Tuesday, 25 October 2022

தன்னல மறுப்பு

 பிச்சைக்காரன் ஒருத்தன் தினமும் கோயில் வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான்.


ஒருநாள் அந்த கோயிலுக்கு  முனிவர் ஒருவர் வந்தார்.


சில பக்தர்கள் அவர் பாதத்தை வணங்கி த௩்கள் குறைகளை கூறினர். முனிவரும் பரிகாரம் கூறினார். 


அதைப்பார்த்த பிச்சைக்காரனும்  அவரிடம் சென்று வணங்கி, 


சாமி! நான் பிறந்ததில் இருந்து அனாதையாக பிச்சை எடுத்து ஜீவிக்கிறேன்! எனக்கு விமோசனமே இல்லையா? சாமி என்று கேட்டான்! 

அதற்கு சாமிகள், அப்பா உன் விதி பிச்சை எடுத்து தான் வாழவேண்டும் என்றுள்ளது! என்றார்! விதியை மாற்ற பரிகாரம் சாமி என்றான்! 


பரிகாரம் இறைவனைத்தான் கேட்க வேண்டும் என்றார்! அதற்கு பிச்சைக்காரன், சாமி இறைவன் எ௩்கிருக்கிறார்? இந்த கோயிலில் இல்லையா என்றான்! உடனே சாமி, "கோயில்கள் இறைவனின் நிழல்கள்"! நீ நேரடியாக பார்க்க வேண்டுமென்றால் கிழக்கு திசையில் போய்க்கொண்டேயிரு, வழியில் வரும் பிரச்சனைகளை நீதான் சமாளிக்க வேண்டும்! உன் மன உறுதி பார்த்து இறைவன் தோன்றுவார்! 


அப்போது நீ புத்திசாலித்தனமாக வார்த்தைகளை உபயோகித்தால் 

உன் விதி மாறும் என்று ஆசீர்வதித்தார்! 

ஆசி பெற்ற பிச்சைக்காரன் கிழக்கு நோக்கி பயணம் செய்தான்! 


வெகுநேரம் நடந்து வந்ததால்  இரவானது! வழியில் ஒரு பெரிய மாளிகை போன்ற வீடு! 

அங்கு சென்று அந்த வீட்டு செல்வந்தரை சந்தித்து இரவு திண்ணையில் தங்கிப்போக அனுமதிகேட்டான்! 


அந்த செல்வந்தரோ நீங்கள் எங்கு போகிறீர்கள் என்று கேட்க தன் விதிமாற இறைவனைக் காணப்போவதை விளக்கினான்!


அதைக் கேட்ட செல்வந்தர், அவனுக்கு உணவு கொடுத்து தங்கவைத்து, காலையில் போகும்போது, தம்பி எனக்கு திருமண வயதில் ஒரு பெண்  இருக்கிறாள்! அவள் பிறவி ஊமை அவளை பேசவைக்க கடவுளிடம் வரம் கேட்பாயா? என்றார்! 

பிச்சைக்காரனும் கேட்பதாக கூறி நடக்க ஆரம்பித்தான்! 


வழியில் ஒரு பிரம்மாண்டமான  மலை! அதை தாண்ட வேண்டுமே என்று தவித்து நின்றான்! 

அங்கு ஒரு மந்திரவாதி கோலோடு நடந்து வந்தவர் இவனைப்பார்த்ததும் தம்பி எங்கு போகவேண்டும் என்று கேட்க, 

விபரத்தை சொன்னான்! 


உடனே மந்திரவாதி, மலையை தாண்ட மந்திரக்கோலால் வழி செய்து கொடுத்து விட்டு, தம்பி இந்த வழியில் போ! 


நான் 300-ஆண்டுகளாக முக்தி 

அடைய முயல்கிறேன்! கிட்டவில்லை! 

கடவுளைப்பார்த்தால் நான் முக்தி 

அடைய என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுவரச் சொன்னார்! 

பிச்சைக்காரனும் சம்மதித்து மந்திரவாதி காட்டிய வழியில் மலையை கடந்தான்!

           

ரொம்ப தூரம் சென்றதும் ஒரு பெரிய ஆறு! அதை எப்படி கடப்பது என்று கரையோரம் மலைத்து நின்றான்! அந்த ஆற்றிலிருந்து ஒரு ஆமை வந்து அவனிடம் விபரம் கேட்டறிந்து, அவனை தன்மேல் ஏறச்சொல்லி கரை தாண்டிவிட்டு விட்டு, தான்பறக்க ரக்கைகள் வேண்டும் கடவுளிடம் கேட்டு வரச் சொன்னது! ஆகட்டும் என்று சம்மதித்து சென்றான்! 

     

வழி எங்கும் காடாக இருந்தது! கடவுள் வரவில்லையே என்று

நடந்து கொண்டே சென்று மயக்கத்தில் விழுந்தான்! 

     

அப்போது அங்கு ஒளியோடு கடவுள் தோன்றி, பக்தா உனக்கு என்ன வேண்டும்? ஏதாவது மூன்று வரம் தருகிறேன்! யோசித்து கேள் என்றார்! 


பிச்சைக்காரன், யோசித்தபோது, 

நாம் பிறவியில் இருந்து பிச்சை எடுத்தோம்! பிச்சை எடுத்து பிழைத்து கொள்ளலாம்! 

ஆனால் அந்த மூன்று நபர்கள் தன்னை நம்பி கேட்ட கோரிக்கையையே கேட்போம் என்று நன்கு யோசித்து, கடவுளிடம் அந்த மூவர் கோரிக்கையை நிறைவேற்ற கேட்டான்! 


கடவுளும்

அந்த மூன்று வரம் தந்து மறைந்தார்! 

திரும்பி வந்து ஆமையை சந்தித்தான்! கடவுளை பார்த்தாயா?


நான் பறக்க என்ன சொன்னார்? என்று ஆமை கேட்டது!

 

நீ உன் மேல் உள்ள ஓடை எடுத்து போடு! ரெக்கைகள் வரும் என்றான்! 

