Monday, 6 August 2018

Sunday, 5 August 2018

Chaplin

https://www.facebook.com/Chaplinlaughingworld/videos/1696704980389266/

A Doll's House

https://www.youtube.com/watch?v=LgNN-6roFWw

கதை சொல்றேன்

"அண்ணே! நீங்க எனக்கு கதை சொல்லி ரொம்ப நாள் ஆச்சு. எதாச்சும் சுவாரசியமான கதை இருந்தா சொல்லுங்கண்ணே"
"கதை சொல்றேன்! அது சுவாரசியமா இருக்கா, இல்லியான்னு நீதான் சொல்லணும்."
"சரி சொல்லுங்க"
"இது என்னோட காதல் கதை. இந்த கதை நடக்கும்போது நான் +2 படிச்சுக்கிட்டு இருந்தேன்."
"என்னது படிச்சீங்களா?"
"சரி +2 க்ளாஸ்ல தினமும் போய் உக்காந்துகிட்டு இருந்தேன். அப்போ என்னோட க்ளாஸ்ல ப்ரீத்தின்னு புதுசா ஒரு பொண்ணு வந்து சேந்தா. அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு ஒரு பக்கம் இருந்து பாத்தா அப்பிடியே த்ரிஷா மாதிரி இருப்பா."
"அப்போ இன்னொரு பக்கம் இருந்து பாத்தா கமலா காமேஷ் மாதிரி இருப்பங்களாண்ணே."
"டேய்! மூடிகிட்டு கதையை கேளு."
"சரி சரி சொல்லுங்க. அந்த பொண்ணு வந்ததும் பசங்க கிளாஸ் கட் அடிக்கிறதே குறைஞ்சு போச்சு. எல்லாரோட கண்ணும் அந்த பொண்ணு மேலதான். நல்ல வேலையா எங்க பள்ளி கூடத்துல பசங்களும் பொண்ணுங்களும் பேசிக்க கூடாதுன்னு ரூல் இருந்ததால அவ தப்பிச்சா"
"புரியுது. ஈ மொய்க்காத பலா பழம் இருக்கா என்ன?"
"இப்பிடி வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கும்போதுதான் பள்ளிகூடத்தில ரிவிசன் டெஸ்ட் வந்துச்சு. பரீட்சை எழுதலாமுன்னு போனவனுக்கு பெரிய அதிர்ச்சி"
என்ன ஆச்சு
"புதுசா வந்த பொண்ணு பேரு என்னோட பேருக்கு அடுத்து வரதால அவளை என்னோட டெஸ்க்ல உக்கார வச்சுட்டாங்க"
"அது அதிர்ச்சியா? இன்ப அதிர்ச்சின்னு சொல்லுங்க"
மண்ணாங்கட்டி. வழக்கமா என் கிட்ட ஒரு பையன் உக்காந்து இருப்பான். நானும் அவனும்தான் பிட் ஷேர் செஞ்சுக்குவோம். இப்போ இவ கிட்ட இருந்தா "நான் எப்பிடி பாஸ் ஆகுறது."
"ஐயோ பாவம்!"
"கஷ்டம்தான்"
"ஒரு வழியா நானே கை வலிக்க பிட் எழுதி எல்லா பரீட்சையையும் சமாளிச்சிட்டேன். ஆனா கடைசி பரீட்சை பிசிக்ஸ். ரொம்ப கஷ்டமா கொஸ்டின் பேப்பர் செட் பண்ணிட்டாங்க"
"ம்"
"நான் எழுதிட்டு போன பிட்டை வச்சு என்னால அரை மணி நேரம் கூட தாக்கு பிடிக்க முடியல. லேசா திரும்பி அவளை பார்த்தேன். அவ கடகடன்னு எழுதிகிட்டே இருக்கா."
"ஆமா! பொண்ணுங்க எப்பவுமே நல்லா படிக்கும்ல."
"அப்படிதான் நானும் நெனச்சேன். இப்போ நான் எழுதி இருந்த பதிலை வச்சு கட்டாயம் பாஸ் பண்ண முடியாது. எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல. சூப்பர்வைசர் அசந்த நேரமா பாத்து லேசா பெஞ்சை தட்டி அவளை திரும்பி பாக்க வச்சேன்."
"ஆகா! அண்ணல் நோக்கியதை அண்ணியும் நோக்குறாங்க போல"
"அவ திரும்பினதும் அவ கிட்ட லேசா பேப்பரை காட்டேன்னு சிக்னல் பண்ணேன்."
"பேப்பரை காட்டேன்னுதான சிக்னல் பண்ணீங்க"
"ஆமா! பேப்பரைதான்"
"காட்டுனாங்கள"
"காட்டுனா"
