துண்டு போடாத பெருசுகளை பார்ப்பது அரிது. உழுதுண்டு வாழும் விவசாயியின் தோழோடு நிற்கும் ஒரு தோழன்தான் இந்த துண்டு.
இன்று அனைவராலும் பயண்படுத்தப்படும் கைக்குட்டை கூட துண்டின் தம்பி என்றால் மிகையாகாது.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று எந்தவித பாகுபடின்றி இந்த துண்டை எப்படியெல்லாம் அன்றாட வாழ்வில் பயண்படுத்துகிறார்கள் என்று ஒரு பட்டியல் போட்டிருக்கிறேன் படித்துப்பாருங்கள்.
துண்டின் பயண்பாடுகள்:
01. ஜன்னல் வழியாக தூக்கிப்போட்டு பஸ்சில் இடம்பிடிக்க இந்த துண்டு உதவும்.
02. நாம் உக்காரப்போகும் இடத்தில் அதாவது திண்ணை அல்லது நாற்காலியில் உள்ள தூசியை துடைக்க உதவும்.
03. நாம் சொல்லும் உண்மையை அல்லது பொய்யை உறுதிப்படுத்த துண்டை கீழேபோட்டு தாண்டி சத்தியம் செய்ய உதவும்.
04. இடுப்பில் கட்டிகொண்டு குளத்தில் குளிக்கவும், இடுப்பளவு தண்ணியில் அதே துண்டால் முதுகு தேய்க்கவும், பிழிந்து தலை துவட்டிகொள்ள உதவும்.
05. வெயிலுக்கு நிழலாய் தலையில் போட்டுக்கொள்ளவும், வடியும் வியர்வையை துடைக்கவும் பயண்படும்.
06. துவண்டு போகும் முகத்தை, மூக்கையும் அடிக்கடி துடைக்க பயன்படும்.
07. சாப்பிட்டுவிட்டு கழுவிய ஈர கைகளை துடைக்க உதவும்.
08. காலை பனிக்கும், குளிருக்கும் போர்த்திக்கொள்ள ஒரு குட்டி போர்வையாய் உதவும்.
09. மழையில் கொஞ்சம் நனையாமல் இருக்கவும், நனைந்துவிட்டால் துண்டை பிழிந்து தலை துவட்ட உதவும்.
10. கடைக்கு பை எடுத்துச் செல்ல மறந்துவிட்டால், பொருட்களை துண்டில் போட்டு மூட்டையாக கட்டி எடுத்துச் செல்ல உதவும்.
11. திருவிழாக்களில் துண்டை தலையில் பரிவட்டமாக கட்டி கெளரவப்படுத்த உதவும்.
12. பொதுவாக மேடைகளில் பொன்னாடையாக துண்டை போர்த்தி கெளரவப்படுத்த உதவும்.
13. மரத்தடியிலும், திண்ணையிலும் துண்டை விரித்து உட்காரவும், படுக்கவும் பாயாக பயண்படும்.
14. துண்டை விரித்து ஆத்திலும் குளத்திலும் மீன் பிடிக்க உதவும்.
15. ஒரு பிரச்சினை என்றால் துண்டை முறுக்கி அடிக்கவும், தலையில் போத்தி தர்ம அடி போடவும், குற்றவாளிகளை கட்டி வைக்கவும் அவசரத்துக்கு உதவும்.
16. பொது இடங்களிலும், இரவிலும் எளிதாக அடையாளம் கண்டுவிடாமல் இருக்க தலையையும் முகத்தையும் மூடிக்கொள்ள உதவும்.
17. நாம் போட்டிருக்கும் துண்டின் நிறத்தாலும், அளவாலும் மற்றவர்களிடமிருந்து நம்மை தனியாக அடையாளப்படுத்திகொள்ள உதவும்.
18. துண்டில் உள்ள நிறத்தை வைத்து இவர் எந்த அரசியல் கட்சிகாரர் என்று எளிதாக அடையாளம் காண உதவும்.
19. தலையில் பாரம் வைத்து சுமக்கும் போது அழுத்தாமல் இருக்க சும்மாடாக பயண்படும்.
20. சந்தையில் துண்டைபோட்டு மூடி கைவிரல்களில் ஆடு மாடுகளின் விலை பேரம்பேச உதவும்.
21. கைதான குற்றவாளிகளை நீதிமன்றத்திக்கு முகத்தை மூடி அழைத்துச்செல்ல உதவும்.
22. துண்டை பற்றி ஒரு துண்டு பதிவு எழுதி போட்டு, நமக்கு ஒரு இடத்தை இந்த வலைவுலகில் பிடிக்கவும் உதவும்.
No comments:
Post a Comment