ஆமை ஓட்டை எடுத்ததும் ரெக்கைகள் வந்தது! அந்த ஓடு நிறைய நவரத்தினங்கள் ஜொலித்தன! 


அதைப் பிச்சைக்காரனிடம் கொடுத்து விட்டு ஆமை பறந்தது!

 

வழியில் மந்திரவாதியை சந்தித்து

மந்திரக்கோலை போட்டு விட்டால் உங்களுக்கு முக்தி என்றான்!

 

உடனே மந்திரவாதி, தம்பி இது சக்திவாய்ந்த மந்திரக்கோல்!

 

இதை நல்லவைகளுக்கு மட்டும் பயன்படுத்து என்று அவனிடமே கொடுத்து விட்டு முக்தி அடைந்தார்! 

    

நவரத்தினங்களுடன், மந்திரக்கோலுடன் செல்வந்தர் வீட்டிற்கு வந்தான்!

 

செல்வந்தர் தன் மகள் பேச்சு பற்றி கேட்கும்போதே மாடியில் இருந்து அவர் மகள், அப்பா அன்று வந்து தங்கி சென்றவர் இவர்தானே? என்று பேசினாள்! செல்வந்தனுக்கு ஒரே மகிழ்ச்சி! 

தன் மகளை அவனுக்கே திருமணம் செய்து வைத்து எல்லா சொத்துக்களையும் அவனுக்கு கொடுத்து விட்டார்!

 

அந்த பிச்சைக்காரன் செல்வந்தன் ஆனதும், தன்னுடன் பிச்சை எடுத்த அனைவரையும் அழைத்து தன் பண்ணையிலே வேலை போட்டுக் கொடுத்து தங்கவும் வீடு கட்டி கொடுத்தான். எல்லா உதவிகளையும் செய்து வாழ வைத்த மகிழ்ந்தான். 

           

இதில் நாம் அறிவது! நமக்கென எதுவும் சுய நலத்துடன் வேண்டக் கூடாது! நம்மால் முடிந்த உதவி பிறருக்கு செய்து, பிறருக்காக வேண்டினால், நம் துன்பம் தானே விலகும் என்பதே! வீட்டின் வெளியில் சுவற்றில் சுற்றும் எறும்புக்குக் கூட மூலையில் ஒரு பிடி அரிசி மாவை வைத்தால்

நம் வீட்டு அரிசி பானை நிரம்பியே இருக்கும்! 

நாம் உண்ணும் முன் ஒரு பிடி சாதம்

வீட்டின் புழக்கடையில் வைத்தால் அதை,காகம், குருவிகள், அணில்கள் சாப்பிட்டு நம்மை வாழ்த்தும்! 


நம் வீட்டில் வறுமை ஒரு நாளுமே இருக்காது!

Thursday, 20 October 2022

திரைப்படங்கள் ஆன புதினங்கள்



தமிழில் மற்றும்  ஆங்கிலத்தில் வெளிவந்த சில நாவல்களை படித்து அவை சினிமாவாக ஆக்கம் பெற்ற போது ஆர்வமுடன் பார்க்கும் வழக்கம் 1970களில் சில சீனியர் அண்ணன்களால் ஆரம்பமானது. 


1970களின் இறுதியில் சில அக்காள்களுமே தாங்கள் படித்து ரசித்து கொண்டாடிய சில வாரப்பத்திரிகை தொடர்கள் திரைப்படங்களாக வெளி வந்த காலத்தில் அவைகளை அக்கு வேறு ஆணி வேறாக அலசி அடித்து துவைத்து பிழிந்து காயப்போட்ட சம்பவங்கள் நினைவில் வந்து மோதி சலனப் படுத்தியதின் ஒரு பக்க விளைவே இப்பதிவு. 


அந்த வகையில் நான் பார்த்த என் நினைவுக்கு  வருபவை 


வேலைக்காரி 

மலைக்கள்ளன் 

கள்வனின் காதலி 

பாவை விளக்கு 

புதையல் 

பார்த்திபன் கனவு 

குலமகள் ராதை 

காவல் தெய்வம் 

தில்லானா மோகனாம்பாள் 

இருவர் உள்ளம் 

திக்கற்ற பார்வதி 

தென்னங்கீற்று 

பத்ரகாளி 

வட்டத்துக்குள் ஒரு சதுரம் 

புவனா ஒரு கேள்விக்குறி

கிரகப்பிரவேசம் 

.....


ஆங்கிலத்தில் 


39Steps 

The Shepherd 

Triple Cross 

Oliver Twist 

David Copperfield 

Tale of two cities 

Day of the Jackal 

The Odessa File 

Shawshank Redemption 

Life of Pie 

James Bond Movies 

.....


TV Serials 

If Tomorrow comes

Master of the Game 

Dempsey and Make peace 

Man from Atlantis 

Agatha Christie Novels 


இவைகளில் நான் நாவல் போலவே திரைப்படம் இருப்பதை ஆராய்ந்து பார்த்து ரசித்த சில திரைப்படங்களில் முக்கியமானவை 


மலைக்கள்ளன் 

புதையல் 

பாவை விளக்கு... 


புதையல் திரைப்படத்தில் இடம்பெற்ற அந்த விசித்திர விடுகதை போன்ற "காக்கை மூக்கு நிழலில்..... " அந்த பதின்ம வயதில் ரொம்பவே கவர்ந்தது.


மலைக்கள்ளன் ...பாவை விளக்கு ...கள்வனின் காதலி சமீபத்தில் கூட யூ ட்யூப் உபயத்தில் பார்த்து ரசித்து மகிழ்ந்து போனேன். 


புதுமைப் பித்தன் "சிற்றன்னை" உதிரிப் பூக்கள் ஆக ஆன போது என் கல்லூரி பருவத்தில் பார்க்கவில்லை. 


ஆனால் இப்போது பார்த்தேன். 


"சிறை" ரிலீஸ் ஆன நிலையில் புத்தம் புதிதாக பார்த்தேன். 