"அப்போ அவங்க புண்ணியத்துல பாஸ் ஆகிட்டீங்கன்னு சொல்லுங்க"
"கிழிச்சேன். பேப்பர் முழுக்க ஸ்ரீராமஜெயம், ஸ்ரீராமஜெயம்னு மட்டும்தான் அவ எழுதி இருந்தா"
"ஹா ஹா! அப்புறம் என்ன செஞ்சீங்க"
"என்ன செய்றது? ஏதோ பத்து,பதினஞ்சு மார்க்காச்சும் அவ எடுக்கட்டும்னு என் கைல இருந்த பிட்டை அவளுக்கு பாஸ் செஞ்சேன்."
"அவங்க வேணாமுன்னு சொல்லலியா"
"அவளா? அவ ஏதோ பிட் அடிக்கறதுல எக்ஸ்பெர்ட் மாதிரி அதை வாங்கி அவ்வளவு நேக்கா பிட் அடிச்சா. அவ மூஞ்சியை பாத்தா அவ பிட் அடிக்கிறான்னு எவனும் சொல்ல மாட்டான்."
"சரி! இதுல எங்க காதல்"
"இரு! அவ என் கிட்ட பிட் வாங்குனதும்தான் எனக்கு அப்போதான் எனக்கு இவ கிட்ட லவ் சொல்ல இதுதான் சரியான நேரமுன்னு. ஒரு பேப்பரை எடுத்தேன். பென்சிலால ஒரு இதயத்தை வரைஞ்சு அதுல அம்பு விட்டேன். எழுதுன பேப்பரை அவ கிட்ட பாஸ் பண்ணேன்."
"பரீட்சை ஹால்லயா? ஏன் அவ்வளவு அவசரம்."
"இப்போ லெட்டர் குடுத்தாதான் அவளால கத்தி ஊரை கூட்ட முடியாது. குடுத்த பேப்பரை வெளியே எடுத்துட்டு போய் அவங்க அப்பா கிட்ட போட்டு தரவும் முடியாது. திரும்ப என் கிட்டதான் குடுத்து ஆகணும். அதை நான் அழிச்சுட்டு ஏதாவது எழுதிட்டு கட்டி கொடுத்துடுவேன். ரிஸ்க் இல்லாம லவ்வை சொல்லிடலாம்."
"அபார மூளைண்ணே உங்களுக்கு. இந்த மூளையை படிப்புல காட்டி இருந்தா நீங்க பெரிய ராக்கெட் எஞ்சினியர் ஆகி இருப்பீங்க. சரி அதை படிச்சுட்டு என்ன சொன்னாங்க"
"நான் பேப்பரை குடுத்துட்டு அவ படிக்கிறாளான்னு பாத்துகிட்டே இருந்தேன். அவ அதை பாத்த உடனே இன்னொரு பேப்பரை எடுத்து பென்சிலால ஏதோ எழுதுனா. என் கிட்ட அந்த பேப்பரை பாஸ் செஞ்சா"
"என்ன எழுதி இருந்துச்சு அந்த பேப்பர்ல? லவ் ஓகே ஆயிடுச்சா"
"நானும் ஓகே சொல்லிதான் எழுதுறான்னு நெனச்சேன். ஆனா இங்கதாண்டா ட்விஸ்ட். அவ அந்த பேப்பர்ல எனக்கு படம் வரைய சரியா வராது. நீங்க குடுத்த படத்தையே நான் கட்டி குடுத்துடறேன். நீங்க உங்களுக்கு வேற படம் வரைஞ்சுகுங்க அப்பிடின்னு எழுதி இருந்தா. அவளுக்கு எப்பிடி புரிய வச்சு அந்த பேப்பரை வாங்குறதுன்னு தெரியல. கடைசில கட்டியே குடுத்துட்டா"
"அடி பாவி! அவளுக்கு பிசிக்ஸ்க்கும், பயாலஜிகுமா வித்தியாசம் தெரியாது?"
"அந்த கூமுட்டைக்கு அதுவே தெரியலையே".
"அப்புறம் என்ன ஆச்சு? பேப்பர் திருத்தும்போது நீங்க ரெண்டு பேருமே கையும் களவுமா மாட்டிகிட்டீங்களா?"
"அது நடந்து இருந்தா கூட பரவாயில்லயே"
"அப்புறம் என்ன ஆச்சு?"
"பரீட்சை ரிசல்ட் வரும்போது நான் ஃபெயில். அவ பாஸ் ஆகி இருந்தா. இப்போ அவ அந்த பிசிக்ஸ் வாத்தியாரை கல்யாணம் செஞ்சுகிட்டு ரெண்டு பிள்ளைங்களோட சந்தோசமா வாழ்ந்துகிட்டு இருக்கா"
"அட பாவமே! பாவம்னே நீங்க. நீங்க குடுத்த லவ் லெட்டரால அந்த பொண்ணு ப்ரீத்தி பிசிக்ஸ் வாத்தியார் கூட சேந்து லைப்ல செட்டில் ஆகிடிச்சு. ரொம்ப சோகமான கதைதான்."
"ஆமாடா! இந்த மாதிரி ஒரு சோகம் யாரு வாழ்க்கையிலயும் வந்திடவே கூடாது."

