் தேறியிருந்தனர். அவர்கள் ஏரிகள், குளங்கள் தவிர கோட்டைகள், மாளிகைகள், கோயில்கள் ஆகியவற்றையும் மழை நீரை சேகரிக்கும் வகையில் கட்டினார்கள். கோட்டைகளின் அடிப் பகுதிகளில் சுடுமண் குழாய்கள் பதிக்கப்பட்டு கோட்டை வளாகத்தில் சேகரமாகும் மொத்தத் தண்ணீரும் அகழிகளில் விடப் பட்டன. அகழிகளில் இருந்து அருகில் இருந்து நீர் நிலைகளுக்குத் தண்ணீர் சென்றது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம், தஞ்சை பெரிய கோயில்.
இந்தக் கோயில் வளாகத்தில் சேகர மாகும் மழை நீர் மற்றும் தஞ்சை நகரத்தில் சேகரமாகும் மழை நீர் இரண்டும் நிலத்தடியில் புதைக்கப்பட்ட சுடுமண் குழாய்கள் மூலம் செவ்வப்பன் ஏரிக்கு (சேப்பன வாரி) சென்றது. சேறு கலந்த அந்தத் தண்ணீர் அந்த ஏரியில் தெளிந்த பின்பு மீண்டும் குழாய்கள் மூலம் சிவகங்கை குளத் துக்குச் சென்றது. இதனை குடிநீராகப் பயன்படுத்தினர் மக்கள். இதை வடிவமைத்தது தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கன். இதன் மூலம் மழைக் காலங்களில் தஞ்சை நகர வீதிகளில் தண்ணீர் ஒரு துளி தேங்கி நிற்கவில்லை என்று குறிப்பிடு கிறது ராஜராஜன் கல்வெட்டு. இன்றைக்கும் தஞ்சை பெரிய கோயில் சுற்றுவட்டாரங் களில் பெரியளவில் தண்ணீர் தேங்கி நிற்பதில்லை. காரணம் அன்றைக்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகர வடிவ மைப்பு.
ஆனால், சிறு மழைக்கே பொதுவாகத் தாங்குவதில்லை சென்னை. இப்போது பெய்யும் பெருமழை நகரத்தை நரகமாக்கிவிட்டது நமக்கான கடும் எச்சரிக்கை. முதல் இரண்டு நாட்கள் மழையை ரசித்தவர்கள் எல்லாம் இப்போது மிரண்டுத் தவிக்கிறார்கள். ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வாழ்வியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை நகரில் மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்ட தொலை நோக்கு காலம் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. நகரம் பன்மடங்கு வளர்ந்த பின்னும் அதற்கான திட்ட மிடல் இல்லாமல் போய்விட்டது. இப்போது உள்ள வடிகால்கள் நீரியல் ஓட்டத்துக்கு (Flow by gravity) மாறான மட்ட அளவுகள் கொண்டவை. தவிர, பெரும்பாலான மழை நீர் வாய்க் கால்கள் அடையாறு, கூவம், ஓட்டேரி நல்லா ஆகிய சிற்றாறுகளுடன் இணைக் கப்படவில்லை. மழை நீர் வடிகால் களில் இருந்து தண்ணீர் வெளியேறி தாழ்வான பகுதிகளில் தேங்குவதற்கு இதுவும் முக்கிய காரணம். கடந்த 15 ஆண்டுக ளில் சென்னையின் மழை நீர் வாய்க்கால்களில் நடந்திருக்கும் பரா மரிப்பு பணிகள் எந்த அளவுக்கு முழுமை யானவை என்று ஆராய வேண்டிய நேரம் இது.