"கூட்டுப் புழுக்கள்" மிகப் பிடித்து போன திரைப்படம். பாடல்கள் மிகச் சிறப்பாக அமைந்த என் மனதை கொள்ளை கொண்ட திரைப்படம். 


ஆங்கிலத்தில் மிகப் பிடித்துப் போன

The Odessa File எத்தனையாவது முறையாக 🤔


இன்று கூட இப்போது தான் யு ட்யூப் ல் பார்த்து  அதன் ஒரு சார்பு விளைவாக இப்பதிவு.


PS-1 பற்றி பலரும் பல கருத்துக்களை மானாவாரியாக  பலப்பல  முகநூல் பக்கங்களில் ஏன் நம்ம மத்யமர் தளத்தில் கூட சரமாரியாக பதிவிட்டு அவைகளை எல்லாம் படித்து மூளையே கலங்கி போன உணர்வு. அங்கு பின்னூட்டம் இடவே தோன்றவில்லை 😥


ஒரு நாவல் திரைப்படமாக உருவாவதில் பல சிரமங்கள் கட்டாயம் உண்டு. 


பார்த்து ரசித்து விமர்சனம் செய்ய ரசிகர்கள் நமக்கு கிஞ்சித்தும் நோவதில்லை. 


சகட்டு மேனிக்கு தன்னிச்சையாக என்னென்னமோ எழுதி தள்ளி விவாதித்து சர்ச்சை உண்டாக்கி நல்லா பொழுது போகிறது.


படக்குழுவினர் அனைவரும் படும் பாடு பற்றி ஒரு கணம் சிந்தித்து அதன் பிறகு கொஞ்சம் மனம் இரங்கி ஒரு மனிதாபிமான சிந்தையுடன் விமர்சனம் செய்து பதிவு போடுதல் நன்று 👍👍👍

நேர்மை



பிறர் உடைமை விரும்பாத மேன்மை குணம் 

*****************************

அரேபிய வளைகுடா நாடுகளில் என் முன்னோர்கள் 1950களின் ஆரம்ப காலத்தில் தொடங்கி 1980களின் ஆரம்ப காலம்  வரை இருந்த போது அவ்வப்போது 3அல்லது 5ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊருக்கு விடுமுறை காலங்களில் வருகை தந்த நேரம் எல்லாம் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் கூட்டம் கூடி உரையாடல் நடக்கையில்... 


அங்கு திருட்டு சுத்தமாக கிடையாது அது இது என்று மிக ஜம்பமாக பல கதைகள் சொல்லி நானும் கூட 1970&80களின் தொடக்கம் வரை மிகுந்த பிரமிப்புடன் கேட்டுள்ளேன். 


நமது ஊரிலும் செய்தித் தாள்கள் வாசிக்கும் போதெல்லாம் அவ்வப்போது ஆட்டோ டாக்ஸி ரயில் பஸ் பயணிகள் மறந்து விட்டு போன தங்கள் உடைமைகளை பொறுப்புடன் ஒப்படைத்து தங்கள் நேர்மை குணம் விளங்கச் செய்த பல நல்லோர் பற்றிய சம்பவங்கள் பற்றி வாசித்து அறிந்து வியந்து ஒரு வகை பூரிப்பு. 


இப்போது எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள்:


1987ல் குவைத்தில் ஆடிட்டர் பணியில் இருந்த காலத்தில் ... 


என் நண்பர் ஒருவருடன் விடுமுறையில் ஊருக்கு வர குவைத் ஏர்போர்ட்டில் காத்து இருந்த நேரம். 


பொது தொலைபேசி கூண்டுக்குள் போனவர் பேசி முடித்து சில தங்க நகைகள் மற்றும் அமெரிக்க டாலர் பண நோட்டுக்கள் இருந்த ஓர் பையை மறந்து அங்கேயே விட்டு விட்டு வெளியே வந்து ஏறக்குறைய சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஃபிளைட் ஏற அறிவிப்பு வந்த நேரத்தில் உடைமைகளை செக் பண்ணிய போது பை காணாமல் போனதை உணர்ந்து பதறி பொது தொலைபேசி கூண்டுக்கு ஓடி அது அப்படியே இருக்க கண்டு ஆசுவாசம் ஆகி... 


அதை எடுத்து ஆனந்தமாக வந்தார். 


பயணத்தின் போது நாங்கள் இதையே  பேரதிசயமாக பேசி வியந்து மகிழ்ந்து... 


அடுத்து... 


2002 டிசம்பர். எனது இரண்டாவது இன்னிங்ஸ் குவைத் நாட்டில் ஆரம்பம். 


எனக்கு மூன்று ஸெட் ரேமண்ட்ஸ் சூட் வாங்க சென்னை மயிலாப்பூர் ஷோ ரூமில் ஆர்டர் செய்து முதலில் அட்வான்ஸ் மட்டுமே கொடுத்து அதை மீதி பணம் கட்டி வாங்கி வரச்  சென்ற நேரம்...


ஈஞ்சம்பாக்கம் போய் ஒரு நண்பர் வீட்டில் அவரை சந்தித்து பேசி விட்டு மயிலை செல்ல பேருந்து நிலையம் வந்தவன் ஒரு தள்ளு வண்டி கடையில் ஏதோ குளிர் பானம் அருந்தி நின்ற வேளையில் ...


30ஆயிரம் பிளஸ் பாஸ்போர்ட் டிக்கெட் எல்லாம் இருந்த ஒரு சிறிய தோல் பையை அந்த தள்ளு வண்டி மீது வைத்து இருந்ததை மறந்து... 


பிராட்வே பஸ் வரக்கண்டு பையை எடுத்துக் கொள்ளாமலேயே   பாய்ந்து பஸ் ஏறி பயணிக்கையில் திருவான்மியூர் பேருந்து நிலையம் வந்த போது பை இல்லாத உணர்வு வந்து பதறி அடித்து இறங்கி மறுபடியும் எதிர் பக்கம் போய் பேருந்து ஏறி ஈஞ்சம்பாக்கம் போய்... 


அந்த அரை மணி நேரத்தில் நெஞ்சம் பதறி உடல் நடுக்கம் ஏற்பட்டு கண்கள் கலங்கி ...