Saturday, 4 August 2018

துரோணரின் மகள்


வில் ஆசிரியர் துரோணருக்கு ஒரு மகன் இருப்பது தான் நமக்குத் தெரியும். அவன் பெயர் அசுவத்தாமன். அவன் சிரஞ்சீவி.
துரோணருக்கு ஒரு மகள் இருந்ததாகவும் அவள் பெயர் சாந்தா என்றும் நாடோடிக் கதை ஒன்று கூறுகின்றது. அவள் வரலாறு அற்புதமானது. அதைச் சிறிது காண்போம்.
ஒரு நாள் துரோணர் வீட்டில் இறை வழிபாடு செய்து கொண்டிருந்தார்.
அவ்வூரில் திருக்குலத்து அடியார் ஒருவர் இருந்தார். அவர் பெயர் சேதா. மிக்க பக்திமானாக இருந்தமையால் பக்த சேதா என்று அழைக்கப்பட்டார்.
அவர் மனைவி பெயர் காந்தா, அவர்களுக்கு ஒரு மகள் அவள் பெயர் சேவா.
துரோணர் வீட்டில் வழிபாடு நடப்பதைப் போலத் தன் வீட்டிலும் வழிபாடு நடத்தல் வேண்டும் என்பது சேவாவின் ஆசை. வழிபாட்டுக்கு மலர் வேண்டுமே!
தன். தந்தை தைத்த செருப்புக்களைத் துரோணரின் சீடரிடம் கொண்டு போய்த்தந்து, அவர்களிடம் மலர்களை வாங்கிவந்து, தன் தந்தையிடம் இறை வழிபாட்டுக்குத் தந்தாள் சேவா.
செருப்புக்கு மலர் மட்டும் விலையாகுமா? மேலும் பணம் கேட்டு வாங்கி வா” என்று காந்தா தன் மகளைத் துரோணர் வீட்டுக்கு அனுப்பினாள்.
அங்குச் சென்ற சேவா, துரோனர் மகள் சாந்தாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது, “என் தந்தை படைக்கும் நைவேத்யத்தைப் பகவான் நேரில் வந்து உண்கின்றார்” என்றாள்.
சாந்தா, இதை நம்பவில்லை. நீ சொல்வது பொய் என்று சேவாவிட்ம் கூறினாள்.
நீ என்னுடன் வா! நான் சொல்வது உண்மை என்று நிரூபிக்கின்றேன்” என்றாள் சேவா.
சேவாவுடன் சென்ற சாந்தா, அவள் கூறியது உண்மை என்பதைக் கண்ணாரக் கண்டு வியப்புற்றாள்.
உடனே வேகமாக ஓடி வந்து, தன் தந்தை துரோனரிடம், தான் கண்ட அதிசயத்தைக் கூறினாள்.
துரோணர், மகளின் கூற்றை நம்பவில்லை. சாந்தாவுக்கு மூளை குழம்பிவிட்டதால், இப்படி உளறுகின்றாள். தாழ்குலத்தான் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் ஏற்பானா? என்று கருதி, அவளை வீட்டில் அடைத்து வைத்தார்.
கீழ்க்குலத்தானாகிய சேதா இறைவனை வழிபடுவதாக நடித்து இப்படிப் பொய்க் கதைகளைக் கட்டி விடுகின்றான். அவனை இப்படியே விட்டு வைத்தால், சாதி மரியாதையைக் குலைத்துவிடுவான். தாழ்குலத்தானுக்கு இறை வழிபாடு செய்ய உரிமை ஏது? உடனே அவனுக்குத் தக்கபுத்தி புகட்ட வேண்டும்” என்று முடிவு செய்தார் துரோணர்.