ஈஞ்சம்பாக்கம் ஸ்டாப் வந்ததும் ஒரே ஓட்டம். தள்ளு வண்டி வந்து பை வைத்த இடத்தில் அப்படியே இருக்க கண்டு ஒரு மாதிரி ஆசுவாசம் ஆகி ...


அன்றைக்கு என் நல்ல நேரம் பாஸ்போர்ட் விமான பயணச் சீட்டு எல்லாம் சேர்ந்து இருந்ததால் தகராறு ஒன்றும் இல்லாமல் எல்லாம் திரும்ப பெற யோகம் வாய்த்தது. 


என் வாழ்க்கையில் நடந்த இவ்விரண்டு சம்பவங்களும் நினைவு வரக் காரணம் இப்போது முகநூலில் படித்த ஒரு பதிவே. 


இத்தகைய சம்பவங்கள் என்றென்றும் சாசுவதமானவை 👍


வாழ்க இத்தகைய நல்ல அதிசயப் பிறவிகள்... நேர்மையாளர்கள் 😍😍😍

கலாச்சாரம்

 கலாச்சாரம் மற்றும் அது சார்ந்த பண்பாட்டு விளைவுகள் குறித்து உங்கள் பார்வையில் கருத்துகள் இடவும் 👍

Wednesday, 19 October 2022

நிகழ்வு

 இறப்பை வெல்ல முடியாது

மிகவும் பிரசித்தி பெற்ற சூஃபி கதை ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது. 

ஒரு அரசன் தன் கனவில் ஒரு கறுப்பு உருவம் ஒன்றைக் கண்டார். 

அது கனவு என்ற போதிலும் அவர் அரண்டு விட்டார். 

அவர், “நீ யார்? எதற்காக என் கனவில் வந்தாய்?” என்று கேட்டார்.

அதற்கு அந்த உருவம், “நான் தான் உன் மரணம். 

நாளை சூரிய அஸ்தமனத்தில் நாம் சந்திப்போம். 

உனக்கு மிகவும் பொறுப்புக்கள் இருப்பதால் நான் உன்னிடம் இதை தெரிவிக்கலாம் என்று வந்தேன். 

சாதாரணமாக நான் யாரிடமும் முன்கூட்டியே தெரிவிக்க போவதில்லை. 

ஆனால் நீ ஒரு அரசன், மிக முக்கியமானவன், மிக மிக அரிதானவன். 

என்னால் உன்னை சரியான இடத்தில் சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்று பயப்படுகிறேன்.

நீ வேறு ஏதேனும் இடத்தில் சிக்கிக் கொண்டு விட்டால் நான் என்ன செய்வது

நீ என்னை சரியான இடத்தில் சரியான நேரத்தில் சந்திக்க வேண்டும் 

நினைவில்

கொள்.” என்று சொல்லியது.

அரசர், “எது சரியான இடம்?” என்று கேட்பதற்கு முன் பயத்தினால் அவரது

தூக்கம் கலைந்துவிட்டது. 

நிழல் உருவம் மறைந்துவிட்டது. 

நேரம் தெரிந்துவிட்டது,

நாளை சூரிய அஸ்தமனம் தனது மரணம் என

– ஆனால் இடம் எது ?

நான் உன்னை சந்திக்க வேண்டிய இடம் எங்கிருக்கிறது என்று கேட்பதற்காக அவர் பலமுறை கண்களை மூடி அந்த நிழல் உருவத்தை

பார்க்க முயற்சித்தார்.

இறப்பை சந்திக்கவேண்டும் என்று அவர் விரும்பினார்

என்பதல்ல. 

அந்த இடம் எது என்று தெரிந்தால் அதை தவிர்த்து விடலாம். 

அந்த இடத்துக்கே போக கூடாது என எண்ணி

ஆனால் இந்த முழு

உலகத்தில் அந்த இடம் எது

ஆனால் உன்னால் கனவை தொடர முடியாது – அது மிகவும் கடினம். 

ஒரு முறை கனவு

கலைந்துவிட்டால் எவ்வளவு முயற்சி செய்து கண்களை மூடி கனவை தொடர முயன்றாலும் அது

வராது.

அரசர் மிகவும் பயந்து போய் தனது

அரசவை ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், அமைச்சர்கள், குருமார்கள், பூசாரிகள்,

ரேகைசாஸ்திரம் சொல்பவர்கள் என யாவரையும் அழைத்து, “அந்த சரியான இடம் எது என்று

எனக்கு கண்டுபிடித்து சொல்லுங்கள். அப்போதுதான் நான் அங்கு

செல்லாமல் அதை தவிர்க்க முடியும்” என கூறினார்.

உடனே அவர்கள் அனைவரும் தங்களது

பழமையான நூல்களில் பதில் தேட ஆரம்பித்தனர். 

காலை வந்து சூரியன் எழுந்தது. 

காலை

முழுமையாக விடிந்தவுடன் அரசர் மிகவும் பயந்து போனார். 

ஏனெனில் பொழுது விடிந்தால்

முடியுமே! 

முடிவின் ஆரம்பம் தானே விடியல். 

சூரியன்

விடிந்தால் அஸ்தமனம் வெகு தொலைவில் இல்லையே.

சூரியன் ஏற்கனவே அஸ்தமனத்தை

நோக்கி செல்ல துவங்கி விட்டான். 

இன்னும் இவர்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை. 

அதற்கு

பதிலாக அவர்கள் தங்களுக்குள் சண்டையிட ஆரம்பித்துவிட்டனர். 

அரசர், “உங்களுடைய நூல்களைப் பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. 

அது எந்த இடம் என்று மட்டும் சொல்லுங்கள், போதும். அப்போதுதான் அங்கு நான் போகாமல் இருக்கமுடியும் ” என்றார்.

அவர்கள், “ இருங்கள். 

இது ஒரு எளிமையான கேள்வி அல்ல.

நாங்கள் அதற்கான வழிமுறைகளை கண்டு, பின் ஒரு முடிவுக்கு வர வேண்டும். 