கீழ்க்குலத்தான் என்பதற்காக ஏகலைவன் வலதுகைப் பெருவிரலை வெட்டச் செய்தவர் அல்லவா துரோணர்!
உடனே சேதாவை அழைத்து வரச் செய்தார். “நாளைக் காலையில், ஆயிரம் சோடி செருப்புக்கள் அவசியம் தருதல் வேண்டும். இல்லையேல், மரண தண்டனை தரச்செய்வேன்” என்று கடுமையான உத்தரவிட்டார்.
என்ன செய்வார் சேதா! “ஒரு நாளில் ஒரு சோடி செருப்புத் தான் தைக்க இயலும் ஆயிரம் சோடி தைப்பது எப்படி? அதற்கு வேண்டிய மூலப் பொருளுக்கு எங்கே பேர்வது? சரி நம் தலை தப்பாது” என்று அழுது கொண்டே வீடு வந்து சேர்ந்தார். வந்த
சோர்வால் அப்படியே தூங்கி விட்டார். விடிந்ததை உணர்ந்து எழுந்தார்.
ஆயிரம் சோடிசெருப்புக்கள் தைக்கப்பட்டு அடுக்கடுக்காகக் கட்டி வைக்கப் பட்டிருந்ததைப் பார்த்தார். ஏது. இவை? எங்கிருந்து வந்தன என்று திகைத்தார். இறைவனே நமக்காக இவற்றைத் தைத்து வைத்துள்ளான் என்று தெரிந்து கொண்டார்.
துரோணரின் உத்தரவுப்படி குறித்த நேரத்தில் ஆயிரம் சோடியையும் கொண்டுபோய்ச் சமர்ப்பித்தார் சேதா!
சேதாவின் செயல் கண்டு மகிழ்வதற்குப் பதிலாக அவன் மேல் சினம் கொண்டார் துரோணர். தம் கை வலிக்கும் வரைக்கும் சேதாவைத் தடியால் அடித்தார். சேதா அலுங்காமல் குலுங்காமல் நின்றார். ஏன் நிற்கமாட்டார்? அடியெல்லாம் இறைவன் அல்லவா தாங்கிக் கொண்டான். வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தா, தந்தையின் கொடுமை கண்டு, உண்ணா நோன்பு மேற்கொண்டாள். தன் பக்தை வீட்டுச் சிறையில் உண்ணாமல் உடல் வருந்துவதை இறைவன் பொறுப்பானோ?
வீட்டுக்கதவு தானாகவே திறந்து கொண்டது. சாந்தா வெளியேறினாள்.
சாந்தா தப்பி விட்டதை அறிந்த துரோணர்க்கு அடங்காச் சினம் மூண்டது.
துரியோதன மன்னனிடம் சென்று, “இந்தச் சேதா ஏமாற்றுக்காரன். மாயா ஜாலம் தெரிந்து வைத்து, பக்தனைப் போல் நடித்து மக்களை ஏமாற்றுகின்றான். தாழ்குலத்தானாகிய இவனுக்குக் கடுமையான தண்டனை தரல் வேண்டும். தண்டனை தாராவிடின், நான் உன் முகத்தில் விழிக்கமாட்டேன்” என்று சூள் உரைத்தார்.
ஆசாரியன் வாக்கைச் சீடன் மீறலாமா? “இந்தச் சேதாவின் கண்களைப் பிடுங்கிக் கைகளை வெட்டி விடுங்கள்” என்று உத்தரவிட்டான் துரியோதளன்.
சேதாவின் மனைவி காந்தா சிறைக்கு வந்து தன் கணவனுக்கு நேர்ந்த அவலநிலை கண்டு அலறினாள். “இந்த அவலம் கண்ட கண்கள் எனக்கு ஏன்” என்று தன் கண்களைப் பிடுங்கிக் கொண்டாள். அந்தக் கற்புக்கரசியின் கதறல் வீண் ஆகுமா? அந்த அவலக்குரல், இறைவன் காதில் படாதா?
பெரும் பூகம்பம் நிகழ்ந்தது. சிறைச்சாலை தகர்ந்தது. அந்நேரம் ஒரு குறவனும் குறத்தியும் எங்கிருந்தோ தோன்றினர். அவர்கள் தொட்டவுடனே சேதாவின் கால்கள் பொருந்திக் கொண்டன. கணவன்-மனைவி இருவர் கண்களும் ஒளி பெற்றன.
துரோணரின் வீட்டிலிருந்து தப்பிய சாந்தா திருக்குலத்தார். சேரிக்கு ஓடினாள். ஏனென்றால் சேரி முழுவதும் தீயிட்டு அழிக்கப் போவதாகத் துரோணர் கூறிக் கொண்டிருந்தார். துரோணர் கொடுமையிலிருந்து சேரிமக்களைக் காக்கவே சாந்தா அங்கே விரைந்தாள்.
துரோணர் சொன்னபடி சேரி தீப்பற்றி எரியத் தொடங்கியது.
சாந்தா, சேரிக்குழந்தைகளைக் காப்பதில் ஈடுபட்டாள். தன் உடலில் தீப்புண் ஏற்படுமே என்று அஞ்சாமல் சேரியினரைக் காப்பாற்ற முனைந்து நின்றாள்.
சாந்தா தீக்கு நடுவே சேரியிலிருப்பதைக் கேள்விப்பட்ட துரோணர் சேரிக்கு ஓடினார்.
அதற்குள் தீயில் வெந்து விடாமல் சாந்தாவைச் சேவா மீட்டு விட்டாள்.
தாங்கள் வழிபடும் இறைவன் திருவிக்கிரகத்தைக் காப்பதற்காகச் சேதாவும் காந்தாவும் ஓடினர்.
என்ன அதிசயம்! அங்கு நெருப்பே பரவவில்லை. இறைவன் முன் அமர்ந்து சேவாவும் சாந்தாவும் இறைவனை வழிப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துச் சேதாவும் காந்தாவும் இறைவன் திருவருளை எண்ணிக் கண்ணிர் சொரிந்தனர்.
திடீரென்று நெருப்பு அணைந்து விட்டது. அந்த நெருப்பினால், சேரிக்கு எவ்விதச் சேதமும் நேரவில்லை.
மகளைக் காண ஒடிய துரோனர். சேதாவின் வீட்டில் இறைவன் முன், சேவாவுடன் அவள் இருப்பதைக் கண்டார். கீழ்க்குலச் சேரி என்ற எண்ணம் தகர்ந்தது. சேரி வீட்டில் - சேதா வீட்டில் - நுழைந்தார். அங்குக் குடி கொண்டிருந்த இறைவன் முன் விழுந்து வணங்கினார்.
பக்த சேதா அவர்களே! தங்கள் பெருமை அறியாமல், சாதி வெறியால் நீதி தவறிப் பல தீங்குகளை உமக்குச் செய்து விட்டேன். அதற்காக என்னை மன்னிக்க வேண்டும்” என்று சேதாவின் திருவடிகளிலும் விழுந்து வணங்கினார் துரோணர்.
பின்பு தம் மகள் சந்தரவைத் தழுவிக் கொண்டு, “மகளே! சாதி வெறித் திரை மூடியிருந்த என் கண்களைத் திறந்துவிட்ட தெய்வம் நீ! என் அகந்தையை நொறுக்க வந்த சம்மட்டி நீ! இனி இத்தகைய செயல்களில் ஈடுபடமாட்டேன்” என்று குரல் தழுதழுக்கக் கண்ணீர் சொரிந்து தன் செயலுக்குக் கழுவாய் தேடலானார்.