ஜோதிடர்

ஒன்றை சொல்கிறார், பூசாரி வேறு ஒன்றை சொல்கிறார்.

நாங்கள் உங்களுக்கு பதினைந்து

பதில்கள் கொடுத்தால் அதனால் என்ன பயன் ? 

ஆகையால் நாங்கள் ஒரு முடிவுக்கு

வந்த பின் சொல்கிறோம்” என்றனர்,

அரசரின் வயதான வேலையாள் ஒருவன்

அருகில் நின்று கொண்டிருந்தான். 

அவன் அரசரது காதில் மெதுவாக, “ நான் கிழவன். 

நான் இந்த பெரிய மனிதர்களின் வாக்குவாதத்தில் தலையிடகூடாது. 

நான் ஒரு வேலையாள். 

ஆனால் வயதானவன், எனக்கு உன் தந்தையின் வயதிருக்கும். 

உங்களது சிறிய வயதிலிருந்து நான் உங்களை

வளர்த்திருக்கிறேன். 

நான் சொல்வதை கேளுங்கள். இவர்கள் ஒருபோதும் ஒரு முடிவுக்கு வர

மாட்டார்கள்.

இவர்கள் தங்களுக்குள் வருடக்கணக்கில் சண்டையிடுவார்களே தவிர ஒரு போதும் ஒரு முடிவுக்கு வர மாட்டார்கள். 

இரண்டு தத்துவவாதிகளோ, இரண்டு ஜோதிடர்களோ, இரண்டு குறி சொல்பவர்களோ ஒரு போதும் ஒத்துப் போக மாட்டார்கள். 

ஒத்துப் போகாமைதான் அவர்களது வியாபாரம், அவர்கள் அப்படி

ஒத்துப் போகாமல் இருப்பதில்தான் வாழ்கிறார்கள். 

அதனால் காத்திருக்காதீர்கள்.

காலம்

மிகவும் குறைவாக உள்ளது. 

நீங்கள் என்னைக் கேட்டால் உங்களிடம் உள்ள மிகச் சிறந்த

குதிரை ஒன்றை எடுத்துக் கொண்டு – உங்களிடம் அப்படிபட்ட சிறப்பான குதிரைகள் உள்ளன. –

இந்த இடத்திலிருந்து ஓடிப் போய்விடுங்கள்.

ஒரு விஷயம் நிச்சயம். 

நீங்கள் இந்த

இடத்தில், இந்த அரண்மனையில், இந்த நகரத்தில், உங்களது ராஜ்ஜியத்தில்

இருக்கக்கூடாது. 

எங்காவது தப்பிச் சென்று விடுங்கள் ” என்று கூறினான்.

அரசருக்கு இது சரியென்று பட்டது.

அரசர், “ நீ சொல்வது சரிதான். 

ஏனெனில் இவர்கள் இதை

சூரிய அஸ்தமனத்திற்க்குள் முடிக்க மாட்டார்கள் போலிருக்கிறது.

” என்றவாறே அவர் தன்னுடைய குதிரைகளில் சிறப்பான ஒன்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினார்.

மாலையாவதற்குள் அவர் தனது ராஜ்ஜியத்தின் எல்லையை கடந்து வேறொரு ராஜ்ஜியத்திற்க்குள் நுழைந்து விட்டார்.

அவர் தான் தப்பியதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். 

இப்போது இவர் எங்கிருக்கிறார்

என்று இறப்பினால் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை.

இரவு ஓய்வெடுப்பதற்காக அவர் ஒரு

சோலையினுள் நுழைந்தார். 

அவர் தனது குதிரைக்கு மிகவும் நன்றி செலுத்தினார். 

ஏனெனில்

இந்த குதிரை உண்மையிலேயே ஒரு அற்புதமான விஷயத்தை செய்து முடித்திருக்கிறது. 

நாள்

முழுவதும் அது மிகவும் வேகமாக ஓடி வந்திருக்கிறது.

அது அப்படி ஓடி அரசர் கூட இது

வரை பார்த்ததேயில்லை. 

அது தண்ணீர் குடிக்கக் கூட ஓய்வெடுக்கவில்லை. 

அது ஒரு வினாடி

கூட ஓய்வெடுக்க நிற்கவும் இல்லை. 

அது இந்த அவசரத்தை புரிந்து கொண்டதைப் போல நடந்து

கொண்டது.

அரசர் அதற்கு நன்றி கூறினார்.

அவர் அதனிடம், “ நீ என்னை காப்பாற்றி விட்டாய்.

நான் உனக்கு நன்றி கூறுகிறேன், எனக்கு உன் மேல் அன்பு பெருகுகிறது, நான் உனக்கு

தகுந்த சன்மானம் அளிப்பேன். 

நாளை நாம் நமது ராஜ்ஜியத்திற்க்குள் சென்றவுடன் எனக்கு

அளிக்கப்படும் அதே அளவு மரியாதையை நீயும் பெறுவாய் ” என்றார்.

அந்த நேரத்தில் சூரிய அஸ்தமனம்

ஆனது, 

அப்போது ஒரு கரம்……. தனது தோள் மீது ஒரு கரம் படிவதை அரசர் உணர்ந்தார்.

அவர் திரும்பி பார்த்தார். 

அவர் கனவில் பார்த்த அதே கறுப்பு நிழல் உருவம் அங்கே

இருந்தது.

அந்த நிழல் உருவம் சிரித்தபடி, “நீ அந்த குதிரைக்கு நன்றி சொல்லக் கூடாது.

நான் தான் அந்த குதிரைக்கு நன்றி சொல்ல வேண்டும்.  

இதுதான் நான் உனக்காக காத்துக் கொண்டிருக்கும் இடம். 

உன்னுடைய குதிரையால் இங்கு வர முடியுமோ வர முடியாதோ என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். 

ஆனால் அது வந்து சேர்ந்து விட்டது. இந்த உலகிலேயே மிக அற்புதமான குதிரை உன்னுடையது. 