Wednesday, 1 August 2018

மார்கண்டேயன்

முன்பு ஒரு காலத்தில் மிருகண்டர் என்ற மகரிஷி வாழ்ந்து வந்தார். அவரும் அவருடைய மனைவியான மருதவதியும் சிவபெருமானின் தீவிர பக்தர்கள் ஆவார்கள். ஆனால் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அவர்களுக்கு குழந்தை இல்லை. ஆகவே சிவபெருமானை புகழ்ந்து பாடல்கள் பாடியும், அவரைப் பற்றிய கதைகளைப் பரப்பியும் வாழ்ந்து வந்தார்கள்.
கடைசியாக அவர்களின் செயலால் மனம் குளிர்ந்த சிவபெருமான் அவர்கள் முன்பு காட்சி அளித்து, குழந்தை வரத்தை அளித்தார். அந்த குழந்தை தான் மார்கண்டேயன். இங்கு மரணத்தை வென்ற மார்கண்டேயன் கதை கொடுக்கப்பட்டுள்ளது.
சிவபெருமான் கொடுத்த வரம் மிருகண்டர் என்பவர் மகரிஷி ஆவார். அவருடைய மனைவி மருதவதி. அவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தைச்செல்வம் இல்லை. அதற்காக சிவபெருமானை வேண்டினார் மகரிஷி. அவர் முன் தோன்றிய சிவபெருமான், "மிருகண்டா, உன்னால் நான் மனம் குளிர்ந்தேன். சொல், நீண்ட காலம் வாழப்போகும், ஆனால் முட்டாள்களாக இருக்க போகும், 100 குழந்தைகள் வேண்டுமா அல்லது பதினாறு வருடங்களே ஆழப்போகும் புத்திசாலியான ஒரு குழந்தை வேண்டுமா?" என கேட்டார்.
சிவனிடம் மகரிஷி கேட்டது
அதற்கு மகரிஷி "கடவுளே, அந்த புத்திசாலி மகனை மட்டும் கொடுங்கள்", என உடனடியாக கூறினார். "நல்லது! உனக்கு அவன் கிடைப்பான்!" என சிவபெருமான் கூறினார். விரைவிலேயே மகரிஷிக்கு மகன் பிறந்தான். அவனுக்கு மார்கண்டேயன் என பெயரும் வைத்தார். அந்த சிறுவனும் புத்திசாலியாகவும் அழகானவனாகவும் வளர்ந்தான். வேத சாஸ்திரங்களை அவன் சுலபமாக கற்றுக் கொண்டான். அனைவருக்கும் அவனை பிடித்திருந்தது.
தந்தையின் சோகத்தை கேட்ட மார்கண்டேயன்
அந்த சிறுவன் 16 வயதை நெருங்கி கொண்டிருந்த போது, மிருகண்ட மகரிஷியின் கவலையும் அதிகரித்துக் கொண்டே போனது. ஒரு நாள் மார்கண்டேயன் தன் தந்தையை பார்த்து "தந்தையே, ஏன் சோகமாக இருக்கிறீர்கள்?" என கேட்டான். அதற்கு "மகனே, நான் உன்னிடம் என்ன சொல்வது? உன்னை எங்களுக்கு சிவபெருமான் அளிக்கையில் நீ 16 வருடங்கள் மட்டுமே உயிருடன் இருப்பாய் என கூறினார். நீ இப்போது அந்த வயதை அடைய போகிறாய். இந்த வருடம் முடியும் போது நீ எங்களை விட்டுச்சென்றால் உன் இழப்பை நாங்கள் எப்படி தாங்குவோம்" என மகரிஷி கூறினார்.
தவம் மேற்கொண்ட மார்கண்டேயன்