நீ சரியான நேரத்திற்கு சரியான

இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டாய்.” என்றது.

நீ என்ன செய்து கொண்டிருந்தாலும்

இறப்பை சந்திக்க சரியான இடத்திற்கு சரியான நேரத்திற்கு வந்தடைந்து விடுவாய்!

வேம்பு

 வேம்பின் பிறப்பைப் பற்றிக்

அகத்தியர் கூறுகிறார். 

======================

திருமால் பெண்ணுருவம் கொண்டு அமிர்தத்தை தேவர்களுக்கு அகப்பையினால் பங்கிடும் போது, அசுரர்கள் அந்தப் பெண்ணின் அழகைக் கண்டு மயங்கி இருக்கையில், அசுரர்களில் ஒருவன் யாருக்கும் தெரியாமல் தேவர்கள் பந்தியில் வந்து அமர்ந்துவிட, திருமாலும் தேவர்களின் வரிசையில் தேவர்களைப் போல இருந்த அசுரனுக்கும் மூன்றகப்பை அமிர்தத்தைக் கொடுத்து விடுகிறார்.


அமிர்தத்தை கொடுத்த திருமாலுக்கு அருகிலிருந்த சூரியனும், சந்திரனும், அவன் அசுரன் என்று ஜாடை காட்டிச் சொல்ல, அமிர்தத்தை சாப்பிட்டுக் கொண்டு இருந்த அசுரனை நோக்கித் திருமால் அகப்பையால் வெட்டி விட, அசுரன் தலை வேறு உடல் வேறாக வெட்டப்பட்டு, அடையாளம் காட்டிக் கொடுத்த சூரிய 

சந்திரர்களுக்கு பகைக் கிரகமான ராகு, கேது என மாறினார்கள்.


அகப்பையினால் வெட்டுப்படும் போது அசுரன் தனது வாயில் மீதமாக இருந்த அமிர்தத்தைக் கக்கினான். கக்கும்போது அசுரனின் வாயிலிருந்து பூமியில் விழுந்த அமிர்தமானது வேப்பமரமானது. 


வேம்புக்கு கசப்புச்சுவை வந்த காரணம் என்ன வென்றால், அசுரனின் (பாம்பின்) நச்சு வாயிலிருந்து வெளிப்பட்டதால் தான். 


அப்படிப் பட்ட வேம்பை உண்டு வந்தால் மனிதனுக்கு சாவு என்பதே கிடையாது. 


இப்படியாகத் தான் சனகாதி நால்வருடன் (என் குருமார்கள் நால்வருடன்) சேர்ந்து நானும் சாப்பிட்டு காயசித்தி பெற்றேன் என்று கூறியுள்ளார்.

இழப்பு வரம்

 இழந்ததெல்லாம் திரும்பத் தா இறைவா!

இழந்ததெல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன்.

இழந்தவை எவை என இறைவன் கேட்டான்!

பலவும் இழந்திருக்கிறேன்,

கணக்கில்லை…

பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்?

கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்

கோலம் மாறி என் அழகையும் இழந்தேன்

வயதாக ஆக உடல் நலமிழந்தேன்

எதை என்று சொல்வேன் நான்

இறைவன் கேட்கையில்?

எதையெல்லாம் இழந்தேனோ

அதையெல்லாம் மீண்டும்தா என்றேன்.

அழகாகச் சிரித்தான் பரமன்

”கல்வி கற்றதால் அறியாமை இழந்தாய்

உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்

நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்

சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல

தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்.

திகைத்தேன்!

இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்

வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறும்

இணைந்ததை அறிந்தேன்

இதயம் தெளிந்தேன்

தீபாவளி

சென்னை பெருங்களத்தூர்.

மாலை நேரத்தை விழுங்கி இரவு மெல்ல தலை நீட்டத் தொடங்கி இருந்தது.  மப்பும் மந்தாரமுமான மழைக்கால குளிரில் வெளியே தலை நீட்டாமல் நிலவு ,   இருளைப் போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தது.


விடிந்தால் தீபாவளி.  ஊருக்குச் செல்வதற்காக காத்துக் கிடந்த மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய பெருங்களத்தூர் பஸ்நிலையம் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது. 


பஸ்நிலையத்திற்கு முன்னூறு நானூறு மீட்டர் முன்னதாகவே ஏரிக்கரையை ஒட்டி ஒரு முஸ்லிம் ,   மலிவான துணிகளை கடையாய் பரப்பி வைத்திருந்தார்.  அவர் கடை வரை பஸ்சுக்காக காத்திருப்பவர்களின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.


கொஞ்சம் வசதி குறைந்தவர்கள்  பேரம்பேசி துணிகளை வாங்கிச் சென்றார்கள்.  அரைமணி நேரமாய் அந்த வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்த ஒருவர்  மெல்ல அவரிடம் கேட்டார்.


"நானும் அரைமணி நேரமா பாக்குறேன்... நீங்க நூத்தம்பது ரூபா சொல்லி அவங்க நூறு ரூபாய்க்கு கேட்டாக் கூட குடுத்தீங்க.  சரி ... ஆனா கடைசியா ஒருத்தர் நீங்க சொன்ன நூத்தம்பது ரூபாய குடுத்தப்போ நீங்க நூறை மட்டும் எடுத்திட்டு ஐம்பதை திருப்பிக் குடுத்தீங்களே ஏன்? "


"இது ஒரே விலைனு போர்டு போட்ட கடை இல்ல தம்பி.  ஏழைபாலைங்க அவங்க பொருளாதாரத்துக்கு ஏத்தாப்புல வாங்குவாங்க.  அவங்களுக்கு தரம் முக்கியமில்ல.  சொன்ன விலையிலருந்து குறைச்சு வாங்கியே பழக்கப்பட்டவங்க.  எனக்கு நூறு ரூபா பொருளுக்கு பத்து ரூபா கெடச்சாப் போதும்.  அதனாலதான் நூத்தம்பது சொல்லி நூறுக்கு குடுத்திருவேன் .  அவங்களுக்கும் மனசு திருப்தி.  எனக்கும் நியாயமான வருமானம்.  கடைசியா வந்தவர் பேரம் பேசாம குடுத்தார்.  நானும் மனசாட்சியோட திருப்பிக் குடுத்துட்டேன்"