"தந்தையே! இது தான் காரணமா? சிவபெருமானுக்கு அவரின் பக்தர்களின் மீது அன்பு உண்டு. அதை நீங்களே என்னிடம் கூறியுள்ளீர்கள். அவர் பலரையும் சாவில் இருந்து இதற்கு முன் காப்பாற்றி இருக்கிறார். அதை நான் புராணங்களில் படித்து இருக்கிறேன். அதனால் இன்றிலிருந்து இரவும் பகலுமாக நான் சிவபெருமானை வணங்க ஆரம்பிக்கிறேன். கண்டிப்பாக அவர் என்னையும் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது." என மார்கண்டேயன் கூறினான்.
இரவு பகல் பாராமல் வணங்கிய மார்கண்டேயன்
தன் மகனின் வார்த்தைகளை கேட்ட மிருகண்ட மகரிஷி சந்தோஷம் அடைந்தார். தன் மகனுக்கு ஆசி வழங்கினார். கடற்கடையில் சிவலிங்கம் ஒன்றினை மார்கண்டேயன் கட்டினான். காலை, மாலை, இரவு என எந்நேரம் ஆனாலும் சிவபெருமானை வழிபட தொடங்கினான். பஜனைகளை பாடி, நடனம் ஆடியும் கூட அவன் வழிபாட்டை தொடர்ந்தான்.
மார்கண்டேயனை அழைக்க வந்த எமன்
கடைசி தினத்தன்று, மார்கண்டேயன் பஜனைகள் பாட தொடங்கும் போது, மரணத்தின் கடவுளான எமன் அவனிடம் வந்தார். ஒரு எருமையின் மீது ஏறி எமன் வந்தார். தன் கையில் பாசக்கயிற்றை வைத்திருந்தார். மார்கண்டேயனிடம் "உன் பஜனையை நிறுத்து சிறுவனே! இந்த பூலோகத்தில் உன் வாழ்க்கை முடிவடைந்து விட்டது. மரணத்திற்கு தயாராக இரு" என எமன் கூறினார். இதை கேட்ட மார்கண்டேயன் பயப்படவில்லை. தன் தாயை குட்டி எப்படி பற்றிக்கொள்ளுமோ அதே போல் அவன் சிவலிங்கத்தை இறுக்கி கட்டிப்பிடித்துக் கொண்டான்.
மார்கண்டேயனை காப்பாற்றிய சிவன்
சிறுவனின் கழுத்தில் எமன் பாசக்கயிற்றை வீசினார். அவனை சிவலிங்கத்தை விட்டு இழுக்க முயன்றார். அப்போது அந்த சிவலிங்கம் வெடித்து, அதனுள் இருந்து சிவபெருமான் வெளியேறினார். எமனை நெஞ்சில் எட்டி உடைத்த சிவபெருமான், "எமா, போய் விடு. இந்த சிறுவனை தொடாதே! அவன் என் மனம் கவர்ந்த பக்தன். இவன் சிரஞ்சீவியாக வாழ்வான்" என கூறினார்.
மரணத்தை வென்ற மார்கண்டேயன் எமன் நிலை குலைந்து போனார். எப்போதும் போல் இல்லாமல் இன்னும் பக்தியுடன் சிவபெருமானை வணங்கினான் மார்கண்டேயன். இந்த ஜெபத்தின் ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் "இந்த மரணம் என்னை என்ன செய்யும்" என முடிந்தது. இப்போதும் கூட பலரும் இதனை ஜெபிப்பார்கள். வீட்டிற்கு வந்த மார்கண்டேயன் தன் பெற்றோரின் கால்களில் விழுந்தான். அவனை கட்டித்தழுவிய அவர்கள் ஆனந்தத்தில் கண்ணீர் விட்டனர். மிகப்பெரிய ரிஷியாக மாறிய மார்கண்டேயன் நீண்ட நாட்கள் வாழ்ந்தான்.