"ஆமா நீங்க எங்க போகணும் தம்பி "


"திருநெல்வேலி போகணும் பாய்"


"இன்னைக்கெல்லாம் பஸ் ஏறிப் போறது செத்துப் பொழைக்கிறதுக்கு சமம். பார்த்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க.  ரயில்லயோ பஸ்லயோ ஒரு மாசம் முன்னாலயே ரிசர்வ் பண்ணி இருக்கலாம்ல"


" கார் இருக்கு.  எப்பவும் அதுலதான் ஊருக்குப் போவேன்.   இன்னைக்கு மத்தியானம்தான் காருக்கு அடில போய் சென்சார் ஒயர எலி கடிச்சிருச்சு.  ஒர்ஷாப்ல உடனே ரெடி பண்ண முடியாதுனுட்டாங்க.   அதான் பஸ்ல போலாம்னு பார்த்தா,   ரொம்ப சிரமமாயிரும் போலயே .. "


"கொஞ்சம் லேட்டானா இடம் கிடைக்கும்.  வெயிட் பண்ணுங்க தம்பி"  என்றவர் மணி பார்க்கிறார்.  7.25

என்றது கடிகாரம்.   "அடடா இரவு தொழுகைக்கு நேரமாச்சே.  தம்பி நான் தொழுகைக்கு போய்ட்டு வாரேன்.  உங்களுக்கு பஸ் வர்ற வரைக்கும் பார்த்துக்கிறீங்களா ... பஸ் வந்தா போயிருங்க ,  ஆண்டவன் பாத்துக்குவான்" 


"சரிங்க பாய் "


அவர் தொழுகைக்குப் போய் வருவதற்குள் எண்ணூறு ரூபாய்க்கு வியாபாரம் செய்து வைத்திருந்தார்.  நாகர்கோவில் சென்ற இரண்டு ஆம்னி பஸ்களையும் ஒரு அரசு பஸ்ஸையும் தவற விட்டிருந்தார்.


"இந்தாங்க பாய் எண்ணூறு ரூபாய் ...    துணி கேட்டு வந்தவங்களுக்கு நீங்க விக்கிற மாதிரியே குடுத்தேன்"


"மாஷா அல்லாஹ்.... அல்லா உங்களை சுவனவாசி ஆக்கட்டும்.  ஆமா ... உங்களுக்கு ஒரு பஸ்சும் வரலயா "


"வந்துச்சு.  நான்தான் போகல பாய்.  என்னை நம்பி பொறுப்பை குடுத்துட்டு போய் இருக்கீங்க.  அதை அம்போனு விட்டுட்டுப் போயிருந்தா என்னால நிம்மதியா தீபாவளி கொண்டாடி இருக்க முடியாது பாய்"


"நல்லது தம்பி.  இன்னும் பஸ் வந்துகிட்டுதான் இருக்கும்.  கண்டிப்பா சீட் கிடைக்கும்.  ஆமா உங்களுக்கு எத்தனை குழந்தைங்க "


"ஒரே பையன்தான்.  ஏழு வயசாகுது"


"ஓ ...."  என்றவர்,  அந்தப் பையனுக்குத் தகுந்தாற்போல்  தன்னிடம் இருந்ததிலேயே விலையுயர்ந்த(!)  ஒரு பென்சில் பேண்ட்டையும் ஒரு டீசர்ட்டையும் ஒரு கேரிபேக்கில் போட்டு அவரிடம் கொடுத்தார்.


"இந்தாங்க தம்பி.  உங்க பையனுக்கு என்னோட தீபாவளி பரிசா வச்சுக்குங்க"


"அய்யோ ... வேண்டாம் பாய்.  நீங்க சொன்னதே போதும்.  நான் ஏற்கனவே புதுத் துணி எல்லாருக்கும் எடுத்துட்டேன்."


"பரவால்ல .... நீங்க போடுற அளவு ரிச்சான துணிகள் என்கிட்ட இல்ல.  இருந்திருந்தா குடுத்திருப்பேன்.  பையன் போடாட்டாலும் உங்க வீட்டுப் பக்கம் இருக்கிற ஒரு ஏழைப் பையனுக்கு குடுங்க.  ஆனா நீங்க இதை வாங்கிக்கிட்டாதான் எனக்கு சந்தோசமா இருக்கும்"


"என்னங்க பாய் இப்படி வற்புறுத்துறீங்க"  என்று வாங்கிக் கொண்டார்.  தன் இரண்டு பைகளில் ஒன்றைத் திறந்து துணியை வைத்துக் கொண்டவர்,   அதிலிருந்து பெரிய ஸ்வீட் பாக்ஸ் ஒன்றை வெளியில் எடுத்து ஒரு கேரிபேக்கில் போட்டு அவரிடம் நீட்டினார்.


"இந்தாங்க பாய்,   குப்தா ஸ்வீட்ஸ்.  வீட்டுக்கு கொண்டு போங்க."


"குப்தா ஸ்வீட்சா ... ரொம்ப காஸ்ட்லி ஆச்சே.   பிள்ளைக்காக வாங்கி இருப்பீங்க.  நீங்க கொண்டு போங்க தம்பி"


"அப்போ நானும் டிரெஸ்சை திருப்பித் தந்திருவேன்"


"சரிசரி குடுங்க தம்பி"  என்று ஸ்வீட்சை வாங்கி ஒரமாய் வைத்தவர்,  " வோய் கரீம் பாய் ... இங்க என்னவே பண்றீரு"  என்ற குரல் கேட்டு திரும்பினார்.  கடையை ஒட்டி ஓரமாய் நின்றிருந்த காரில்,   ஸ்டீயரிங்கைப் பிடித்தபடி சார்லஸ் அமர்ந்திருந்தார்.  பக்கத்து இருக்கையில் அவர் மனைவி.


"தீபாவளி வியாபாரம் பாக்குறேன் வோய்.  பாத்தா தெரியல "


"பத்து வருசம் முன்னால இருந்த அந்த நக்கலும் நையாண்டியும் இன்னும் உம்மை விட்டுப் போகல வோய் .... எப்படி இருந்த மனுசன்.  தாம்பரத்துலயே கொடிகட்டிப் பறந்த ஜவுளிக்கடை முதலாளி.  உன் கடைய ஒட்டி அந்தப் பாலம் மட்டும் வராம இருந்திருந்தா உன் கடையும் இடிஞ்சிருக்காது.  நீயும் இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டே.   எல்லாம் நேரம் வோய்"


"முடிஞ்சத பேசி பிரயோஜனம் இல்ல சார்லசு.  நடப்பதெல்லாம் நன்மைக்கே.  எல்லாம் அவன் செயல்"  என்று மேலே கையை உயர்த்தினார் பாய்.


*******


அதே நேரம் திருநெல்வேலி செல்பவருக்கு போன் வந்தது.  


"என்னடி சரசு "


"ஏன்னா பஸ் ஏறிட்டேளா"


"இன்னும் இல்ல.   பஸ் ஸ்டேன்ட்லதான் வெயிட் பண்ணின்டிருக்கேன்."


"பட்டுக்கோட்டைலருந்து அத்திம்பேர் குடும்பமெல்லாம் வந்துட்டாங்கோனா.  பத்மநாபன் இன்னும் பஸ்ஸே ஏறலயா.  பணம் போனா பரவாயில்லே.  டாக்சி பிடிச்சுண்டு வரச் சொல்லுனு சொல்றாங்கோ."


"இன்னும் அரைமணிநேரம் வெயிட் பண்ணிட்டு பஸ் கிடைக்கலேனா டாக்சி பிடிச்சுடலாம்னுதான் இருக்கேன்"


"ஏன்னா ... ரகு,   குப்தா ஸ்வீட்லருந்து பலகாரம் கேட்டானே ... வாங்கிட்டேளா "


"அந்தப் பக்கம் போக பொழுதே ஒழியலடி.  அங்க வந்து சாந்தி ஸ்வீட்ஸ்ல வாங்கிடலாம்"


"என்னமோ போங்கோ ... ரகுவை நீங்க சமாளிச்சுண்டா சரி"


""சரி போனை வை.  பஸ் ஏறிட்டு போன் போடுறேன்"


*******


"ஏம்பா சார்லசு ... நாகர்கோயிலுக்கா போற"


"ஆமா வோய்.  தொடர்ச்சியா நாலுநாள் லீவு.  அதான் ஊரைப் பாக்க போய்ட்டு வரலாம்னு கிளம்பிட்டோம் "  


"வழில யாரையாவது பிக்கப் பண்றியா"


"அதெல்லாம் இல்ல வோய்.  நாங்க ரெண்டு பேர் மட்டும்தான்."


"அப்போ எனக்கு ஒரு உதவி செய்வியா"


"என்ன செய்யணும் ... உன்னை தூக்கிட்டுப் போய் திருநெல்வேலில போடணுமா"  என்று கலகலவென சிரித்தார் சார்லஸ்.


"அட கூவ.  என்னை இல்லடே ... அந்த தம்பிய கூட்டிப்போய் திருநெல்வேலில இறக்கிரணும்"


"அந்த தம்பி யாரு"


"என் நண்பர்தான்"


"எனக்குத் தெரியாம உனக்கு ஒரு நண்பனா வே ... ரொம்ப மாறிட்ட வோய்.  உன் நண்பர்னு சொல்ற.   உன் நண்பர் எனக்கும் நண்பர்தான்.  மூணாம் மனுசன் மாதிரி கேட்டுக்கிட்டு நிக்கிற ... உள்ள ஏத்தி விடும்வோய் ... "


"தம்பி ... இவன் சார்லஸ்.  என் பால்ய நண்பன்.  இவன் நாகர்கோவில் போறான்.  உங்களை திருநெல்வேலில இறக்கிருவான்.  ஏறிப் போங்க தம்பி"


பத்மநாபனுக்கு சட்டென்று முகம் பிரகாசமாகியது.  கையை பிடித்துக் கொண்டார்.  "பேருதவி செஞ்சீங்க பாய்"


"அதெல்லாம் ஒண்ணுமில்ல.  ஏறுங்க என்ற பாய்,   மறக்காமல் சொன்னார்.... "உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் தம்பி"


"ரொம்ப தேங்க்ஸ் பாய் "  என்ற பத்மநாபன் காரில் ஏறி அமர்ந்தார்.


"டேய் ... ஆக்கங்கெட்ட கூவ ... மழை வர்ற மாதிரி இருக்கு.  துணியெல்லாம் மூட்டை கட்டிட்டு வீடு போய் சேரு"


"சரிடா ... ரோடெல்லாம் ரஷ்ஷா இருக்கும்.   பத்திரமா பார்த்துப் போ."


அனைவரும் கைகளை ஆட்டிக் கொண்ட பின் கார் மெல்ல ஊர்ந்து போகத் தொடங்கியது.


கரீம் பாய் துணிகளை எல்லாம் பேக் செய்து விட்டு ,  அந்த ஸ்வீட் பாக்ஸை இப்போதுதான் கூர்ந்து கவனிக்கிறார்.  அதன் மேல்பகுதியில் ரோஸ் நிற இரண்டாயிரம் ரூபாய் தாள் ஒன்று செருகப்பட்டிருந்தது.  கள்ளம் கபடமில்லாமல் காந்தி தாத்தா பொக்கை வாய் திறந்து சிரித்துக் கொண்டிருந்தார்.


"யா அல்லாஹ்"  என்று அனிச்சையாய் கார் சென்ற திசையை திரும்பிப் பார்க்கிறார்.  அது பல்லாயிரம் சிவப்பு புள்ளிகளுக்கிடையே கலந்து போயிருந்தது,   மனதால் கலந்து போன இந்த மூன்று மனித(ங்)ர்களைப் போல 😍