கதை

நான் இரண்டு மணிக்கு வந்ததே பெரும் பிரயாசையாகி விட்டது. முனிசீப் வீட்டிற்கு வருகையில் இரவு 9 மணியாகிவிட்டது. அவர்களோடு பேச வேண்டிய காரியத்தைப் பேசிவிட்டுத் திரும்பும் போது இரவு மணி பதினொன்று. எங்கும் மையிருட்டாய் இருந்தது.
அங்கிருந்து புறப்பட்டுச் சிறிது தூரம் வந்தேன், பெரிய மைதானத்துக்கு அருகில் வந்த போது திடீரென்று காலில் ஏதோ தட்டியது. கட்டையாக இருக்கலாமென்று எண்ணி நான் சிறிது ஒதுங்கி வர ஆரம்பித்தேன். அந்த இடத்திலும் என் காலில் ஒன்று இடித்தது. இருட்டு மிகுதியாய் இருந்ததால் எனக்குப் பயம் ஏற்பட்டது. மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அந்த இடத்தை ஊன்றிக் கவனித்தேன்.
என்ன ஆச்சரியம்! அங்கே வழி நெடுக அநேக ஜனங்கள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் சிறிதேனும் சத்தம் செய்யவில்லை. மெல்லக் குனிந்து ஒருவரைத் தடவித் தொட்டுப் பார்த்து வழிவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அதற்குள், மற்றொருவர் எழுந்து என் காதில், ‘முட்டாளே, பேசாதே! பாரதக்கதை நடக்குது’ என்று சொல்லிவிட்டு என் கையைப் பிடித்து இழுத்துக் கீழே உட்கார வைத்துவிட்டார். நாம் நினைத்தபடி அவ்வளவு அபாயம் இல்லை என்று எனக்கு ஆறுதல் உண்டாயிற்று. பெருமூச்சு விட்டேன். எங்கே பாரதம் நடக்கிறது என்று கவனித்தேன்.
ஏதோ பாட்டுப் போன்ற ஒரு தொனி காதில் விழுந்தது. அதனொடு இடையிடையே ஆமாமா! என்ற சத்தமும், உடுக்கையொலியும் பம்பையின் முழக்கமும் ஒன்றன்பின் ஒன்றாய்க் கேட்டன. என்ன கூறப்படுகின்றன என்று காதை நிமிர்த்திக் கொண்டு கேட்டேன்.
‘பீமசேன மவராசா, மவராசா, மவராசா!’ என்றார் முதல்வர். ‘ஆமாமா!’ என்றார் பின்பாட்டுக்காரர். ‘மரத்தேப்பூ’, ‘மரத்தேப்பூ’ என்று உற்சாகத்தோடு கைகளைக் கீழும் மேலும் அசைத்துக்கொண்டு கர்ச்சனை செய்தார் பிரசங்கியார். பின்பாட்டுக்காரர் ‘ஆமாமா’ என்று மூன்று முறை முழங்கினார். அப்பால் உடுக்கையின் ஓசையும் பம்பையின் முழக்கமும் எழுந்தன. இப்படிச் சில நிமிஷம் முழங்கியபின் உடுக்கைக்காரர்,
‘டிங்கினானே, டிங்கினானே, டிங்கினானே’ என்று சொல்லி ஆலாபனம் செய்யத் தொடங்கிவிட்டார். ஜனங்கள் எல்லாரும் சந்தோஷ ஆரவாரம் செய்தனர். அவ்வளவு பெரிய கூட்டத்தில் நான் மட்டும் அந்த ஆனந்தத்தை அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை. மேடையில் நடந்த கதை ‘பாரதம்’ என்பதை பீமசேன மவராசா என்ற சத்தத்தால் அறிந்தேன். அதற்கு மேல் நான் கேட்ட முழக்கங்களின் பொருள் எனக்கு விளங்கவில்லை.
வரும்பொழுது ஒருவரோடு ஒருவர் பேசி வருகையில் பிரசங்கியார் சொன்ன வாக்கியம் ஒரு யானையை அடிப்பதற்குப் பீமசேனன் மரத்தைப் பிடுங்கினான் என்பதென்று தெரிய வந்தது. இந்த ‘டிங்கினானே’ வரலாற்றைப் பிள்ளையவர்கள் அங்கே வருபவர்களுக்கெல்லாம் சவேரிநாத பிள்ளையைக் கொண்டு சொல்லிக் காட்டி வந்தார்கள்.